மனம்திறந்து....... 2

ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் தங்கள் அறியாமையால் அல்லது திட்டமிட்டு எழுதிய பொய்வரலாறுகள் அவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து திருத்தியும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அத்தவறான அல்லது பொய்யான வரலாறுகளை விடாது பற்றிக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், குறிப்பாகப் பார்ப்பனர்கள் தாங்கள் உண்மையிலேயே இந்தக் கற்பனை ஆரிய இனப் படையேடுப்பின் போது இங்கு குடியேறியவர்களின் வழியினர் என்று நம்புகின்றனர். உண்மையில் தாங்கள் தெற்கே குமரிக் கண்டத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி நாகரிகத்தில் இன்றைவிடவும் மிக மேம்பட்டு தொடர்ச்சியான கடற்கோள்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழிவைச் சந்தித்து அங்கிருந்து தப்பி வட இந்தியாவில் முதலிலும் தென் கோடியில் இறுதியிலும் குடியேறியவர்களின் பிறங்கடையினர் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தங்கள் சொந்த நாகரிகத்தின் முன்மையையும் முதன்மைனையும் தாங்களே மறுக்கும் ஓர் இரங்கத்தக்க நிலைக்கு வரலாற்றால் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களன்றி, நம் மீது இன்று மேலாளுமை செலுத்தும் வல்லரசான அமெரிக்கா போன்ற நாடுகள் நம் மக்களின் உளவியல் உரத்தைக் குலைக்கும் உத்திகளில் ஒன்றாக நம் வரலாற்றுணர்வைச் சிதைக்க முயல்கின்றன. வல்லரசியத்தின் இன்றைய தலைமையகமான அமெரிக்காவின் இது போன்ற தேவைகளை நிறைவேற்றத் தகுந்த அறிவு“சீவி”களை அது தேடுகிறது. இன்றைய உலக அரசியல் - பொருளியல் - வாணிகச் சூழலில் அமெரிக்காவையும் பிற வல்லரசு நாடுகளையும் இங்குள்ள அறிவு”சீவி”களும் அரசியல்வாணர்களும் படித்த கூட்டமும் சார்ந்து நின்றால் தான் நல்வாழ்வு என்ற புறச்சூழலில் தங்கள் நாட்டின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் ஓர் இழிவுணர்வும் வல்லரசுகளின் அனைத்துக் கூறுகளின் மீதும் ஓர் மலைப்புணர்வும் இவர்களின் அடிமனங்களில் படிந்துள்ளன. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து வரலாற்றைப் பார்க்கும் இவர்களிடமிருந்து அதாவது பார்ப்பனரல்லாத கூட்டத்தினரிடமிருந்து இது போன்ற நம் வரலாற்றை மறுக்கும் போக்கு எதிர்பார்க்கத்தக்கதே.

சென்ற நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் செருமெனியில் வெடித்தெழுந்த கலப்பில்லாத “தூய ஆரிய இனமக்கள்” செருமானியரே; அவர்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்ற முழக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. வாணிகத்தின் மூலம் உலகைக் கைப்பற்ற இங்கிலாந்தும் பிரான்சும் முழுமூச்சாகப் போட்டியிலீடுபட்டிருந்தபோது இங்கிலாந்தின் அமைச்சராயிருந்த வில்லியம் பிட்சு என்பவர் செருமனிக்குப் படைக்கலங்களும் பணமும் படையியல் கருத்துரைகளும் வழங்கி, ஏற்கனவே பிரான்சுடன் செருமனிக்கு இருந்த பகைமையைப் பயன்படுத்தி பிரான்சு நாட்டின் மீது ஏவிவிட்டார். இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள பிரான்சு உலகெங்கும் நாடுபிடிப்பதில் உள்நாட்டு மக்களோடும் இங்கிலாந்துப் படைகளோடும் போரிட்டுக் கொண்டிருந்த தன் படைகளை உள்நாட்டுக்குத் திரும்ப அழைக்க வேண்டி வந்தது. செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிவுக்கு வந்த போது உலகில் குடியேற்ற நாடு (காலனி) பிடிக்கும் போட்டியும் முடிவுக்கு வந்துவிட்டது.[1] இந்தப் போட்டியில் தமக்கு எந்தத் துணுக்கும் கூடக் கிடைக்காத வகையில் தான் இங்கிலாந்தால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை செருமனி காலங்கடந்துதான் உணர்ந்தது. ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரவெறி பிரிட்டனைப் பழிவாங்கத் துடித்தது. அதற்குச் சிறந்த அரசியல் ஆயுதமாகப் பயன்பட்டது செருமானியரான மாக்சுமுல்லர் வகுத்து வைத்த “ஆரியர்களின்” உடற்கூறு. அதுவே செருமெனியரே தூய “ஆரியர்” என்ற முழக்கத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

செருமனி முன்வைத்த “ஆரியஇன” வெறிக் கோட்பாட்டை எதிர்கொள்ள திராவிட நாகரிக மேம்பாடு என்ற வரலாற்றுக் கோட்பாட்டைக் கையிலெடுத்தது பிரிட்டன். கன்றுகாலிகளை மேய்த்துக்கொண்டு “ஆரியர்கள்” இந்தியாவினுள் நுழைந்த போது இங்கு வாழ்ந்த திராவிடர்கள் ஓர் உயர்ந்த நாகரிக நிலையில் இருந்தனர்; அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிப் போனதும் மனித இனம் சிற்றுயிர்களினுடாகத் திரிவாக்கம் பெற்று உருக்கொண்ட நிலமுமாகிய லெமூரியாக் கண்டத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவினுள் நுழைந்தவர்கள் என்று கூறினர். அந்த அளவுக்குத் “திராவிடர்களுக்கு” தன்வளர்ச்சி கொடுக்க விரும்பாமல் நண்ணிலக் கடற்கரை பகுதி முதலாகிய பல பகுதிகளிலுமிருந்து இந்தியாவினுள் நுழைந்தவர்களே “திராவிடர்கள்” என்றும் தம் ஐரோப்பிய மேன்மையை நிலைநாட்ட முனைந்தனர்.

இரு உலகப்போர்களையும் தொடங்கி வைத்த செருமனி உலக வல்லரசுப் பீடத்திலிருந்து பிரிட்டனைத் தூக்கி வீசியது. தானும் சோர்ந்து வீழ்ந்தது. இப்போது “ஆரிய இன”வெறி அரசியலைக் கையிலெடுத்து விளையாடும் வலிமை அதற்கில்லை. பிரிட்டனுக்கு இப்போது “திராவிட” வரலாற்று அரசியல் தேவைப்படவில்லை. ஆனால் மோகன்தாசு கரம்சந்து காந்தியாரின், ஆட்சியாளர்கள் ஆயுதம் கொண்டு வன்முறையாக மக்களைக் கொல்லும் உரிமையுள்ளவர்கள்; மக்கள் அதை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற வல்லரசுகளுக்கு உவப்பான இருமுடிக் கோட்பாட்டின் படி தங்கள் நேரடி ஆட்சியிலிருந்து உள்நாட்டுத் தரகர்களைக் கொண்டு ஆட்சிகளை அமைத்த பின் உள்நட்டு அரசு மற்றும் வல்லரசு ஆரிய இருபடி ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கு வரலாறு என்ற வலிமையான ஆயுதத்தைக் கையிலெடுத்துவிடக் கூடாது என்பதற்கேற்றபடி அமெரிக்கா வரலாற்று வரைவுக்கான நெறிமுறைகளை வகுத்து தரகு ஆட்சிகளின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கு வழங்கியுள்ளது. இன்று உலகிலுள்ள பல்கலைக் கழகங்களின் பார்வையின் படி உலகில் மனித நாகரிகத்தை வளர்த்துப் பரப்பியவர்கள் “ஆரிய இன” மக்களே; பிறரெல்லாம் காட்டுவிலங்காண்டி, அநாகரிகர்கள், அல்லது குக்குல நிலையிலிருந்து “ஆரியஇன” மக்களின் தொடர்பால் நாகரிக வளர்ச்சி பெற்றோரே என்பதாகும். இதுபோன்ற ஒரு பார்வையை வகுத்துத் தந்ததற்கு அமெரிக்க வல்லரசு தமிழக “மார்க்சியர்”களுக்குக் கடன்பட்டுள்ளது. கழகக் காலத்தில் தமிழர்கள் அப்போது தான் குக்குல வளர்ச்சிக் கட்டத்திலிருந்து “போரிடும் குழுக்கள்” கட்டத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்; அவர்களுக்கு “ஆரிய வர்த்தத்திலிருந்து” இறக்குமதியான அம்மணமும் (சமணம் என்று படிக்க) புத்தமும் தாம் நாகரிகத்தின் முதல் படியில் காலெடுத்து வைக்க உதவியது என்பது நம்மூர் “மார்க்சியர்களின்” “தெளிவான” கண்ணோட்டம். ஏழை எளிய உழைக்கும் மக்களை வருத்தி மகமை (சந்தா) பெற்றுவிட்டு அமெரிக்க வல்லரசுக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி ஊழியம் செய்யும் இந்த அப்பாவித் தோழர்களுக்கு அமெரிக்கா எவ்விதம் தன் நன்றிக் கடனைச் செலுத்துமோ! இவர்களுக்காகத்தான் “கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே” என்று “கண்ணன்” அன்றே கூறிச் சென்றானோ! பலன் கிடைக்காமலா இருக்கும்? ஆனால் அது எவ்வாறு, எந்த வடிவத்தில் என்பதுதான் புரியவில்லை. சும்மாசொல்லக்கூடாது; திறமையானவர்கள்தாம்!

தமிழ்நாட்டு இராமமூர்த்தியும் கல்யாணசுந்தரமும் நா.வானமாமலையும் படித்த மார்க்சின் அதே படைப்புகளைத் தான் கேரளத்து இ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடும் படித்திருப்பார். ஆனால் கேரளத்தில் கட்சி வேறுபாடின்றி கேரளத் தேசியத் தலைவர் என்று மக்கள் போற்றுமளவுக்குத் தன் தாய்மண்ணுக்கு அவர் பாடாற்றியுள்ளார். தமிழகத்தில் மட்டும் இவர்கள் மக்கள்பகை, தாய்மண்பகைப் போக்கைக் கடைப்பிடித்ததேன்? மார்க்சு தமிழகத் தலைவர்களுக்கென்று அவர்களுக்கு மட்டும் புரியத்தக்க மறைமுகக் குறிப்பு எதனையும் தன் படைப்புகளில் விட்டுச் சென்றுள்ளாரா? அவர்களது தடத்தை இம்மி பிசகாமல் பின்பற்றி நடக்கும் தமிழகத் தோழர்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.

இற்றை உலகில் வரலாற்றுவரைவென்று ஐரோப்பியர் தொடங்கி வைத்த துறையில் தொன்மங்கள், பெருவியப்புச் செய்திகள், இலக்கியங்கள், நாட்டார் வழக்குகள், செவிவழிச் செய்திகள், மொழித் தொடர்புகள், சடங்குகள், மரபுகள், கதைகள், பழமொழிகள் என்ற அனைத்துமே கருப்பொருட்களாகப் பயன்பட்டன. ஆனால் இன்று பானை - சட்டிகள், எலும்புத் துண்டுகள், மரத்துண்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் போன்ற “பருப்பொருட்கள்” மட்டுமே நம்பகமான சான்றுகள் என்று கூறுகின்றன அமெரிக்காவினால் இயக்கப்படும் பல்கலைக் கழகங்கள். நாட்டார் கதைகளில் கூறப்படும் கதைகள் நம்பத்தகுந்தவை இல்லையாம், ஏனென்றால் நிகழ்த்துவோன் கதையையே மாற்றிவிடுவானாம். இவ்வாறு கூறிக் கொண்டே சிறு மாறுபாடுகளுடன் விளங்கும் நாட்டார் கதைகளைக் காட்டுகின்றனர். இந்த மாறுபாடுகளையும் மீறி கதைக்கரு ஒன்று மாறாமலே இருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்த நம் பல்கலைக்கழகங்களின் நெறிமுறை இடம்தராது. ஓர் ஆய்வேடு உருவாக்குபவன் சொந்த முடிவென்று ஒரு சொல்லைக் கூடக் கூற முடியாது. ஒவ்வொரு கூற்றுக்கும் முன் கூறியோர் சான்று வேண்டும். நம் பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து ஒருவர் பெறும் பண்டிதர் பட்டமென்பது அவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தும் திறனை முற்றிலும் துறந்துவிட்டார் என்பதற்கான சான்றாகவே கொள்ள வேண்டும் என்பது இன்றைய நிலை.

எனவே இங்கு ஆய்வென்பது நம் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாகவோ ஒப்பந்தங்கள் மூலமாகவோ பணம் வழங்கும் அரசு அல்லது பிற நிறுவனங்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் தரவுகளைத் திரட்டித் தரும் பணியே. அவ்வாறு நாம் திரட்டும் தரவுகளின் பயன் நமக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சில வாய்ப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் எண்ணற்ற மூலப்பொருட்களை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள், அதனடிப்படையில் நாம் தரும் பண்டத்தின் உண்மையான மதிப்பு என்ன என்பது நமக்குத் தெரியாமலிருப்பது போல்.

வரலாறு, பண்பாடு போன்ற தரவுகளில் நம் ஆய்வாளர் சிவப்பாக எதையாவது பார்த்தால் அதில் தூமை தவிர வேறெதையும் அவர் பார்க்க மாட்டார்; பார்க்கக் கூடாது. தூமை என்பது தூய்மை என்பதன் மரூஉ. பெண்களின் மாதவிடாய்க் குருதியை இச்சொல்லால் நாட்டுப்புற மக்கள் குறிக்கின்றனர். தூமை தாய்மையைக் குறிக்கும், அதாவது இனப்பெருக்கத்தைக் குறிக்கும். எனவே ஒரு சடங்கில் சிவப்பாக ஏதாவது இருந்தால் அது வளமைச் சடங்கு. தாமரைப் பூ, மாதுளை என்று எதனைக் கண்டாலும் அது வளமையைத்தான் குறிக்கும், ஏனென்றால் அவற்றின் உட்புறம் சிவப்பாகத்தானே உள்ளது?

வெற்றிலை என்றொரு நூல் படித்தேன். (ஆசிரியர் பெயர் நினைவில்லை) அதில் கொடிக்காலில் வெற்றிலையை நடும் முன்னர் குயவரின் சூளைச் சாம்பலையும் கோழிக் குருதியையும் கலந்து வயல் முழுவதும் தெளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் குருதி இருப்பதால் அது வளமைச் சடங்குதானாம், ஆசிரியர் கூறுகிறார். சூளைச் சாம்பலைப் பற்றி எதுவுமே கூறவில்லை. இவர்கள்தான் சிந்திப்பதைத் துறந்தவர்களாயிற்றே. குயவர் சூளைச் சாம்பல் என்பது Pot ash. பொட்டாசு என்ற உரத்தின் பெயர் pot ash என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது சூளைச் சாம்பலில் அடங்கியிருக்கும் பொருளைக் குறிக்கும் சொல் என்கிறது ஆங்கில அகராதி (Chambers Dictionary பார்க்க). கோழிக் குருதியின் பயனை நம் பண்பாடு அறிந்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கண்ணில் ஏதாவது அடிபட்டு விழி சிவந்துவிட்டால் கோழிக் குருதியை விடுவர் (அலோபதி-எதிர் மருத்துவர்-இதனை ஏற்றுக் கொள்வதில்லை). புதிதாகக் கட்டிய வீட்டுக்குப் பால்காய்ச்சும் முன் வீட்டைச் சுற்றிக் கோழிக் குருதியைத் தெளித்துத் “தச்சுக் கழிப்பர்”. கோயில் திருவிழாக்கள் எடுப்பதே கொள்ளை நோய்த் தொடர்பான தடுப்பு நடவடிக்கை என்பது ஒரு கருத்து. கொடியேற்றுவது அவ்வூரில் கொள்ளை நோய்த் தாக்குதல் உள்ளது என்பதை வெளியிலிருந்து வருவோருக்கு எச்சரிக்கும் உத்தி என்கின்றனர். பத்து நாட்கள் உள்ளூர் மக்கள் வெளியில் செல்வதும் வெளியூரார் ஊரினுள் நுழைவதும் தடுக்கப்படுமாம். கொடியேற்றப்பட்டதும் ஊரைச் சுற்றி கோழிக் குருதி தெளிக்கப்படுமாம். இவற்றாலெல்லாம் கோழிக் குருதி ஒரு நச்சு நுண்ணுயிரிக் கொல்லி என்பது புலப்படும். இதுபோன்ற அறிவியல் - தொழில்நுட்பச் செய்திகளைத் திரட்டி அவற்றைத் தங்கள் வாணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி காப்புரிமம் பெற்றுக் கொள்வதே இந்த “ஆய்வு”களுக்குப் பணம் கொடுக்கும் வல்லரசுகளின் நோக்கம். இந்த உண்மையை மறைக்கத்தான் வளமைச் சடங்கு போன்ற வாய்ப்பாடுகளை வழங்கியுள்ளனார்.

இந்த வாய்ப்பாடுகளை வடித்துத் தந்தவர் நானறிந்த வரையில் பிரிட்டனைச் சேர்ந்த கிரேக்க மொழிப் பேராசிரியராகிய சியார்சுத் தாம்சன் என்பவர். ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வேட்டைக்குப் போகுமுன் தாம் வேட்டையாடப்போகும் விலங்கின் ஒவியத்தில் குறிபார்த்து அம்பெய்து (விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்கு முன் மேற்கொள்ளும் பயிற்சியைப் போல்) மேற்கொள்ளும் பயிற்சிகளை அறிவு வளர்ச்சி குன்றிய மக்களின் “மந்திரச்சடங்கு” என்பார். வளமைச் சடங்கு, அந்த மந்திரச் சடங்கு, இந்த மந்திரச் சடங்கு என்று அனைத்தையும் அடக்கி விடுவார். இவர் தன்னை ஒரு மார்க்சியர் என்று வேறு அறிவித்துவிட்டார். இவை போதாவா நம் அறிவு”சீவி”களுக்கு? சடங்குகளையும் மந்திரங்களையும் அள்ளிப் பூசிக் கொண்டனர்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]Foot Prints on The Sands of Time, F.G. Peerce, Humphery Milford, Oxford University Press (Indian Branch), 1942, P.194

0 மறுமொழிகள்: