11.என் கேள்விக்கென்ன விடை?
அடுத்து நம் புவியியங்கியல் புலி பூமி –
ஓர் அறிமுகம் என்ற தலைப்பில்
எழுதுகிறார். கதிரவன், புவி உட்பட
கதிரவனின் கோள்களின் தோற்றம் பற்றிய இன்றைய கருத்து என்ற ஒரு தரப்புக்
கருத்திலிருந்து தொடங்கி வழக்கம் போல் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டினுள்
காலூன்றுகிறார். அதாவது புவியுடன் கதிரவ மண்டலத்தின் பிற
கோள்களின் உருவாக்கத்துக்கும் கதிரவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல்
அவை “வெடித்த விண்மீன் கூட்டத்தின் சிதறல்கள், ஈர்ப்பு சக்தியால் மெல்லத்திரண்டு ஒரு தீக்கோளமாக உருவாகின. விண்கற்களின் தாக்கம், சேர்க்கை, அணுக்கதிர் வீச்சு ஆகிய செயல்களால் வெம்மையடைந்திருந்த இக்கோளம், குளர்ந்து 12,600 கி.மீ.
விட்டமுடைய பூமியாக ஆனது. இது போலவேதான்
சூரிய மண்டலத்திரலுள்ள இதர கோள்களும் உருவாயின”. நீர்மக் குழம்பாயிருந்த புவி குளிர்ந்த போது
நியூட்டன் கூறியது போல் காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் போல் புவியின் மேலோடு மேடும்
பள்ளமுமாக உருவாக பள்ளங்களில் கடலும் மேடுகளில் நிலப்பரப்பும் உருவாயினவாம்.
ஆனால் எனக்கொரு ஐயம் கொதித்துக்கொண்டிருந்த குழம்பாக இருந்த புவியின்
புறத்தேயுள்ள விண்வெளியில் இருந்த மின்னணுக்கள் இணைந்து தீவளி(பிராணவாயு எனப்படும் உயிர்வளி), நீர்வளி(ஐட்ரசன்) ஆகியவை உருவாகி அவையும் இணைந்து நீராவியாகி
அதுவும் குளிர்ந்து மழையாகி புவியை நோக்கி வரவர புவிச்சூழலின் வெப்பம் அதை
மீண்டும் நீராவியாக்கி மேலே துரத்த அதில் தானும் கொஞ்சம் குளிர்வடைய ஒருவாறு ஒரு
கட்டத்தில் மழைநீர் புவியைத்தொட்டு குளிர்விக்கும் தன் பணியைத் தொடர்ந்து அதன்
மூலம் புவியின் மேலோடு உருவாகியிருக்கலாமல்லவா?
இன்றும் புவி
வெப்பமாதல் என்பதைக் காட்டி உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்குக்
கைகொடுக்கும்,
கதிரவனிலிருந்து இடைவிடாமல் வெளிப்படும், வெப்பம் மட்டும்
ஏன் நான் மேலே கூறியிருப்பது போன்ற ஒரு நிகழ்முறையில் குறையவில்லை? கதிரவனில் செயல்படும் இடைவிடாத அணுவெடிப்புகள்தாம் காரணம் என்பது நமக்குத்
தெரியும். அப்படியானால் இன்று கதிரவனைச் சுற்றி அதன் ஈர்ப்பு
விசையால் அதனைச் சுற்றிவரும் இன்றைய கோளங்கள் அவர் கூறுவது போல், ‘வெடித்த விண்மீன் கூட்டத்தின் சிதறல்கள்’, அப்படிச்
சிதறல்களாக இருக்கும் போதே ஏன் கதிரவனுடன் இணைந்துகொள்ளவில்லை? மிகுந்த தொலைவில் வேண்டிய ஈர்ப்பாற்றல் இல்லாமை காரணமாகலாம், அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் கூட்டணி “மவுசு”
போல். அப்படியானால், சிதறல்களாக
இருந்தவை ஒன்றோடொன்று இணைந்து சுற்றி இருந்த சிதறல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக
ஈர்க்க அந்தப் புது மொத்தைக்கு சிறிது சிறிதாக ஓர் ஈர்ப்பு விசை உருவாக அதற்கும்
கதிரவனின் ஈர்ப்பு விசைக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டு கதிரவன் தன்
அணுவுலையிலிருந்து புவிக்கு இடைவிடாது வெப்பத்தை வழங்கிவருகிறது என்று சொல்ல்லாமா?
ஆக, இப்படி தன்னந்தனியாக துறவு வாழ்க்கை
வாழ்ந்த கதிரவனுக்கு ஒரு குடும்பம் அமைந்துவிட்டது. அந்தக்
குடும்பமும் ஒரே நேரத்தில் உருவாகியிருக்க முடியாது இந்தக் கண்ணோட்டத்திலிருந்து
பார்த்தால். இந்தக் கேள்விக்கு நமக்கு விடையும் தேவையில்லை
நாம் எடுத்துக்கொண்ட நோக்கத்திலிருந்து பார்த்தால்.
இப்போது அவர் காட்டும் புவிக் கோளத்தினுள்
போவோம். மேலோடு எனப்படும், நிலப்பரப்பு,
கடலடித்தரை இரண்டையும் சேர்த்து ஏறக்குறைய 8 மைல்கள்
அதாவது 12.6 கிலோ மீற்றர்கள் ஆழம். அதற்கு
அடுத்து 100 கிலோமீற்றர் ஆழத்திலும்
250 கிலோமீற்றர் ஆழத்திலும் இரண்டு அடுக்குகளும் அவற்றுக்கும் கீழே
“இடைப்பட்ட பகுதி (வெப்பமான இளகிய பகுதி,
வெப்பச்சலனம் ஏற்படும் பகுதி)” என்று கொடுத்திருக்கிறார்.
அந்த 350 கி.மீ. என்ன வென்று தெரிவதற்காகவே இப்படத்தை வலைத்தளத்திலிருந்து எடுத்தேன்.
100 கிலோ மீற்றர், அதாவது 60 மைல் சராசரி கனமுள்ள பாறை அடுக்குக்குக் கீழே வலுவற்ற அடுக்கு என்ற பொருடள்படும்
700 கி.மீ. அதாவது
430 மைல்கள் கனமுள்ள
ஆத்தனோபியர்(asthenosphere) உள்ளது.
இது அழுத்தினால் வழியும் குழம்பு போன்றது. அதற்குக்
கீழே கீழ்ப் போர்வை(lower mantle) எனப் பொருள்படும் இறுக்கமான
களிம்பு போன்ற அடுக்கு உள்ளது. The Mystery of the Mantle of the Earth என்ற நூல் புவியின் போர்வை வழிந்தோடும் குழம்பு
போன்றதா அல்லது
களிம்பு போன்று சிறிது சிறிதாக இழிகின்ற ஒன்றா என்ற கேள்வியை உலகில் பல்வேறு இடங்களில்
நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களின் போது வெளிப்பட்ட பாறைக்குழம்புகளின் செயற்பாட்டின்
அடிப்படையில் எழுப்பியது. இப்போது இரண்டில் எது வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்று தோன்றுகிறது.
அது இப்போது இங்கு முகாமையல்ல. திருவாளர் செயகரனின்
குமரி நிலநீட்சி பக்கம் 86இல் தாளின் படம் போட்டு விளக்கியிருப்பது
போல் கீழே இருந்து மேல் நோக்கித் தள்ளுந்தோறும் இரண்டு பக்கங்களிலும் உள்ள தாளின் முனைகள்
நகர்வது போல் குமரிக் கடல் ஆகிய இந்து மாக்கடலில் எங்கே கண்டத்தட்டுகளின் வெடிப்பு
அல்லது சந்திப்பு இருக்கிறது? பக்.70இல்
உள்ள படத்தைப் பாருங்கள். ஆப்பிரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும்
இந்தோனேசியத் தீவுக்கூட்டத்துக்கும் இடைப்பட்ட ஒரு வெடிப்பு உள்ளது. அது தெற்கில் கிழக்கு நோக்கித் திரும்பி ஆத்திரேலியாவுக்குத் தெற்கே செல்லுகிறது.
ஆக இந்த வெடிப்பு ஆத்திரேலியாவை வடக்கு நோக்கி நகர்த்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இந்தோனேசியாவின் தெற்கு, மேற்கு எல்லைகளைத்
தொட்டு ஒரு கண்டத்தட்டு சந்திப்பு இருக்கிறதே அதிலிருந்து நான் மேலே குறிப்பிட்ட எந்தக்
குழம்பும் மேலேறி வந்து இந்தோனேசியாவை வடக்கிலும் கிழக்கிலும் நகர்த்தவில்லையே!
இங்கே திருவாளர் படம் போட்டுக்காட்டிய குழம்பு வெளிப்பட்டு கடலடித் தரையை
நகர்த்தும் நிகழ்முறை செயல்படவில்லையே! இங்குதானே அடியார்க்குநல்லார்
குறிப்பிடும் தென்பாலிமுகம் இருந்திருக்கிறது! அந்தப் பேரழிவுக்கு
அப்புறம் கீழேயிருந்து குழம்போ களிம்போ வெளிப்படவில்லையே. அது
போல்தானே
ஒரு புறம்
வட, தென்
அமெரிக்காக்களின் மேற்கு எல்லை நெடுகிலும் கிழக்குக் கோடியையும் இந்தியக் கண்டத்தட்டு
எல்லையில்
மேற்குக்கோடியையும் கொண்டுள்ள அமைதிவாரி(பசிபிக்)
கண்டத்தட்டை ஒட்டியும் குழம்போ களிம்போ மேலேறி வந்து அமெரிக்காவையோ இந்தோனேசியாவையோ
நகர்த்திச் செல்லவில்லையே ஏன்? இந்தக் கேள்வியை வாக்கினர் கொள்கையைத்
திறனாய்ந்தவர்கள் அல்லது குறை சொன்னவர்கள் எவராவது சுட்டிக்காட்டினார்களா என்பது எனக்குத்
தெரியவில்லை. நம் புவியியங்கியல் புலிக்குத் தெரிந்திருக்கலாம்.
ஆனால் இந்தக் கேள்வி நமக்குத் தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவே கண்டத்தட்டுகளைக்
காட்டுவதாக அவர் தந்துள்ள படம் இந்த இடத்தை ஒரு கோடியில் காட்டுவதாக உள்ளது.
மேலே முன் பக்கத்தில் நான் தந்துள்ளதைப் போன்ற, குமரி நிலநீட்சியின் 84ஆம்
பக்கத்தில் அவர் தந்துள்ள படத்தைப் பாருங்கள். அதே வேளையில் மேலே
பக், 70 உலகப் படத்தைப் பார்த்த உடன் நம் கவனத்துக்கு வருபவை,
இந்தக் கண்டத்தட்டு எல்லைகளிலிருந்து குழம்பு வெளிவந்து அவற்றை நகர்த்தவில்லை
என்பதோடு இந்தியக் கண்டத்தட்டு லாரேசியாவுடன் மோதி உலகிலேயே உயரமான இமய மலையையும் உலகிலேயே
உயரமான திபேத்து மேட்டு நிலத்தையும் உருவாக்கியிருப்பது போல் எதுவோ அமெரிக்காவின் மேற்கு
எல்லைகளில் மோதி அந்த எல்லை நெடுகிலும் உயரமான மலைத்தொடர்களை உருவாக்கியிருப்பது.
இது போன்ற ஒரு விரைவையும் ஆற்றலையும் மோதிய அந்தப் பொருளுக்குக் கொடுத்தது
எது? இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால் மேலே(பக்.79) நான் சுட்டியுள்ளது போல் கண்டத்தட்டுகளை ஒட்டுப்போட்டுக்காட்டியுள்ள
படங்களில் காணாமல் போயுள்ள நிலப்பரப்புகள் எங்கே போயுள்ளன என்பது தெரிந்துவிடும்.
அதே நேரத்தில் திருவாளர்
செயகரன் நாம் மேலே சுட்டியுள்ள இந்தோனேசியாவின் தெற்கு மேற்கு எல்லைகள் தொடங்கி இரண்டு
அமெரிக்காக்களின் மேற்கு எல்லை வரை இடைவிடாத எரிமலைச் சீற்றங்களும் நில நடுக்கங்களும்
தாக்கும் நெருப்பு வளையம் பற்றியும் கூறுகிறார். இங்கே ஒரு கண்டத்தட்டு
இன்னொரு கண்டத்தட்டின் கீழே சொருகிக்கொள்வதால் இந்த நிலநடுக்கங்களும் எரிமலைகளும் உருவாவதாகக்
கூறுகிறார். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இதில் புள்ளிகளால்
காட்டப்பட்டுள்ளது “நெருப்பு வளையம்”.
இங்கு அமைதிவாரி கண்டத்தட்டின் கிழக்குக் கோடியில், அதாவது அமெரிக்காவின் மேற்கு ஓரத்தில் நிலம் உயர்ந்து மலைத்தொடர்கள் உருவானது
போல் மேற்குக் கோடியாகிய இந்தோனேசிய – பாப்புவா நியூகினிய வட்டாரத்தில்
நிலம் எதுவும் உயரவில்லையே அது ஏன்? இங்கு ஒரு கண்டத்தட்டின்
அடியில் இன்னோரு கண்டத்தட்டு சொருகவில்லை மாறாக ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு கிடக்கின்றன
என்பது தெளிவாகிறது. அல்லது இந்தியத் தட்டு திருவாளர் செயகரன்
கூறுவதுபோல் அமைதிவாரித் தட்டின் அடியில் சொருகாமல் நேரே கீழே
இறங்கி ஆதனோபியரின் வெப்பத்தில்
உருகி அதனுடன் தொடர்ந்து கலந்து மறைந்துகொண்டிருக்க வேண்டும். இந்த நிகழ்முறையில்தான் அங்கு எரிமலைக் குமுறல்களும் புவி அதிர்ச்சிகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்க
வேண்டும். ஆக, ஆப்பிரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும்
இந்தோனேசியத் தீவுக்கூட்டத்துக்கும் இடைப்பட்ட வெடிப்பிலிருந்து வெளிப்படும் குழம்பு
கடலடித்தரையாக மாறி மீண்டும் இந்தோனேசியாவின் விளிம்பில் கீழிறங்கி குழம்பாக மீண்டும்
ஆதனோபியரில் கலந்து விடுகிறதா? அப்படியானால் முன்பு கடலில் மூழ்கிய
குமரிக் கண்ட நிலப்பகுதிகள் இப்போது ஆதனோபியரில் குழம்பாகக் கலந்திருக்குமோ?
குமரிக் கடல் பகுதியில் மேலே குறிப்பிட்டது போல் ஆப்பிரிக்காவுக்கும்
ஆத்திரேலியாவுக்கும இந்தோனேசியத் தீவுக்கூட்டத்துக்கும் இடையில் ஓரு வெடிப்பு இருப்பது
போல் இந்தோனேசியத் தீவுக் கூட்டத்துக்கும் அமெரிக்காக்களுக்கும் இடையில் அமைதிவாரியில்
வெடிப்பு எதுவும் இல்லையே, அப்படியிருக்க எந்த ஆற்றல் அமைதிவாரியின
எல்லைகளை “நெருப்பு வளையத்”தின் எல்லையாக்கி
உள்ளது?
அடுத்து கீழே தந்திருக்கும், கடலடி மலைத்தொடர்களைக் காட்டும் உலகப் படத்தைப் பாருங்கள்.
அமைதிவாரியின் நடுவில், கண்டத்தட்டு எல்லைக்குக்
குறுக்கே சின்னஞ்சிறு தீவுகளை உச்சியில் கொண்டு ஓடும், ஆங்காங்கு
இடை முறிந்து காணப்படும் ஒரு நீண்ட மலைத்தொடரையும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து
தெற்கு நோக்கிக் கிடக்கும் ஒப்பீட்டளவில குறுகிய மலைத்தொடரையும் வங்காள தேசத்திலிருந்து
தெற்கு நோக்கிக் கிடக்கும் ஓரளவு நீண்ட மலைத்தொடரையும் தவிர ஏறக்குறைய
அனைத்தும்
கண்டத்தட்டு வெடிப்புகளிலேயே அமைந்துள்ளன. அப்படியானால் மேற்கூறிய விதிவிலக்கான இவை மூன்றும்
கண்டத்தட்டு வெடிப்புகளிலிருந்து வெளிப்பட்ட குழம்பினால் உருவாயினவல்ல என்பதும் கடலினுள்
மூழுகியவை என்பதும் தெளிவாகிறது
அல்லவா? அத்துடன் “பனிப்பரப்புகளின் பளுவால் துருவப் பகுதிகளிலுள்ள நிலம் அழுந்திய நிலையில் உள்ளது.
உருகினால் அந்நிலம் உயரும். எடுத்துக்காட்டாக பால்டிக்
பகுதியில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பனிப்பரப்பு உருகியதால் நிலமட்டம்
உயர்ந்துள்ளது” என்று குமரி நிலநீட்சி பக்.
93இல் குறிப்பிட்டுள்ள திருவாளர் செயகரன் உயர்ந்த அளவு எவ்வளவு எனக் கூறவில்லை.
அதே வேளையில் நாம் மேலே பக்.14 இல் சுட்டியுள்ள
The Crust of the Earth என்ற நூலில் ஆர்தர் ஓம்சு என்பவர்
எழுதியுள்ள Interpretation of Nature என்ற தலைப்புள்ள
கட்டுரையில் (பக். 42 – 43) தந்துள்ள செய்தியைக்
கீழே தருகிறேன்:“குறிப்பிட்ட சில புவியியங்கியல் நிகழ்முறைகள் புவியின் கீழடுக்குகளின் ஆழத்தில் நிகழும் குழம்பின் பாய்தல்களால் மீட்க முடியாத அளவு மிகுந்த விரைவில் ஏற்கனவே இருக்கும் சமநிலை நிலைப்பைக் குலைக்கின்றன. எடுத்துக்காட்டாக, பனி ஊழியின் இறுதியில் ஏறக்குறைய இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்க பனிப்பாளங்கள் உருகத்தொடங்கிய போது இப்பகுதிகள் பனியின் மேபெரும் ஒரு பாரத்திலிருந்து விரைவாக விடுபட்டன. அதன் விளைவான மேலுந்தல்கள் இன்றுவரை தொடர்கின்றன. பின்லாந்து, காண்டினேவியா ஓரங்களில் மிகுந்த உயரத்துக்கு ஓங்கிய கடற்கரைகள் ஏற்கனவே ஏறக்குறைய தொள்ளாயிரம் அடிகள் உயர்ந்துள்ளதையும் இந்த மொத்த உயரத்தோடு ஒவ்வொரு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கும் போத்தினியா வளைகுடாவைச் சுற்றி ஒவ்வோர் அடி சேர்ந்துகொண்டிருப்பதையும் காட்டுகின்றன. இந்தப் பகுதி இன்னும் தன் சமநிலை நிலைப்புக்குத் திரும்பவில்லை, அது தன் சமநிலையை மீளப்பெறும் முன் இன்னும் ஓர் எழுநூறு அடிகள் உயர வேண்டுமென்று மதிப்பிட முடியும்”.
பனிச்சுமையை இழந்த பகுதி
25,000 ஆண்டுகளில் பின்லாந்து வட்டாரத்தில் 900 அடிகள் உயர்ந்ததென்றால் புவிமுனை(துருவ)ப் பகுதிகளில் இப்போது எஞ்சியிருப்பது
போக உருகிய பனிச்சுமை குறைந்ததால் இன்னும் கூடுதலாக உயர்ந்திருக்குமே. உயர்ந்ததற்கு ஈடுசெய்யவும் பனி உருகியதால் கடல் மட்டம் உயர்ந்ததால் கூடுதல்
கடல்நீர்ச் சுமையாகப் பெற்றதன் விளைவாகவும் நிலநடுக்கோட்டு வட்டாரத்தில் கடலடித்தரை
அதற்குக் கால் பகுதியாவது, அதாவது 225 அடிகள்(68
மீற்றர்கள்) தாழ்ந்திருக்க வேண்டாமா? அதனுடன் இவர்கள்
காட்டும் கடல் மட்ட வளைவின் படி (பக்.80) 12,000 ஆண்டுகளில் 70 மீற்றர்கள் அதாவது 230 அடிகள் ஆக மொத்தம் 455அடிகள்(158 மீற்றர்கள்)
நீர்மட்டம் உயர்ந்திருக்குமே!
புவி முழுவதும் சிமா எனும்
செறிவு மிக்க பாறை அடுக்கு சூழ்ந்துள்ளது. அதன் மீது நிலப்பரப்புகளில்
சியால் என்னும் செறிவு குறைந்த பாறைப் பரப்பு உள்ளது. பெரும்பாலான
கடலடித்தரையின் மேற்பகுதியில் பல்வேறு, குறிப்பாக உயிரியல் நடப்புகளால்
படிந்த செறிவு குறைந்த ஒரு மெல்லிய அடுக்கு உள்ளது. ஆனால் இந்தப்
பொது விதிக்கு மாறாக அட்லாண்டிக் கடலடித்தரை ஓரளவுக்கும் இந்தியக் கடலடித்தரை இன்னும்
கூடுதலாகவும் பரலுற்ற(crysteline) பசால்ற்று எனப்படும் சிமா அடுக்கு மீது கனத்த கிரானைட்டிலான சியால் அடுக்கு உள்ளது
(N.Gorsky என்பார் எழுதிய The Sea – Friend and
Foe என்ற நூல் பக். 32, Foreign Languages Publishing
House, Moscow, 1961). திருவாளர் செயகரன் தன் குமரி
நிலநீட்சி நூல் பக்.89இல் “பெர்மோ
– கார்போனிபெரசு காலத்திலிருந்த தென்னிந்திய நிலப்பரப்பு, பிற்காலத்தே இயற்கையின் சக்திகளால் வெகுவாக உயர்த்தப்பட்ட பகுதியாகும்”.
அந்த ‘இயற்கையின் சக்திகள்’ எவையெவை என்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்
அவற்றைச் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார். நான் சொல்கிறேன்.
மேலே 75, 79 ஆகிய பக்கங்களில் காட்டப்பட்டுள்ள உலகப் படங்களையும் பக். 60இல் தரப்பட்டுள்ள பாலித் தீவுப் படத்தையும் பாருங்கள். இவற்றிலெல்லாம் ஆத்திரேலியாவுக்கு வடக்கும் கிழக்கும் தாய்லாந்து ஒரு கோடி
என்றால் பிலிப்பைன்சு வட்டாரம் இன்னொரு கோடியாக நிலப்பரப்புகள் பல்வேறு அளவுகளைக் கொண்ட
தீவுகளாக உடைந்து சிதறிக்கிடக்கும் தோற்றம் தெரியவில்லையா? இதன்
காரணம் என்ன?
சாவகம் என்று
பண்டை இந்தியர் குறிப்பிட்ட சாவாத் தீவை(சாவகம் எனும் தமிழ்ச் சொல்லே அங்கு அடிக்கடி மனிதர்களின் சாவுக்குக்
காரணமான புவி அதிர்ச்சிகளாலும் அவற்றின் விளைவான ஓங்கலைகளாலம் மனிதர்கள் அடிக்கடி சாவதினால்தான்
உருவாகியிருக்குமோ?) ஒட்டி சாவா பள்ளம் எனப்படும் சுண்டாப்
பள்ளம் என்ற கடலடிப் பள்ளம் ஒன்று உள்ளது. அது
7725 மீற்றர்கள், அதாவது 25,344 அடிகள் ஆழமும் 2000 மைல்கள் நீளமும் உள்ளது.
இந்தப் பகுதியில் 2004இல் உருவான சுனாமி எனப்படும்
ஓங்கலையே தமிழகம் உட்பட மிக விரிவான பரப்புகளில் பேரழிவுகளை
விளைத்தது நமக்குத் தெரியும்.
இந்த ஓங்கலையின் பின்விளைவு இதை விடவும் அழிவுதரும்
நிலப்பெயர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று அஞ்சப்படுகிறது. (There is scientific evidence that the 2004 earthquake
activity in the area of the Java Trench could lead to further catastrophic
shifting within a relatively short period of time, perhaps less than a decade. –
Wikipedia,
the free encyclopedia.)
அடுத்து பிலிப்பைன்சு வட்டாரத்தில்,
அதற்கு அண்மையில் உலகின் மிக ஆழமான சியாலஞ்சர்(Challenger)
பள்ளம் எனும் கடலடிப் பள்ளம் உள்ளது.
இதை மரியானா பள்ளம் என்றும் கூறுவர். இதன் ஆழம் பற்றிய சிறு வேறுபாடுகளுடன் பல மதிப்பீடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் படி 36,037 அடிகள் அதாவது
6.825 மைல்கள் அல்லது 10,984 மீற்றர்கள்(10.984
கிலோ மீற்றர்கள்). இந்த ஆழம் கடல் மட்டத்தில் இருந்து
இமயமலையின் எவரற்று முனையின் உயரத்தை விட 7044 அடிகள்(1.334
மைல்கள், அதாவது 2147 மீற்றர்கள்(2.147
கி.மீ.க்கள்) கூடுதல். கடலடி மட்டத்தில் இதன் பரப்பு
67,940 இலிருந்து 1,29,000 சதுர மைல்கள் வரை மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பரப்புக்கு எடுத்துக்கொண்ட நிலம் பற்றிய மாறுபட்ட அணுகல்களால் இந்த வேறுபாடு
என்று தெரிகிறது.
இந்தப் பள்ளங்களின் உருவாக்கம் பற்றி புவியியங்கியலாளர்களால் விந்தையான ஒரு
விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது, இரு
கண்டத்தட்டுகள் ஒன்றையொன்று மோதிய போது இரண்டில் ஒன்று கீழ்நோக்கி இறங்க மற்றொன்று
அதன் உராய்வினால் மடிந்து முனை கீழ் நோக்கி இறங்க தரை மட்டத்தில் கொஞ்சமும் மேல் நோக்கி
கொஞ்சமும் உயர்வதால் உருவாகின்றனவாம். இதற்கு உள்வாங்கல்
(subduction) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இமயமலை உயர்ச்சியின் எடையை ஈடு செய்ய அதன் கீழ் புவிக்குழம்புக்குள் வேர்
என்ற என்ற ஒன்று மலையின் தொடர்ச்சியாக புவிக்குழம்பினுள் இறங்குகிறது என்கிறது புவியியங்கியல்.
அது போல் இந்தப் பள்ளங்களால் ஏற்படும் வெற்றிடத்தை
நிரப்ப புவியின் சமநிலைப் பராமரிப்பு விசைகள் எந்த விதமான எதிர் வினைகளைப் புரிகின்றன
என்று யாரும் எந்த விளக்கமும் கொடுத்ததாகத் தெரியவில்லை.
உலக கண்டத்தட்டுகளில் மிக
இளையது இந்தியக் கண்டத்தட்டு என்கிறார்கள். அது எளிதாக கீழ்நோக்கி
இறங்கியிருக்க முடியும், ஆனால் இதனோடு மோதிக்கொண்டிருக்கும் அதைவிட
முதிர்ந்த யூரோசியத்தட்டு அதிலும் இந்தப் பகுதியில் அது மிக ஒடுங்கிக் கிடக்கும் நிலையில்
அதுவும் கீழ் நோக்கி இறங்கி இந்தப் பள்ளத்தை உருவாக்கியிருக்கும் என்பது பொருந்தி வரவில்லை.
அது போல்தான் மரியானா பள்ளமும். பெரிய பரந்த அமைதிவாரி
கண்டத்தட்டு சின்னஞ்சிறு பிலிப்பைன்சு கண்டத்தட்டை நெருக்கி எளிதாக இமயமலையைப் போல
உயர்த்தியிருக்க முடியும். அது கீழ்நோக்கி இறங்கினால் சிறிதாகிய
பிலிப்பைன்சு தட்டு அதற்கு ஈடுகொடுத்து கீழ்நோக்கி பாய்த்தது என்று சொல்வது,
திருவாளர் செயகரன் சொற்களில் கூறுவதானால்,”அபத்தம்”.
இந்த இரண்டு பள்ளங்களின்
உருவாக்கத்தையும் வேறொரு வகையில் விளக்க முடியும் என நான் கருதுகிறேன். புவியின் மீது சிறிதும் பெரிதுமான விண்கற்கள் விழுந்துகொண்டேயிருப்பது எல்லோருக்கும்
தெரிந்த உண்மை. பாளையங்கோட்டைக்கு கிழக்கே தரிசாகப் போடப்பட்ட
நிலங்களில் மனைப்பிரிவு வாணிகம் செய்வோருக்காக நான் பணியாற்றியிருக்கிறேன்.
அங்கே சிறிது தொலைவிலிருந்து பார்க்கும் போது காய்ந்த மாட்டுச் சாணம் போல் பரவலாகக் காணக்கிடக்கும்
பொருளை நெருங்கிப் பார்த்தால் அது கொல்லங்கட்டி போல் தோற்றமளிக்கும். கொல்லங்கட்டி என்பது கொல்லர்களின் இரும்புப் பட்டறையில் திரளும் ஒரு கழிவு.
உருகிய இரும்பு கரித்துணுக்குகளுடனும் சாம்பலுடனும் குழிழிகள் வெடித்தாற் போன்ற குழிவுகளுடனும் உலையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது
அது. உண்மையில் நான் கண்ட பொருள் இரும்புக் கனிமம் என்று கூறுகிறார்கள்.
இது அந்த வட்டாரத்தில் பல இடங்களிலும் காணக்கிடைக்கும் என்கிறார்கள்.
இது விண்ணிலிருந்து விண்கள்களாகப் பொழிந்தவை என்றும் கூறுகின்றனர்.
இந்த வட்டாரத்தில் அமைந்திருந்த ஆதித்தநல்லூரில் வாழ்ந்த மக்கள் இயற்கையில்
நிலத்தின் மேற்பரப்பில் கிடைத்த இந்தக் கனிமத்திலிருந்துதான் இரும்பைப் பிரித்தெடுத்து
இரும்பு ஊழியை உலகுக்கு அளித்தார்கள் என்பது சிலரது கருத்து.
இப்படி 65 மில்லியன் அதாவது 6½ கோடி ஆண்டுகளுக்கும் முன் ஒரு வால்வெள்ளி
புவியைத் தாக்கியதால்தான் அரக்கப்பல்லி இனமாகிய டயனோசர்கள் அழிந்தன என்கின்றனர் புவியியங்கியலாளர்கள்.
230 அல்லது 250 மில்லியன், அதாவது 23 அல்லது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு வால்வெள்ளி உலகைத்தாக்கியுள்ளது
என்கிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிய உயிரினங்கள்தாம் திரிவாக்கம் பெற்று இன்றைய
உயிரினங்களாக மலர்ந்தன என்றும் கூறுகின்றனர்.
இப்படிப் பல கேள்விகள் எழுவதைப் பற்றி எதுவுமே கூறாமல் அவர் தன் காரியத்திலேயே
குறியாக அடுத்த அடியை எடுத்துவைக்கிறார். ஆனால் நாம் நமது தேடலைத் தொடர வேண்டியவர்களாக
உள்ளோம்.

அது மட்டுமல்ல மேலே, அமைதிவாரியில் உள்ள
20 கடலடிப் பள்ளங்களைக் காட்டும் படத்தைப் பாருங்கள். அவற்றில் 11 முதல் 15ஆம் எண்
வரையிலான பள்ளங்கள் நடுக்கடலில் உள்ளன, 16 முதல் 19 வரை உள்ளவை கண்டத்தட்டு வெடிப்பிலிருந்து
புவிக்குழம்பு வெளிப்படும் முகட்டிலேயே அமைந்துள்ளன. இங்கு தட்டு ஒன்றுள் ஒன்று சோருகுவது
எப்படி நிகழும்? ஆக இவை அனைத்தும் சாவா எனப்படும் சுண்டாப் பள்ளமும் ஓரு வால்வெள்ளித்
தாக்குதலின் விளைவு என்பது உறுதி.
இந்த மாபெரும் தாக்குதலால் அன்றார்ட்டிக்கா தட்டு
உடைந்து ஆத்திரேலியாவும் இந்தியாவும் ஒரு மொத்தையாகத் தனியாகப் பிரிந்து வடக்கு நோக்கி
நகர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு வடக்குப் பகுதிகளிலிருந்து இந்தியத்தட்டு வெடிப்புற்றுத்
தனியாகியுள்ளது. அத்துடன் புவிக்குழம்பில் அலைகளும் உருவாகியுள்ளன. அந்த அலைகளின் விளைவாய்
ஒரே நிலப்பரப்பாக இருந்த இந்திய ஆத்திரேலியத் தட்டு உடைந்து இந்தியா வடக்கு நோக்கி
நகர்ந்துள்ளது. நகரும் போது நாம் மேலே சுட்டியது போல் குழந்தைகளாக இருந்த கர்ணனும்
மோசேயும் வைக்கப்பட்ட கூடைகளைப் போலன்றி கடலினுள் அமுங்கியும்
கடலிலிருந்து மேலெழும்பியும் சென்றுள்ளது. அப்படிக் கடலில் அமுங்கியதுதான் 78 நூற்றாண்டுகளுக்கு
முந்திய முதற் கழகம் இருந்த பாண்டியனின் தென்மதுரையும் 49 நாடுகளும் தென்பாலிமுகம்
முதலியனவும்.
திருவாளர் செயகரன் தந்துள்ள தரவுகளிலிருந்து
மேலே 90ஆம் பக்கத்தில் நாம் எய்தியுள்ள முடிவின்படி திபேத்தை நோக்கி டெத்தீசுக் கடல்
எழும்பிவர வங்காளத்தில்
அது உடைத்துக்கொண்டு கடல் மட்டம் இறங்க அங்கு வந்த குமரிக்
கண்ட மக்கள் அவர்களுக்கு நாகரிகங்களைக் கற்றுத்தந்த காலம் 13½ கோடி ஆண்டுகளுக்கு
முன்னால். உலகப் படத்தை வரையும் அளவுக்கு அவர்கள் வளர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களது
மூல உயிரினம் வால்வெள்ளி விழுந்ததாகக் கூறப்படும் குறைந்தது 23 கோடி ஆண்டுகளுக்கு முன்
தொடங்கி இன்றைய மனித இனத்தை நோக்கிய திரிவாக்கத்தைத் தொடங்கியிருக்கலாம். காட் எலியட்
கூறியதாக திருவாளர் செயகரன் தன் நூலில் 52ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல்
மனித இனத் தோற்றம் 22½ கோடி ஆண்டுகள், இன்னும் தெளிவாக, 13½ - 22½ என்பது எவ்வளவு கச்சிதமாகப்
பொருந்திவருகிறது பாருங்கள். இவ்வளவு தெளிவான தரவுகளையும் தன் கையில் வைத்துக்கொண்டு
அவற்றைத் துண்டுதுண்டாக வெட்டி நூல் முழுவதும் கலைத்துப்போட்டு எல்லோரையும் எப்படி
ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள்!
லாரேசியாத் தட்டை நோக்கி புவிக்குழம்பின்
அலைகளால் தள்ளப்பட்ட குமரி(இந்திய)க் கண்டத்தட்டு நேராகச் செல்லவில்லை என்பது மட்டுமல்ல
அது 90° சுழன்றும் இருக்கிறது என்பதை தமிழ்நாட்டுப் பாடநூல்
நிறுவனம் வெளியிட்டுள்ள 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநுலில் இடம்பெற்றுள்ள பக்கத்தில்
தரப்பட்டுள்ள படம் காட்டுகிறது. ஆனால் இது ஒரு கருத்துவரைவுதானே ஒழிய இந் நிலப்பரப்பு
தொடக்கத்திலிருந்து ஒரே வடிவில் இருக்கவில்லை. ஆங்காங்கே ஒவ்வொரு நிலப்பகுதி கடலுக்குள்
முழுகியும் இன்னொரு பகுதி கடலிலிருந்து வெளிப்பட்டும், அதை நேரத்தில் சுழலில் அகப்பட்ட
பரிசல் போல் சுற்றிச் சுழன்றும் லாரேசியாவில் வந்து மோதியிருக்கிறது. அதில் தமிழர்களாகிய
நமக்குக் கிடைத்தது முதல் கடற்கோள் பற்றிய ஓரே பதிவுதான். இரண்டாம் கடற்கோள் சிறுகச்
சிறுக கடல் மட்டம் உயர உயர இறுதியில் ஓர் ஓங்கலையால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து
மக்கள் இன்றைய தமிழகத்துக்கு வந்தேறியதுன். மேலே குறிப்பிட்டது போல் பல்வேறு மூலங்களில்
வெவ்வேறு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்று கொள்ள வேண்டியுள்ளது.
குமரி மாக்கடல் கடலடித்தரை கண்டங்களுக்குரிய
செறிவு குறைந்த சியால் பாறையாகவும் தக்காணம் எனும் தென்னிந்திய நிலம் கடலடித்தரைக்குரிய
செறிவுமிக்க சிமா பாறையாகவும் உள்ளது என்று கூறினோம்(பக்.97 - 98 பார்க்க). அதனால்
தமிழகத்தின் தெற்கு மாவட்டக் கடற்கரைகளில் கடலுக்குள் நிலத்தை அடுத்து உருவாகும் சிப்பி
போன்ற அடுக்குகள் காணப்படுவதை வைத்து நிலம் உயரந்திருப்பதற்குத்தான் களத்தில் சான்று
இருக்கிறதே அன்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவது போல் கடலில் அமிழ்ந்ததற்குச் சான்றில்லை
என்று வாதிடுவர் சிலர். உண்மைதான் இந்த வட்டாரத்தில் நிலம் கடலடியிலிருந்து வெளிப்பட்டுத்தான்
இருக்கிறது, ஆனால் அது புவிக்குழம்பின் அலையின் விளைவாக நிலம் கடலடித்தரையாகக் கீழிறங்க
கடலடித்தரை மேலெழும்பியதன் வெளிப்பாடு என்பதுதான் உண்மை.
குமரி மாவட்டம் தென்தாமரைக் குளத்துக்கு
ஒரு வேலையாக நான் போயிருந்த போது தென்னந்தோப்பில் சிலர் குழி வெட்டி சிப்பிகள் எடுப்பதைப்
பார்த்தேன். ஒன்றிரண்டு அடிகளிலேயே தண்ணீர் ஊறும் அந்தக் குழிகளில் கொட்டிவைத்தாற்
போல் மண்ணுடன் கலந்து மண்ணைவிட மிக அதிக விகிதத்தில் சிப்பிகள் இருந்தன. அந்தக் குழி
ஒன்றில் இருவர் நின்றிருந்தனர். செம்முநத் திண்ணக்கம்(சிமென்றுக் கான்கிரீட்டு)ப் போட
சல்லியைச் சலிக்கப் பயன்படும் பூலாத்திக் கொடியால் பின்னப்பட்ட கூடையில் ஒருவர் மண்வெட்டியால்
மண்கலந்த சிப்பிகளைப் போட கூடையில் அதை வாங்கிக்கொண்ட மற்றவர் அதைத் தண்ணீரில் முக்கி
அலசி மண் அகன்ற பின் மேலே கூடையை தூக்க அதை வெளியே நிற்பவர் வாங்கித் தரையில்
கொட்டும் பணி நடந்தது. இந்தச் சிப்பியை நீற்றி(சுட்டு) வெள்ளை அடிக்கவும் கட்டடங்களில்
அலங்கார வேலைகள் செய்யவும் குமரி மாவட்டத்தில் பயன்படுத்தினார்கள். சுவர் கட்டும் சாந்து(கலவை)க்கு
கடற்கரையில் அலைகொண்டு சேர்க்கும் சிறிய சங்குகளைத் திரட்டி நீற்றி எடுத்தார்கள். மண்ணைத்
தோண்டி எடுத்த மேற்கூறிய சிப்பிப் படிவுகள் புவிக்குழம்பின் அலைவால் சிறிதாக உயர்ந்த
கடலடித்தரையில் ஒரு கட்டத்தில் உகந்த மட்டத்தில் உருவாகி அதிலிருந்து மேலே உயர்ந்த
போது படிவுகளாக மாறியவையாகும். நான் குறிப்பிட்ட தென்தாமரைகுளம் கடற்கரையிலிருந்து
ஒரு மைல் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1990களின் தொடக்கத்தில் திருச்செந்தூருக்கு
அருகிலுள்ள சீர்காட்சி என்ற ஊரில் ஒரு கட்டடப் பணிக்காக வாணம் தோண்டிய போது 5 அடி ஆழத்தில்
சிப்பிகள் தென்பட்டன. ஆனால் தொடர்ந்து தோண்டிய போது அது வெறும் சிப்பிகளின் அடுக்கல்ல
பாறையாக மாறிவிட்ட சிப்பிப்படிவு என்று தெரிந்தது. ஆக, குமரி மாவட்டக் கடற்கரை வட்டாரத்தில்
காணப்படும் சிப்பிகளின் படிவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி கடலிலிருந்து
வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அது போல் முன்பு கடற்கரையிலிருந்த, அந்த
வட்டாரத்திலிருக்கும் கொற்கை மணலூரும் சில மைல்கள் தொலைவுக்கு உள்வாங்கியிருக்கிறது.
அதே வேளையில் யுரேசியத் தட்டின் அடியில்
சொருகிய குமரிக் கண்டத்தட்டு அதனை உந்தித் தள்ளும் புவிக்குழம்பின் அழுத்ததால் மேலும்
மேலும் கீழ்நோக்கிச் செல்லச்செல்ல அதன் எடையை ஈடுசெய்ய இமய மலையும் அதைத் தொட்டுக்கிடக்கும்
திபேத்தும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்காக குமரிக் கடலடித்தரையிலிருக்கும் சியால்
அடுக்கு சிமா அடுக்கு வழியாக உறிஞ்சப்பட்டு இமயத்தின் வேர்ப்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
இந்த நிகழ்முறையை மேலே சுட்டப்பட்டுள்ள
The Crust of the Earth என்ற நூலின் பக்.41இல் இருக்கும் படம்
காட்டுகிறது. இவ்வாறு புவிக்குழம்பின் அலைவுகளால் நிலம் கடலாகவும் கடல் நிலமாகவும்
மாறிமாறி வடக்கு நோக்கி நகர நகர அவ்வப்போது திடீர் திடீரென நிலம் கடலுள் அமிழ்ந்து
மக்கள் அழிவதும் நிகழ்ந்ததால் மக்கள் படகுகளிலும் கப்பல்களிலும் வெளியேறி உலகின் பல்வேறு
பகுதிகளுக்கும் குடியேறி அங்கு தங்களுக்கென்று தனித்தனி நாகரிகங்களை அமைத்துக்கொண்டனர்.
பெரும்பாலான பழம் நாகரிகங்களில் தமிழர்களின் பண்பாட்டுத் தடங்களைக் காண முடிவது இதனால்தான்.
உலக அழிவுக் கதைகள் இவ்வாறான தப்பிப் பிழைத்த வரலாறுகளின் பதிவுகளாக இருக்க தமிழர்களின்
இந்தப் பதிவு காலத்தால் பிந்தியதாயினும் அடியார்க்குநல்லாரால் விளக்கம் பெறும் முதற்கடற்கோள்
பற்றிய பதிவு இன்றைய அறிவியலுக்கு மிகப் பொருந்தி வருகிறது.
அடுத்து ஆதிமனிதக்
குடியேற்றங்கள் என்ற தலைப்புக்குள் நுழைகிறார், திருவாளர் செயகரன். அந்த அழகையும் பார்த்துவிடுவோமே!
2 மறுமொழிகள்:
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
I would highly appreciate if you guide me through this.Thanks for the article…
Fluent English Speaking Centre
Best Coaching Centre for Spoken English
English Coaching Classes in Chennai
English Speaking Classes
English Speaking Classes in Chennai
English Speaking Classes in Karnataka
English Speaking Course in Bangalore
Spoken English Institutes in Chennai
Spoken English Institutions
Spoken English Training Institutes
Post a Comment