உப்பும் பருப்பும்10.உப்பும் பருப்பும்
            குமரி நிலநீட்சி பக். 67இல் ஒரு விந்தையைக் காட்டுகிறார் திருவாளர் செயகரன். “ஆத்திரேலியப் பழங்குடியினரின் கதையில் தம் முன்னோர் உலகின் மத்தியப் பகுதியில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுவது ஒரு சுவாரசியமான விசயம், ஏனெனில் இன்றைய மானிடவியல் கண்டுபிடிப்புகள் அவர்கள் மேற்கிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்ததைக் குறிப்பிடுகின்றன”, என்று ஒரு நூலையும் மேற்கோள் காட்டுகிறார். நம் கேள்வி ஆத்திரேலியப் பழங்குடியினர் உலகின் மத்தியப் பகுதி என்று எந்தத் தீசையைக் குறிப்பிடுகிறார்கள் என்று இவருக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அந்த திசையைக் குறிப்பிட்டு அவர்கள் காட்டிய திசை தப்பு, அவர்கள் மேற்கிலிருந்து வந்தார்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? மாறாக மத்தியஎன்பதற்கு எதிராக ஏதோ ஒரு திசையை ப்படி வைக்க முடியும்? இத்தனை எண்ணிக்கையில் மறுப்புகள் சொல்ல வேண்டும் என்று ஏதாவது வரையறை வைத்துக்கொண்டு உப்பென்று கேட்டால், பருப்பு இருக்கிறது என்று கூறுகிறாரா என்று ஐயமாக இருக்கிறது.

            அடுத்து அட்லாண்டிசு கண்டத்தை ஓர் அலசு அலசுகிறார் நம் புவியியங்கியல் புலி. அட்லாண்டிசைப் பற்றி முதன்முதலில் கூறியவர் பிளாட்டோ என்கிறார். பிளாட்டோ எழுதியவற்றில் முழுக் கற்பனை சாக்கிரட்டீசு எனப்படும் சோக்ரதர்[1]என்பது என் கருத்து. அப்படி எவராவது இருந்திருந்தாலும் அவர் மீது தன் கருத்துகளைச் சார்த்தி சோக்ரதர் கருத்துகளாக அவர் வெளியிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பிளாட்டோவின் குறிக்கோள் ஒரு பொறுப்புள்ள குடிமக்களாக ஏதன்சு மக்களை மேம்படுத்துவதுதான் என்பது அவரது படைப்புகளிலிருந்து நம்மால் புரிந்துகொள்ளத்தக்க உண்மை. அது போல் அவர் சுட்டிக்காட்டியுள்ள அட்லாண்டிசுக் கண்ட மக்களின் குமுக அமைப்பு அவர்களின் பருப்பொருள் மற்றும் நடத்தைப் பண்பாடுகள்(material and behaviourial culture) பற்றிய தன் விளக்கங்கள் ஏதென்சு மக்களிடையில் நல்ல  மேம்பாடுகளை ஏற்படுத்தலாம் என்று அவர் கருதியிருக்கிறார். அதே நேரத்தில் பிளாட்டோவின் அட்லாண்டிசுக் கோட்பாடுகளை மறுத்தவர் என்று திருவாளர் செயகரன் காட்டுபவரும் பிளாட்டோவின் மாணவர் என்று அறியப்படுபவரும் ஆன அரிட்டாட்டிலின் கண்ணோட்டம் பிளாட்டோவின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நகர அரசுகள் என்ற நிலையில் மக்களின் நேரடிப் பங்களிப்புள்ள ஒருவகையான மக்களாட்சியைக் கொண்டிருந்த நகர அரசுகளாகத் தனித்தனியாக இருந்த கிரேக்கத்தைப் போர்களின் மூலம் பேரரசாக மாற்றிய அலக்சாந்தரின் ஆசானான அரிட்டாட்டில் அந்த மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் அறிவுரையை அலக்சாந்தருக்கு வழங்கியவர் என்ற நிலையில் அட்லாண்டிசு மக்களின் உயர்ந்த பண்பாடு, குமுக அமைப்பு பற்றிய பிளாட்டோவின் கருத்துகளை மறுக்க முனைந்து அட்லாண்டிசு கண்டம் இருந்ததே கற்பனை என்ற எல்லைக்குப் போய்விட்டார் என்பதுதான் உண்மை.

            தன் நூலில் பக்கங்கள் 68 முதல் 72 வரை தனக்குத் தோதான சான்றுகளை வரிசைப் படுத்தி அட்லாண்டிசுக் கோட்பாடு நிலைக்கவில்லை என்ற அவரது கூற்று உண்மை அல்ல என்பதற்கு இன்றும் அப்பகுதியில் நண்ணில(மத்தியதரை)க் கடற்பகுதியிலும் பெயின் நாட்டை ஒட்டியும் வெளியிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. எனவே அட்சாண்டிசு எனும் கற்பனை போல் குமரிக் கண்டமும் கற்பனையே என்று காட்டுவதற்காக திருவாளர் செயகரன் கையாண்ட இந்த உத்தியும் பயனளிக்கவில்லை. ஆமாம், அட்லாண்டிசு கற்பனையாக இருந்துவிட்டுப் போகட்டுமே, அதனாலேயே குமரிக் கண்டக் கோட்பாடும் பொய்யாகி விடுமா என்ன?

            அப்புறம், ஒரு கண்டம் என்னுமளவுக்கு அது இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் விரிவான பரப்பு இல்லை என்பது இவரது ஒரு கூற்று. மேலே பக்கம் 75இல் உள்ள உலகப் படத்தில் வலப்பக்கம் ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் இடப்பக்கம் இரு அமெரிக்காக்களுக்கும் நடுவில் ஆத்திரேலியா அளவுக்கு ஒரு நிலப்பரப்பு இருக்க வாய்ப்பில்லையா என்ன? இதில் உண்மையான கேள்வி என்னவென்றால் புவிக்குழம்பினுள் நிலப்பகுதிகள் இறங்குமா இறங்காதா என்பதுதான். இமயமலை போன்று ஐந்து மைல்கள் (ஏறக்குறைய 8000 மீற்றர்கள்) உயரத்துக்கு ஒரு பெரும் மலைத்தொடருடன் சராசரி 4500 மீற்றர்கள் உயரமும் 25 இலக்கம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பும் உள்ள இமய மேட்டுநிலம் எஎனப்படும் திபேத்து மேட்டுநிலமும்(பீடபூமியும்) உயர முடியும் என்றால் குமரிக் கண்டம், அட்லாண்டிசு போன்று புவிப் பரப்புகள் புவிக் குழம்புக்குள் இறங்குவதும் இயலத்தக்கதே என்பதுதான் விடை. இமயமலை உயர்ந்ததில் குமரிக் கண்டப் பரப்பில் எந்த அளவு அதனுள் ஈர்க்கப்பட்டது என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டியிருக்கும் அல்லவா?

            திருவாளர் செயகரன் வழிகாட்ட நாம் அட்லாண்டிசு கண்டம் புதைந்ததாகக் கூறப்படும் செய்திக் களத்தினுள் நுழைந்தோம். அருமையான செய்திகள் கிடைத்தன. கிரேக்கர்களுக்கு முதன் முதல் விரிவான சட்டங்கள், குறிப்பாக நிலவுடைமைச் சட்டங்களை வகுத்தவர் சோலோன் எனப்படுபவர். கி.மு.640 முதல் 558 வரை வாழ்ந்தவர். கந்து வட்டிக்காரர்பளிடையில் சிக்கி தங்கள் நிலங்களில் அவ்வட்டிக்காரர்கள் தங்கள் அடையாளங்களான கொடிகளை நட்டுக் கொடுமைகள் புரிந்துகொண்டிருந்த காலத்தில அவற்றைப் பிடுங்கி எறிந்து பண்டைக் கிரேக்க உழவர்களின் நிலங்களை மீட்டவர்தான் சோலன் என்றும் படித்திருக்கிறேன். இவர்தான் அட்லாண்டிசு இருந்ததையும் அது மூழ்கியதையும் பற்றி எழுதியவராம். அதைப் படித்துத்தான் பிளாட்டோ அட்லாண்டிசு பற்றிய செய்திகளைப் பதிவுசெய்துள்ளார். சொலோன் எழுத்துகள் என்ற பெயரில் சில துணுக்குகள் தவிர வேறெதுவும் தற்போது கிடைக்கவில்லை என்கிறார்கள். பிளாட்டோ பிறந்தது கி.மு.428/27 எனவும் 424/23 எனவும் இரு ஆண்டுகள் குறிக்கப்படுகின்றன. இறந்தது 348/47.
 
            கிரேக்க வட்டாரத்தில் உள்ள நண்ணிலக் கடலில் இருக்கும் கிரேட்டா தீவு ஒப்பற்ற ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. கி.மு.16, அல்லது 17ஆம் நூற்றாண்டில் வெடித்துச் சிதறிய எரிமலையாலும் தொடர்ந்த சுனாமி எனும் ஓங்கலையாலும் அங்கிருந்த மினோவன் நாகரிகம் அழிந்தது என்று வரலாறு கூறுகிறது. இங்குதான் ஓமரின் இலியது காப்பியம் கூறும் டிராய் நகரம் இருந்திருக்கிறது. எலனின் கடத்தலே குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறி நண்ணிலக் கடற்கரையில் அசிரியாவில் குடியேறியவர்களும் தொல்லுலகின் மிகச்சிறந்த கடலோடிகளுமான பினீசியர்கள் நிகழ்த்திய ஒரு பெண்கடத்திலின் பழிவாங்கல் என்று புகழ்பெற்ற பண்டைக் கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோட்டசு கூறியுள்ளார். மினோவர்களும் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிப் பரவிய மக்களில் ஒரு பிரிவினர் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து. மீனவர்கள் என்பதன் திரிபே மினோவன் என்பது அவர்கள் கூற்று. இங்குள்ள நாகரிகத்தின் சிறப்பு அடையாளமாக குமரிக்கண்டத் தமிழர்களின் சிறப்பு விளையாட்டான bull leaping எனப்படும் ஏறுதழுவல் கூறப்படுகிறது. இந்த காலகட்டம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் இரண்டாம் கடற்கோள் காலத்துக்கு தற்செயலாக(?) ஒத்து வருகிறது. ஆனால் பிளாட்டோ கூறும் அட்லாண்டிசு நில அழிவோ அவர் காலத்துக்கு 9000 ஆண்டுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்.

            சோலோன் குறிப்புகளிலிருந்து, அட்லாண்டிசுக் கண்டம் நண்ணிலக்கடலிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுள் நுழையும் சிபரால்டர் நீரிணை(சலசந்தி)க்கு வெளியே இருக்கும் எரிக்குலிசுத்தூண்கள் எனப்படும் இரு தீவுகளுக்கு அப்பால் இருப்பதாக பிளாட்டோ கூறியிருக்கிறார். இந்த இரு தூண்களைப் பற்றிப் படிக்கும் போதே வேறு இரு தூண்களின் நினைவு நமக்கு வருகிறது, அதுதான் கில்காமேசு கதையில் வரும் உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவுக்குச் செல்லும் கடல்வழிப்பாதைக்கு இட்டுச் செல்லும் பெரும் கதவின் இருபுறமும் உள்ள மலைகளாலான தூண்கள். சோலோனின் குறிப்புகள் முழுமையாகக் கிடைக்காததாலும் மினோவன் நாகரிகத்தின் அழிவைப் பற்றிய மரபுச் செய்திகளாலும் எரிக்கிலிசுத் தூண்களுக்கு அப்பால் ஒரு பழம் நாகரிகம் இருந்து அழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளர் என்பதில் ஐயமில்லை.

            ஊத மறையின் நோவா, கில்காமேசு காப்பியத்தின் உட்நாப்பிட்டிம் மட்டுமல்ல சுமேரியாவின் சியுசுத்திரன், பாபிலோனியாவின் சிசுத்துரோசு போன்றோரும் ஊழி வெள்ளத்திலிருந்து தப்பியவர்களாக் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் திருவாளர் செயகரன் மினோவன் என்ற பெயரைக் குறிப்பிட்டு அம்மக்கள் எகிப்து மெசப்பொட்டோமியா ஆகிய பகுதிகளிலிருந்து பஞ்சம், போர்களால் இடம் பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். கி.மு.6000 ஆண்டிலிருந்து இந்த நாகரிகம் இருந்ததாகவும் கூறுகிறார்(பக்.70). எகிப்திய உயர் நாகரிகம் அங்குள்ள மூலக்குடிகளுக்கு உரியதல்ல, நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மக்கள் குடியேறிய பின் உருவானது என்பது வரலாற்றாசிரியர்கள் கருத்து. பாபிலோனிய, சுமேரிய நாகரிகங்களைப் பொறுத்த வரை அவை வந்தேறிகளால் புகுத்தப்பட்டவை என்பதற்கு அவற்றிலேயே மரபுகள் உள்ளன. ஆக இவையனைத்தும் எங்கிருந்து வந்தனவோ அவற்றோடு தொடர்புடையதே மினோவன் நாகரிகமும் என்பது வெளிப்படை.

கிரீட் தீவு எரிமலையாலும் நிலநடுக்கத்தாலும் ஓங்கலையாலும் அழிந்ததாகக் கூறும் திருவாளர் செயகரன் பொதுவாக இது போன்ற நில நடுக்கங்கள், ஓங்கலைகளால் மக்கள் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதான செய்திகளை இகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி நிலநீட்சி பக். 67இல்   இதோ அவர் தந்திருப்பதைப் படியுங்கள்:

ஒரு பெரிய கடற்கோள் அல்லது பிரளயம் பற்றிய ஐதிகம் பல சமூகங்களில் உள்ளன. ஆகவே உலக மக்கள் அனைவரும், மத்திய இடமொன்றிலிருந்து பரவியதற்கு முன் இக்கடற்கோள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு சாரரின் வாதம். இந்த வாதத்தின் தொடர்ச்சி அப்படி ஒரு இடத்தில் மானிடர் தோன்றி நாகரிகம் அடைந்திருந்தால் அது அட்லாண்டிசு, லெமூரியா அல்லது குமரிக் கண்டமாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பதாகும். ஆனால் உலக முழுவதும் உள்ள கடற்கோள் பற்றிய கதைகளைக் கவனித்தால், மனித குலம் தோன்றியது முதல் பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் கடற்கோள்கள், பிரளயங்கள் ஏற்பட்டன என்பதையே இவை காண்பிக்கின்றன. பிரளயத்துக்குத் தப்பிப் பிழைத்த முன்னோர்களின் அனுபவங்களை, நினைவுகளைச் சுற்றி சோடிக்கப்பட்ட, உலகின் வெவ்வேறு இடங்களில் உருவாகிய புராணங்களிலும் கதைகளிலும் ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். சிலவற்றில் பிரளயம் ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றியும் ஓரளவு அறியும் வாய்ப்புகள் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலகட்டங்களில், பல காரணங்களால்(பார்க்க: கடல் மட்ட மாற்றங்கள்) வெள்ளப்பெருக்குக்கு, கடற்கோள்கள் ஏற்பட்டன. உதாரணமாக சிலி நாட்டுக் கதை ஒன்று, எரிமலையாலும் அதைச் சார்ந்து உண்டான நில நடுக்கத்தாலும் உருவான கடற்கோள் பற்றிக் கூறுகிறது. அமெரிந்திய பிரளயக்கதை பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து பிரளயம் உண்டானதாகக் கூறுகிறது. அமெரிக்காவில் ஆதி மனிதக் குடியேற்றகள் பனிப்பரப்புகளின் எல்லைகளை ஒட்டி ஏற்பட்டன. எனவே இக்கதைகளில் பனிப்பரப்புகள் உருகியதால் ஏற்பட்ட பிரளயங்கள் சொல்லப்படுகின்றன”.             

            மேலே தரப்பட்டுள்ள செய்திகளில், ‘பிரளயத்துக்குத் தப்பிப்பிழைத்த முன்னோர்களின் அனுபவங்களை, நினைவுகளைச் சுற்றிச் சோடிக்கப்பட்ட………புராணங்களிலும் கதைகளிலும்என்று கூறுவதன் மூலம் மூலம் இவர் சொல்ல வருவதென்ன? இந்தக் கதைகளெல்லாம் கற்பனை என்கிறாரா, அல்லது கடல் மட்ட மாற்றங்கள் குறித்த படத்துக்கு (குமரி நிலநீட்சி பக். 120) நம்மைக் கோட்சுட்டுவதன் மூலம் கடல்மட்ட மாற்றங்களால்தான் அழிவுகள் நேர்ந்தன என்கிறாரா?

            மேற்கொண்டு செல்வதற்கு முன் அவர் சுட்டிய கடல் மட்டங்களைக் காட்டும் படத்தைப் பார்ப்போம். மேலே பக். 80 தரப்பட்டுள்ள படத்தின் இன்னொரு வடிவம் என்று இது கூறத்தக்கது. மேலேயுள்ள படம் ஆங்கிலத்தில் இருக்க இவரது படம் தமிழில் இருக்கிறது. நாம் தந்துள்ள படத்தின்(வளைவு curve என்போம்) தோற்றப்புள்ளி வலது பக்கம் என்றால் இவர் தந்திருக்கும் வளைவின் தோற்றப்புள்ளி இடது பக்கத்தில் உள்ளது. நாம் தந்துள்ள வளைவின் கிடப்பு அச்சு 24 ஆயிரம் ஆண்டுகளைக் காட்டுகிறதென்றால் இவர் தந்துள்ளது 20 ஆயிரம் ஆண்டுகளோடு நின்றுவிடுகிறது. நட்டுக்குத்து அச்சு நாம் தந்திருக்கும் படத்தில் மேலே 0 மீற்றரிலிருந்து தொடங்கி கீழே 140 மீற்றர் ஆழத்தில் முடிகிறதென்றால் திருவாளர் செயகரன் தந்துள்ள படத்தில் 0 சென்றி மீற்றரிலிருந்து தொடங்கி 140 சென்றி மீற்றரில் முடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் படத்தின் அடியில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பு, “இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் 120 மீ. தாழ்ந்திருந்த கடல்மட்டம்……” என்றவாறு செல்கிறது. ஆக, இந்தப் பேராய்வாளர் எதை எழுதுகிறோம் என்ற தெளிவே இல்லாத நிலையில் இந்த நூலை எழுதினாரா அல்லது அவர் எப்போதும் இப்படித்தான் எழுதுவாரா என்ற கேள்வி வருகிறது. இவரை நம்பி புத்தகம் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தார் திறமையானவர்கள்தான். ஒரு குப்பைத்தாள் தொகுப்பைப் புத்தகம் என்று அழகான அட்டையும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வோரையும் மறுப்போரையும் சுண்டியிழுக்கும் தலைப்பும் கவச்சியான அட்டையும் போட்டு இரு பதிப்புகள் வெளியிட்டு நல்ல காசும் பார்த்துவிட்டார்களே. இன்னொரு பக்கம் பார்த்தால் எழுதியதைச் சரிபார்க்கவோ பிழை திருத்தவோ நேரமில்லாத ஒரு நெருக்கடியில் இந்நூல் வெளியிடப்பட்டதோ, அப்படி நெருக்கியது எது, நெருக்கியவர் யார் என்றெல்லாம் விடை தெரியாத கேள்விகள் எழுகின்றன.

            இன்னொரு கொடுமை என்னவென்றால் இதிலுள்ள நுட்பமான செய்திகளைத் திறனாயவில்லை என்றாலும் இதில் இதுவரை நான் சுட்டிக்காட்டியுள்ள வெளிப்படையான முரண்பாடுகளைக் கூட இதுவரை சுட்டிக்காட்டவில்லை குமரிக்கண்டக் கோட்பாட்டு ஆர்வலர் எவரும் என்பதாகும். இது ஒட்டுமொத்தமாக தமிழ்ப் பற்றாளர்களிடமும் பிறரிடமும் உருவாகிவிட்ட மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

            திருவாளர் செயகரன் மேலே கூறியவற்றில் எரிமலைகளால் ஊழி அழிவுகள்(பிரளயங்கள்) உருவாகியுள்ளன, பனி மலைகள் திடீரென கடலினுள் வீழ்வதால் பேரலைகளால் அழிவுகள் நிகழ்த்துள்ளன, ஆனால் குமரிப் பெருங்கடலில் மட்டும் இவை எதுவும் நிகழவில்லை, பனிப் படர்ச்சி உருகி சிறிது சிறிதாகக் கடல் மட்டம் உயர்ந்ததுதான் நடந்தது என்பதை நோக்கித் தன் உரையை நகர்த்துகிறார் என்பது புரிகிறது. இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.[1]   சாக்ரடீசு இப்பெயரை சோக்ரதர் என்று தமிழ்ப் படுத்தியவர் இராசாசி எனப்படும் இராசகோபாலாச்சாரியார், சோக்ரதர் சம்வாதங்கள் என்ற நூலில்

0 மறுமொழிகள்: