இலெமுரியாவும் குமரிக்கண்டமும் - 19. இலெமூரியாவும் குமரிக் கண்டமும்.

            அடுத்து லெமுரியா கருத்தாக்கம் என்ற தலைப்பில் குமரிக் கண்டம் பற்றிய கருத்து தமிழகத்தில் நிலைத்த விதம் பற்றி ஆய்கிறார் திருவாளர் செயகரன். நக்கீரர் இறையனார் அகப்பொருள் உரையில் கூறியவற்றுக்கு மேல் எவரும் எதுவும் சொல்லவில்லை என்று தொடங்குகிறார். “…நக்கீரனார் தம் இறையனார் அகப்பொருளுரையில் குமரி எனும் நிலநீட்சியைப் பற்றி எழுதியதையே அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் எழுதியுள்ளனர்.” என்கிறார்(பக்.41). முதலில் இந்தக் கூற்று சரியா என்று பார்ப்போம்.

            தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇனார் பாண்டியர்கள். அவருள் தலைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருக வேளும் முரஞ்சியூர் முடிநாக ராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பதொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்ட எத்தனையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கம் இரீயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவருக்கு நூல் அகத்தியம்.

            இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியரும் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க்காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையும் என இத்தோடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழ மாலை அகவகலும் என இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும்  மாபுராணமும் இசை நுணுக்கமும் பூத புராணமுமென இவையென்ப. அவரைச் சங்கம் இரீஇனார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தெனப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது.

            இனி கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியரும் சேந்தம்பூதனாரும் அறிவுடையானாரும் பெருங்குன்றூர்க்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மருதனிளநாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமென்ப. அவர் சங்கம் இருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம் பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇனார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாய்ந்தது உத்தர மதுரை என்ப.”[1] இது நக்கீரர் கூற்று.

            இனி அடியார்க்குநல்லார் கூறுவதைக் காண்போம்:
            நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇனார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளோர் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர். பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇனான். அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்துக்கு வடவெல்லையாகிய பஃறுளியென் னுமாற்றிற்கும் குமரியென் னுமாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ்மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின் வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளஎன்பதனாலும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையாலும் உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையாலும் பிறவற்றாலும் பெறுதும்.”[2]   

            இப்போது நான் படிக்குநரைக் கேட்கிறேன், நக்கீரர் கூறியதையே அடியார்க்குநல்லார் அப்படியே கூறியுள்ளாரா? இவர் மூச்சுக்கு மூன்று முறை கூறும்குமரி நிலநீட்சிஎனும் சொற்கட்டை இவர்களில் எவராவது பயன்படுத்தியிருக்கிறாரா?

            நக்கீரர் ஓர் இலக்கணத்துக்கு உரை கூறுபவர் என்ற வகையில் முக் கழகங்களில் எழுதப்பட்ட நூல்கள், பாடியோர், தலைமையான புலவர்கள், வழிகாட்டிய இலக்கணங்கள் அரசர்கள் போன்றவற்றைக் கூறி கடற்கோளைப் பற்றி வெறும் குறிப்பு மட்டும் தந்துள்ளார். ஆனால் அடியார்க்கு நல்லார் இலக்கண நூல்களைப் பற்றி அதிகம் கூறாமல் கடல்கொண்ட நிலப்பகுதி பற்றி விரிவான செய்தியைத் தந்திருக்கிறார், ஏனென்றால் அவர் எடுத்துக்கொண்ட பொருள் தொடியோள் பௌவம் என்ற புவியியல் செய்தி பற்றி. திருவாளர் செயகரன் எடுத்துக்கொண்ட பொருளே கடல்கொண்ட நிலம் பற்றியது. புவியியங்கிலாளர் என்று பெருமை கூறிக்கொண்டு களத்திலிறங்கியிருக்கும் இவர் அடியார்க்குநல்லார் தரும் இச் செய்திகளில் வரும் நிலப்பரப்புகளைப் பற்றி எதுவும் சொல்லாமல் தப்பி ஓட ஏன் முயல்கிறார்? ஏதோ ஏழேழு 49 நாடுகள் எனபது 49 மாவட்டங்கள் அல்லது வட்டங்கள் அளவில்தான் இருக்கும் என்று ..அறவாணன் கூறியதைக் காட்டிவிட்டு ஏன் நழுவி ஓடப்பார்க்கிறார்? ஒருவர் சொன்னதைத்தான் மற்றவரும் சொன்னால்தான் என்ன? சொல்வதில் சரக்கிருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

            குமரி, கோடு என்ற சொற்களை வைத்துக்கொண்டு சோளத்தட்டையை வைத்துச் சொற்சிலம்பம் ஆடினாரே நம் புவியியங்கியல் புலி, மறைந்த நிலத்தின் ஓர் எல்லையாக பஃறுளியாற்றையும் இன்னோர் எல்லையாக குமரியாற்றையும் கூறிய அடியார்க்குநல்லார் தனியாக குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருப்பதையும் ஏதோ ஆய்வேட்டுக் குப்பைகளுக்குள் திட்டமிட்டு மறைத்துள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

மேலே குறிப்பிட்ட ஏழேழ் நாடுகள் கடலுள் முழுகிப்போய்விட்டன, சரி. அந்த வட்டாரத்தில் கடலாய்வு மேற்கொண்டால்தான் நாம் நம் பண்டை இலக்கியப் பதிவுகளின் உண்மைத் தன்மையை அறிய முடியும். அடியார்க்குநல்லார் குறிப்பிடும் கொல்லமும் குமரியும் கூட திருவாளர் செயகரன் மீண்டும் மீண்டும் கூறும்குமரி நிலநீட்சிஎல்லைக்குள் வரக்கூடும். ஆனால்தென்பாலிமுகம்என்ற ஒன்று வருகிறதே அதைப் பற்றி அவர் சிந்தித்தாரா? அது மட்டுமல்ல, “தென்பாலிமுகத்துக்கு வடவெல்லையாகிய பஃறுளியாறுஎன்று திட்டவட்டமாக அடியார்க்கு நல்லார் கூறியிருக்கிறாரே பஃறுளியாறு பற்றி மேலே எவரெவரையோ காட்டி வாதிட்டாரே இங்கே பஃறுளியாற்றின் கிடக்கையைப் பற்றிய தெளிவான புவியியல் செய்தி தரப்பட்டுள்ளதே அது இவரது பார்வையிலிருந்து எப்படி தப்பியது? அதைப் பற்றி ஒரு சொல் கூட அவரது எழுத்தில் வரவில்லையே, அது ஏன்?  ஒரு வேளை அது புவியியங்கியல் சார்ந்ததல்ல புவியியல் சார்ந்தது என்று விட்டிருப்பாரோ? இருக்காது, ஏனென்றால் அவர் இதுவரை புவியியங்கியல் குறித்து ஒரேயொரு சொல்கூட கூறியதாக எளிய என் சிந்தனைக்கு எட்டவில்லை. இந் நாளில் புதிதாக ஈட்டிய பணத்தை வருமானவரிக்கு அஞ்சி செலவழிக்க இருக்கும் வழிகளில் ஒன்றாக இருப்பதால் புதிதாக ஊர்ப்புறங்களில் எடுத்துக்கட்டப்படும் கோயில்கள் குடமுழுக்கு முதலியவற்றில் பல்லாயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு வாயில் வந்தவற்றை உரத்துக் கத்தும் பார்ப்பனப் பூசாரி கூறுவதைத் தலைதாழ்த்திக் கேட்டுக்கொள்வது போல் புவியியங்கியல் என்றால் உடனே அனைவரும் தலைதாழ்த்தி வணங்குவார் என்று நம்பிவிட்டார் போலும். எனக்கு தென்பாலிமுகம் பற்றிய நினைவு வந்ததும் இப்போது இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள பாலித்தீவு திடீரென நினைவு வந்தது. அண்மையில் நான் பெற்றிருந்த வலைதள இணைப்பு மூலமாகத் தேடினேன். நிலப் படத்தையும் பார்த்தேன். இந்திய நிலத்தட்டு இந்தேனேசியத் தீவுக்கூட்டத்தின் மேற்கு, தெற்கு ஆகிய எல்லைகள் வழியாகத்தான் செல்கிறது. அதாவது இந்தியத் தட்டு தாழ்ந்ததால் அதன் மீதிருந்த பாலியின் தென் பகுதியும் அதன் வடவெல்லையில் ஓடிய பஃறுளியாறும் கடலுள் அமிழ்திருக்கிறது, வடபகுதி எஞ்சி நின்று அடியார்க்குநல்லாருக்குச் சான்றளித்துக்கொண்டிருக்கிறது. ஆக, குமரிக் கண்டம் குறித்த நம் இலக்கியப் பதிவுகள் முதல்நிலை புவியியல் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. கண்டத்தட்டுகளின் எல்லைகள் பல காலங்களாகவே அனைவரும் அறிந்தவையே, தென்பாலிமுகம் என்ற குறிப்பும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அறிவியல் ஊழி என்று போற்றப்படும் தற்காலத்தில் இவற்றை இணைத்துப்பார்க்க வேண்டுமென்று யாருக்கும் தோன்றாதது எனக்குப் பெரு வியப்பாகவே உள்ளது.

ஏறக்குறைய 7550 ஆண்டுகளுக்கு முன்(கி.மு.5550) நிகழ்ந்த இந்த நிகழ்வின் புவியியல் துல்லியத்துடன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய சிலப்பதிகாரம் உரையில் அடியார்க்குநல்லார் தந்துள்ள இந்த நிகழ்வு, வந்தேறி பாண்டியர்களின் மறைப்பு முயற்சிகளையும் மீறி தமிழ்ப் புலவர் மரபினர் இச் செய்திகளைப் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளமையைப் புலப்படுத்துகிறது. அடியார்க்குநல்லாரையும் சேர்த்து அவர்களின் தாள்தொட்டு வாழ்த்துவோம்.

            பாலியைப் பற்றி இணையத்தில் தேடிய போது ஆதவன் என்பவர் அங்கு சுற்றுலா சென்ற போது இந்துத் தீவு என்ற தலைப்பில் பதிந்த இடுகை கிடைத்தது. என் கணினியில் சில கோளாறுகள் இருப்பதால் அப் பதிவில் காணப்படும் சுட்டிகளைத் திறக்க முடியாவிட்டாலும் கிடைத்த செய்திகள் மிக மிக மதிப்பு வாய்ந்தவை. “ஆங்கில நாட்கள் தவிர்த்து பாலியர்களுக்கென்றே தனித்த இரு நாட்காட்டிகள் உள்ளது, ஒன்று 210 நாட்கள் கொண்டதும், மற்றொன்று 365 நாட்கள் கொண்டதுமான நாட்காட்டிகள். மதம் மற்றும் சடங்குகளுக்கு, அறுவடைகள் தொடர்பில் 210 நாட்கள் கொண்ட (Pawukon) நாட்காட்டி உள்ளதுஎன்பது அவரது கூற்று. இந்தச் செய்தி நமக்கு மிகக் குறிதகவுள்ளது. இன்றைய வானியல் அடிப்படையில் சுக்கிரன் எனும் வெள்ளிக் கோள் கதிரவனை ஒரு முறை சுற்றி வரும் காலம் 224 சொச்சம் நாட்கள்.

             “….அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்துக்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும்…” என்று சிலப்பதிகாரம் வேனிற் காதையின் உரையில் கூறப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டால் இன்று காணப்படும் பாலித் தீவுக்குத் தெற்கில் அதன் தொடர்ச்சி இருந்து அது கடலால் கொள்ளப்பட்டது விளங்கும்.

            தேவர், அசுரர் என்ற பிரிவினரையும் அவர்களுக்கு அரச ஆசான்களாக முறையே வியாழனையும் வெள்ளியை(சுக்கிரனை)யும் பற்றியும் நம் தொன்மங்கள் கூறுகின்றன. உலகின் இரு பகுதிகளில், ஒருவேளை, முறையே மகரக் கோட்டுக்கு அருகில் ஒன்றும் நில நடுக்கோட்டுக்கு அருகில் இன்னொன்றும் இருந்த நிலப் பரப்புகளில் வாழ்ந்த மக்களை இது குறிக்கலாம்.

 அசுர குருவாக சுக்கிரனை, அதாவது வெள்ளியை நம் தொன்மங்கள் காட்டுவதை வைத்து இந்த முடிவுக்கு வந்திருந்தோம். அதற்குத் திட்டவட்டமான விளக்கத்தை பாலித்தீவில் கடைப்பிடிக்கப்படும் மரபு ஆண்டுமுறை தருகிறது. இந்த ஆண்டுமுறைப்படியான 210 நாட்களுக்கும் வெள்ளிக் கோள் கதிரவனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் 224 சொச்சம் நாட்களுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றேல் புவியிலிருந்து பார்க்கும் போது வெள்ளி கதிரவனை ஒரு முறை சுற்ற எடுத்துக்கொள்வதாகத் தோன்றும் நாட்களிலானதாக இருக்க வேண்டும், அன்றேல் தென்பாலிமுகத்தில் இந்த ஆண்டுமுறையை நிறுவிய காலத்தில் வெள்ளிக்கோள் கதிரவனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொண்ட காலமாக இருக்க வேண்டும். இந்த இரண்டாவது காரணம் சரியாக இருந்தால் இந்த ஆண்டுமுறை உருவாக்கப்பட்ட காலத்தைக் கணிக்க முடியும். வானியல், புவியியங்கியல்களில் உண்மையான புலமை பெற்ற குமரிக் கண்டக் கோட்பாட்டு ஆர்வலர்கள் இது குறித்து ஆய வேண்டும். நம் தொன்மங்களுக்குள் தொன்மை வரலாறு எவ்வாறு புதையுண்டு கிடக்கிறது என்பதற்கு இது அசைக்க முடியாத ஒரு சான்று.

இந்த ஆண்டுமுறைக்கும் நம்மிடையில் நிலவும் 365¼ நாட்களுடன் 60 ஆண்டுகளின் சுழற்சியைக் கொண்ட வாக்கிய ஐந்திறம் ஆண்டுமுறைக்கும் உள்ள ஓர் உறவு வியப்பளிக்கிறது. 365.25 x 60 = 21915, அதாவது 60 வாக்கிய ஆண்டுகள் ஏறக்குறைய 100 வெள்ளி ஆண்டுகளுக்கு 224.7 x 100 = 22417 இரண்டாண்டுகள் மிகுதியாக வருகின்றன. ஆனால் 210 நாட்களைக் கொண்ட இன்றைய பாலி ஆண்டுமுறையில் 21000 என்று பார்த்தால் பாலியாண்டுகள்ஆண்டுகள் குறைவாக வரும். ஆனால் வாக்கிய 60 ஆண்டுச் சுழற்சி வியாழக் கோளின் 5 சுற்றுகளுக்கு(வியாழோட்டங்கள்)ச் சமம் என்பதே ஒரு தோராயப்பாடுதான். ஒரு வியாழ வட்டம் 11.86 ஆண்டுகள் என்ற கணக்கில் 5 வட்டங்களுக்கு 59.3 ஆண்டுகள் ஆகின்றன. வானியல் நிகழ்வுகளின் அடிப்படையில் வகுத்த காலக்கணக்குகள் அனைத்துமே தோராயப்பாடுகள் என்பதற்கான கூடுதல் செய்திகளை 2008 பிப்ரவரி தமிழினி வெளிவந்த தமிழன் கண்ட ஆண்டு முறைகள் என்ற என் கட்டுரையில் காணலாம்.
      
இந்த ஆண்டு ஆவணி மாதம் 18 – 08 - 2015 செவ்வாய்க் கிழமை அன்று பிறந்தது. அன்றே பார்சிகளின் நவுரோசு ஆண்டு பிறப்பதாக தாளிகைச் செய்திகளின் மூலம் தெரிய வந்தது. அது பற்றி தேடிப்பார்த்ததில் வரும் ஆண்டுகளிலும் நவுரோசு ஆண்டுப்பிறப்பு இதே நாளிலேயே வருவது தெரிந்தது. பாரசீக ஆண்டுமுறையில் ஒன்று மேழ ஓரையில் கதிரவன் நுழையும் நாளில் தொடங்கி 30 நாட்கள் கொண்ட 12 மாதங்களுடன் ஆண்டின் இறுதியில் அல்லது நடுவில் 5 நாட்களைக் கொசுறாக வைப்பதாகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இன்னொன்று இந்தியாவின் பார்சிகள் கடைப்பிடிக்கும் நவுரோசு ஆண்டு. கதிரவன் மடங்கல்(சிம்ம) ஓரையில் இருக்கும் போது பிறக்கும் மாதமாகையால் சிம்மம் என்று கேரள மக்கள் அழைக்கும் ஆவணிப் பிறப்பன்று அந்த ஆண்டு பிறக்கிறது.

வெள்ளிக் கோளின் இயக்கத்தைப் பற்றிய செய்திகளைத் தேடிய போது கடந்த 400 ஆண்டுகளில் வெள்ளி 1631, 1761, 1874 ஆம் ஆண்டுகளில் கதிரவனின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குச் சென்று முறையே 1639, 1769, 1882 ஆண்டுகளில், ஒவ்வொரு முறையும் 8 ஆண்டுகளுக்குப் பின் திரும்பியுள்ளதை நோட்டமிட்டுள்ளனர். 2004ஆம் ஆண்டு சூன் 8 ஆம் நாள் கதிரவனைக் கடந்த வெள்ளி 2012 இல் மீண்டும் திரும்பியுள்ளது.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்
                                                சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
                                                காவிரிப் புதுநீர்….
என்ற சிலப்பதிகாரம் நாடுகாண் காதை வரிகள் குறிப்பிடும் வெள்ளியின் தென்புலப் படர்வுதான் இந்த 8 ஆண்டுகள். வெள்ளி கதிரவனைக் கடப்பதை கதிரவ வட்டத்தினுள் ஒரு புள்ளியாகக் கடந்து செல்வதைத் தொலைநோக்கி மூலம் பார்த்து அறிந்திருக்கின்றனர் இன்றைய வானியலாளர். ஆனால் சிலப்பதிகாரம் கையாண்டுள்ள சொற்கள் இன்னும் திட்டவட்டமாக வெள்ளியின் இயக்கத்தை தெறகு நோக்கி என்று நம் முன்னோர் அறிந்திருந்ததை ஐயந்திரிபறக் காட்டுகிறது. இந்தக் கால கட்டத்தில்(2004 – 2012) தமிழகத்திலும் சுற்றியுள்ள நிலப்பரப்புகளிலும் பதிவான மழைப்பொழிவுகளை ஆய்ந்து நம் முன்னோர்களின் வானிலை முன்கணிப்புகளின் நம்பகத் தன்மையை அறியலாம்.  

            பாலித் தீவு மக்களிடம் உணவில் விலக்கு எதுவும் கிடையாது என்றும் சில விழாக்களின் போது பன்றி, கோழி ஆகியவற்றின் பச்சைக் குருதியில் பழங்களை வெட்டிப்போட்டு உண்பார்களாம் என்கிறார் அவர். அத்துடன் பன்றி இறைச்சி அவர்களின் முதன்மையான உணவுகளில் ஒன்றாம் என்றும் கூறுகிறார். குமரி மாட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையிலிருந்த வாதையன் வழிபாட்டில் பன்றியின் வயிற்றைப் பிளந்து அதனுள் பேயன் பழம் என்று அழைக்கப்படும் நாடன் வாழைப்பழத்தை உரித்துப் போட்டு பன்றியின் ஈரலோடு சேர்த்து சாமியாடி உண்பதை சாதி வரலாறுகளின் ஒரு பதம்நாடார்களின் வரலாறு என்ற எனது நூலில் குறிப்பிட்டுள்ள செய்தியோடு ஒப்பிட்டுக் காண்க. தினமணி 19 – 08 – 2015 இதழில்சங்க்உணவுக்குத் தடைவருமா? என்ற கட்டுரையில்பன்றி, மாடு, கோழி ஆகியவற்றை பிரதான உணவாகக் கொள்ளும் மிலேச்சர்கள்என்று ஆர்.எசு.நாராயணன் கூறுவதில் அந்த மிலேச்சர்களில் தமிழர்களும் பாலித் தீவு இந்துக்களும் அடக்கமா? இன்று தமிழர்களின் முதன்மையான(பிரதான) உணவாக அது இல்லையே என்று கூறலாம். இந்திய உரூவாயையும் அமெரிக்க டாலரையும் சம மதிப்புள்ளவையாக மாற்றிவிடுங்கள். பன்றி, ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவை தமிழர்களின் மட்டுமல்ல இந்திய மக்களின் முதன்மை உணவுகளாகவும் அவர் குறிப்பிடும்மிலேச்சர்களின்பண்டிகைகளில் மட்டும் பயன்படும் ஆடம்பரச் சிறப்புணவுகளாகவும் மாறிவிடும். அந்த மிலேச்சர்களுக்கு சத்தும் சுவையுமுள்ள இவ் வுணவுகள் கொள்ளை மலிவாகக் கிடைக்கவேண்டுமென்றுதானே இவ் வுணவுகளுக்கெதிரான இந்தப் பரப்பல்களும் ஏற்றுமதிப் பரப்பல்களும் நாணய மதிப்பிறக்கமும் செய்கிறார்கள் இவர்கள்!

            ஐரோப்பியர்கள் மாட்டை உணவுக்காகவும் வேளாண்மைக்கும் பாரம் சுமக்கவும் வண்டி இழுக்கவும் குதிரையையும் பயன்படுத்தினர். நாமோ மாட்டையே இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தி மேட்டுக்குடியினருக்காக என்று மட்டும் குதிரையின் பயன்பாட்டைக் குறுக்கிக்கொண்டோம். அதனால் மாட்டிறைச்சிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. வேளாண்மை, வாணிகம் போன்றவற்றுக்கான உழைப்புக் கருவியாக மாடு மாறிவிட்ட காலத்துக்கு, வெறும் உணவுப் பண்டமாக இருந்த கட்டத்தில் உருவான மாட்டைத் தீக்கடவுளுக்குப் பலியிடும் மரபு பொருந்தாமல் போனதால் உருவான முரண்பாடு குமரிக் கண்ட காலத்திலேயே வேள்வி எதிர்ப்பாக உருவாகி மாட்டிறைச்சி உணவை அகற்றியது. பிற்பாடு வட இந்தியாவில் உருவான இதே வேள்வி எதிர்ப்பு, மாட்டிறைச்சி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து அகன்று உயிர்க்கொலை எதிர்ப்பு என்ற பகுத்தறிவுக்குப் பொருந்தாத பித்துக்குளிக் கோட்பாட்டுடன் அம்மண சமயத்தை உருவாக்கி இந்திய மக்களை உணவு குறித்த அளவிலான பகுத்தறிவை அகற்றியது. புல்லுணவாயினும் தவசங்கள் எனப்படும் பல்வேறு பயிர்களைக் கருநிலையிலேயே அழிப்பதும் கீரைகள் என்று உயிருள்ள நிலைத்திணைகளை உயிருடன் ஒடித்துச் சிதைப்பதும்தான் என்பது நம் பகுத்தறிவினுக்கு எட்டவில்லை. மத விதிகளை வெறியுடன் பின்பற்றுவோரான முகம்மதியர்களான அராபியர்கள் பாலைவனக் கப்பல்கள் எனப்படும் ஒட்டகங்களின் தேவை இன்று இல்லாமல் போனதும் அதனை உண்ணத் தொடங்கிய நிலையில் நம்மில் சில அரசியல் கயவாளிகள் மட்டுமே மாட்டிறைச்சி உணவுக்கெதிரான வெறியைச் சமய வெறியாக வளர்த்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டபடிமிலேச்சர்களுக்கு மலிவாக மாட்டுக்கறி கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் அதன் ஏற்றுமதி மூலம் இந்த அம்மண மார்வாரி, குசராத்தி தரகுக் கும்பல் ஆதாயத்தை அள்ளிக் குவிக்க வேண்டுமென்பதற்காகவும்தான் இந்த வெறியேற்றம். நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு மலிவாகக் கிடைக்கும் புரதச் சத்துணவான மாட்டிறைச்சியை நம் மக்களனைவரும் தாரளமாக உட்கொள்ள வேண்டும் என்பது நம் குறிகோள்களில் ஒன்று.
            பாலித்தீவு மக்களிடையில் நான்கு வருண முறை இருப்பதாக இவர் கூறுகிறார். பார்ப்பனர்கள் கோயில்களில் பூசைகள், குடும்ப நிகழ்வுகளில் புரோகிதம் செய்வோராகவும் மட்டும் வாழ்கின்றனராம். சத்திரியர்கள் என்ற நிலையில் நடுத்தர மக்களும் பெரும்பாலாரான உழைக்கும் மக்கள் சூத்திரர்களாகவும் இருப்பதாகவும் வழிகாட்டி கூறிய செய்திகளைக் காட்டிக் கூறுகிறார். ஆனால் இந்தியாவில் போல் அங்கு தீண்டாமை இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். வழிகாட்டி கூறியதைக் கூறி தன் சொந்தக் கருத்தையும் அவர் பதிந்துள்ளதைக் கீழே தருகிறேன்:

“’இந்தியாவில் இந்து மதத்திற்கும் எங்கள் மதத்திற்கும் நிறைய வேறுபாடுகள், நாங்களும் சாதிகளை பின்பற்றுகிறோம், ஆனால் இந்தியாவில் இருக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை)இதை சிலர் வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்கள், அட நாங்களே சாதிகளை ஒழிக்க இந்துத்துவாக்களிடம் முட்டிக் கொண்டு இருக்கிறோம், உங்களுக்கு அப்படி இல்லையேன்னு வருத்தமா? என்று நினைத்துக் கொண்டேன்) , நாங்கள் நான்கு அடுக்கு சாதி முறையை பின்பற்றுகிறோம் என்று கூறி நான்கு வருணங்களையும் அவற்றில் இருப்பவர்களின் வேலையையும் குறிப்பிட்டார்.

“’பிராமணர் உயர் வகுப்பு, அவர்கள்தான் எங்கள் கோவில்களில் சடங்குகளையும் எங்களது பிறப்பு, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளை செய்து தருவார்கள், ஆனால் இங்கு இந்தியாவில் இருக்கும் தீண்டாமை கிடையாது, நாங்கள் பிராமணர்க்களை மிகவும் மதிக்கிறோம்என்றார்.(இது போல் இந்தியாவிலும் இருந்தால் என்ன பிரச்சனை ஆகிடப் போகிறது? அது தவிர்த்து உயர் பதவிகள், அரசியல் பதவிகள் முதற்கொண்டு, நகரத்தில் நல்ல வருமானம் தரும் கழிவறையையும் குத்தகை எடுத்துக் கொண்டு, அனைத்து பணம் கொழிக்கும் தொழில்கள், பியூட்டி பார்லர் என நடத்திக் கொண்டு நாங்கள் பிராமணர் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டால் யார்தான் ஏற்பார்கள்? தவிர தீண்டாமைக்கு தூபமிட்டு கோவில்களின் கதவுகளை அடைத்துக் கொண்டு, நீ தீண்டத்தகாதவன், ஒதுக்கப்பட்டவன், சேரியில் வசிப்பவன் என்று தூற்றியதால் பலர் வேண்டாம்யா உங்க 'சோ கால்ட்' இந்து மதம் என்று ஓடிவிட்டார்கள).

மொழியைப் பொறுத்தவரை சமற்கிருதத்துக்கு நெருக்கமாகவே இங்குள்ள சொற்கள் காணப்படுகின்றனவேயன்றி தமிழுடன் தொடர்பு எதையும் காண முடியவில்லை”. மகன், மகள் என்பதற்கு புத்ர, புத்ரி ஆகிய சொற்கள் வழங்குவதைக் குறிப்பிடுகிறார்.

“Names for K'satria caste :
Anak Agung (male), Anak Agung Ayu or Anak Agung Istri (female)
Tjokorda, sometimes abbreviated as Tjok (male), Tjokorda Istri (male) . The word Agung means "great", or "prominent". The word Tjokorda is a conjunction of the Sanskrit words Tjoka and Dewa. It literally means the foot of the Gods, and is awarded to the highest members of the aristocracy. A typical name might be Anak Agung Rai, meaning a Ksatrya whose personal name means "The Great One". It is more difficult to differentiate sexes among the k'satrya people, though personal names often tell, like Putra, or Prince, for a boy, and Putri, or Princess, for a girl”.

தொன்மங்கள் குறிப்பிடும் அசுரர் என்ற வகுப்பு மக்களுக்குரிய ஆண்டுமுறையைக் கொண்டுள்ள பாலி மக்களிடையில் சத்திரியர்களுக்கு தேவா என்ற அடைமொழி மேன்மையைக் குறிப்பதாக ஆதவன் அவர்கள் கூறுவது, பாரசீகர்கள் தங்களை அசுரர்கள் என்றும் அவர்களால் வெல்லப்பட்டு தங்களது 23ஆம் மாநிலமாக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்ட சிந்துப் பகுதியின் மக்களை அவர்கள் மொழியில் அடிமைகள் என்று பொருள்படும் தேவர்கள் என்ற சொல்லால் குறிப்பிட்டதற்கு முரணாக இருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த மொழி வளர்ச்சியும் அதன் பின்னணியாக இடம் பெற்ற சிக்கலான புவியியல் நிகழ்வுகளும் மக்களின் இடப்பெயர்ச்சிகளையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். மகாபாரதம் காட்டும் அரச மரபுக்கும் தமிழ் மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களுக்கும் உள்ள உறவை புறநானுறு 2இல் முஞ்சியூர் முடிநாகராயர் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும் பதிற்றுப்பத்து பெருஞ்சோற்றுதியன் நெடுஞ்சேரலாதனின் கொடைத்திறனை கௌரவர் பக்கம் நின்று போரிட்டு இறந்தவனும் இடையெழுவள்ளல்களுள் ஒருவனுமான அக்குரனின் கொடைத்திறனோடு ஒப்பிடுவது போன்ற பண்டைப் பதிவுகள் இருந்தும்
                                    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
                                    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
                                    சேரன் …….
என்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளங்கோவடிகளே தங்கள் அரச மரபுக்கும் மகாபாரதம் கதைமாந்தருக்கும் இப்படி ஓர் உறவு இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றால், பிறர் அவ் வழியில் சிந்திப்பார்கள் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

            இன்றைய பாலி மட்டுமே இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில்இந்துக்கள் வாழும் தீவு என்ற உண்மையை அமுதன் சுட்டுகிறார். இந்தோனேசியாவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முகம்மதிய மதமாற்ற நிகழ்ச்சியின் போது இடம் பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் கலந்தவர்களே இன்றைய பாலித்தீவுஇந்துக்கள் என்ற வழிகாட்டியின் கூற்றுடன் இணையத்திலிருந்து தான் அறிந்த, கடந்த 2000 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த இரு வேறு குடியேற்றங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

            ஆனால் உரையாசிரியர்கள் குறிப்பிடும் பாலி இதுவல்ல. இந்தப் பாலியை கோட்சுட்டாக வைத்து அதற்குத் தெற்கே இருந்ததாகத் தாம் அறிந்த தென்பாலி முகம் என்பதையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏழேழ் என்ற ஏழு நாடுகள் தவிர்த்து இத் தென்பாலி முகத்தைத் தனித்துக் கூறியதன் காரணம் என்னவாக இருக்கும்? குமுக அமைப்பிலோ மக்களின் பேச்சு வழக்கிலோ இரு பகுதிகளுக்கும் வளர்ச்சி நிலைகளில் திட்டவட்டமான ஏற்றத்தாழ்வுகள் உருவாகியிருக்குமா? அவ்வாறு தோன்றிய வேறுபாடு பிற்காலத்து பாலி மொழி வளர்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்குமா? ஏழேழ் என்பது ஏழு மாதர்கள் அடிப்படையில் அமைந்த குக்குலங்களால் மக்கள் இனங்காணப்பட்ட நாடுகள் என்றிருந்த நிலையில் தென்பாலிமுகத்தில் அம் மக்கள் குக்குலப் பிரிவுகளை உடைத்து ஒரே மக்கள் தொகுதியினராக மேம்பட்ட ஒரு குமுக மட்டத்துக்கு உயர்ந்திருந்தனரா? இந்தக் கேள்விகள் ஒரு புறம்.

            குக்குலங்கள் உடைந்து மக்கள் நிலம் சார்ந்தவர்களாக ஓன்றுபட்டதைக் காட்டுவது தொல்காப்பியம் பொருளதிகார ஐந்திணைப் பகுப்பு. இன்றைய சாதி வரலாறுகள் ஒவ்வொன்றும் அந்தந்தச் சாதிகள் இந்த ஏழு பெண்களின் பிறங்கடைகள் என்று தங்களைக் குறிப்பிட்டுக்கொள்வதன் பொருள் இதுதான். இவ்வாறு குக்குலங்கள் ஒன்றுபடுவதற்கும் ஐந்திணைப் பகுப்புகள் மறைந்து நானில அரசுகள் உருவாவதற்கும் பின்னணியில் எத்தனையோ அகப் புற முரண்பாடுகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள், தொழில் புரட்சிகள், தொழில்நுட்பப் புரட்சிகள் அவற்றின் விளைவாக மக்களிடையில் ஏற்பட்ட உறவுகளில் மாற்றங்களும் புரட்சிகளும் என்று இவை அனைத்தும் மாபெரும் ஒரு நிலப் பரப்பில் வாழ்ந்த இந்த ஒட்டுமொத்த மக்களின் எண்ணற்ற பேச்சு வழக்குகளில் நடைபெற்ற மாற்றங்களும் புரட்சிகளும் என்ற முனையில் நம்மைக் கொண்டு நிறுத்துகின்றன. இவற்றில் உரையாசிரியர்கள் சுட்டும் அகத்தியமும் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வரைந்த அதங்கோட்டாசான் தரும் ஐந்திரம் அறிந்த தொல்காப்பியன்என்ற குறிப்பு ஆகியவையும் முறையே ஐந்நிலப் பூசகர்களின் ஆட்சியின் போது உருவான ஓர் இலக்கணத்தையும் இந்திரன் என்ற சொல்லால் குறிக்கப்படும் அரசர்களின் வலிமைக்கு அடிப்படையான எண்ணற்ற வளர்ச்சி நிலைகளின் அடிப்படையாகவும் அவற்றின் விளைவானவையுமான மொழிக்கூறுகளை வைத்து மக்களுக்கான ஒரு பொது மொழியும் பிற துறைகளுக்கான ஒரு மறை மொழியும் உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் கொண்ட ஐந்திரம் என்ற இலக்கணம் தோன்றியது என்று கொள்ளலாம்.

அறிவியல்தொழில்நுட்பச் சொற்களை மக்கள் வழக்கிலிருந்து அகற்றிமறைவானமொழியை உருவாக்கிய நம் பண்டையோரின் செயலுக்குத் தலைகீழாக, வடிவத்தில் வழக்குச் சொற்களாகவும் பொருளில் சராசரி குடிமக்கள் புரிந்துகொள்ள முடியாதவையுமாகியகலைச் சொற்களையும் பொதுவான அகராதியினுள் கொண்டுவந்துள்ள ஒரு நிகழ்வை ஓர் ஆங்கில அகராதியின் முன்னுரை சுட்டுகிறது. அதைப் பார்ப்போம்:

“…..அறிவியல்தொழில்நுட்பங்களில் புரட்சிகரமான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன, ஊடகங்களின் தாக்கத்தின் விளைவாக புதிய அறிவியல்தொழில்நுட்பக் கலைச் சொற்கள் சிறப்புத் துறைகள் சார்ந்தவர்களின் முற்றாதிக்கத்திலிருந்து விடுபட்டுள்ளன...”             

(There have been revolutionary developments in the sciences and technology, and the influence of mass media has made new scientific and technical terms no longer the monopoly of the specialist.) CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY – 1972.

அறிவியல்தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பொதுப் பாடத்திட்டத்தினுள் கொண்டுவந்துமறைப்பு எதுவும் இல்லாத ஓர் அறிவுச் சூழலை ஏற்படுத்தியதாலேயே, சமயத்தை அறிவியலின் பாதையில் குறுக்கிடாமல் ஒதுக்கி வைத்ததாலேயே, ஐரோப்பியரால் இன்று வரை முழு உலகத்தின் மீதும் பொருளியல்அரசியல்அறிவியல்தொழில்நுட்பவியல் - படையியல் அதிகாரத்தைச் செலுத்த முடிகிறது.

            ஓங்கலைப் பணியில் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்த காலத்தில் ஐந்திரம் குறித்த என் இந்த விளக்கத்தை அங்கிருந்த ஒரு சமற்கிருதக் கல்வியாளரிடம் கூறிய போது, ‘ஓகோ, அதனால்தான் இசை, நடனம் மட்டுமல்ல அனைத்து அறிவியல்துறை பண்டைச் சமற்கிருத நூல்களும் ஐந்திரத்தை முன்னுரைத்துத் தொடங்குகின்றனவோஎன்று கூறி வியந்தார். 

ஐந்திரமும் இப்போது கிடைக்கவில்லை.  சிலப்பதிகாரம் காடுகாண் காதையில்,
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
என்ற வரிகளில் நூல் திருமால் குன்றம் எனக் குறிப்பிடும் அழகர்மலையில் முன்பு இந்திரன் கோயில் இருந்தது என்ற செய்தி வெளிப்படுகிறது. இந்திரன் கோயிலில் இருந்த சுவடிகளை மலைப்பொந்துகளில் போட்டு மூடியிருக்கலாம் அங்கு திருமால் கோயிலை உருவாக்கிய முல்லை நிலத்தினர்.

இந்தச் செய்தியைக் கூறிய மாங்காட்டு மறையோனுக்கு மறுமொழியாக,
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
எனக் கவுந்தியடிகள் கூறுவதிலிருந்து அம்மணர்கள் ஐந்திரத்தைத் திருடி தங்கள் சமய மொழியாகிய பிராகிருதத்தில் எழுதப்பட்ட பரமாகமத்தில் மறைத்திருப்பார்களோ என்ற ஐயம் எமக்கு. இந்த நிகழ்வாய்ப்பை இதுவரை எவரும் ஆய்ந்ததாகத் தெரியவில்லை. அப்படியே ஆய்ந்தாலும் ஐந்திரத்தின் பொதுவான உள்ளடக்கத்தைத்தான் அறிய முடியுமேயன்றி அது எழுதப்பட்ட மொழியை அறிவது இயலாது என்றே தோன்றுகிறது.

            இரு வகை மொழிகளை உருவாக்க ஐந்திரம் வழிகாட்டியதும் அதில் பொது மக்களுக்கான மொழியாகிய தமிழைவிட மறைமொழிக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டிருப்பதும் தொல்காப்பியத்தில் தெளிவாகவே புலப்படுகிறது.

            மொழிக்கு முதல் வரும் எழுத்துகளில் யி, யீ, யெ, யே, வு, வூ, வொ, வோ ஆகியவற்றைத் தவிர்த்திருப்பது பகுத்தறிவுக்கு ஒத்ததுதான். உயிரெழுத்துகளான முறையே , , , , , , , ஆகியவை இருக்கும் போது அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தது சரிதான். (தினமணி நாளிதழின் உலகச் செய்திப் பக்கத்தின் பொறுப்பிலிருப்பவர் ஏமன் நாட்டை எப்போதும் யேமன் என்றே குறிப்பிடுவது அறியாமையாலா, தமிழைச் சிதைக்கும் நோக்கிலா என்பது தெரியவில்லை.) ஆனால் . , , , , ஆகிய எழுத்துக்களை ஒதுக்கியது ஏன்? , சை, சௌ ஆகியவற்றை விலக்கியது எந்த நோக்கத்தில்? மறைமொழிக்கு ஒரு முன்னுரிமையுடன் மக்கள் மொழியின் வீச்சைக் குறுக்கத்தான் என்ற உறுதியான விடை கிடைக்கிறது. இந்த இலக்கணத்தை ஏற்றுக்கொண்டு வள்ளுவர் சகடு என்பதை சாகாடு என்று கூறுகிறார் (பீலி பெய் சாகாடும் அச்சிறும்..). இளங்கோவடிகள் இந்த இலக்கணத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார். அது போலவே இன்று அறியப்படும் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் என்ற வருணமுறைக்கு முன்னர் அரசர், அந்தணர், வாணிகவேளாளர், பாணர்கூத்தர் என்றொரு வருண வரிசை இருந்ததென்று அழற்படு காதையின் மூலம் காட்டுகிறார்.

            கடற்கோள்கள் குறித்து உரையாசிரியர்கள் ஒருவர் கூறியதற்கு அப்பால் பிறர் செல்லவில்லை என்ற திருவாளர் செயகரனின் பொய்யைப் பொய்யாக்க முயன்றதில் தமிழர்களின் வரலாற்றில் இந்திய கண்டத்தட்டு இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் இன்றைய எல்லையில் முறிவுபட்டிருப்பதும் அதில் இருக்கும் பாலித்தீவின் தென்பகுதி இந்தியத்தட்டில் இருந்த குமரிக் கண்டத்தின் பிற பகுதிகளுடன் முழுகிப் போயிருப்பதும் அந்த நிகழ்முறையில் ஒரு முந்தியல் மொழி, வேத மொழி, பிராகிருதம், பாலி மொழி, அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம் என்ற இலக்கணங்கள், தமிழ்சமற்கிருதம் என்று திரிவாக்கம் பற்றி கூற முற்பட்டு சற்று விலகிச் சென்றதற்குப் பொறுத்தருள்வீராக.
 
தொடரும்.....

[1]   களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரனார் உரையும். வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை, 600 088, 2006. பக். 5 – 7.
[2]   ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டிந .மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  சென்னை 600 018, சூலை, 1999, பக். 196

0 மறுமொழிகள்: