அறிமுக அரசியல்

ஆய்வாளர்களில் இருவகையினர் உள்ளனர். முதல் வகையினர் தாம் உண்மையென்று நம்புவதைக் கூறுவோர், தாம் கூறுவனவற்றை நம்புவோர். இரண்டாமவர் தாம் கூறுவது உண்மையல்ல என்று தெரிந்தும் துணிந்து பொய் கூறுபவர். இந்த இரண்டாம் வகையிலும் இரு வகையினர் உள்ளனர். முதல் வகையினர் தாங்கள் கூறும் பொய்யை எதிராளி எளிதில் பொய்யென்று இனம் காண முடியாமல் சொல்லும் திறனாளர்கள், இரண்டாம் வகையினர் பொருந்தப் பொய் கூறக் கூடத் திறனற்றவர்கள். இரண்டாம் வகையில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் சு.கி.செயகரன்.

பொய் பேசுகிறார் என்றதும் அவர் புவி இயங்கியலில் பட்டம் பெற்றதைப் பற்றியோ உயர்ந்த பல பதவிகளில் இருந்ததைப் பற்றியோ பொய் கூறுகிறார் என்று நாம் கூறவில்லை. இன்று நிலவும் கல்வி அமைப்பில் மண்டையில் எந்தச் செய்தியையும் பதிக்காமல் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மட்டத்தில் கூட முதல் மதிப்பெண் பெற்று விட முடியும் என்பது பலரும் உணர்ந்த உண்மை.[1] அது போல் துறை அறிவு இருந்து அதை வெளிக்காட்டுவோரை விட அதை வெளிக்காட்டாதவர்களுக்கு உயர்பதவி வாய்ப்புகள் மிகுதி, துறை அறிவு அறவே இல்லாதவர்களுக்கு அதைவிட மிகுதி என்பது பிழைக்கத் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்; தெரியாதவர்களில் சிலருக்கும் தெரியும்.

நாம் இங்கு பொய் என்று குறிப்பிடுவது அவரது படிப்பு அல்லது பதவியைப் பற்றி அல்ல. அவர் குறிப்பிடும் “வரலாற்று”ச் செய்தியைப் பற்றி. “குமரிக் கண்டம்” என்ற பெயர் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லையே என்பதைத் தன் முதன்மையான கேள்விகளுள் ஒன்றாக வைத்துக் கொண்டுள்ள திரு.சு.கி.செயகரன், “தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ‘குமரி எனும் நிலநீட்சி’, "இலக்கியக் குறிப்புகள் காட்டும் ‘குமரி எனும் நில நீட்சி’ (பக்.18), "சங்கப் புலவர்கள் குறிப்பிடும் ‘குமரி எனும் நிலநீட்சி’" (பக்.19) என்ற சொற்றொடர்களில் வரும் “குமரி எனும் நிலநீட்சி” என்ற தொடர் சங்க அல்லது பிற தமிழ் இலக்கியங்களில் எங்கு வருகிறது என்று கூறுவாரா? இல்லாத செய்திகளை அல்லது புலனங்களை இருப்பவை போன்று மீண்டும் மீண்டும் கூறப்படும் பொய்களால் உண்மை என்று நிறுவும் கோயபல்சு பாணி எப்போதும் பயனளிப்பதில்லை. சங்க இலக்கியம் எதிலும் முழுகிய நிலப்பரப்பைக் குமரி என்ற பெயரில் எங்குமே குறிப்பிடவில்லை என்பது தான் உண்மை. “குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்ற சங்கப் பாடல் வரியில் வரும் அயிரை எனும் நன்னீர் மீன் பற்றிய குறிப்பு ஒன்றே குமரியம் பெருந்துறை என்பது குமரி எனும் ஆற்றின் துறை என்பதற்கான மறைமுகச் சான்றாக உள்ளது.[2]

சங்க இலக்கியத்தில் முழுகிய நிலப்பரப்பு பற்றிய சமற்கிருத நூல்களில் உள்ள அளவுக்குக் குறிப்புகள் இல்லாமல் போனதற்கும் ஓர் அரசியல் பின்னணி உண்டு. குமரிக் கண்டப் பகுதிகள் பல்வேறு காலகட்டங்களில் முழுகிய நிகழ்முறையில் இறுதியாக வெளியேறியவர்கள் தமிழகத்தினுள் நுழைந்தனர். மக்கள் எளிதில் புக முடியாத அடர்காடாக இருந்ததனால் இரும்புக் கோடரி கண்டு பிடித்த பின் தான் இது இயல்வதாயிற்று. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இரும்புக் கோடரியின் கையாளல் ஒரே நேரத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் கூற முடியாது. அதன் பரவல் வெவ்வேறு நிலப்பரப்பில் வெவ்வேறு காலகட்டங்களில் இடம் பெற்றிருக்கலாம். உலகில் மிகப்பெரும் பண்டை நாகரிகங்களெல்லாம் நீண்டபெரும் ஆறுகள் பாலையில் ஓடி மருதத்தினுள் (டெல்டா) நுழையும் இடை நிலத்தில் மென்காடுகள் தொடங்கும் இடங்களில்தான் தோன்றியுள்ளன. குமரிக் கண்டத்தின் நாக நாட்டிலிருந்து கடற்கோளுக்குத் தப்பி கட்சு வளைகுடாவில் அவந்தி நாட்டில் கரையேறிய மக்கள் (மணிமேகலை, பழம் பிறப்புணர்ந்த காதை பார்க்க) சிந்தாற்றின் மணல்வெளிகள் வழியாக முதலில் வடமேற்கு நோக்கியே சென்றனர். பின்னர் கங்கைச் சமவெளிக் காடுகளை அழித்துக் கொண்டேதான் கிழக்கு நோக்கிப் பரவினர். அதுபோல் தமிழகத்திலும் தெற்கில் கரையேறி வடமேற்கு நோக்கிக் காடுகளை அழித்துப் பரவினர் என்பதற்குக் கேரளத்தைத் தன் கைக்கோடரியைக் கடலில் வீசிப் பரசுராமன் உருவாக்கினான் என்ற தொன்மக் கதையால் புரிந்து கொள்ளலாம். பரசுராமன் என்பவன் அரசர்களுக்கு எதிரான பூசாரியரின் போராட்டத்தில் பூசாரியரின் இறுதி வெற்றியைச் சுட்டும் ஒரு மனிதனின் தொன்மப் படிமம். ஒருவேளை அது பின்னர் ஒரு தலைமைப் பீடப் பெயராகவும் மாறி இருந்திருக்கலாம். அவனது படைக்கலமாக மழுவெனும் கோடரி கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடாகக் காடுகளை அழித்துக் கொண்டு சேரமரபினர் அங்கு ஆட்சியமைத்ததன் பார்ப்பனப் பதிவாக இதைக் கொள்ள வேண்டும். பாண்டியர் தமிழ் அரசர்களில் முதலில் தோன்றியவர்களாகக் கருதப்படும் சூழலில் சேர சோழ பாண்டியர் என்ற வரிசை மரபு அவர்களில் இன்றைய தமிழகத்துக்கு சேரர்கள் முதலில் வந்ததன் காரணமாக இருக்கலாம்.

இடப்பெயர்கள் வரலாற்றுவரைவின் ஒரு கருப்பொருள் என்பது “கற்றுத்துறைபோய புவியியங்கியல் வல்லுநருக்குத் தெரிந்திருக்கும். திருநெல்வேலி நகருக்குள் ஓடும் தாமிரபரணிக்குப் பல பெயர்கள் இருப்பதுவும் அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். பண்டை உலகக் கடலோடிகள் குறிப்பிட்டுள்ளவாறு குமரிமாக்கடலுக்கு தெற்கில் மகரக் போட்டுப் பகுதியில் இருந்த தாமிரபரணி என்ற நிலப்பரப்பின் பெயருடன் இந்தோனேசியக் கடற்பகுதியில் உள்ள போர்னியா, புரூனெய் என்ற பெயர்களுக்கு இணையாக பொருனை என்ற பெயரும் இதற்குண்டு. இந்தப் பெயர் குமரிமாவட்டத்திலுள்ள ஓர் ஆற்றுக்கும் உரியது. வேறெங்காவது உள்ளதா என்று ஆய்வதும் நன்று. இதற்குச் சோழனாறு என்ற ஒரு பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் புகழ் பெற்ற ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். சோழன் இப்பகுதியில் ஆண்டதற்கு சோழ மரபின் தோற்றக் குறியாகிய கதிரவனின் பெயரில் அமைந்த ஆதித்தநல்லூர் அசைக்க முடியாத சான்றாகும். பின்னர் சேரர்களையும் சோழர்களையும் தொலைவிடங்களுக்குத் தூரத்திவிட்டுப் பாண்டியன் வந்து சேர்ந்தான்.

“மலிதிலிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணங்கிய வாடாச்சீர்த் தென்னவன்”
(முல்லைக்கலி 104: 1-4)

என்னும் வரிகள் குறிப்பது இந்த நிகழ்வாகலாம். கலித்தொகை கூறும் இச்செய்திக்கு புவியின் மேற்பரப்பிலுள்ள புவியியற் பெயர்கள் சான்று கூறுகின்றன.

இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்துக்குள் வரும்போது அவர்களைவிட வளர்ச்சி குன்றியவர்களாயிருந்த பறையர், பாணர், துடியர், கடம்பர் என்ற நான்கு குடியினர் இங்கு வாழ்ந்தனர். அவர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஒருவேளை ஐரோப்பியக் காடையர் செய்தது போல் அவர்களைக் கொன்று குவித்து விட்டுக் கூட நம் சேர, சோழ, பாண்டியர் இங்கு காலூன்றியிருக்கலாம். இன்று ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் பழங்குடியினர் வந்தேறி ஐரோப்பியர்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதைப் போல் இந்தப் பறையரும் துடியரும் பாணரும் கடம்பரும் தூக்கியிருந்த ஒரு சூழலில் தாங்கள் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க குமரிக் கண்டம் பற்றிய செய்திகளை, பாண்டியர் குலமுதல்வி குமரி என்ற பெண்ணே என்ற உண்மையைச் சங்கத் தொகுப்பினுள் மறைத்துள்ளனர். அவர்களின் முயற்சிகளையும் மீறி உள்ளே புகுந்து விட்ட குறிப்புகள் தாம் குமரியம் பெருந்துறையும் மாங்குடிக் கிழாரின் பாடலும். ஆனால் வரலாற்றை மறைக்க விரும்பாத சிலர் அல்லது தெற்கின் அளவுக்கு மூலக்குடிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ளாத வட இந்தியாவில் குடியேறிய குமரிக் கண்ட மக்கள் தொன்மங்களாகவும் மறைகளாகவும் குமரிக் கண்டச் செய்திகளைப் பதிந்து வைத்துள்ளனர். இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக இந்தச் செய்திகளைப் பதிவதற்கென்றே வேத மொழியையும் சமற்கிருதத்தையும் கூட மக்கள் மொழிகளிலிருந்து வேறுபட்டதாக வடிவமைத்திருக்கலாம். அம்மொழியையும் படிக்க அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் முயன்ற போது அம்மொழியாக்கங்களைப் படிப்போருக்கும் கேட்போருக்கும் தண்டனை என்ற கருத்து உருவாகியிருக்கலாம்.

இன்று பறையர்கள் பெருமளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். மிகுந்த சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாக. பாணர்கள் ஆங்காங்கே சிலர் உள்ளனர். பிற சாதிகளில் இணைந்தும் உள்ளனர். துடியர் எனும் உடுக்கடிப்போர் கோடாங்கி என்ற பெயரில் வாழ்கின்றனர் என்று தெரிகிறது. கடம்பர் சேர அரசர்களால் துரத்தப்பட்டு இன்று கோவாவில் வாழ்கின்றனர். இந்த வரலாற்று அரசியலின் பின்னணியில் தான் நாகரிகத்தின் முன்னோடிகளான இந்தியர்களிடையில் முறையான வரலாற்று வரைவுகள் இல்லாமல் போயிருக்க வேண்டும்.

“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி” என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு நம் “படிப்பாளிகள்” மிகவும் தான் நஃகல் அடிக்கிறார்கள். கல் தோன்றி அதிலிருந்து மண் தோன்றியது என்ற அடிப்படை உண்மையைக் கூறும் புவியியங்கியலை ஐரோப்பியர்களுக்குத் தொடங்கி வைத்தவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காட்லாந்தில் வாழ்ந்த மருத்துவராக இருந்து ஓய்வு பெற்று பண்ணையாளராக மாறிய அட்டன் என்பவர்.[3] அதிலிருந்து வளர்ந்த புவியியங்கியல் இன்னும் மழலை கூடப் பேசப் பயிலாத குதலை நிலையில் தான் உள்ளது. கல்தோன்றி அதிலிருந்து மண் தோன்றும் என்பது மட்டுமல்ல, ஊத மறை கூறவது போல உலகம் ஆண்டவன் படைத்தது போல் மாறாமல் இருப்பதல்ல, கடலின் இடைவிடா இயக்கத்தால் தோன்றல், நிலைத்தல், அழிதல் என்ற முந்நிலையையும் எய்துவதாகும் என்பதனையும் நம் முன்னோர் பதிந்து வைத்துள்ளனர்.

“முந்நீர்-கடல்; ஆகுபெயர், ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை என்பார்க்கு அற்றன்று ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழி ஊற்றுநீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்".

இது சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, உள்வரி வாழ்த்தில் “முந்நீரினுள் புக்கு....” எனத் தொடங்கும் மூன்றாம் செய்யுளில் வரும் முந்நீர் என்ற சொல்லுக்கு அடியார்க்குநல்லாரின் விளக்கத்தைப் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் சிலப்பதிகாரம் உரையில் தந்துள்ளது (சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1999 பக். 396, 409).

கடல் நிலமாக மாறும், நிலம் கடலாக மாறும் என்ற புவியியங்கியல் உண்மையையும் அட்டனுக்குப் பின் தான் ஐரோப்பிய அறிவியல் அறிந்து கொண்டது.

புவியியங்கியலில் மட்டுமல்ல, அனைத்து அறிவுத்துறைகளிலும் ஐரோப்பிய அறிவியல் குதலைப் பருவத்திலேயே உள்ளது. ஆனால் நம் மூதாதையினர் அனைத்துத் துறைகளிலும் இவர்களைத் தாண்டிச் சென்றுள்ளனர் என்பதற்கு நம் பதிவுகளில் வலுவான தடயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை இனங்காண ஐரேப்பியர் வளர்த்தெடுத்துள்ள அறிவியல்களின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது என்பது இன்று நாமுள்ள இரங்கத்தக்க நிலை. ஆனால் நம் முந்தையோரின் எய்தல்கள் நம் உயிரணுக்களில் பதிந்துள்ளன. வல்லரசியப் பொருளியலுக்கும் சிந்தனைகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் “படிப்பாளிகள்” வைக்கும் தடைகளையும் நகையாடல்களையும் ஊக்குவிப்பாகக் கொண்டு ஐரோப்பியரை அறிவியலில் தாண்டிச் செல்வோம். கல் தோன்றி அதிலிருந்து மண் தோன்றுவதைக் கண்டவன் தமிழன் என்பதை நெஞ்சை நிமிர்த்துச் சொல்வோம். இந்த அறிமுக அரசியலிலிருந்து, ஆதிமனிதர் தோன்றியது 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் என்ற சு.கி.செயகரனின் வேடிக்கையான கூற்றையும் ஆய்வோம்.


அடிக்குறிப்பு:

[1]கடம் அடித்தல் அல்லது உருப்போடுதல் எனப்படும் பாராமல் படித்தல் மூலம் நினைவை நிறைத்து தேர்வின் போது அதைக்கக்கி வைக்கும் நடைமுறையைக் கல்வித்துறையிலுள்ளோர் “பிட்டுத்தள்ளுதல்” என்பர். குழாய்ப் பிட்டு அவிக்கும் நடைமுறையில் பிட்டுமாவையும் தேங்காய்த்துருவலையும் மாற்றி மாற்றிக் குழாய்க்குள் நிறைத்து வெந்ததும் ஒரு கோலால் வெளியே தள்ளுவதை இந்தச் சொல் குறிக்கும். முன்பு மூங்கில் குழாய் பயன்பட்ட பொது அதில் கொஞ்சம் மாவு ஒட்டிக் கொண்டிருக்கும். இப்போது கறையேறா உருக்கு (Stainless steel) வந்த பிறகு கொஞ்சங்கூட ஒட்டுவதில்லை. முன்பு ஒராண்டு இரண்டாண்டு, மூன்றாண்டுப் பாடங்களை நினைவு வைத்து ஒரே தேர்வில் எழுதிய காலத்தில் படித்தவர்களுக்கு அவர்கள் விரும்பாவிடினும் சில செய்திகள் நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கும். இப்போது பருவமுறைத் தேர்வு முடிந்ததும் படித்த நூலையும் நினைவிலிருக்கும் செய்திகளையும் ஒருப்போல் தூக்கியெறிந்து விடும் நிலையில் எதுவும் நினைவில் ஒட்டுவதில்லை. புறநிலைக் கேள்விகள் (Objective type questions) எனப்படுபவற்றில் சில உத்திகளைக் கடைப்பிடித்தால் எதையும் படிக்காமலே நல்ல மதிப்பெண் பெற்றுவிட முடியும். திரு.செயகரனின் பிறந்த ஆண்டை வைத்துப் பார்க்கும் போது அவர் படித்த காலத்தில் இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இது போன்ற குறுக்குவழிகளைத் தடுப்பதற்காக, தவறான விடைகளுக்கு மதிப்பெண்களைக் கழிக்கும் நடைமுறை அப்போது இல்லை. படிக்காமல் முதலிடம் பெறுவது பற்றி மார்க்கு டுவெயின் எழுதிய புதினத்தின் கதைத் தலைவனாக சிறுவன் பலப்பக் குச்சிகளை வைத்து அட்டைகளை வாங்கி பரிசு பெறும், நிகழ்ச்சியைப் படித்துப் புரிந்து கொள்க.

[2]இந்தச் செய்தியை எமக்குச் சுட்டிக்காட்டியவர் பேரா. க.ப.அறவாணன் ஆவார். சென்னையில் நடைபெற்ற குமரிக்கண்டக் கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது "கழக இலக்கியத்தில்எங்கும் முழுகிய நிலப்பரப்புக்குக் குமரி என்ற பெயர்க்குறிப்பு ஏதுமில்லை என்று நான் குறிப்பிட்ட போது அவர் இடைமறித்து இதைக் கூறினார்.

[3]The Crust of the Earth, Ed. Samual Rappert and Helen Wright, A Signet Scientific Library Book. Pub. The New American Library, 1962 Art. “Geology, the Easy Science” by W.O. Hotchkiss P.16.

நுழைவாயில்

சு.கி.செயகரனின் குமரி நிலநீட்சியில் அணிந்துரை வழங்கியுள்ள திரு.எசு.வி.இராஜதுரை, பெயரின் முன்னெழுத்தைக் கூட புனைந்து கொண்ட ஒரே எழுத்தாளர் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர். எனவே அவர் குமரிக் கண்டக் கோட்பாடு ஒரு தொன்மம் என்ற பொருள்பட தன் அணிந்துரைக்கு “குமரி நிலநீட்சி ஒரு தொன்மத்தின் முடிவு?” என்று தலைப்பிட்டிருப்பதில் வியப்பில்லை. ஆனால் அங்கு ஒரு கேள்விக்குறியை வைத்ததன் மூலம் தான் குமரிக் கண்டக் கோட்பாடு மறுக்கப்பட்டு விட்டதாகக் கூறவில்லை என்று அவர் வாதிடலாம்.

அடுத்து, ஆதிக்கச் சாதியினர் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிடும் பார்ப்பனர்களின் இறுமாப்பை எதிர்கொள்வதற்காகத் தமிழ்மக்கள் மிகைக் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டதாகக் கூறித் தமிழ் மக்கள் மீது பரிவு கொண்டவர் போல் தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களது இந்தத் தவற்றைப் பொறுத்தருளுமாறு “அறிவியல் அணுகலில் மிக்குயர்ந்த” நூலாசிரியரையும் அவர் போன்ற “அறிவுலக மேதைகளையும்” கேட்டுள்ளார். இவ்வாறு தமிழ் மக்கள் மீது பரிவு மிக்க எசு.வி.இராசதுரையே குமரிக் கண்டக் கோட்பாடு அறிவியல் அடிப்படை ஏதுமற்றது; அதனைத் தக்க வைத்துக் கொள்ள ஞாயங்கள் ஏதுமில்லை; அது இல்லாமலேயே தமிழர்களுக்குப் பெருமை தரும் தொல்சிறப்புகள் பலவுண்டு என்று ஆறுதல் கூறுகிறார். காவிரி போனாலென்ன, கங்கையையே இங்கு கொண்டு வந்து நிறுத்துகிறேன் பார் என்று தமிழ் நாட்டில் நிலவும் பரிசுக் சீட்டில் பணக்காரனாகிவிடலாம் என்பது போன்ற மனப்பான்மைக்கு இளைஞர்களையும் “அறிஞர்களை”யும் கொண்டு வந்து ஏமாற்றிய எம்.எசு. உதயமுர்த்தியின் வழி இது.

தமிழர்களுக்கு குமரிக் கண்டம் தவிர்த்த பழம்பெருமை பலவுண்டு என்பதற்கு எசு.வி.இராசதுரையின் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் அதற்காக எமக்கு ஐயத்திற்கிடமில்லாது உரிமைப்பட்ட குமரிக் கண்டக் கோட்பாட்டைக் கைவிட வேண்டுமென்று கேட்க எவருக்கும் உரிமையில்லை. சு.கி.செயகரன் போன்றோர் அறிவியல் என்ற பெயரில் முன்னுக்குப் பின் முரண்களைக் கிறுக்கியுள்ள ஒரு நூலினால் குமரிக் கண்டக் கோட்பாடு மறுக்கப்பட்டு விட்டது என்று இராசதுரை நம்புவது போல் நடிப்பதை ஏற்றுக் கொண்டு எம் மூதாதையர் பேணிக் காத்து வந்த எம் முந்தை வரலாற்றைக் கைவிட எந்த ஞாயமுமில்லை. பழம்பெருமை பேசியே தமிழகம் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக முரண்பாடுகளினால் தேங்கிய, அதனாலேயே எண்ணற்ற அயல் விசைகளின் மேலாளுமையைச் சுமந்து மூச்சுத்திணறி நிற்கும் ஒரு குமுகத்தை, அதன் மதிப்பை மேப்படுத்திவிட முடியாது. அதற்கு நிகழ்காலத்தின் மீதும் வருங்காலத்தின் மீதும் நம்பிக்கை வைத்துத் திட்டமிட வேண்டும். அதற்குத் தேவையான ஊக்குவிப்பை நம் போன்ற பண்டை மரபுள்ள மக்களின் உண்மையான வரலாறு வழங்கும். பெருமைமிக்க வரலாறு இல்லையென்றால் கூட உண்மையான வரலாறு நம் தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவும். எனவே எந்தச் சூழலிலும் நம் வரலாற்று வரைவில் விட்டுக் கொடுத்தலுக்கு இடமில்லை என்பதைத் திரு.எசு.வி. இராசதுரை உணர்வாராக. திருக்குறளைச் சொல்லி அவர் தப்பித்துக் கொள்ள முடியாது. பிறர் கருதுவது போல அவர் ஓர் அறிவுத்திறவோராக இருந்தால் அவர் பிறந்த, அவரை வளர்த்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்ற வேண்டிய தன் கடமையிலிருந்து எந்த வகையிலும் நழுவ முயலக் கூடாது என வேண்டுகிறேன்.

மனம்திறந்து....... 3

இன்று வல்லரசுகளுக்கு இங்கிருந்து கிடைக்கத்தக்க புலனங்கள் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் “தொண்டு” நிறுவனங்களின் “திட்டங்களுக்கு” பணம் பெறுவதற்காக வழங்கும் தரவுகள் மூலமாகவும் பெரும்பாலும் கிடைத்துவிட்டன. இனி பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொள்ளுங்கள்; ஆசியரியர்களை ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்திக் கொண்டால் போதும்; இளைஞர்களே வாருங்கள்! நுண்ணுயிரியல் படியுங்கள்! கணிணியில் புதிய புதிய மென்பொருட்களை வடித்துத் தாருங்கள்! அவற்றைக் கொண்டு உங்கள் மூத்த குடிமக்கள் திரட்டித் தந்த புலனங்களை வகைப்படுத்திக் கொடுங்கள்! உங்கள் நாட்டில் நீங்கள் தாம் உயர் வருமானம் உடையவராயிருப்பீர்கள்! எங்கள் நாட்டுக்கு வாருங்கள்! திறந்த கழிப்பிடமாக உள்ள உங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! உங்கள் நாட்டில் வேளாண்மை வேண்டாம்! தரிசாகட்டும் நிலங்கள்! அதில் மாடுகள் வளரட்டும்! அவற்றின் இறைச்சி எங்களுக்கு வேண்டும்! நீங்கள் இறைச்சியை உண்ணாதீர்கள்! குருதிக் கொதிப்பு வந்துவிடும்! இயற்கை உணவை உண்ணுங்கள்! இறைச்சி இயற்கை உணவில்லையா என்று முட்டாள்கள் போல் எங்களைக் கேட்காதீர்கள்! எங்கள் நாட்டில் தான் இறைச்சி இயற்கை உணவு! எங்கள் புல்வெளிகளை விளைநிலங்களாக மாற்றிவிட்டோம். அங்கிருந்து உங்களுக்கு “இயற்கை உணவு” வழங்குவோம். நாங்கள் மானியம் கொடுத்து பால்பொடியை மலிவாக உங்களுக்கு ஏற்றுமதி செய்வோம். அதிலிருந்து ஆரோக்கியா, கோமாதா, தமிழ் என்று பல பெயர்களில் “பாலை” வாங்கி உண்ணுங்கள்! உங்களுக்குப் பால்மாடு வேண்டாம். நாங்கள் பாலுக்கு, வேளாண்மைக்கு மானியம் வழங்குவதை எதிர்த்து உங்கள் தலைவர்கள் உலக அரங்குகளில் முழங்குவதை நம்ப வேண்டாம்! எங்கள் சொல்படி அவர்கள் ஆடும் நாடகம் அது. உங்கள் நாட்டில் ஏராளமாகப் பணம் உள்ளதென்று கூறுகிறீர்களா? அதனால் எதுவும் உங்கள் நாட்டுக்குப் பயனில்லை. உங்கள் பண அமைச்சர் சிதம்பரமும் தலைமை அமைச்சர் மன்மோகனும் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் எங்கள் ஆட்கள்!; எங்களிடம் நீண்ட நாள் பயிற்சி பெற்றவர்கள். வருமானவரி வேட்டை நாய்களை வைத்துக் கடித்துக் குதறிவிட மாட்டார்களா? அப்படியே அவர்கள் விட்டாலும் எமது பொதுமைக் கட்சித் தோழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? கிழிகிழி என்று கிழித்து விடமாட்டார்களா? உங்கள் மக்களிலிருந்து தலைவர்கள் உருவாகி எதிர்க்கமாட்டார்களா என்றா கேட்கிறீர்கள்? உங்களின் இன்றைய தலைவர்களையும் அவர்கள் அடைக்கலம் புகுந்துள்ள திரை நடிகர்களையும் மீறி நீங்கள் மாற்றுத் தலைமையைத் தேர்ந்தெடுக்க நெடுங்காலம் ஆகுமய்யா! அதற்குள் இந்த முகம்மதியர்கள் முந்திக் கொள்ளக்கூடும். எவர் முந்தினாலும் எங்களுக்கு ஒரே வழி, இந்த உலகத்தை அணுகுண்டால் அழித்து விட்டு மனிதர் வாழத்தக்க இன்னொரு கோளுக்கு ஓடிவிடுவதுதான். அதற்காகத் தான் நாங்கள் பெரிய பெரிய விண்வெளித் திட்டங்கள் போடுகிறோம். அதற்கு உம் போன்ற இளைஞர்கள் தேவை! விரைந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். இது இயலுமா என்று கேட்கிறீர்களா? வேறு உலகங்களிலிருந்து இங்கு மனிதர்கள் வந்துள்ளனர் என்று எரிக்வான் டெனிக்கான் எழுதியுள்ளவற்றைப் படித்ததில்லையா? அவர்கள் வேற்றுக்கோள் மனிதர்கள் இல்லை; குமரிக்கண்ட மக்கள் என்கிறார்களா? அதெல்லாம் பிதற்றல், புலவர்களின் கற்பனை. அதை நம்பாதீர்கள்! எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்! உங்கள் பெற்றோரையும் தேவையானால் அழைத்துக் கொள்ளுங்கள்! எங்கள் நாட்டிலுள்ள அதிகார வகுப்பு எங்கள் நாட்டில் பணியற்றிய உம் நாட்டுப் பொறியாளர்களைக் கையில் விலங்கு பூட்டித் தெருத் தெருவாக இழுத்துச் சென்றதைக் கேட்கிறீர்களா? அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்! பெரிய வினைகளில் சிறுசிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும், ஈராக்கில் எங்கள் படைவீரர்கள் நடந்து கொண்டதைப்போல, உங்கள் தமிழ்நாட்டில் “மூத்தோர் அறவோர் பசு பத்தினி பெண்டிர்” என்றெல்லாம் போரில் விலக்கு அளித்துவிட்டுப் பெண்கள் தலையை மழித்து மயிரைக் கயிறாக்கி அவர்களை கொண்டே தேர் இழுக்க வில்லையா உங்கள் மன்னர்கள்?

அமெரிக்காவின் வரலாறு இழிவானது. அரேபியர்களின் கடல் வாணிகப் போட்டியையும் துருக்கியிலிருந்த தடையையும் எதிர்கொள்ள மாட்டாமல், அவர்களைத் தவிர்ப்பதற்காகவே உலகம் உருண்டையானது என்று அப்போது தான் கண்டுபிடித்துச் சொன்ன கோப்பர்நிக்கசின் கூற்றை நம்பி கிழக்கே பொன்னும் பொருளுமாகக் கொட்டிக்கிடக்கும் இந்தியாவைத் தேடி மேற்கே புறப்பட்டவர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்தது அமெரிக்கக் கண்டம். புதிய உலகம் என்று அவர்கள் அதற்குப் பெயரிட்டாலும் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் நிறைந்து நாகரிக முதிர்ச்சியும் பெற்றிருந்த கண்டம் அது. குமரிக் கண்டத்தின் அழிவால் வெளி உலகத்தொடர்பு குன்றி வளர்ச்சி தேங்கி நின்ற அவர்களை ஐரோப்பியக் காடையர் ஏசுநாதரின் பெயரைச் சொல்லி கூட்டங்கூட்டமாகக் கொன்று அழித்தனர். அந்த மக்களின் வாழிடங்களிலிருந்து பொன்னையும் பொருளையும் கப்பல் கப்பலாக அள்ளிச் சென்றனர் அமெரிக்காவைக் கண்டறிந்த (சு)பானியர். அதனை அறிந்த இங்கிலாந்தின் அரசியான முதல் எலிசபத்தின் படைத்தலைவர்கள் எனப்படும் கடற்கொள்ளையர்கள் பானியக் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். பின்னர் பிரஞ்சியரும் அதில் கலந்து கொண்டனர். இவ்விரு கும்பலும் அங்கு சென்று தங்கள் கொலை வெறியை காட்டத் தவறவில்லை.

ஏற்றுமதிக்குத் தேவைப்பட்ட கம்பிளிக்காக குத்தகை உழவர்களை நிலங்களிலிருந்து விரட்டிவிட்டு வேலியிட்டு கம்பிளி ஆடுகளை வளர்க்கத் தொடங்கியதால் ஏற்பட்ட உணவுப்பொருள் பற்றாக்குறையை நிரப்ப அமெரிக்காவில் கோதுமை விளைப்பதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து மந்தை மந்தையாகக் கறுப்பின மக்களைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஓட்டிச் சென்றனர் ஐரோப்பிய “நாகரிக மக்கள்”. கி.மு.16ஆம் நூற்றாண்டுவாக்கில் இதே பானியரைப் பிடித்துச் சென்று பினீசியர்கள் அடிமைகளாக விற்றதாக கிரேக்க வரலாற்றாசிரியர் ஏராடோட்டசு பதிந்து வைத்துள்ளார். கறுப்பின மக்களோடு இங்கிலாந்தில் கொலை, களவு, காமம், ஏமாற்று, பரத்தைமை போன்ற குற்றங்களுக்காகச் சிறைப்பட்டவர்களை விடுவித்து அரசே அமெரிக்காவுக்கு விடுத்து வைத்தது. இவ்வாறு குற்றச் செயல்களுக்காகவே பிறந்த பிறவிகளின் பிறங்கடைகளே அமெரிக்கர்கள். தங்கள் வரலாற்று இழிவுகளை உலகின், குறிப்பாக, வரலாற்றில் தேங்கி நின்று ஐரோப்பியரின் சீண்டலால் விழிப்பெய்தி எதிர்த்துக் கேள்வி எழுப்பத் துணிந்து நிற்கும் ஏழைநாட்டு மக்களின் கண்களிலிருந்து மறைக்கவும் அம்மக்களின் உண்மையான வரலாற்றுப் பெருமை அம்மக்களுக்குத் தெரிந்து அவர்கள் வீறுகொண்டு விரைந்து எழுந்து தம் மீது அமெரிக்கா செலுத்தும் மேலாளுமையிலிருந்து விடுபடும் போராட்டம் வீறு பெறாமல் தடுக்கவும் தோதான வரலாற்றுவரைவு நெறிமுறைகளை வகுத்துத் தம் விருப்பத்துக்கிசைய வரலாறு எழுதும் அறிவுச்”சிவி”களைத் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இவ்வாறு இந்திய அரசு தேர்ந்தெடுக்கும் “அறிஞர்களும்” அமெரிக்கா தேடி எடுக்கும் “ஆய்வாளர்களும்” ஒரே கண்ணோட்டம் கொண்டவர்களாக அமைந்துள்ளனர்.

வரலாறு, இலக்கியம், பண்பாடு என்ற துறைகளிலிருந்து வேறான துறைகளைச் சேர்ந்தோரையும் இந்த “வரலாற்றுவரைவு”ப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற வல்லரசிய நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பை காலச்சுவடு இதழும் காலச்சுவடு பதிப்பகமும் தலைமேல் கொண்டுள்ளன. அதன் வெளிப்பாடாகச் சில ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு இதழில் “குமரிக் கண்டக் குழப்பம்” என்ற தலைப்பில் சு.கி. செயகரன் என்ற “மாபெரும்” புவியியங்கியல் வல்லுநர்” ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு எதிர்வினையாற்றி உலகம் முழுவதிலுமிருந்து வந்த மடல்களில் ஒன்றைக் கூட அந்த இதழ் வெளியிடவில்லை. (பிப்.2006 இதழில் பெயருக்கு ஒரு மடலை வெளியிட்டுக் காலங்கடந்து கடனைக் கழித்துள்ளது). அது மட்டுமல்ல. அந்தக் கட்டுரையில் சொன்ன கருத்துகளை விரித்து குமரி நிலநீட்சி என்ற நூலைக் காலச்சுவடு பதிப்பகம் அதே ஆசிரியரைக் கொண்டு எழுதி வெளியிட்டுள்ளது.
சு.கி.செயகரன் உலகளவில் புகழ்பெற்ற புவியியங்கியல் வல்லுநர் என்றும் உலகளவில் அவர் பன்னாட்டு நிறுவனங்களில் புரிந்த பணிகள் பற்றியும் நூலில் செய்திகள் உள்ளன. ஆனால் நூலில் ஒன்றுக்கு ஒன்றாக ஒன்றுக்குள் ஒன்றாகக் கிடக்கின்ற எண்ணற்ற முரண்பாடுகள் அவர் இந்நூலை எழுதும் போது தன்னினைவோடுதான் இருந்தாரா என்ற ஐயத்தைத் தருகின்றன. புவியியங்கியலை கல்லூரிக்கு வெளியே கற்ற எனக்கே தவறென்று தெளிவாகத் தெரியும் அவரது கூற்றுகளைப் படிக்கும் போது இவர் போன்ற “வல்லுநர்”களைக் கொண்டு இயங்கும் உலகளாவிய நிறுவனங்களின் தரம் பற்றியும் நமக்கு ஐயங்கள் எழுகின்றன. அதேநேரம் இந்நூலைப் படித்துவிட்டு ஆகா ஓகோ என்று பாராட்டும் நம் அறிவு”சீவி”களின் மழுமண்டைத் தனத்தைப் பார்த்து நான் மலைத்து நிற்கிறேன்.

குமரிக்கண்டம் பற்றிய அனைத்தும் தழுவிய ஒரு பெருநூல் எழுத வேண்டும், அதற்கான கருப்பொருட்களைத் தேட வேண்டும், அப்போது இந்நூலில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கும் விடைகாண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலைப் படிப்பதையே தள்ளிப்போட்டு வந்தேன். ஆனால் ஒரு சூழலில் இந்நூலைப் படிக்க வேண்டி வந்தது. படித்த பின் தான் தெரிந்தது, நூலினுள் ஆசிரியர் தந்துள்ள செய்திகளே குமரிக் கண்ட கோட்பாட்டுண்மையை மேலும் உறுதியான தளத்தில் நிறுத்தப் போதுமானவை என்பது. இத்தகைய செய்திகளைத் திரட்டி ஒரு நூலாக எமக்களித்த திரு.சு.கி.செயகரனை அவரது கடும் உழைப்புக்காகப் பாராட்டுவதோடு இவ்வாறு எமது குறிக்கோள்களுள் ஒன்று நிறைவேறுவதை எளிதாக்கியமைக்காக நன்றியும் கூறுகிறேன். அவரை இந்தப் பணியில் ஈடுபடுத்தியமைக்காக காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி கூறுகிறேன்.

இறுதியாக வரலாற்று வரைவுக்கான கருப்பொருட்கள் பற்றிய ஓர் அடிப்படை கேள்விக்கு விடை காண வேண்டியிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மேலே குறிப்பிட்டவாறு “ஓடுகள், பானைகள், எலும்புகள், ஓவியங்கள் போன்றவற்றை (பருப்பொருட் சான்றுகள் என்று இவற்றைக் கூறுவர்) மட்டுமே வரலாற்று வரைவுக்குக் கருப்பொருளாகக் கொள்ள முடியும், மனிதப் பதிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது விந்தையான ஒரு வரையறை. குறிப்பாக, கண்டங்கள் முழுகியது பற்றிய கேள்வியிலேயே இந்தக் கருத்து முன் வைக்கப்படுகிறது. நிலப்பரப்பு முழுகியமை பற்றியும் கடற்கோள்கள் பற்றியும் உலகெலாம் மனிதப் பதிவுகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன; அத்தயை புவியியங்கியல் நிகழ்வுகள் இடம் பெற்றது உண்மை தான்; ஆனால் அப்போது மனித இனமே தோன்றவில்லை என்கின்றனர் புவியியங்கியல் மற்றும் மனித அறிவியல் துறையினர். அப்படியானால் இந்த மனிதப் பதிவுகள் எவ்வாறு ஏற்பட்டன? இது போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லும் வேறுவகை உயிரி எதுவும் இந்தப் புவியியங்கியல் நிகழ்வுகளின் போதிலிருந்து தொடர்ந்து மனிதன் தோன்றுவது வரை வாழ்ந்து அவனுக்குச் சொல்லவும் வாய்ப்பில்லை.[1] அப்படியாயின், ஒன்று, மனிதனின் உண்மையான தொடக்கால வாழ்விடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது புவியியங்கியல் மற்றும் மனித அறிவியல் துறைகளின் காலக்கணிப்பு உத்திகளில் மாற்றம் தேவை. இதில் இரண்டாவதைப் பொறுத்தவரை நம்மால் உறுதியாகக் கூறமுடியும், மனிதப் பதிவுகளுக்கும் புவியியங்கியலாளரின் காலக் கணிப்புக்கும் உள்ள இடைவெளி மேம்பட்ட காலக்கணிப்பு உத்திகளால் சுருங்கி உள்ளது. அதுபோல் புதிய அகழ்விடங்களால் மனிதன் தோன்றிய காலம் பின்னோக்கிப் போயுள்ளது. பண்டை வரலாற்றுவரைவென்பதில் மனிதப் பதிவுகளே முதன்மையானதும் அடிப்படையானதுமான தரவாகும். பிற தரவுகள் அதற்கு இசையவில்லையானால் அவற்றின் அணுகலில் பிழையிருப்பதாகக் கொண்டு தங்கள் உத்திகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவ்வத்துறையின் பொறுப்பாகும். இந்த உறுதியான நிலையில் நின்று நாம் திரு.சு.கி செயகரனின் நூலுள் நுழைவோம்.

திருவாளர் சு.கி.செயகரன் ஒரு புவியியங்கியல் வல்லுநர் என்ற நம்பிக்கையில் குமரிக் கண்டம் குறித்த தமிழ் மரபுக்கு வலுவான பண்பாட்டு எச்சங்கள் நம்மிடையே உள்ளன என்று கருதும் நண்பர் திரு. செயமோகன் போன்றோர் கூட அவருடையது அறிவியல் சார்ந்த அணுகல் என்றும் ஆனால் குமரிக் கண்டக் கண்டக் கோட்பாடு இன்றி இந்தியப் பண்பாடு பற்றிய பல கேள்விகளுக்கு விடை காண முடியாது என்றும் உயிர்மை இதழில் ஒருமுறை கூறியுள்ளார். ஆனால் அறிவியல் அணுகலுக்கும் செயகரனுக்கும் எட்டாத் தொலைவு.

இதுவரை தமிழார்வலர்களும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தமிழறிஞர்களும் குமரிக் கண்டம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவற்றையும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறியிருப்பவற்றையும் மட்டுமே பெரும்பாலும் தொகுத்துத் தந்துள்ளனர். செயகரனோ குமரிக் கண்டக் கோட்பாட்டை மறுப்பவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்லது பேரா.பண்டிதர் க.ப. அறவாணன் போன்று ஏற்றுக்கொள்வது போல் பாய்ச்சல் காட்டுபவர்களின் ஆக்கங்களில் ஈரெட்டாக இருப்பவற்றையும் வெறுமே தொகுத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே தன் கருத்துகளையும் பதிந்துள்ளார். அக்கருத்துகள் எதிலுமே அறிவியல் அல்லது புவியியங்கியல் சாயலே இல்லை. புவியியங்கியல் செய்திகள் என்று அவர் தந்திருப்பவை ஒன்றேல் காலங்கடந்தவை அன்றேல் அரைகுறையானவை, பொய்யானவை, ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. எனவே அவரது நூல் பற்றிய இத்திறனாய்வில் அவர் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் மீதான திறனாய்வு ஒரு முகாமையான இடத்தைப் பெறும். அடுத்து அவரது போலி அறிவியல் - புவியியங்கியல் முக்காடு கிழித்தெறியப்படும்.

ஓர் எச்சரிக்கை! குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவுவதற்கு இந்துமாக்கடல் எனப்படும் குமரிமாக்கடலினுள் அகழ்வாய்வு செய்யும் வேண்டுகோளைத் தமிழார்வலர்கள் முன்வைக்குமாறு சீண்டுவதற்கென்றே குமரிக் கண்டக் கோட்பாட்டைப் பழித்துரைக்கும் இதுபோன்ற நூல்கள் வெளியிடப்படுகின்றனவோ என்றொரு ஐயம் எனக்குண்டு. கடல் அகழ்வு இன்றியே குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவிட முடியும். அகழாததால் குமரிக் கண்டக் கோட்பாடு நிலைக்காமல் போனாலும் தாழ்வில்லை. நம் மண் மீதும் கடல் மீதும் அயலவர் எவரும் மேலாளுமை செய்வதற்கு நம் ஆர்வக் கோளாறுகள் காரணமாகி விடக்கூடாது! கடந்த காலத்தை விட நம் எதிர்காலம் முகாமையானது. இதுவே நம் அனைத்து நடவடிக்கைகளின் நடுப்புள்ளியாய் அமைய வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே நான் வரலாற்றை அணுகுகிறேன். உலக வல்லரசியத்திலிருந்து உலக மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு கருவியாகவே நான் என் வரலாற்று வரைவை முன் வைக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] பழைய எற்பாடு கூறுவது போல் கடவுள் மோசேவுக்குக் கூற, அதுவும் கடவுள் உண்டாக்கிய வெள்ளத்தில் அழிந்து போய், நினைவில் வைத்து மீட்டெழுதியதில் தவறுகள் நேர்ந்து விட அதனைப் “பிழை திருத்த" அவர் மீண்டுமொருமுறை முகமது நபிக்கு கூறியது போல் இருக்குமோ? ஆனால் அங்கும் ஊழி அழிவின் போது மனிதன் வாழ்ந்ததாகத் தானே கூறப்பட்டுள்ளது. மோசேக்கு ஒரு முறை வெளிப்பாடு செய்த கடவுகள் ஏன் மீண்டுமொரு முறை முகமது நபிக்கு செய்தார் என்பதற்கு முகமதிய சமயத்தின் அகமதியா பிரிவினர் தரும் விளக்கத்தையும் அதற்கு மறுமொழியாக, பழைய ஏற்பாட்டில் பிழை ஏதுவும் நேர்ந்து விடவில்லை என்று நிறுவுவதற்காக எழுதப்பட்ட Dead sea Scrolls என்ற நூலையும் பார்க்க.

மனம்திறந்து....... 2

ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் தங்கள் அறியாமையால் அல்லது திட்டமிட்டு எழுதிய பொய்வரலாறுகள் அவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து திருத்தியும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அத்தவறான அல்லது பொய்யான வரலாறுகளை விடாது பற்றிக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், குறிப்பாகப் பார்ப்பனர்கள் தாங்கள் உண்மையிலேயே இந்தக் கற்பனை ஆரிய இனப் படையேடுப்பின் போது இங்கு குடியேறியவர்களின் வழியினர் என்று நம்புகின்றனர். உண்மையில் தாங்கள் தெற்கே குமரிக் கண்டத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி நாகரிகத்தில் இன்றைவிடவும் மிக மேம்பட்டு தொடர்ச்சியான கடற்கோள்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழிவைச் சந்தித்து அங்கிருந்து தப்பி வட இந்தியாவில் முதலிலும் தென் கோடியில் இறுதியிலும் குடியேறியவர்களின் பிறங்கடையினர் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தங்கள் சொந்த நாகரிகத்தின் முன்மையையும் முதன்மைனையும் தாங்களே மறுக்கும் ஓர் இரங்கத்தக்க நிலைக்கு வரலாற்றால் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களன்றி, நம் மீது இன்று மேலாளுமை செலுத்தும் வல்லரசான அமெரிக்கா போன்ற நாடுகள் நம் மக்களின் உளவியல் உரத்தைக் குலைக்கும் உத்திகளில் ஒன்றாக நம் வரலாற்றுணர்வைச் சிதைக்க முயல்கின்றன. வல்லரசியத்தின் இன்றைய தலைமையகமான அமெரிக்காவின் இது போன்ற தேவைகளை நிறைவேற்றத் தகுந்த அறிவு“சீவி”களை அது தேடுகிறது. இன்றைய உலக அரசியல் - பொருளியல் - வாணிகச் சூழலில் அமெரிக்காவையும் பிற வல்லரசு நாடுகளையும் இங்குள்ள அறிவு”சீவி”களும் அரசியல்வாணர்களும் படித்த கூட்டமும் சார்ந்து நின்றால் தான் நல்வாழ்வு என்ற புறச்சூழலில் தங்கள் நாட்டின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் ஓர் இழிவுணர்வும் வல்லரசுகளின் அனைத்துக் கூறுகளின் மீதும் ஓர் மலைப்புணர்வும் இவர்களின் அடிமனங்களில் படிந்துள்ளன. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து வரலாற்றைப் பார்க்கும் இவர்களிடமிருந்து அதாவது பார்ப்பனரல்லாத கூட்டத்தினரிடமிருந்து இது போன்ற நம் வரலாற்றை மறுக்கும் போக்கு எதிர்பார்க்கத்தக்கதே.

சென்ற நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் செருமெனியில் வெடித்தெழுந்த கலப்பில்லாத “தூய ஆரிய இனமக்கள்” செருமானியரே; அவர்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்ற முழக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. வாணிகத்தின் மூலம் உலகைக் கைப்பற்ற இங்கிலாந்தும் பிரான்சும் முழுமூச்சாகப் போட்டியிலீடுபட்டிருந்தபோது இங்கிலாந்தின் அமைச்சராயிருந்த வில்லியம் பிட்சு என்பவர் செருமனிக்குப் படைக்கலங்களும் பணமும் படையியல் கருத்துரைகளும் வழங்கி, ஏற்கனவே பிரான்சுடன் செருமனிக்கு இருந்த பகைமையைப் பயன்படுத்தி பிரான்சு நாட்டின் மீது ஏவிவிட்டார். இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள பிரான்சு உலகெங்கும் நாடுபிடிப்பதில் உள்நாட்டு மக்களோடும் இங்கிலாந்துப் படைகளோடும் போரிட்டுக் கொண்டிருந்த தன் படைகளை உள்நாட்டுக்குத் திரும்ப அழைக்க வேண்டி வந்தது. செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிவுக்கு வந்த போது உலகில் குடியேற்ற நாடு (காலனி) பிடிக்கும் போட்டியும் முடிவுக்கு வந்துவிட்டது.[1] இந்தப் போட்டியில் தமக்கு எந்தத் துணுக்கும் கூடக் கிடைக்காத வகையில் தான் இங்கிலாந்தால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை செருமனி காலங்கடந்துதான் உணர்ந்தது. ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரவெறி பிரிட்டனைப் பழிவாங்கத் துடித்தது. அதற்குச் சிறந்த அரசியல் ஆயுதமாகப் பயன்பட்டது செருமானியரான மாக்சுமுல்லர் வகுத்து வைத்த “ஆரியர்களின்” உடற்கூறு. அதுவே செருமெனியரே தூய “ஆரியர்” என்ற முழக்கத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

செருமனி முன்வைத்த “ஆரியஇன” வெறிக் கோட்பாட்டை எதிர்கொள்ள திராவிட நாகரிக மேம்பாடு என்ற வரலாற்றுக் கோட்பாட்டைக் கையிலெடுத்தது பிரிட்டன். கன்றுகாலிகளை மேய்த்துக்கொண்டு “ஆரியர்கள்” இந்தியாவினுள் நுழைந்த போது இங்கு வாழ்ந்த திராவிடர்கள் ஓர் உயர்ந்த நாகரிக நிலையில் இருந்தனர்; அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிப் போனதும் மனித இனம் சிற்றுயிர்களினுடாகத் திரிவாக்கம் பெற்று உருக்கொண்ட நிலமுமாகிய லெமூரியாக் கண்டத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவினுள் நுழைந்தவர்கள் என்று கூறினர். அந்த அளவுக்குத் “திராவிடர்களுக்கு” தன்வளர்ச்சி கொடுக்க விரும்பாமல் நண்ணிலக் கடற்கரை பகுதி முதலாகிய பல பகுதிகளிலுமிருந்து இந்தியாவினுள் நுழைந்தவர்களே “திராவிடர்கள்” என்றும் தம் ஐரோப்பிய மேன்மையை நிலைநாட்ட முனைந்தனர்.

இரு உலகப்போர்களையும் தொடங்கி வைத்த செருமனி உலக வல்லரசுப் பீடத்திலிருந்து பிரிட்டனைத் தூக்கி வீசியது. தானும் சோர்ந்து வீழ்ந்தது. இப்போது “ஆரிய இன”வெறி அரசியலைக் கையிலெடுத்து விளையாடும் வலிமை அதற்கில்லை. பிரிட்டனுக்கு இப்போது “திராவிட” வரலாற்று அரசியல் தேவைப்படவில்லை. ஆனால் மோகன்தாசு கரம்சந்து காந்தியாரின், ஆட்சியாளர்கள் ஆயுதம் கொண்டு வன்முறையாக மக்களைக் கொல்லும் உரிமையுள்ளவர்கள்; மக்கள் அதை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற வல்லரசுகளுக்கு உவப்பான இருமுடிக் கோட்பாட்டின் படி தங்கள் நேரடி ஆட்சியிலிருந்து உள்நாட்டுத் தரகர்களைக் கொண்டு ஆட்சிகளை அமைத்த பின் உள்நட்டு அரசு மற்றும் வல்லரசு ஆரிய இருபடி ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கு வரலாறு என்ற வலிமையான ஆயுதத்தைக் கையிலெடுத்துவிடக் கூடாது என்பதற்கேற்றபடி அமெரிக்கா வரலாற்று வரைவுக்கான நெறிமுறைகளை வகுத்து தரகு ஆட்சிகளின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கு வழங்கியுள்ளது. இன்று உலகிலுள்ள பல்கலைக் கழகங்களின் பார்வையின் படி உலகில் மனித நாகரிகத்தை வளர்த்துப் பரப்பியவர்கள் “ஆரிய இன” மக்களே; பிறரெல்லாம் காட்டுவிலங்காண்டி, அநாகரிகர்கள், அல்லது குக்குல நிலையிலிருந்து “ஆரியஇன” மக்களின் தொடர்பால் நாகரிக வளர்ச்சி பெற்றோரே என்பதாகும். இதுபோன்ற ஒரு பார்வையை வகுத்துத் தந்ததற்கு அமெரிக்க வல்லரசு தமிழக “மார்க்சியர்”களுக்குக் கடன்பட்டுள்ளது. கழகக் காலத்தில் தமிழர்கள் அப்போது தான் குக்குல வளர்ச்சிக் கட்டத்திலிருந்து “போரிடும் குழுக்கள்” கட்டத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்; அவர்களுக்கு “ஆரிய வர்த்தத்திலிருந்து” இறக்குமதியான அம்மணமும் (சமணம் என்று படிக்க) புத்தமும் தாம் நாகரிகத்தின் முதல் படியில் காலெடுத்து வைக்க உதவியது என்பது நம்மூர் “மார்க்சியர்களின்” “தெளிவான” கண்ணோட்டம். ஏழை எளிய உழைக்கும் மக்களை வருத்தி மகமை (சந்தா) பெற்றுவிட்டு அமெரிக்க வல்லரசுக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி ஊழியம் செய்யும் இந்த அப்பாவித் தோழர்களுக்கு அமெரிக்கா எவ்விதம் தன் நன்றிக் கடனைச் செலுத்துமோ! இவர்களுக்காகத்தான் “கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே” என்று “கண்ணன்” அன்றே கூறிச் சென்றானோ! பலன் கிடைக்காமலா இருக்கும்? ஆனால் அது எவ்வாறு, எந்த வடிவத்தில் என்பதுதான் புரியவில்லை. சும்மாசொல்லக்கூடாது; திறமையானவர்கள்தாம்!

தமிழ்நாட்டு இராமமூர்த்தியும் கல்யாணசுந்தரமும் நா.வானமாமலையும் படித்த மார்க்சின் அதே படைப்புகளைத் தான் கேரளத்து இ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடும் படித்திருப்பார். ஆனால் கேரளத்தில் கட்சி வேறுபாடின்றி கேரளத் தேசியத் தலைவர் என்று மக்கள் போற்றுமளவுக்குத் தன் தாய்மண்ணுக்கு அவர் பாடாற்றியுள்ளார். தமிழகத்தில் மட்டும் இவர்கள் மக்கள்பகை, தாய்மண்பகைப் போக்கைக் கடைப்பிடித்ததேன்? மார்க்சு தமிழகத் தலைவர்களுக்கென்று அவர்களுக்கு மட்டும் புரியத்தக்க மறைமுகக் குறிப்பு எதனையும் தன் படைப்புகளில் விட்டுச் சென்றுள்ளாரா? அவர்களது தடத்தை இம்மி பிசகாமல் பின்பற்றி நடக்கும் தமிழகத் தோழர்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.

இற்றை உலகில் வரலாற்றுவரைவென்று ஐரோப்பியர் தொடங்கி வைத்த துறையில் தொன்மங்கள், பெருவியப்புச் செய்திகள், இலக்கியங்கள், நாட்டார் வழக்குகள், செவிவழிச் செய்திகள், மொழித் தொடர்புகள், சடங்குகள், மரபுகள், கதைகள், பழமொழிகள் என்ற அனைத்துமே கருப்பொருட்களாகப் பயன்பட்டன. ஆனால் இன்று பானை - சட்டிகள், எலும்புத் துண்டுகள், மரத்துண்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் போன்ற “பருப்பொருட்கள்” மட்டுமே நம்பகமான சான்றுகள் என்று கூறுகின்றன அமெரிக்காவினால் இயக்கப்படும் பல்கலைக் கழகங்கள். நாட்டார் கதைகளில் கூறப்படும் கதைகள் நம்பத்தகுந்தவை இல்லையாம், ஏனென்றால் நிகழ்த்துவோன் கதையையே மாற்றிவிடுவானாம். இவ்வாறு கூறிக் கொண்டே சிறு மாறுபாடுகளுடன் விளங்கும் நாட்டார் கதைகளைக் காட்டுகின்றனர். இந்த மாறுபாடுகளையும் மீறி கதைக்கரு ஒன்று மாறாமலே இருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்த நம் பல்கலைக்கழகங்களின் நெறிமுறை இடம்தராது. ஓர் ஆய்வேடு உருவாக்குபவன் சொந்த முடிவென்று ஒரு சொல்லைக் கூடக் கூற முடியாது. ஒவ்வொரு கூற்றுக்கும் முன் கூறியோர் சான்று வேண்டும். நம் பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து ஒருவர் பெறும் பண்டிதர் பட்டமென்பது அவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தும் திறனை முற்றிலும் துறந்துவிட்டார் என்பதற்கான சான்றாகவே கொள்ள வேண்டும் என்பது இன்றைய நிலை.

எனவே இங்கு ஆய்வென்பது நம் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாகவோ ஒப்பந்தங்கள் மூலமாகவோ பணம் வழங்கும் அரசு அல்லது பிற நிறுவனங்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் தரவுகளைத் திரட்டித் தரும் பணியே. அவ்வாறு நாம் திரட்டும் தரவுகளின் பயன் நமக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சில வாய்ப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் எண்ணற்ற மூலப்பொருட்களை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள், அதனடிப்படையில் நாம் தரும் பண்டத்தின் உண்மையான மதிப்பு என்ன என்பது நமக்குத் தெரியாமலிருப்பது போல்.

வரலாறு, பண்பாடு போன்ற தரவுகளில் நம் ஆய்வாளர் சிவப்பாக எதையாவது பார்த்தால் அதில் தூமை தவிர வேறெதையும் அவர் பார்க்க மாட்டார்; பார்க்கக் கூடாது. தூமை என்பது தூய்மை என்பதன் மரூஉ. பெண்களின் மாதவிடாய்க் குருதியை இச்சொல்லால் நாட்டுப்புற மக்கள் குறிக்கின்றனர். தூமை தாய்மையைக் குறிக்கும், அதாவது இனப்பெருக்கத்தைக் குறிக்கும். எனவே ஒரு சடங்கில் சிவப்பாக ஏதாவது இருந்தால் அது வளமைச் சடங்கு. தாமரைப் பூ, மாதுளை என்று எதனைக் கண்டாலும் அது வளமையைத்தான் குறிக்கும், ஏனென்றால் அவற்றின் உட்புறம் சிவப்பாகத்தானே உள்ளது?

வெற்றிலை என்றொரு நூல் படித்தேன். (ஆசிரியர் பெயர் நினைவில்லை) அதில் கொடிக்காலில் வெற்றிலையை நடும் முன்னர் குயவரின் சூளைச் சாம்பலையும் கோழிக் குருதியையும் கலந்து வயல் முழுவதும் தெளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் குருதி இருப்பதால் அது வளமைச் சடங்குதானாம், ஆசிரியர் கூறுகிறார். சூளைச் சாம்பலைப் பற்றி எதுவுமே கூறவில்லை. இவர்கள்தான் சிந்திப்பதைத் துறந்தவர்களாயிற்றே. குயவர் சூளைச் சாம்பல் என்பது Pot ash. பொட்டாசு என்ற உரத்தின் பெயர் pot ash என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது சூளைச் சாம்பலில் அடங்கியிருக்கும் பொருளைக் குறிக்கும் சொல் என்கிறது ஆங்கில அகராதி (Chambers Dictionary பார்க்க). கோழிக் குருதியின் பயனை நம் பண்பாடு அறிந்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கண்ணில் ஏதாவது அடிபட்டு விழி சிவந்துவிட்டால் கோழிக் குருதியை விடுவர் (அலோபதி-எதிர் மருத்துவர்-இதனை ஏற்றுக் கொள்வதில்லை). புதிதாகக் கட்டிய வீட்டுக்குப் பால்காய்ச்சும் முன் வீட்டைச் சுற்றிக் கோழிக் குருதியைத் தெளித்துத் “தச்சுக் கழிப்பர்”. கோயில் திருவிழாக்கள் எடுப்பதே கொள்ளை நோய்த் தொடர்பான தடுப்பு நடவடிக்கை என்பது ஒரு கருத்து. கொடியேற்றுவது அவ்வூரில் கொள்ளை நோய்த் தாக்குதல் உள்ளது என்பதை வெளியிலிருந்து வருவோருக்கு எச்சரிக்கும் உத்தி என்கின்றனர். பத்து நாட்கள் உள்ளூர் மக்கள் வெளியில் செல்வதும் வெளியூரார் ஊரினுள் நுழைவதும் தடுக்கப்படுமாம். கொடியேற்றப்பட்டதும் ஊரைச் சுற்றி கோழிக் குருதி தெளிக்கப்படுமாம். இவற்றாலெல்லாம் கோழிக் குருதி ஒரு நச்சு நுண்ணுயிரிக் கொல்லி என்பது புலப்படும். இதுபோன்ற அறிவியல் - தொழில்நுட்பச் செய்திகளைத் திரட்டி அவற்றைத் தங்கள் வாணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி காப்புரிமம் பெற்றுக் கொள்வதே இந்த “ஆய்வு”களுக்குப் பணம் கொடுக்கும் வல்லரசுகளின் நோக்கம். இந்த உண்மையை மறைக்கத்தான் வளமைச் சடங்கு போன்ற வாய்ப்பாடுகளை வழங்கியுள்ளனார்.

இந்த வாய்ப்பாடுகளை வடித்துத் தந்தவர் நானறிந்த வரையில் பிரிட்டனைச் சேர்ந்த கிரேக்க மொழிப் பேராசிரியராகிய சியார்சுத் தாம்சன் என்பவர். ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வேட்டைக்குப் போகுமுன் தாம் வேட்டையாடப்போகும் விலங்கின் ஒவியத்தில் குறிபார்த்து அம்பெய்து (விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்கு முன் மேற்கொள்ளும் பயிற்சியைப் போல்) மேற்கொள்ளும் பயிற்சிகளை அறிவு வளர்ச்சி குன்றிய மக்களின் “மந்திரச்சடங்கு” என்பார். வளமைச் சடங்கு, அந்த மந்திரச் சடங்கு, இந்த மந்திரச் சடங்கு என்று அனைத்தையும் அடக்கி விடுவார். இவர் தன்னை ஒரு மார்க்சியர் என்று வேறு அறிவித்துவிட்டார். இவை போதாவா நம் அறிவு”சீவி”களுக்கு? சடங்குகளையும் மந்திரங்களையும் அள்ளிப் பூசிக் கொண்டனர்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]Foot Prints on The Sands of Time, F.G. Peerce, Humphery Milford, Oxford University Press (Indian Branch), 1942, P.194

மனம்திறந்து....... 1

வரலாற்று வரைவென்பது வலிமை மிக்க ஓர் அரசியல் ஆயுதம்.[1] அது ஊத இனம் போன்று நிலைத்த “மனித இனங்களை” உருவாக்கி இருக்கிறது; சப்பான் போன்று பழமையில் ஊறித் திளைத்த நாடுகளை வலிமை மிக்க வல்லரசுகளாக மாற்றியுள்ளது; “ஆரிய இனம்” போன்ற கற்பனை மனிதர்களை உலவவிட்டு இருபதாம் நூற்றாண்டில் உலகப் பெரும் போர்களை மூட்டி பலகோடி மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது; தமிழகத்துத் திராவிட இயக்கம் போன்று புதிய அரசியல் தரகர்களை நடமாட விட்டுள்ளது; அரசியல் - பொருளியல் - குமுகியல் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள்குழுக்கள் வீறுகொண்டு எழுந்து போராடி விடுதலை பெறுவதற்கு உதவியுள்ளது; ஆதிக்கவெறி கொண்ட குழுக்கள் தம் பிடிக்குள் சிக்கியுள்ள மக்கள் விடுதலைக்காகப் போராடும் போது அவர்களை நசுக்கத் தேவையான அரக்க உளவியலைப் பெற்றுக் கொள்ள உதவியுள்ளது. இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சுமேரிய, அக்கேடிய, பாபிலோனிய, மெசப்பொட்டோமிய நாகரிகங்கள் செழித்து வாழ்ந்திருந்த வேளையில் பண்டை எகிப்திய வல்லரசு படையெடுத்து அம்மக்களை அடிமைகளாகப் பிடித்து வந்து மாபெரும் கூம்புக் கல்லறைகளையும் நகரங்களையும் கோயில்களையும் கட்டும் பணியில் ஈடுபடுத்தியது. (நாமறிந்த வரலாற்றில் முதன்முதலில் வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களைத் தம் நாட்டுக்குக் கொண்டு சென்று தொழிற்சாலைகளில் பண்டங்களைப் படைத்தவர்களும் பண்டை எகிப்தியர்களே). இந்தச் சூழலில் அரண்மனையுள் உடன்பிறந்தோரிடையில் உருவான அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட மோசே அந்த அடிமைகளைத் தன் பக்கம் திரட்டி[2] செங்கடலைக் கடந்து மேற்காசியாவினுள் நுழைந்து எண்ணற்ற தெய்வங்களை வணங்குவோரைக் கொண்ட கலவையான அம்மக்களிடையில் உறுதியான ஓரிறைக் கொள்கை ஒன்றை உருவாக்கி தன்னை எதிர்த்தோரை அழித்து ஊத இனமென்ற ஒர் இனத்தை உருவாக்கினார். தான் பிறந்து வளர்ந்த எகிப்திய அரண்மனையில் இருந்த நூலகத்திலிருந்து பண்டை உலக வரலாறுகளைத் திரட்டி, இன்றைய கிறித்துவ மறையில் உள்ள பழைய ஏற்பாடு எனப்படும் ஊத மறைநூலை எழுதினார். உலகின் முதற்காப்பியமாக இன்று கருதப்படும் கில்காமேசு காப்பியத்தில், கடற்கோளுக்குத் தப்பியவனாகக் கூறப்படும் உட்நாப்பிட்டிற்றிம் பழைய எற்பாட்டில் நோவோவாக வருகிறார். அவ்வாறே குமரிக் கண்டத்தில் நிகழ்ந்தவற்றின் மறுவடிப்புகளும் தொகுப்புகளும் ஆன மகாபாரதம், இருக்குவேதம் போன்றவற்றில் காணப்படும் நிகழ்ச்சிகளும் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளன.[3]

ஆதாமிலிருந்து தொடங்கும் ஊத வரலாற்றில் அவர்களிடையில் தோன்றிய பெருமக்களோடு யகோவா எனப்படும் அவர்களின் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதன்படி, அம்மக்கள் வேறெந்தக் கடவுள்களையும் வணங்காமல் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும் தன்னை வணங்காதவர்களையும் வணங்குவோரின் எதிரிகளையும் தான் அழித்து ஒழித்து மண்ணிலிருந்தே அகற்றி விடுவதாகவும் உலகை ஆள தான் தேர்ந்துள்ள மக்களே ஊதர்கள் தான் என்றும் கூறியதாக அந்த “வரலாறு” கூறுகிறது. பின்னர் பஞ்சத்தால் பிழைப்பு தேடி எகிப்துக்கு வந்து அடிமைகளாக உழன்றவர்களை ஊதனாகப் பிறந்து எகிப்திய அரண்மனையில் வளர்ந்த மோசே மூலம் விடுவித்து அவர்களுக்குப் புதிய ஒரு வாழிடத்தைத் தந்ததாக அந்த “வரலாறு” கூறுகிறது. பின்னர் நாடிழந்து உலகெலாம் பரந்து திரிந்து ஐரோப்பியக் கிறித்துவர்கள் கைகளில் சிக்கிச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகி மீண்டெழுந்ததில் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் - வரலற்றுப் பின்னணிகளுடன் மோசே தொடங்கி வைத்த வரலாற்றுவரைவும் மிகப்பெரும் துணையாக நின்றது.

சப்பானின் தோக்குகவா சோகனான இயெயேசுவின் பேரன் 243 மடலங்களில் “சப்பானின் பெரும் வரலாறு” என்ற பெயரில் ஒரு சப்பானிய வரலாற்றை எழுதினார். மாற்றமில்லாமல் ஒரே அரச மரபு பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சப்பானை ஆண்டுவருவதாக அதில் எழுதினார். சப்பானே உலகின் நடுவிலிருப்பதாகவும் கிழக்கே எழும் கதிரவன் தங்கள் நாட்டில் தான் முதலில் எழுவதாகவும் எழுதினார். அயலவரைத் தம் மண்ணினுள் நுழையவிடாத மனப்பான்மையுடைய சப்பானியர் இந்த “வரலாற்றால்” மேலும் பெருமித உணர்வு கொண்டனர். 1853-இல் அமெரிக்கக் கடற்படைத் தலைவன் சப்பானியத் துறைமுகத்தைத் திறந்து விடுமாறு மிரட்டிய போது அப்போதைக்கு விட்டுக் கொடுத்து, தங்கள் தேசியத் தன்மானத்தைக் காத்துக்கொள்வதற்காக ஓசையில்லாமல் ஓர் அரசியல் - குமுகியல் - பொருளியல் புரட்சியை நிகழ்த்தி தேங்கிய ஒரு நிலக்கிழமைக் குமுகத்தை ஓர் இருபதே ஆண்டுக்குள் ஒரு முதலாளியக் குமுகமாக மாற்றி இன்று உலகின் தொழில்துறை வல்லரசாக மாற்றி ஏழை நாடுகளுக்கு வழிகாட்டியாக நிற்கின்றனர். (நம் நாட்டுத் தலைவர்களுக்கும் அறிவு“சீவி”களின் குருடாகிப்போன அறிவுக்கும் இன்னும் இது புலப்படவில்லை.)

தொழிற்புரட்சியால் வாணிகத்தில் வலிமைபெற்று உலகளாவிய தொடர்புகளால் உலக மொழிகளைப் பற்றிய ஓர் அரைகுறைப் புரிதலில் சமற்கிருதம் - ஐரோப்பிய மொழிகளுக்குகிடையில் உள்ள சில ஒற்றுமைகளைக் கொண்டு “ஆரிய இனம்” என்ற ஒரு புதிய மனித இனத்தையே படைத்த மாக்சுமுல்லர் பின் தன் படைப்பைத் தவறானதென்று கைவிட்டுவிட்டார். ஆனால் முன்பு தம்மை விட நாகரிகத்தில் மேம்பட்டிருந்தோர் என்று கூறப்படும் “திராவிடர்களை” வென்றோர் என்று அவர் கதைகட்டிய, இந்தியாவினுள் நுழைந்தவர்களாக அவர் கூறிய “ஆரியரும்” தாமும் ஒரே இனத்தினர் என்ற பெருமித உணர்வு ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இன்றும் வலுவாக உள்ளது. அப்படியிருந்தும் மாக்சுமுல்லர் கூறிய உடற்கூறுகளின்படி, தாமே கலப்பில்லாத தூய ஆரியர் (மாக்சுமுல்லர் ஆரியரின் உடற்கூறு என்று தன் நாட்டினரான செருமானியரின் உடற் கூறுகளையே தொகுத்துக் கூறினார். இதில் அவருடைய அரசியல் சார்பு விளங்கும்) என்ற ஒரு புதிய வரையறையைத் தமக்கு வகுத்துக் இரண்டு, ஐரோப்பிய நாடுகள் உலகின் பிற நாடுகளைக் கைப்பற்றிப் பங்கிட்டதில் தங்களை ஏமாற்றியதனால் எழுந்த ஆத்திரத்தை இரண்டு உலகப் போர்களால் தீர்த்து உலகையே அலைக்கழித்து கோடிக்கணக்கான மக்களைப் பலிகொண்ட செருமானியருக்கு அரசியல் ஆயுதமாக நின்றது மாக்சுமுல்லரின் “ஆரிய இன வரலாற்று வரைவுதான்.

குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறைகளால் பிளவுண்டிருந்த தமிழகத்தினுள் சமய வடிவில் நுழைந்த சமண ஒற்றர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான ஒரு பண்பாகிவிட்ட காட்டிக் கொடுத்தல் நிகழ்வுகளால் இங்கு நிலைகொண்டுவிட்ட கன்னடர்களும் தெலுங்கர்களும் மராட்டியர்களுமான பிறமொழிப் பார்ப்பனர்களுக்கு எதிராகத் தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழ்மொழி மீட்சிக்கான வரலாற்றியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தனர். மு. இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், பரிதிமாற்கலைஞர் போன்ற பேரறிஞர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் தமிழகத்தில் வாழும் தென்னகப் பிறமொழியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் தடுத்து, தமிழர்களை அப்பிறமொழியாளர்களுக்கு மீளா அடிமைகளாக்க ஈ.வே.இராமசாமிப் பெரியாருக்குக் கைகொடுத்தவை மாக்சுமுல்லர் உருவாக்கி அவர் கைவிட்ட பின்னும் அரசியல் காரணங்களுக்காக நிலைத்துவிட்ட “ஆரிய இன”க் கோட்பாடும் கால்டுவெல் உருவாக்கியதாகக் கருதப்படும் “திராவிட இன”க் கோட்பாடும்.[4]

தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்கள் மேன்மையை நிலைநாட்ட நூல்களை, கல்வெட்டுகளை, பழஞ்சுவடிகளை அல்லது பட்டயங்களைத் திரட்டும்போது தம் கருத்துகளுக்கு அல்லது தனி அல்லது குழு நலன்களுக்கு எதிரானவற்றை அழித்தும் திரித்தும் விடுவது இயல்பாக நடைபெறுகிறது. நாடார்கள் தொடங்கி வைத்ததாகக் கருதப்படும் சாதி வரலாற்றுவரைவுகள் இத்தகையவே. இத்தகைய போலி வரலாறுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தம்மை ஒடுக்கும் விசைகளை எதிர்த்துப் போராடும் மனவலிமையையும் அதே நேரத்தில் ஒடுக்கும் குழுக்களின் போலி சாதி வரலாறுகள் பிறர் மீது தாங்கள் மேலாளுமை செய்வதற்குரிய ஞாயப்படுத்தலையும் வழங்குகின்றன.

இனி, இந்திய ஆட்சியாளர்களின் வரலாற்று அணுகலைப் பார்ப்போம். நடு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் படையெடுத்து வந்ததாகிய பொய் வரலாற்றுக் கற்பனையின் படி இங்கு அப்போது வாழ்ந்தவர்களாகக் கூறப்படும் “திராவிடரை” வென்றவர்களாக அதே பொய்வரலாறு கூறும் “ஆரியர்கள்” வழி வந்தவர்கள் என்று தம்மைத் தவறாகக் கருதுவோர் கைகளில் இன்றைய இந்திய அரசு உள்ளது. எனவே இந்தப் பொய் வரலாற்றின்படி “ஆரியர்கள் இங்கு வந்ததாகக் கூறப்படும் கி.மு. 2500க்கு முன் இந்திய எல்லைக்குள் எந்தவொரு நாகரிக் கூறும் இருந்ததாகக் கூறக்கூடாது என்பதில் உறுதியாகவும் பிடிவாதமாகவும் உள்ளது இந்திய அரசு.

அண்மையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய “சங்க இலக்கிய அறிமுக முகாம்” ஒன்றில் பேசிய அருணன் என்பவர் மேடை அநாகரிகத்தின் உச்சத்திற்குச் சென்று தமிழ் இலக்கியங்களின் படி சங்கங்கள் 60,000 ஆண்டுக்கு முன்வரை இருந்தாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுவதாகவும் ஆனால் மனிதக்குரங்கு கூட அக்காலகட்டத்தில் தோன்றியிருக்கவில்லை என்றும் உண்மையுடன் தமக்குள்ள பகைமையையும் வரலாறு, அறிவியல், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றில் தனக்குள்ள மடைமையையும் ஓங்கிய குரலில் வெளிப்படுத்தினார். மூன்று அறிஞர்களின் ஆக்கங்களை அவர் தன் உரையின் போது மேற்கோள் காட்டினார். அவர்கள் கே.கே.பிள்ளை, பண்டிதர் மு.வ., பண்டிதர் ச.அகத்தியலிங்கம் ஆகியோர். மூவருமே சங்க காலம் என்பது “வேண்டுமானால்” கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கலாம் என்று தமிழார்வலர்களின் வாடிய நெஞ்சங்களுக்கு அருட்பால் சுரந்து ஊட்டிய கொடையாளிகள் என்பது அவரது உரையின் கருத்து.

இவர்களில் முதலாமவர் தமிழக அரசுக்காகத் தமிழக வரலாற்றுப் பாடநூல் எழுதியவர். அரசின் கண்ணோட்டத்தைக் கடைப்பிடித்தால்தான் இதுபோன்ற பணிகள் கிடைக்கும். பிறர் இருவரும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாயிருந்தவர்கள். மாநில அரசின் மீது நடுவண் அரசுக்குள்ள மேலாளுமையை உறுதிப்படுத்துவதற்காக அமர்த்தப்பட்ட கண்காணியான ஆளுநரின் தேர்வுக்குட்பட்டது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி. எனவே நடுவணரசின் அளவைகளுக்குட்பட்டவர்களாகத் தம்மை வடிவமைத்துக் கொள்வது துணைவேந்தர் பதவியை நாடுவோருக்கு இன்றியமையாதது. மு.வ.வின் பெயரில் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாறு அவரது முந்தைய எழுத்துகளைப் படித்தவர்களால் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. திரு. ச. அகத்தியலிங்கமோ மேடையிலேயே ஆளுநர் அலக்சாந்தர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து துணைவேந்தர் பதவிக்குப் “பெருமை” தேடித்தந்தவர்.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்து உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பே

என்று கம்பனோ அவர் பெயரில் வேறெவரோ பாடிப்பதிந்துள்ள தமிழ் இலக்கிய மரபைத் தகர்த்தவர்கள் இவர் போன்றோர். ஆசிரியர் பதவிகள் அனைத்திலும் கீழ்நிலையில் கிடந்த தமிழாசிரியர்களுக்குத் துணைவேந்தர் பதவிவரை வாயிலைத் திறந்துவிட்ட காலஞ்சென்ற முதல்வர் ம.கோ. இராமச்சந்திரனைத் திட்டித் தீர்த்துவிட வேண்டுமென்று வெறி வருகிறது இவர்களின் நடத்தையைப் பார்க்கும்போது. அவரால் அன்றோ அகத்தியலிங்கம் போன்ற இழிசினர்கள் நம் பல்கலைக் கழகங்களுக்கும் தமிழறிந்தோர்க்கும் இத்தகைய இழிவைத் தேடித்தந்துள்ளனர்?

துணைவேந்தர் பதவிக்கென்று ஆட்சியாளர்கள் வகுத்துள்ள நெறிமுறைகளை நிறைவு செய்வதற்கென்று நம் “கல்வியாளர்கள்” நிகழ்த்தும் கூத்துகளும் நடத்தும் நாடகங்களும் விந்தையானவை, வேடிக்கையானவை, இரங்கத்தக்கவை. நமது இந்தக் கல்வி அமைப்பை நம்பி வாழும் இளைய தலைமுறையினரும் பிறக்கப்போகும் அடுத்த தலைமுறையினரும் மொத்தத்தில் நம் மக்கள் அனைவருமே இரக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காக, அவர்களைக் காக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]உண்மை என்பது கூட ஓர் அரசியல் ஆயுதம் தான். உண்மை பலருக்கு நன்மை தருவதாகவும் சிலருக்கு தீங்கு தருவதாகவும் இருக்கும். எனவே வரலாறு ஓர் அரசியல் ஆயுதம் என்பதால் வரலாற்றுவரைவு பொய் நிறைந்தது என்று பொருளாகிவிடாது. உண்மையாயினும் கற்பனையாயினும் வரலாற்று வரைவில் ஏதோ ஒரு வகை அரசியல் இருந்தே தீரும்.

[2]கடவுளரின் தேர்கள்? (Chariots of Gods?) நூலின் ஆசிரியரான எரிக் வான் டெனிக்கனும் இவ்வாறே கருதுகிறார்.

[3]விரிவுக்கு, திண்ணை இணைய இதழ் மற்றும் தென்மொழி 37/12 இதழிலிருந்து தொடங்கும் “காலத்துள் மறைந்த உறவுகளும் உண்மைகளும்” என்ற ஆசிரியரின் கட்டுரைத் தொடரைப் பார்க்க. மோசேயின் பிறப்புக் கதையில் கூட மகாபாரதக் கருணனின் பிறப்புக் கதையிலுள்ள ஒரு கரு உள்ளது.

[4]கால்டுவெலாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் இரண்டாம் பதிப்பை மொழிபெயர்த்தவர்கள், அதிலுள்ள பல கருத்துகளை மறைத்தும் திருத்தியும் உள்ளனர் என்பதை போ.வேல்சாமி என்பவர் “மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்” என்ற தலைப்பிலும் ஆரியர்களுக்கு, அதாவது பார்ப்பனர்களுக்கு எதிராக, பிற தமிழ் மக்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்து நிலைபெறுவதற்காக, தமிழ் நாட்டு வேளாளர்கள் மனித இனங்கள் குறித்து கால்டுவெலார் பின்னிணைப்பாகச் சேர்ந்த பகுதிகளைத் திட்டமிட்டு மறைத்து மொழிபெயர்த்துள்ளனர் என்று வேதசகாயகுமார் என்பவர் “கால்டுவெல்லின் மற்றொரு முகம்” என்ற தலைப்பிலும் எழுதியுள்ள கட்டுரைகள் கவிதாசரண் அக்டோபர் 2005 - பிப்ரவரி 2006 இதழில் வெளிவந்துள்ளன.