பண்டை உலகின் வரைபடங்கள்



7.பண்டை உலகின் வரைபடங்கள்.
            அடுத்து திருவாளர் செயகரன் பண்டை உலகின் உலக வரைபடங்கள் எனும் களத்தினுள் இறங்குகிறார். அவர் காட்டும் வரைபடங்கள் புகழ்பெற்ற கிரேக்க அறிஞர் என்று அறியப்படும் தாலமி(கி.பி.100 – 170), வரைந்ததாகக் கூறப்படும் வரைபடங்கள். தாலமியைப் பொறுத்தவரை அவரது உலக வரைபடம் என்பது உண்மையில் வேறொருவரின் வரைபடம் என்றும் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் கூறுகின்றனர். திருவாளர் செயகரனே, “அப் பகுதிகளை உலகப் படத்தில் வரைந்த போது செய்த பிழைகள் பல. அவற்றில் முக்கியமானவை இரண்டு : இந்தியா ஒரு தீபகற்பம் என்பது தெரியாமல் இந்தியாவை ஒரு பெரும் தீவாகக் காட்டியது மற்றும் இலங்கையின் அமைப்பை ஏறத்தாழ பதினான்கு மடங்கு மிகைப்படுத்திக் காட்டியது”(பக். 35).

            அதே வேளையில் Wikipedia, the free encyclopedia என்ற இணைய தளம் Geographia (Ptolomy) என்ற தலைப்பில் தந்திருப்பதன் ஒரு பகுதி, ”தாலமி தன்னுடைய ஆக்கத்துக்கு சார்ந்திருந்தது தனக்கு முன்பிருந்த டையரைச் சேர்ந்த மரினோன் என்பவரையும் உரோமானிய மற்றும் பண்டைய பாரசீக பேரரசுப் பதிவாளர்களையும், ஆனால் பேரரசின் சுற்றுவட்டத்துக்கு அப்பாலுள்ள தரவுகளில் மிகப் பெரும்பாலானவை நம்பத்தகாதவை”, என்பதாகும் (He relied somewhat on the work of an earlier geographer, Marinos of Tyre, and on gazetteers of the Roman and ancient Persian Empire, but most of his sources beyond the perimeter of the Empire were unreliable.)

            இந்த உண்மைகளெல்லாம் திருவாளர் செயகரனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பே இல்லை. அவர் பிறரின் அறியாமை, தன்னை இப் பணிக்கு அமர்த்தியிருப்போரின் விளம்பர வலிமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து இந்த ஏமாற்றில் துணிந்து இறங்கியிருக்கிறார் என்றும் கூறலாம். அத்துடன் கண்டுபிடித்துவிட்டால் என்ன கொடுத்த பணத்தைப் பறிக்கவா போகிறார்கள் என்ற துணிவும் இருக்கலாம். கருவாடு விற்ற காசு நாறவா செய்யும், என்ன தோழர்களே!    
            எனக்கு நண்பர் . எட்வின் பிரகாசு 6 உலக வரைபடங்களை வலை தளங்களிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளார்.


இது இன்றைய உலகப் படத்தைப் போன்று தோற்றமளிப்பது

இதில் இந்தியா ஒரு தீவு போன்று ஒரு புள்ளியில் மட்டும் ஆசியாவோடு தொடர்பு கொண்டுள்ளது. இதைத் தான் சு.கி. செயகரன் முதல் பிழையாகச் சுட்டியுள்ளார் போலும். ஆனால் இந்தப் படத்தில் குமரி(இந்து)மாக்கடல் பகுதி மட்டுமே துண்டித்துத் தரப்பட்டுள்ளது.
கிழக்கு முனை ஆசியத் தட்டைத் தொட்டவாறு இருப்பதைக் காணலாம்.
இந்த இறுதி நான்குக்கு இடையில் பெரும் வேறுபாடுகள் இல்லை. இதில் காட்டப்பட்டிருக்கும் தாப்பிரபேனை அடுத்துள்ளதாகக் கூறப்படும் இந்தியாவுக்கும் (2)ஆம் படத்தில் இந்தியா தொட்டுக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ள ஆசியாவுக்கும் பெரும் வேறுபாடு இல்லை.

தாலமியின் உலக வரைபடம் ஓர் ஏமாற்று என்று மேலே சுட்டிக்காட்டியதில் உண்மையும் உண்டு தவறும் உண்டு. இன்று துல்லியமானதாகக் கூறப்படும் உலக திணைப்படம் வரையும் முயற்சியில் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடத்தைத் தாலமியின் வரைபடம் என்று எவரோ கூறி வெளியிட்டிருக்கலாம்( முதல் படம்) என்று தோன்றுகிறது. (2)ஆம் வரைபடம் பெரும்பாலும் தாலமிக்குக் கிடைத்த ஒரு பழம் வரைபடம் என்று தோன்றுகிறது. அதில் இந்தியா ஒரு தீவாகக் காட்டப்பட்டிருப்பதால் அதை நீக்கிவிட்டு அதன் இடத்தில் தாப்பிரபேனை அவர் வைத்துள்ளார் போலும். ஆனால் தாப்பிரபேன் இந்தியாவிலிருந்து பலநாள் கடல் செலவில் செல்ல வேண்டிய இடம் என்று அரேபியக் கடலோடிகளும் அங்கு நிழல் தெற்கு நோக்கி மட்டும் விழும் என்றும் அதனைச் சுற்றிக் கடலில் வந்தவர்கள் எவருமில்லை என்றும் கிரேக்கர்களும் எழுதி வைத்துள்ளனர் (பார்க்க தென்னிலங்கை கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், ஆசிரியர் குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், 80 , மேலமாசி வீதி, மதுரை - 625 001)[1]. அவற்றைப் பார்த்து அவர் காலத்தில் தாப்பிரபேன் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவுக்குக் கூடுதல் பரப்பை அளித்து தாலமி உலகப்படம் வரைந்து விட்டார் போலும்.

பிரளயம் பற்றிய மரபுகள் என்ற தலைப்பின் கீழ், திபெத் என்ற துணைத் தலைப்பில்(பக்.64 – 65) திருவாளர் செயகரன் கூறியிருப்பது:
            ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் மூழ்கும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு, வங்காளம் வழியாக வெள்ளத்தை வற்றச் செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும் அறிவுப் பாதையில் இட்டுச் செல்லுமுகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் இங்கு அனுப்பியதாகக் கூறுகிறது இக்கதை.”

மேலே கூறிய (2)ஆம் திணைப்படம் திபேத் மக்களிடையில் வழங்கும் வெள்ளப்பெருக்குக் கதைக்குப் பொருந்தி வருகிறது. கிழக்குக் கோடியில் ஒரேயொரு புள்ளியில் ஆசியாவைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தியா மேலும் நெருங்கி மேற்குக் கோடியிலும் வால்போல் உள்ள பகுதியில் தொட்டு நெருங்கினால் இடையில் சிக்கிய நீர்மட்டம் உயர்வது இயல்பு. அவ்வாறு உயர்ந்து அந்த நீர் கீழ்க்கோடியில் உடைத்துக் கொண்டு இன்றைய கங்கைச் சமவெளி உருவாக வழியமைத்ததையே திபெத்திய வெள்ளப் பெருக்குக் கதை கூறுகிறது எனலாம்.
                                                                           
            அப்படியானால் இந்த வெள்ளப்பெருக்குக் கதை கூறும் நிகழ்ச்சி நடைபெறுவதற்குப் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத் திணைப் படத்தை வரைந்திருக்க வேண்டும. எரிக் வான் டெனிக்கன் போன்ற ஐரோப்பிய - அமெரிக்கர்களைக் கேட்டால் இது வேறு உலகங்களிலிருந்து நம்மை விட நாகரிகத்தில் உயர்ந்த மனிதர்கள் இங்கு வந்து வரைந்த படமாக்கும் என்பர், ஏனென்றால் உலகில் சொந்தமாக நாகரிகத்தை வளர்ப்பதற்கு வெள்ளைத் தோலர்களால்தான் முடியும் என்று நம்மை நம்ப வைப்பது அவர்களது குறிக்கோள். ஆனால் உண்மை அதுவல்ல, உலகின் தென் அரைக் கோளத்தில் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த உலகத் திணைப்படத்தின் ஒரு பகுதிதான் இது.

            இதை இத்துடன் நிறுத்திவிட்டு திருவாளர் செயகரனைத் தொடர்ந்து அவர் அடிக்கும் குட்டிக்கரணங்களை வேடிக்கை பார்ப்போம் வாருங்கள்.

            தாலமியின் உலக வரைபடங்கள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் கூறப்பட்ட போதிலும் அவற்றில் தான் எதை எடுத்துக்கொண்டு பேசுகிறார் என்பது படிப்போருக்குத் தெரியக் கூடாது என்பதற்காகவே அவர் ஒரு படத்தைக் கூட நூலில் தரவில்லை. இலங்கையைத் தாம்பிரபேன் என்று அயலவர்கள் கூறுவார்கள் என்று ஒரு குறிப்புடன் தாலமியின் இலங்கைப் படம் என்ற அடிக்குறிப்புடன் கீழே தரப்பட்டிருக்கும் ஒரு படத்தை மட்டும் காட்டியுள்ளார்(பக்.34).

அடுத்த கட்டமாக இலங்கைத் தீவைப் பற்றி அயலவர்களின் கூற்றுகளை வைத்துக்கொண்டு அலசுகிறார். சந்திரகுப்த மௌரியனின் அரசவையில் கி.மு.302இல் தங்கியிருந்த மெகாத்தனி என்ற கிரேக்கத் தூதுவன் இலங்கைத் தீவைப் பற்றிக் கூறியதாகச் சில செய்திகளைத் தருகிறார். அவை: “தாபிரபேன் எனும் தீவு இந்தியாவிலிருந்து ஒரு சிறு ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. தாபிரபேன் 7000 டேடியா நீளமும் 5000 டேடியா அகலமும் உள்ளது. அங்கு 700 கிராமங்கள் இருந்தன. தென்னை மரங்கள் நிரம்பிய இத்தீவில் யானைகள் பலவிருந்தன. இத்தீவின் மக்கள் அவற்றைப் பிடித்து கலிங்கத்துக்கு அனுப்புகின்றனர்.’ இக்குறிப்புகளில் நாம் கவனிக்க வேண்டியவை சில: இந்தியாவையும் இலங்கையையும் பிரித்த கடற் பகுதி அன்று குறுகியதாக இருந்ததால் அதை ஆறு என மெகாத்தனி குறிப்பிட்டிருக்கலாம். தாபிரபேன் என்பது தாமிரபரணியின் திரிபே.டேடியா என்பது 185 மீ (606’ 9”) கொண்ட கிரேக்க அளவை. மெகாத்தனி கூற்றுப்படி, தாபிரபேன் தீவின் நீளம் 1295 கி.மீ. (7000 டேடியா), அகலம் 925 கி.மீ. (5000 டேடியா) ஆகும். ஆனால் இலங்கையோ சுமார் 430 கி.மீ. நீளமும் அதன் அகன்ற பகுதியில் சுமார் 220 கி.மீ. அகலமும் கொண்டது. எனவே மெகாத்தனியின் கணிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது தெளிவு”, என்று நமக்குத்தெளிவும் ஊட்டுகிறார்(பக்.35.)

            தொடர்ந்து செல்பவர், அரேபியர்கள் இலங்கைத் தீவைத் சேரன்தீப் எனக் குறிப்பட்டனர் என்கிறார். அதன் சுற்றளவு 5000 கி.மீ. என்று குறிப்பட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையில் அதன் சுற்றளவு 1400 கி.மீ.தான் என்றும் அளவை முறைகள், கருவிகள் இல்லாத அக் காலத்தில் உருவான மிகைப்படுத்தல்களைப் பயன்படுத்தி ஒரு சாரார்அரேபியக் கடலோடிகள் குறிப்பிட்டது முழுகிப்போன குமரிக் கண்டத்தைத்தான் என்கிறார்கள் என்று கூறி மனம் நொந்து போகிறார்.

            தாமிரபரணியைப் பற்றிய மெகாத்தனியின் பதிவை இவ்வளவு விரித்துக் கூறியவர், பிளினி கூறியவற்றையும் தந்திருந்தாரானால் அது அவரது நாணயத்தின் அடையாளமாக இருந்திருக்கும். அவர் விட்டதை இங்கே நான் தருகிறேன். பிளினி கூறியவற்றை முழுமையாக அப்படியே தராமல் உருசிய ஆய்வாளர் Riddles of Three Oceans என்ற தன் நூலில் தந்துள்ளதை அப்படியே தருகிறேன்.

        (...Most historions of geographial  discoveries believe Ceylon to be the place that was known to the Greeks and Romans as Taprobane. But there are many features in the description of Taprobane that do not correspond to what we know about Ceylon. Taprobane is mentioned in very old sources. Hipparchus noted that no one had yet circumnavigated Taprobane, so that it might very well have not been an island but the beginning of another world the northern edge of the lands of those living opposite...)
….பண்டை கிரேக்கர்களும், உரோமர்களும் அறிந்திருந்த தாமிரபரணி′(Taprobane)யை, நிலப்பரப்புகள்  பற்றிய புதிய கண்டுபிடிப்புகளைக் குறித்து எழுதும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள், இன்றைய இலங்கை என்று நம்புகின்றனர். ஆனால் தாமிரபரணிபற்றிய விளக்கங்களில் பல இன்றைய இலங்கையோடு  பொருந்தவில்லை. மேலும் தாமிரபரணியைப் பற்றிய தொன்மையான குறிப்புகள் ஏராளமாக உள்ளன. கிப்பர்க்கசு (Hipparchus) குறிப்பின்படி, தாமிரபரணியை எவரும் இதுவரை கடல்வழியாக சுற்றி வந்ததாக தெரிவில்லையாதலால், அதை ஒருத் தீவாகக் கருத முடியாததோடு  அது வேறொரு உலகத்தின் தொடக்கமாகவும், புவிக்கோளத்தின் எதிர்பக்கம் வாழ்பவர்களுடைய நிலத்தின் வடக்கு விளிம்பாகவும் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்…..என்பது மேலே உள்ளதின் தமிழாக்கம். அத்துடன்,

            (...Pliny said that on Taprobane the shadows fell to the south instead of north, and the sun rose on the left and set on the right. This means the island was in the southerm Hemisphere. Yet Ceylon is situated roughly between 5°and 9°North ...)
                                                                (The Riddles of Three Oceans. P. 169-170)

            …….தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன, கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறான் என்று பிளினி (Pliny) கூறுகிறார். இத்தீவு தென் அரைக்கோளத்திலிருந்ததையே இது புரிய வைக்கிறது. ஆனால் இன்றைய இலங்கையோ ஏறத்தாழ வடக்கு நேர்வரை 5°க்கும் 9°க்கும் இடையே அமைந்துள்ளது. இது மேலேயுள்ளதன் தமிழாக்கம். (பிளினி கூறியுள்ளதை நேரடியாக அறிந்து கொள்ள விரும்புவோர் www:sdstate:edu/projectsouthasia/upload/Pliny-Taprobanepdf என்ற வலைதளத்தில் காணலாம்.)

            இது தொடர்பாக சில வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கிரேக்கர்களுக்கு அனைத்து நாகரிகக் கூறுகளையும் கற்பித்தவர்கள் இந்தியாவின் தென் கோடியிலிருந்து சென்றவர்களாக அறியப்படும் பினீசியர்கள் எனப்படும் உலகின் மிகப் பழமையான கடலோடிகளாகும். “முதல் வரை 16 எழுத்துகளை அவர்களிடமிருந்தே கிரேக்கர்கள் கற்றனர்(தமிழ் எழுத்துக்களும்வில் தொடங்கிவில்தான் முடிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது). ஐரோப்பா என்ற நிலப்பெயரும் ஒரு பினீசியப் பெண்ணின் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இலியடு எனப்படும் கிரேக்க மறவனப்பு(காவியம்) கூறும் திராய்ப் போர் என்பது கூட பினீசியர்கள் நிகழ்த்திய ஒரு பெண் கடத்தலின் தொடர் நிகழ்வுதான் என்னும் அளவுக்கு அந்த நாகரிகத்தில் அவர்களின் பங்களிப்பு உள்ளது. அவர்கள் கி.மு.1600க்கு முன்னரே நண்ணிலக் கடல் எனும் மத்தியதரைக் கடலின் கீழ்க் கரையில் அசிரியாவில் நிலைத்துவிட்டனர். இது பற்றிய உண்மைகளை எசு.வி.எசு.இராகவன் என்பார் எழுதிய இரோடோட்டசு என்ற நூலிலும் George Thompson என்பார் எழுதியுள்ள Aeschylus and Athens என்ற தூலிலும் பார்க்கலாம்.  அதேவேளையில் வானியலில் கிரேக்கர்கள் பின் தங்கியே இருந்தனர். வெவ்வேறு வட்டாரத்தில் வெவ்வேறு மாதப் பெயர்களுடனும் பெயர் இல்லாமல் எண்களையும் கடைப்பிடித்திருக்கிறார்கள். நிலா மாதங்களைத்தான் பயன்படுத்தினர். கதிரவ ஆண்டுக்கும் நிலவாண்டுமுறைக்கும் உள்ள 11½ நாட்கள் வேறுபாட்டை எட்டு ஆண்டுகளில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் இரண்டு ஒலிம்பிக் விழாக்களில் ஒன்றில் ஒரு மாதமும் அடுத்ததில் இரண்டு மாதமுமாகக் கழித்தனர் என்று மேலே குறிப்பிட்ட நூலில் சியார்சுத் தாம்சன் கூறுகிறார்(11½ x 8 = 92). அதைப் போல் உரோமர்கள் தங்களிடையிலுள்ள 10 குக்குலங்கள் அடிப்படையில் 304 நாட்களைப் 10 மாதங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாதமும் ஒரு குக்குலம் வீதம் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் எட்டாம் மாததிலிருந்து பத்தாம் மாதம் வரை தமிழர்களின் செயற்கை மொழியான சமற்கிருத எண் பெயர்களைத் தழுவி அக்டோபர்(அட்டம்), நவம்பர்(நவம்), திசம்பர்(தசம்) என்று இருந்ததை எகிப்தியர் கடைப்பிடித்த தமிழர்களின் கதிரவ ஆண்டுமுறையை சூலியர் சீசர் அறிமுகம் செய்ய, அவர் பெயரால் சூலையும் அவருக்குப் பின் வந்த அகத்தியசின் பெயரில் ஆகத்தும் சேர்க்கப்பட் டு 12 மாதங்கள் ஆக்கப்பட்டன.

            இந்தப் பின்னணியில் பினீசியர்கள் ஒருமுறை கிரேக்கர்களைத் தாக்கச் சென்ற போது நண்ணிலக் கடலில் வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி கடற்படை அழிந்து போக அசிரியாவை விட்டு எகிப்தின் வட எல்லையில் லிபியாவில் கார்த்தசீனியர்கள் என்ற பெயரில் அமர்ந்தார்கள். அவர்களை கி.மு.நான்காம் நூற்றாண்டில் அலக்சாந்தர் அழித்த பின்னர்தான் கிரேக்கர்களின் கடலோடி வாழ்க்கை தொடங்குகிறது. எனவே அவர்கள் இலங்கையைப் பற்றியும் தாம்பிரபேன் குறித்தும் சேரன்தீவு குறித்தும் கூறுபவை அனைத்தும் பினீசியர்களின் பதிவுகளின் மீள்கூற்றுகளுடன் பிற்காலத்தில் கிரேக்கர்களில் நேரடியாகப் பார்த்தவர்களின் பதிவுகளும் முகம்மது நபிக்குப் பின்னர் கடல் வாணிகத்தில் இறங்கிய அரேபியர்களின் கூற்றிலும் அது போல் பினீசியரிடமிருந்து கிரேக்கஉரோமானியர்கள் மூலமாகப் பெற்ற செய்திகளுடன் பிற்காலத்தில் நேரடியாகக் கண்டவர்களின் பதிவுகளும் கலந்து குழம்புவதற்குப் பெரும் வாய்ப்புகள் உண்டு.

            உண்மையில் இலங்கையைச் சேரன்தீவு என்று அரேபியர்கள் மட்டும் கூறவில்லை. ஐரோப்பியர்களும் குறிப்பிட்டுள்ளனர். Serandipity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, n. the faculty of making happy chance finds [Seranldip, a former name for Ceylon. Horace Walpole coined the word (1794) from the title of the fairy-tale ‘The Three Princes of Serandip’, whose heroes ‘were always making discoveries, by accidents and sagacity, of things they were not in quest of’.] என்று பொருள் கூறுகிறது CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY 1972ஆம் ஆண்டு பதிப்பு. ஆக இந்தக் கதைகள் கூட பினீசியர்கள் மூலமாக ஐரோப்பாவை அடைந்ததாகவே இருக்க வேண்டும். (இதை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் பேரா.இரா.மதிவாணன் அவர்கள்). இது போன்ற ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி மேலே குறிப்பிட்ட எசு.வி.எசு.இராகவன் தன் நூலில் பினீசியர்களைப் பற்றிக் கூறுகிறார். அதாவது பினீசியர்களின் கப்பல் ஒன்று ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த போது ஒரு பெரும் சூறைக்காற்றால் கவிழ்ந்து அதில் இருந்த வெடியுப்பு ஆற்றில் கொட்டிவிட்டது. கப்பலில் வந்தவர்கள் ஆற்றின் கரை மணலின் மீது அடுப்பு ஒன்றை அமைத்து உணவு சமைத்தனர். அடுப்பு அணைந்த பின் பார்த்தால் வெடியுப்பும் மணலும் உருகி கண்ணாடி உருவாகியருந்ததாம். இது அவர்கள் எதிர்பார்க்காத கண்டுபிடிப்பு. இதிலிருந்து வெடிமருந்தையும் கண்ணாடியையும் பினீசியர்கள் சீனர்களுக்கு முன்பே அறிந்திருந்தனர் என்ற உண்மையும் நமக்குத் தெரியவருகிறது. இவை பற்றிப் படிக்கும் போது தென் மாவட்டங்களில் வணங்கப்படும் முப்புராதி அம்மனைப் பற்றிய வில்லுப்பாட்டுக் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சிவன் திரிபுரம் எரித்ததாகக் கூறப்படும் தொனமக் கதையில் இல்லாத வகையில் அவர்களது வளர்ப்புத் தாயாக முப்புராதி அம்மன் வருகிறாள். அவளை ஏதோ பணி கொடுத்து அகற்றிவிட்டு அவளது மக்களை சிவன் எரித்ததாகவும் திரும்பிய அவள் நடந்ததைக் கண்டு ஒப்பாரி வைத்ததாகவும் அந்த ஒப்பாரியை வில்லில் பாடும் போது அம்மன் வந்து ஆடுவதாகவும் இது இன்றும் தொடர்கிறது. தென் மாவட்டங்களில் இந்த அம்மன் கோயில்தான் ஊர் ஆட்சிக்கான சாதி வரம்புகளைக் கடந்த கோயிலாக இன்றும் பழைய எச்சங்களுடன் தொடர்கிறது. அகராதி கூறும் கதை நூல் இப்போது புழக்கத்தில் இல்லை என்பது எனது தேடல்களில் தெரிய வந்தது. வாய்ப்பு வசதி உள்ளவர்கள் தேடினால் கிடைக்கக் கூடும். நம் பண்டை வரலாறுகள் எங்கெங்கெல்லாம் சிதறிக்கிடக்கின்றன என்பதை எண்ணும் போது நமக்கு மலைப்பாக உள்ளது.

தாபிரபேன் எனும் தீவு இந்தியாவிலிருந்து ஒரு சிறு ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதுஎன்று கிரேக்கர்கள் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார் திருவாளர் செயகரன். இரு நிலப் பரப்புகளைப் பிரிப்பதில் ஆற்றுக்கும் கடலுக்கும் வேறுபாடு தெரியாமல் அதைப் பதிவு செய்யும் ஒரு கடலோடி மக்கள் இருப்பார்களா? அல்லது அதை மேற்கொள்ளும் திருவாளர் செயகரனுக்கு இந்தச் செய்தியின் பின்னணியில் என்னதான் இருக்கும் என்பதை அறியும் ஆவல் கூட இல்லையா? ஆனால் நமக்குச் சில செய்திகள் இதிலிருந்து தெரிகின்றன. தமிழ் இலக்கியங்கள் காட்டும் இரண்டாம் கடற்கோளில் இலங்கை இன்றைய தமிழகத்திலிருந்து முற்றாகத் துண்டிக்கப்படவில்லை. பாண்டியர் தலைநகரமான துவரையாகிய கதவபுரமும்(கபாடபுரம்) சுற்றிலும் இருந்த நிலப்பரப்புகளும் முழுகியிருக்கின்றன. அதனால் முடத்திருமாறன் தன் சுற்றத்துடன்(பரிவாரங்களுடன்) வெளியேறி கொற்கை மணலூருக்குச் சென்றுவிட்டான். அன்று சேரன் ஆட்சியிலிருந்த வடக்குப் பகுதியில் ஓடிய ஓர் ஆறு அல்லது இராமர் பாலம் என்று பா...வினரும் செயலலிதாவும் பூச்சாண்டி காட்டும் மேட்டு நிலத்திலிருந்து இரு பக்கங்களிலும் ஒடிய ஆறுகள்தாம் பின்னால் கடல் மட்டம் உயர்ந்த போது இன்றைய பால்க்கடல், மன்னார் கடல்களாக உருவாகியுள்ளன என்பதே அது. அவ்வாறு கடல் மட்டம் உயர உயர கி.மு.நான்காம் நூற்றாண்டுக்குப் பின் வந்த கிரேக்கர்கள் பதிந்துள்ள இலங்கையின் நிலப்பரப்பும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அரேபியர்களும் கி.பி.21ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டில் திருவாளர் செயகரனும் தந்துள்ள இலங்கையின் பரப்பளவுகள் ஒன்றையடுத்து ஒன்று சுருங்கிக் காணப்படுகிறது.

இத்துடன் வி.கனகசபையார் தந்துள்ள ஓர் அரிய செய்தி திருவாளர் செயகரனின் மறைப்பை அல்லது அறியாமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. ஏறக்குறைய கி.மு.200 அளவில் இலங்கைத் தீவின் தென்மேற்குக் கடற்கரையில் கொழும்பு அருகில் இருந்த கல்யாணியை ஆண்டுவந்த திசன்(Tissa Raja) காலத்தில் அவன் நாட்டின் பரப்பில் 11/12 பகுதி கடலால் கொள்ளப்பட்டது என்று மகாவம்சம், இராசாவளி ஆகிய நூல்கள் தரும் செய்திகளை அவர் தருகிறார்,(THE TAMILS EIGHTEEN HUNDRED YEARS AGO, 1966, foot note 4, p.21).

இந்தச் செய்தி சிலப்பதிகாரம் - மணிமேகலைக் காலத்தை நான்கு நூற்றாண்டுகள் முன்னோக்கித் தள்ளுவதை அல்லது மணிமேகலை குறிப்பிடும் காலத்தில் கயவாகு நிகழ்திய பூம்புகார் அழிப்பு அதற்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு கடற்கோளுடன் மயங்கியுள்ளதை நாம் காணலாம்.  இதை விட ஒரு சிறப்பான செய்தியும் நமக்குத் தெரிய வருகிறது, மகாவம்சம், இராசாவளி ஆகியவை தரும் செய்தி அடியார்க்குநல்லார் தரும் செய்திகள் போல் நம்பகமானதென்றால் இன்றைய இலங்கை கி.மு. 200க்கு முன் இருந்ததின் 1/12 பகுதிதான் அதாவது கி.மு.200இன் கடற்கோளுக்கு முன் இலங்கை இன்றைப் போல் 12 மடங்கு பெரிதாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. மேலே. பக்.49இல் காட்டப்பட்டிருக்கும் படி மெகாத்தனி தந்துள்ள தாம்பிரபேனாகிய இலங்கையின் பரப்பு இன்றைய பரப்பைப் போல் ஏறக்குறைய 13½ மடங்காகிறது. ஆக மெகாத்தனி தந்துள்ள செய்தியும் நம்பத்தக்கதாகவே உள்ளது.    


[1] பின்னிணைப்பு 3 பார்க்க.

0 மறுமொழிகள்: