மனம்திறந்து....... 1

வரலாற்று வரைவென்பது வலிமை மிக்க ஓர் அரசியல் ஆயுதம்.[1] அது ஊத இனம் போன்று நிலைத்த “மனித இனங்களை” உருவாக்கி இருக்கிறது; சப்பான் போன்று பழமையில் ஊறித் திளைத்த நாடுகளை வலிமை மிக்க வல்லரசுகளாக மாற்றியுள்ளது; “ஆரிய இனம்” போன்ற கற்பனை மனிதர்களை உலவவிட்டு இருபதாம் நூற்றாண்டில் உலகப் பெரும் போர்களை மூட்டி பலகோடி மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது; தமிழகத்துத் திராவிட இயக்கம் போன்று புதிய அரசியல் தரகர்களை நடமாட விட்டுள்ளது; அரசியல் - பொருளியல் - குமுகியல் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள்குழுக்கள் வீறுகொண்டு எழுந்து போராடி விடுதலை பெறுவதற்கு உதவியுள்ளது; ஆதிக்கவெறி கொண்ட குழுக்கள் தம் பிடிக்குள் சிக்கியுள்ள மக்கள் விடுதலைக்காகப் போராடும் போது அவர்களை நசுக்கத் தேவையான அரக்க உளவியலைப் பெற்றுக் கொள்ள உதவியுள்ளது. இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சுமேரிய, அக்கேடிய, பாபிலோனிய, மெசப்பொட்டோமிய நாகரிகங்கள் செழித்து வாழ்ந்திருந்த வேளையில் பண்டை எகிப்திய வல்லரசு படையெடுத்து அம்மக்களை அடிமைகளாகப் பிடித்து வந்து மாபெரும் கூம்புக் கல்லறைகளையும் நகரங்களையும் கோயில்களையும் கட்டும் பணியில் ஈடுபடுத்தியது. (நாமறிந்த வரலாற்றில் முதன்முதலில் வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களைத் தம் நாட்டுக்குக் கொண்டு சென்று தொழிற்சாலைகளில் பண்டங்களைப் படைத்தவர்களும் பண்டை எகிப்தியர்களே). இந்தச் சூழலில் அரண்மனையுள் உடன்பிறந்தோரிடையில் உருவான அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட மோசே அந்த அடிமைகளைத் தன் பக்கம் திரட்டி[2] செங்கடலைக் கடந்து மேற்காசியாவினுள் நுழைந்து எண்ணற்ற தெய்வங்களை வணங்குவோரைக் கொண்ட கலவையான அம்மக்களிடையில் உறுதியான ஓரிறைக் கொள்கை ஒன்றை உருவாக்கி தன்னை எதிர்த்தோரை அழித்து ஊத இனமென்ற ஒர் இனத்தை உருவாக்கினார். தான் பிறந்து வளர்ந்த எகிப்திய அரண்மனையில் இருந்த நூலகத்திலிருந்து பண்டை உலக வரலாறுகளைத் திரட்டி, இன்றைய கிறித்துவ மறையில் உள்ள பழைய ஏற்பாடு எனப்படும் ஊத மறைநூலை எழுதினார். உலகின் முதற்காப்பியமாக இன்று கருதப்படும் கில்காமேசு காப்பியத்தில், கடற்கோளுக்குத் தப்பியவனாகக் கூறப்படும் உட்நாப்பிட்டிற்றிம் பழைய எற்பாட்டில் நோவோவாக வருகிறார். அவ்வாறே குமரிக் கண்டத்தில் நிகழ்ந்தவற்றின் மறுவடிப்புகளும் தொகுப்புகளும் ஆன மகாபாரதம், இருக்குவேதம் போன்றவற்றில் காணப்படும் நிகழ்ச்சிகளும் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளன.[3]

ஆதாமிலிருந்து தொடங்கும் ஊத வரலாற்றில் அவர்களிடையில் தோன்றிய பெருமக்களோடு யகோவா எனப்படும் அவர்களின் கடவுள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதன்படி, அம்மக்கள் வேறெந்தக் கடவுள்களையும் வணங்காமல் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும் தன்னை வணங்காதவர்களையும் வணங்குவோரின் எதிரிகளையும் தான் அழித்து ஒழித்து மண்ணிலிருந்தே அகற்றி விடுவதாகவும் உலகை ஆள தான் தேர்ந்துள்ள மக்களே ஊதர்கள் தான் என்றும் கூறியதாக அந்த “வரலாறு” கூறுகிறது. பின்னர் பஞ்சத்தால் பிழைப்பு தேடி எகிப்துக்கு வந்து அடிமைகளாக உழன்றவர்களை ஊதனாகப் பிறந்து எகிப்திய அரண்மனையில் வளர்ந்த மோசே மூலம் விடுவித்து அவர்களுக்குப் புதிய ஒரு வாழிடத்தைத் தந்ததாக அந்த “வரலாறு” கூறுகிறது. பின்னர் நாடிழந்து உலகெலாம் பரந்து திரிந்து ஐரோப்பியக் கிறித்துவர்கள் கைகளில் சிக்கிச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகி மீண்டெழுந்ததில் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் - வரலற்றுப் பின்னணிகளுடன் மோசே தொடங்கி வைத்த வரலாற்றுவரைவும் மிகப்பெரும் துணையாக நின்றது.

சப்பானின் தோக்குகவா சோகனான இயெயேசுவின் பேரன் 243 மடலங்களில் “சப்பானின் பெரும் வரலாறு” என்ற பெயரில் ஒரு சப்பானிய வரலாற்றை எழுதினார். மாற்றமில்லாமல் ஒரே அரச மரபு பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சப்பானை ஆண்டுவருவதாக அதில் எழுதினார். சப்பானே உலகின் நடுவிலிருப்பதாகவும் கிழக்கே எழும் கதிரவன் தங்கள் நாட்டில் தான் முதலில் எழுவதாகவும் எழுதினார். அயலவரைத் தம் மண்ணினுள் நுழையவிடாத மனப்பான்மையுடைய சப்பானியர் இந்த “வரலாற்றால்” மேலும் பெருமித உணர்வு கொண்டனர். 1853-இல் அமெரிக்கக் கடற்படைத் தலைவன் சப்பானியத் துறைமுகத்தைத் திறந்து விடுமாறு மிரட்டிய போது அப்போதைக்கு விட்டுக் கொடுத்து, தங்கள் தேசியத் தன்மானத்தைக் காத்துக்கொள்வதற்காக ஓசையில்லாமல் ஓர் அரசியல் - குமுகியல் - பொருளியல் புரட்சியை நிகழ்த்தி தேங்கிய ஒரு நிலக்கிழமைக் குமுகத்தை ஓர் இருபதே ஆண்டுக்குள் ஒரு முதலாளியக் குமுகமாக மாற்றி இன்று உலகின் தொழில்துறை வல்லரசாக மாற்றி ஏழை நாடுகளுக்கு வழிகாட்டியாக நிற்கின்றனர். (நம் நாட்டுத் தலைவர்களுக்கும் அறிவு“சீவி”களின் குருடாகிப்போன அறிவுக்கும் இன்னும் இது புலப்படவில்லை.)

தொழிற்புரட்சியால் வாணிகத்தில் வலிமைபெற்று உலகளாவிய தொடர்புகளால் உலக மொழிகளைப் பற்றிய ஓர் அரைகுறைப் புரிதலில் சமற்கிருதம் - ஐரோப்பிய மொழிகளுக்குகிடையில் உள்ள சில ஒற்றுமைகளைக் கொண்டு “ஆரிய இனம்” என்ற ஒரு புதிய மனித இனத்தையே படைத்த மாக்சுமுல்லர் பின் தன் படைப்பைத் தவறானதென்று கைவிட்டுவிட்டார். ஆனால் முன்பு தம்மை விட நாகரிகத்தில் மேம்பட்டிருந்தோர் என்று கூறப்படும் “திராவிடர்களை” வென்றோர் என்று அவர் கதைகட்டிய, இந்தியாவினுள் நுழைந்தவர்களாக அவர் கூறிய “ஆரியரும்” தாமும் ஒரே இனத்தினர் என்ற பெருமித உணர்வு ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இன்றும் வலுவாக உள்ளது. அப்படியிருந்தும் மாக்சுமுல்லர் கூறிய உடற்கூறுகளின்படி, தாமே கலப்பில்லாத தூய ஆரியர் (மாக்சுமுல்லர் ஆரியரின் உடற்கூறு என்று தன் நாட்டினரான செருமானியரின் உடற் கூறுகளையே தொகுத்துக் கூறினார். இதில் அவருடைய அரசியல் சார்பு விளங்கும்) என்ற ஒரு புதிய வரையறையைத் தமக்கு வகுத்துக் இரண்டு, ஐரோப்பிய நாடுகள் உலகின் பிற நாடுகளைக் கைப்பற்றிப் பங்கிட்டதில் தங்களை ஏமாற்றியதனால் எழுந்த ஆத்திரத்தை இரண்டு உலகப் போர்களால் தீர்த்து உலகையே அலைக்கழித்து கோடிக்கணக்கான மக்களைப் பலிகொண்ட செருமானியருக்கு அரசியல் ஆயுதமாக நின்றது மாக்சுமுல்லரின் “ஆரிய இன வரலாற்று வரைவுதான்.

குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறைகளால் பிளவுண்டிருந்த தமிழகத்தினுள் சமய வடிவில் நுழைந்த சமண ஒற்றர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான ஒரு பண்பாகிவிட்ட காட்டிக் கொடுத்தல் நிகழ்வுகளால் இங்கு நிலைகொண்டுவிட்ட கன்னடர்களும் தெலுங்கர்களும் மராட்டியர்களுமான பிறமொழிப் பார்ப்பனர்களுக்கு எதிராகத் தமிழ்ப் பார்ப்பனர்கள் தமிழ்மொழி மீட்சிக்கான வரலாற்றியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தனர். மு. இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், பரிதிமாற்கலைஞர் போன்ற பேரறிஞர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் தமிழகத்தில் வாழும் தென்னகப் பிறமொழியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் தடுத்து, தமிழர்களை அப்பிறமொழியாளர்களுக்கு மீளா அடிமைகளாக்க ஈ.வே.இராமசாமிப் பெரியாருக்குக் கைகொடுத்தவை மாக்சுமுல்லர் உருவாக்கி அவர் கைவிட்ட பின்னும் அரசியல் காரணங்களுக்காக நிலைத்துவிட்ட “ஆரிய இன”க் கோட்பாடும் கால்டுவெல் உருவாக்கியதாகக் கருதப்படும் “திராவிட இன”க் கோட்பாடும்.[4]

தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்கள் மேன்மையை நிலைநாட்ட நூல்களை, கல்வெட்டுகளை, பழஞ்சுவடிகளை அல்லது பட்டயங்களைத் திரட்டும்போது தம் கருத்துகளுக்கு அல்லது தனி அல்லது குழு நலன்களுக்கு எதிரானவற்றை அழித்தும் திரித்தும் விடுவது இயல்பாக நடைபெறுகிறது. நாடார்கள் தொடங்கி வைத்ததாகக் கருதப்படும் சாதி வரலாற்றுவரைவுகள் இத்தகையவே. இத்தகைய போலி வரலாறுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தம்மை ஒடுக்கும் விசைகளை எதிர்த்துப் போராடும் மனவலிமையையும் அதே நேரத்தில் ஒடுக்கும் குழுக்களின் போலி சாதி வரலாறுகள் பிறர் மீது தாங்கள் மேலாளுமை செய்வதற்குரிய ஞாயப்படுத்தலையும் வழங்குகின்றன.

இனி, இந்திய ஆட்சியாளர்களின் வரலாற்று அணுகலைப் பார்ப்போம். நடு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் படையெடுத்து வந்ததாகிய பொய் வரலாற்றுக் கற்பனையின் படி இங்கு அப்போது வாழ்ந்தவர்களாகக் கூறப்படும் “திராவிடரை” வென்றவர்களாக அதே பொய்வரலாறு கூறும் “ஆரியர்கள்” வழி வந்தவர்கள் என்று தம்மைத் தவறாகக் கருதுவோர் கைகளில் இன்றைய இந்திய அரசு உள்ளது. எனவே இந்தப் பொய் வரலாற்றின்படி “ஆரியர்கள் இங்கு வந்ததாகக் கூறப்படும் கி.மு. 2500க்கு முன் இந்திய எல்லைக்குள் எந்தவொரு நாகரிக் கூறும் இருந்ததாகக் கூறக்கூடாது என்பதில் உறுதியாகவும் பிடிவாதமாகவும் உள்ளது இந்திய அரசு.

அண்மையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய “சங்க இலக்கிய அறிமுக முகாம்” ஒன்றில் பேசிய அருணன் என்பவர் மேடை அநாகரிகத்தின் உச்சத்திற்குச் சென்று தமிழ் இலக்கியங்களின் படி சங்கங்கள் 60,000 ஆண்டுக்கு முன்வரை இருந்தாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுவதாகவும் ஆனால் மனிதக்குரங்கு கூட அக்காலகட்டத்தில் தோன்றியிருக்கவில்லை என்றும் உண்மையுடன் தமக்குள்ள பகைமையையும் வரலாறு, அறிவியல், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றில் தனக்குள்ள மடைமையையும் ஓங்கிய குரலில் வெளிப்படுத்தினார். மூன்று அறிஞர்களின் ஆக்கங்களை அவர் தன் உரையின் போது மேற்கோள் காட்டினார். அவர்கள் கே.கே.பிள்ளை, பண்டிதர் மு.வ., பண்டிதர் ச.அகத்தியலிங்கம் ஆகியோர். மூவருமே சங்க காலம் என்பது “வேண்டுமானால்” கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கலாம் என்று தமிழார்வலர்களின் வாடிய நெஞ்சங்களுக்கு அருட்பால் சுரந்து ஊட்டிய கொடையாளிகள் என்பது அவரது உரையின் கருத்து.

இவர்களில் முதலாமவர் தமிழக அரசுக்காகத் தமிழக வரலாற்றுப் பாடநூல் எழுதியவர். அரசின் கண்ணோட்டத்தைக் கடைப்பிடித்தால்தான் இதுபோன்ற பணிகள் கிடைக்கும். பிறர் இருவரும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாயிருந்தவர்கள். மாநில அரசின் மீது நடுவண் அரசுக்குள்ள மேலாளுமையை உறுதிப்படுத்துவதற்காக அமர்த்தப்பட்ட கண்காணியான ஆளுநரின் தேர்வுக்குட்பட்டது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி. எனவே நடுவணரசின் அளவைகளுக்குட்பட்டவர்களாகத் தம்மை வடிவமைத்துக் கொள்வது துணைவேந்தர் பதவியை நாடுவோருக்கு இன்றியமையாதது. மு.வ.வின் பெயரில் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாறு அவரது முந்தைய எழுத்துகளைப் படித்தவர்களால் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. திரு. ச. அகத்தியலிங்கமோ மேடையிலேயே ஆளுநர் அலக்சாந்தர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து துணைவேந்தர் பதவிக்குப் “பெருமை” தேடித்தந்தவர்.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்து உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பே

என்று கம்பனோ அவர் பெயரில் வேறெவரோ பாடிப்பதிந்துள்ள தமிழ் இலக்கிய மரபைத் தகர்த்தவர்கள் இவர் போன்றோர். ஆசிரியர் பதவிகள் அனைத்திலும் கீழ்நிலையில் கிடந்த தமிழாசிரியர்களுக்குத் துணைவேந்தர் பதவிவரை வாயிலைத் திறந்துவிட்ட காலஞ்சென்ற முதல்வர் ம.கோ. இராமச்சந்திரனைத் திட்டித் தீர்த்துவிட வேண்டுமென்று வெறி வருகிறது இவர்களின் நடத்தையைப் பார்க்கும்போது. அவரால் அன்றோ அகத்தியலிங்கம் போன்ற இழிசினர்கள் நம் பல்கலைக் கழகங்களுக்கும் தமிழறிந்தோர்க்கும் இத்தகைய இழிவைத் தேடித்தந்துள்ளனர்?

துணைவேந்தர் பதவிக்கென்று ஆட்சியாளர்கள் வகுத்துள்ள நெறிமுறைகளை நிறைவு செய்வதற்கென்று நம் “கல்வியாளர்கள்” நிகழ்த்தும் கூத்துகளும் நடத்தும் நாடகங்களும் விந்தையானவை, வேடிக்கையானவை, இரங்கத்தக்கவை. நமது இந்தக் கல்வி அமைப்பை நம்பி வாழும் இளைய தலைமுறையினரும் பிறக்கப்போகும் அடுத்த தலைமுறையினரும் மொத்தத்தில் நம் மக்கள் அனைவருமே இரக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காக, அவர்களைக் காக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]உண்மை என்பது கூட ஓர் அரசியல் ஆயுதம் தான். உண்மை பலருக்கு நன்மை தருவதாகவும் சிலருக்கு தீங்கு தருவதாகவும் இருக்கும். எனவே வரலாறு ஓர் அரசியல் ஆயுதம் என்பதால் வரலாற்றுவரைவு பொய் நிறைந்தது என்று பொருளாகிவிடாது. உண்மையாயினும் கற்பனையாயினும் வரலாற்று வரைவில் ஏதோ ஒரு வகை அரசியல் இருந்தே தீரும்.

[2]கடவுளரின் தேர்கள்? (Chariots of Gods?) நூலின் ஆசிரியரான எரிக் வான் டெனிக்கனும் இவ்வாறே கருதுகிறார்.

[3]விரிவுக்கு, திண்ணை இணைய இதழ் மற்றும் தென்மொழி 37/12 இதழிலிருந்து தொடங்கும் “காலத்துள் மறைந்த உறவுகளும் உண்மைகளும்” என்ற ஆசிரியரின் கட்டுரைத் தொடரைப் பார்க்க. மோசேயின் பிறப்புக் கதையில் கூட மகாபாரதக் கருணனின் பிறப்புக் கதையிலுள்ள ஒரு கரு உள்ளது.

[4]கால்டுவெலாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் இரண்டாம் பதிப்பை மொழிபெயர்த்தவர்கள், அதிலுள்ள பல கருத்துகளை மறைத்தும் திருத்தியும் உள்ளனர் என்பதை போ.வேல்சாமி என்பவர் “மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்” என்ற தலைப்பிலும் ஆரியர்களுக்கு, அதாவது பார்ப்பனர்களுக்கு எதிராக, பிற தமிழ் மக்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்து நிலைபெறுவதற்காக, தமிழ் நாட்டு வேளாளர்கள் மனித இனங்கள் குறித்து கால்டுவெலார் பின்னிணைப்பாகச் சேர்ந்த பகுதிகளைத் திட்டமிட்டு மறைத்து மொழிபெயர்த்துள்ளனர் என்று வேதசகாயகுமார் என்பவர் “கால்டுவெல்லின் மற்றொரு முகம்” என்ற தலைப்பிலும் எழுதியுள்ள கட்டுரைகள் கவிதாசரண் அக்டோபர் 2005 - பிப்ரவரி 2006 இதழில் வெளிவந்துள்ளன.

0 மறுமொழிகள்: