எரிக்கிலிசும் பாண்டிய மரபும்8. எரிக்கிலிசும் பாண்டிய மரபும்.
முன் அதிகாரத்தில் காட்டியுள்ளது போல்தான் குமரிக் கண்டச் செய்திகளும் இந்தியாவில் நிகழ்ந்த செய்திகளும் ஒன்றோடொன்று மயங்கிக் கிடக்கின்றன. மெகாத்தனி இந்தியாவைப் பற்றி எழுதிய செய்தியில், இந்தியாவின் தென் கோடியில் பாண்டியா என்றொரு பெண் அப் பெயர் கொண்ட நாட்டை ஆண்டதாகவும் அவள் கிரேக்க பெருவியப்பு வீரன் எரிக்கிலிசின் மகள் என்றும் அந் நாட்டில் 365 ஊர்கள் இருந்ததாகவும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அவளுக்கு ஒவ்வொரு நாள் திறை வருவதற்கு அவன் ஏற்பாடு செய்ததாகவும் பதிந்திருக்கிறார். இதில் ஒரு முகாமையான செய்தி என்னவென்றால் மெகாத்தனி வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் தவிர எகிப்தியரன்றி உலகில் எவரும் 365 நாட்கள் கொண்ட ஆண்டுமுறையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே தமிழகத்தை நன்கறிந்தவர்கள் மூலமாகவே இச் செய்தியை அவர் அறிந்திருக்க முடியும்.


எரிக்கிளிசு பற்றி மெகாத்தனி தரும் ஒரு செய்தி நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறது. இப்போது கருதப்படுவது போலன்றி அவன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்று கூறுவதுடன் வட இந்தியாவின் எமுனை ஆற்றங்கரையிலுள்ள மதுரை(மாத்ரா) எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்ட சூரசேனர்கள் அவனை மிக மதிப்பதாகக் கூறுகிறார். ஆக, எரிக்கிளிசு கதை குமரிக் கண்டத்திலிருந்து கிரேக்கத்துக்கு சென்றிருக்கிறது என்றும் தெரிகிறது. இந்தியன் என்று மெகாத்தனி கூறும் எரிக்கிலிசின் உடை கிரேக்கத்தின் தீபி எனப்படும் இடத்தில் பிறந்த எரிக்கிலிசின் உடையைப் போலவே இருந்தது என்கிறார்.

வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட எரிக்கிளிசின் இரண்டு படங்களைத் தந்திருக்கிறேன். இரண்டிலும் அவன் ஆடையின்றிக் காணப்படுகிறான். ஆனால் அவனது உடை அரிமாவின் தோலும் ஆயுதம் கதாயுதம் எனப்படும் குண்டாந்தடியும் என்கிறது கிரேக்க மரபு. கீழே தரப்பட்டுள்ள அவனது படத்தில் இன்று சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவலாகிய நம் பண்டைய வீர விளையாட்டைக் காண முடிகிறது. இதிலிருந்து கிரேக்க எரிக்கிலிசின் படிமத்தில் குமரிக் கண்ட மாயோன் ஆகிய கண்ணனின் சாயல் படிந்திருப்பதைக் காண முடிகிறது. குண்டாந்தடி மகாபாரதம் காட்டும் வீமனை நினைவுபடுத்துகிறது.


குமரிக் கண்டம் பற்றிய செய்திகளை பழம் பாடல்களின் தொகுப்பான புறநானூறு, அகநானூறு ஆகியவை மறைக்கின்றன. காலத்தில் பிற்பட்ட கலித்தொகையும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்தாம் சில செய்திகளைத் தருகின்றன. மணிமேகலையில் பழம்பிறப்புணர்ந்த காதையில் கிறித்துவ மறைநூலிலும் மச்ச புராணத்திலும் உள்ளவற்றுக்கு இணையான செய்தி இதோ: நாக நாட்டை 700 காவதம் கடல் கொள்ளும் என்பதறிந்த காந்தாரத்தின் பூருவ தேசத்து அரசன் படகில் மாவும் மரமும் புள்ளும் ஏற்றி அவந்தி நாட்டில் கரையேறி காயங்கரை ஆற்றை அடைந்தான் என்கிறது அது. அத்துடன் கழக இலக்கியங்கள் பாண்டிய அரசைத் தோற்றுவித்தவள் ஒரு பெண் என்ற செய்தியையும் மறைக்கின்றன. இதையும் பாண்டியர் குலமுதற் கிழத்தி என்ற அடைமொழியுடன் மதுராபதி என்ற பெண் தெய்வத்தைச் சிலப்பதிகாரம்தான் காட்டுகிறது.
…….பனித்துறைக்
                        கொற்கைக் கொண்கள் குமரித் துறைவன்
                        பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
                        குலமுதற் கிழத்தி      -       கட்டுரை காதைவரி 10 – 13

                        மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்வரி 22

            இனி, மெகாத்தனி கூறும் சூரசேனர்கள் யாரென்று பார்த்தால் மகாபாரதத்தின் யயாதியால் துரத்தப்பட்ட அவன் மகனான யதுவின் வழிவந்த யாதவர்களின் ஒரு பிரிவினர் என்று தெரிகிறது. அபிதான சிந்தாமணியில் யாதவர் என்ற தலைப்பில் வரும் மக்கள் குழுவினரின் பட்டியலைப் பார்த்தால் குசராத்தின் கட்சு வளைகுடாவிலிருந்து எமுனை ஆற்றின் கரை வரை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்தது தெரியவருகிறது. துரியோதனாதியர் சேரனுக்கு முன்னோர் என்று புறநானூறு 2ஆம் பாடல் தரும் செய்தியிலிருந்து[1] பார்த்தால் இவர்கள் குமரிக் கண்டம் முழுகுவதற்கு முன்பு இங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களின் வழிவந்தவர்கள் என்றும் கொள்ள வேண்டியிருக்கிறது. வட இந்தியாவின் மதுரை(மாத்ரா)யிலிருந்து சராசந்தன் என்பவனால் துரத்தப்பட்டு கட்சு வளைகுடாவில் கடற்கோளால் அழிக்கப்பட்ட துவாரகைக்குத் தப்பி ஓடிய வடநாட்டுக் கிட்ணனின் இரண்டு தலைநகரங்களும் குமரிக் கண்டத்தில் அழிவைச் சந்தித்த மதுரை, துவரை(கபாடபுரம், கபாடம் = கதவு, துவார் = கதவு)[2]ஆகிய பெயர்களும் ஒத்து வருவதைப் பாருங்கள். மகாபாரத  கிட்ணன் தமிழ்க் கண்ணனைப் போல் ஏறு தழுவி பெண்களை மணந்ததான செய்திகள் இல்லை. அதே நேரம் சூரசேனர்கள் போற்றும், கிரேக்க பகுதிக் கடவுளான எரிக்கிலுசுடன் ஒக்க வைத்து அதே நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவனாக மெகாத்தனி கூறும் எரிக்கிளீசு காளையை அடக்குபவனாகக் காட்டப்பட்டுள்ளான். கிரேக்கத்தில் தமிழ் நாட்டில் போல் ஏறு தழுவல் இருந்ததாகவும் தெரியவில்லை. எனவே எரிக்கிளீசின் இந்தப் படிமமும் அவனைப் பற்றிய சில செய்திகளும் பினீசியர்களாலேயே கிரேக்கத்துக்குச் சென்றிருக்க வேண்டும். இவற்றை நுண்மையாக ஆயும் பணியை வரும் தலைமுறையினருக்கு விட்டுவிடுவோம்.

            இங்கே நாம் வினையாடும் செய்திகளுடன் நேரடித் தொடர்பில்லையாயினும் நமக்குத் தெரிந்த சில செய்திகளை குமரி அம்மனைப் பற்றிப் பதிய விரும்புகிறேன்:

1. மேலே கூறியதில் எரிக்கிலிசு தன் மகளுக்குத் தகுந்த கணவன் வேறெவனும் இல்லை என்று தானே அவளைக் கூடியதாக மெகாத்தனி கூறுகிறார்.

2. குமரி அம்மன் தன்வரிப்பு(சுயம்வரம்) ஒன்று வைத்ததாகவும் கலந்துகொள்ள விரும்புவோர் பொழுது புலர்வதற்குள் வந்து விட வேண்டுமென்று கட்டுறவு வைத்ததாகவும் அதில் கலந்தகொள்ள சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் வந்ததாகவும் இந்தத் திருமண முயற்சியை விரும்பாத இந்திரன் குமரி மாவட்டம் சுசீந்திரத்துக்கும் குமரி முனைக்கும் இடையில் இருக்கும் வழுக்க(கு)ம்பாறை என்னுமிடத்தில் ஒரு பாறை மீது சேவல் வடிவத்தில் நின்று அவ்விடத்தில் மும்மூர்த்திகளும் வரும் போது கூவியதாகவும் அதைக் கேட்டு பொழுது விடிந்துவிட்டதென்று ஒவ்வொருவரும் பக்கத்திலிருந்த சுசீந்திரத்தில் அமர்ந்துவிட்டதாகவும் அந்த வட்டாரத்தில் ஒரு கதை நிலவுகிறது. தன்வரிப்பில் கலந்துகொள்ள யாரும் வராததால் மனம் வெறுத்து தனக்கு அலங்காரத்துக்காக வைத்திருந்த குங்குமத்தையும் விருந்துக்கு வைத்திருந்த அரிசியையும் குமரி அம்மன் கடற்கரையில் கொட்டிவிட்டதாகவும் அக் கதை கூறுகிறது. குமரி மாவட்டம் முட்டம் வட்டாரத்தில் கடற்கரையில் காணப்படும் செக்கச் சிவந்த மண்ணைக் குங்குமம் என்றும் அந்த வட்டாரத்தில் காணப்படும் பொதுவான கடல் மணலை விட பருக்கனான மணலை அரிசியாகவும் கூறுவர். அத்துடன் வழுக்கும்பாறையில் சாலையில் குமரியை நோக்கிச் செல்லும் போது வலது பக்கம் இருக்கும் ஏறக்குறைய நில மட்டத்திலிருக்கும் ஒரு பாறையின் மீது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் ஒற்றைக் கால் தடமும் அதன் பக்கத்தில் ஒரு கோழியின் ஒற்றைக் கால் தடமும் மென் சேற்றில் பதிந்தது போன்று மிக இயற்கையாகச் செதுக்கப்பட்டிருப்பதை நான் சிறுவனாக இருக்கும் போது கண்டிருக்கிறேன். சுசிந்திரம் என்பதில் இந்திரன் பெயர் அடங்கியுள்ளதும் அங்குள்ள மும்மூர்த்திகளுக்கு முழுக்கு நடத்துவதற்கு இந்திரனின் ஐராவதம் எனும் யானை கோட்டால்(தந்தத்தால்) குத்தி உருவானதால் அங்கு ஓடும் பழையாற்றுக்கு கோட்டாறு என்றும்(தந்த நதி) பெயர் வந்ததாக பூசகர்கள் ஒரு கதை சொல்வதாலும் இது முன்பு இந்திரன் கோயிலாக இருந்திருப்பது தெரிகின்றது. கோடு என்ற சொல்லுக்கு மலை, யானை மருப்பு(தந்தம்) உட்பட பல பொருள்களை அகராதிகள் தருகின்றன. பெரும்பாலும், பாண்டியர், பேரரசுச் சோழர் ஆட்சியின் கீழ் இப் பகுதிகள் வந்த காலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது இக் கோயிலுக்கு தாணுமாலயப்பெருமாள் கோயில் என்பது பெயர். தாணு என்பது சிவனையும் மால் என்பது திருமாலையும் அயன் என்பது பிரம்மனையும் குறிக்கும் சொற்கள் என்பது நமக்குத் தெரியும்.

3. மதுரையை ஆண்ட தடாதகைப் பிராட்டி மூன்று முலைகளுடன் இருந்ததாகவும் அவள் ஆண்களை மதிக்காமல் திருமணத்தை விரும்பாமல் இருந்ததாகவும் சிவனைப் பார்த்தவுடன் அவளது மூன்றாவது முலை மறைந்ததாகவும் நாண உணர்வு ஏற்பட்டதாகவும் திருவிளையாடல் புராணக் கதை கூறுகிறது. நாம் அறிந்தவரை பாண்டிய மரபை உருவாக்கிய முதல் அரசியும் மீனைக் கொடியாகவும் கொண்டவளும், அதனால் பிற்காலங்களில் மீனாட்சி என்று அறியப்பட்டவளுமான குமரியம்மனைத்தான் தடாதகைப் பிராட்டி என்று இந் நூல் குறிப்பிடுகிறது எனலாம். பார்ப்பனர்களின் வேள்விகளை ழித்தவளாகவும் அதனால் இராமனால் கொல்லப்பட்டவளாகவும் வான்மீகியின் கற்பனையில் உருவான இராமாயணக் கதை கூறும் தாடகை கூட குமரியம்மனாக இருக்கக்கூடும். அந்தப் பெயர்தான் திருவிளையாடல் புராணத்தில் தடாதகை என்று திரிக்கப்பட்டிருக்கலாம். இன்றைக்கும் குமரி மாவட்டத்தில் வடமேற்கு எல்லையில் உள்ள மலைத்தொடருக்குத் தாடகை மலை என்ற பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிவனின் மனைவியாக, கண்ட இடங்களிலெல்லாம் தொன்மங்களிலும் தல புலாணங்களிலும் குறிப்பிடப்படும் உண்ணாமுலை அம்மனான குமரி தமிழகத்தில் ஒரேயொரு கோயிலில் கூட சிவனோடு ஒரே திருமுன்னில்(சன்னிதானத்தில்) வீற்றிருக்கவில்லை என்பது அவள் இன்னும் கன்னியாகவே இருப்பதற்குச் சான்றாகும். 

4. குமரி மாவட்டம் சாமித்தோப்பில் கோயில் கொண்டிருக்கும் திருவைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளின் ஆணையால் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலில் திருமாலின் தோற்றரவு (அவதாரம்) ஆன அவர் தான் அனைத்துப் பேய்த் தெய்வங்களையும் சுட்டு அழித்துவிட்டதாகவும் குமரி அம்மனைத் திருமணம் செய்துவிட்டதாகவும் அதனால் அவளையும் வழிபட வேண்டியதில்லை என்றும் தன்னை மட்டும் வணங்கினால் போதுமென்றும் கூறியிருக்கிறார்.
           
குமரி அம்மனை காளியாகிய பார்வதியாகக் குறிப்பிடுவர். அந்த வகையில் தொன்மங்களின் படி திருமாலின் தங்கையாகிய குமரியை சுசீந்திரம் கதையிலும் முத்துக்குட்டி அடிகள் கதையிலும் முதலதில் மணமுடிக்க முயற்சி நடந்ததாகவும் இரண்டாவதில் திருமணம் முடித்துள்ளதாகவும் கூறப்படுவது கவனிக்கத்தக்கது. தெய்வங்களைத் தங்கள் வழிபாட்டு வட்டங்களுக்குள் கொண்டு வருவதற்கான பூசகர்களின் முயற்சி ஆட்சியாளர்களின் நாடுகளைப் பிடித்துத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடத்தும் போர்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

4. இப்போது இருக்கும் குமரி அம்மன் கோயில் குமரி மாவட்டத்தில் இன்றும் மிகப் பரவலாக இருக்கும் இயக்கி அம்மன் கோயிலாக இருந்திருக்கலாமென்று கருதத்தக்க தடயம் ஒன்று உள்ளது. இயக்கி என்ற தெய்வம் மூவேந்தர்கள் தமிழகத்தினுள் நுழைவதற்கு முன் இங்கு வாழ்ந்த பறையர், பாணர், துடியர், கடம்பர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களில் ஒன்று. இயக்கர்கள் என்போர் நாகர்களுக்கு முன் நாகரிகத்தின் உச்சியிலிருந்தவர்கள். இராவணனும் இயக்கனே. மகாபாரதம் கலுழன் சருக்கம் இவர்களின் வீழ்ச்சியைக் கூறும் ஒரு தொன்மப் பதிவு எனலாம். கந்தருவர் எனப்படுவோரும் இயக்கர்களாக இருக்கக் கூடும். இவர்கள் வானூர்திகளில் பறந்தவர்ர்கள். இந்த நாகரிக வளர்ச்சி இராவணன் ஆண்ட, மகரக் கோடு எனப்படும் சுறவக் கோட்டுப் பகுதியில்தான் இருந்துள்ளது. ஆனால் இன்றைய இலங்கையில் பதவி வெறி கொண்ட ஒரு பெண்ணால் காட்டிக்கொடுக்கப்பட்டு வந்தேறி விசயனால் அழிக்கப்பட்ட நாகர்கள் தவிர அங்கு இருந்த இயக்கர்களில் பெரும்பாலோர் சிங்களர்களுடன் கலந்தது போல் இன்றி இந்த வட்டாரத்தில் இருந்தவர்கள் வெளி உலகத் தொடர்பு குறைந்து இரும்பு நாகரிகக் காலத்துக்கு முந்திய ஒரு கட்டத்தில் தேங்கிப் போய்  இருந்திருக்கின்றனர்.

            இயக்கி என்ற தெய்வத்தைப் பற்றிய பழைய நம்பிக்கைகள், இத் தெய்வம் தனியாக இரவில் செல்லும ஆண்களை மயக்கி அடித்துக் கொல்லும் அல்லது அம்மை போன்ற நோய்களைக் கொடுக்கும் என்பவையாகும். இவற்றை விட முகாமையான செய்தி, வழியில் செல்வோரிடம் சுண்ணாம்பு கேட்கும், வெறுங்கையிலோ வெற்றிலையிலோ வைத்துக் கொடுத்தால் கையைப் பிடித்துக் கேடு செய்யும், இரும்பில் வைத்துக் கொடுத்தால் அஞ்சி ஓடிவிடும் என்பதாகும். இந்தக் கடைசிச் செய்தி மூவேந்தர்கள் இரும்பு ஆயுதங்களை வைத்திருந்ததால் இவர்களால் அவர்களை எதிர்கொள்ள முடியாதிருந்ததனால், இரும்புக் கனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கத் தேவையான சுண்ணாம்பைத் தேடுவதில் அவர்கள் முனைப்பாக இருந்த வரலாற்று நிலையை இந்தத் தெய்வத்தோடு பொருத்திக் கூறப்படுகிறது என்று கொள்ளலாம். பழையனூர் நீலி பற்றிக் கூறும் அதே கதையை குமரிநெல்லை எல்லையில் இருக்கும் பழவூர் எனும் ஊரிலுள்ள இயக்கியின் மீது இங்கு கூறுகின்றனர். இந்தக் கதையில் கள்ளியைக் கிள்ளி பிள்ளையாக மாற்றிய கதைக்கருவுக்கு ஏற்றாற்போல் இந்தத் தெய்வத்தின் இடுப்பில் ஒரு குழந்தை இருக்கிறது. இங்கு ஓட்டை உருவம் என்ற வகை மண் சிலைகள்தாம் உள்ளன. தலையில் தொல்குடி மக்கள் அணிவது போன்ற இறகுகளாலான தலையணியும் வலது கை ஓங்கிய நிலையில் கதாயுதம் எனப்படும் குண்டாந்தடியை உயர்த்திப் பிடித்த தோற்றத்தில் உள்ளது. தலையின் பின்புறமும் இரு கைகளும் மணிக்கட்டோடு முடிந்து பொள்ளலாக இருப்பதால் குண்டாந்தடி இருப்பதில்லை. உண்மையில் இந்தத் தெய்வம் முதியோள் குழவி என்று கூறப்படும், அடுத்த ஆட்சியுரிமைக்குரிய ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தொல்குடித் தாயே. அதனால்தான் குழந்தைப் பேறில்லாதவர்கள் இத் தெய்வதற்கு வேண்டுதல் செய்து தொட்டில் கட்டுகிறார்கள்.

            குமரி மாவட்டத்தில் வழிபடப்படும் தெய்வங்களில் ஒன்று சுடலைமாடன். இதன் கதையிலும் வழிபாட்டு முறையிலும் நாகரிகத்தின் தொடக்க காலத்தில் இறந்தவர்களைத் தீயிலிட்டு உண்டதிலிருந்து வெள்ளையர் கால அஞ்சல் ஓட்டக்காரர்களின் செயல்பாடுகள் வரையான நடைமுறைகள் உள்ளன. அத் தெய்வக் கதையில் ஒரு பகுதி, சுடலைமாடன் குமரி அம்மன் கோயிலின் காவல் பணியில் இருந்ததாகவும் பெரும்புலையன் என்ற மலையாள மந்திரவாதி மாடனை ஏமாற்றி கோயில் நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாகவும் அதற்குப் பழிவாங்க அவன் மகளான மா இயக்கியைத் திருட்டுத்தனமாகச் சென்று அவள் அறியமலேயே கற்பழித்ததாகவும் பின்னர் புலையனிடம் திருடிய நகைகளை அவனே வைத்துக்கொள்ளலாமெனவும் மா இயக்கியைத் தந்துவிடும் படியும் பகரம் பேசி அவளைக் கொன்றுவிட்டதாக இக் கதை கூறுகிறது. புலையர் என்ற சாதியினரின் பூசகத் தலைவர்கள்தாம் பறையர் என்ற அடிப்படையில் பறையர்களின் தெய்வமான இயக்கியின் பூசகனுக்குப் பணத்தைக் கொடுத்துத் துரத்திவிட்டு அந்த இடத்தில் இன்றைய குமரி அம்மன் கோயிலை அமைத்திருக்கிறார்கள் வந்தேறிப் பாண்டியர்கள் என்பது தெளிவாகிறது. இரண்டாம் கடற்கோளுக்கு முன் கதவபுரத்தில் இருந்த குமரி அம்மன் கோயில் அழிந்து போக அதை மீண்டும் கடலோரத்தில் நிறுவிய நிகழ்ச்சியை இக் கதை கூறுகிறது என்று கொள்ளலாம். குமரி அம்மன் கோயில் முன்பு இயக்கி அம்மன் கோயிலாக இருந்ததற்கு ஏதாவது தடயம் உள்ளதா என்பதை வரும் தலைமுறையினர் ஆய்வு செய்யலாம்.


[1] பின்னிணைப்பு 4 பார்க்க.
[2] பின்னிணைப்பு 5 பார்க்க.

1 மறுமொழிகள்:

said...

//மகாபாரத கிட்ணன் தமிழ்க் கண்ணனைப் போல் ஏறு தழுவி பெண்களை மணந்ததான செய்திகள் இல்லை//

கிருட்டிணன் ஏழு காளைகளை அடக்கி சத்தியை என்ற பெண்ணை மணந்தான் என்று பாகவதத்தில் இருக்கிறதே.

கண்ணன் காளைகளை அடக்கி நப்பின்னையை மணந்தான் என்று திவ்வியப் பிரபந்தத்தில் வருகிறது.