இலெமுரியாவும் குமரிக் கண்டமும் - 2மேலே கூறியவாறு உரையாசிரியர்கள் ஒருவர் கூறியதற்கு அப்பால் இன்னொருவர் எதுவுமே கூறவில்லை என்று தெரிந்தே பொய் கூறிய புவியியங்கியலாளர் என்று அறிவிக்கப்பட்ட திருவாளர் செயகரன் மண்டையில் தென்பாலி என்ற சொல் உறைக்காமல் பொனது தற்செயலானதுதானா?  சென்ற இரண்டு நூற்றாண்டு குமரிக் கண்ட ஆர்வலர்களாகிய தமிழ் ஆய்வாளர்கள் பண்டை உரையாசிரியர் கூறியவற்றுக்கும் மேல்நாட்டு அறிஞர்கள் கூறியவற்றுக்கும் அப்பால் செல்லவே இல்லை என்ற உண்மையையும் சரியாகவே எடுத்துவைக்கும் அதே நேரத்தில் நம் புவியியங்கியல் புலி இதுவரை நாம் எடுத்துக்கொண்ட 41 பக்கங்களில்குமரி நிலநீட்சிஎன்ற ஒரு சொற்கட்டைத் தவிர தன் சொந்தக் கருத்தாக எதைக் கூறியிருக்கிறார்? எதுவுமே இல்லை. இப்போது லெமுரியா, குமரிக் கண்டம் குறித்து அதன் தமிழ் ஆர்வலர்கள் விதந்து கூறும் கருத்தாக்கங்கள் மேலை ஆய்வாளர்களிடையில் உருவான விதம் பற்றி, அதன் பின்னுள்ள அரசியல் பற்றிப் பேசவிருக்கிறார், பார்ப்போம்.

            உலகில் உயிர்களின் திரிவாக்கம் பற்றிய கோட்பாட்டை முழு வடிவில் முதலில் டார்வின்தான் முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வாளர்கள் தத்தம் கருதுகோள்களை ஒருவர் பின்னொருவராக வைத்தனர். அதனைப் படித்தறிந்த தமிழ் குமரிக் கண்ட ஆர்வலர்கள் அவற்றைத் தமிழர்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய, ஏற்கனவே இருந்த முக் கழகங்கள் பற்றிய பண்டை இலக்கியப் பதிவுகளில் பொருத்திப் பார்த்ததில் என்ன தவறு என்று நமக்குத் தெரியவில்லை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நால்வருணக் கோட்பாட்டால் பிளவுண்டு ஒரு சாரரை இன்னொரு சாரார் அடக்கி ஒடுக்குவதற்கோ அல்லது ஒடுக்கலிலிருந்து விடுபடுவதற்கோ போராடுவதும் அதற்காக வெளியிலிருந்து வருவோரின் காலைப் பிடித்து நாட்டை அவர்களிடையில் ஒப்படைக்கவோ தயங்காத மக்களாக மாறி சிறு சிறு அயல் குழுக்களுக்கெல்லைம் அடிமை செய்து இறுதியில் ஒருவர் நாட்டு மக்களை அடுத்தவர் மூக்கையும் காதையும் வெட்டித் தத்தமது அரசர்களுக்கு படைவீரர்கள் விடுத்துவைக்கும் இழிநிலையைத் தாண்டி விலங்குகள் நிலைக்கு இழிவதிலிருந்து தடுத்த ஐரோப்பியரின் வருகையின் பின்னணியில் எழுத்தறிவைப் பெறுவதற்குக் கூட அவர்களின் உதவி தேவைப்பட்டது. அப்படி இருக்க இங்குள்ளவர்கள் தாங்களாகவே ஆய்வு செய்யவில்லை என்ற மறைமுகமான குற்றச்சாட்டு பொருளற்றது. நாம் தொடக்கத்தில்(பக்.13 - 14) கூறியது போல் புவியியங்கியல் எனும் அறிவியலின் தொடக்கமே ஐரோப்பாவில் 18ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது, ஆனால், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவையில் முந்நீர் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் புவியியங்கியலின் அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து விளக்கம் கூறியிருந்தாலும் அதன் புவியியங்கியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு நிலையில் நாம் இல்லை. இன்று கூட ஓர் ஆய்வேட்டுக்கு முந்து நூல் மேற்கோள் காட்ட வேண்டுமென்று வலியுறுத்தி நம் பல்கலைக் கழகங்கள் மூலமான அமெரிக்கக் கெடுபிடிச் சூழலிலும் இந்திய அரசின் ஆள்வினையாளர்கள் அறிவியலின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் ஓர் போலி அரசியல் விடுதலையின் பின்னணியிலும், இங்குள்ள தமிழ் அறிஞர்கள் மட்டுமல்ல திருவாளர் செயகரன் உட்பட அனைவரும் தம் சொந்தக் கருத்தாக ஒன்றைச் சொல்லும் பயிற்சி இல்லாதவராகவே உள்ளனர். அதனால்தான் இந்தியாவிலிருந்துகொண்டே சி.வி.இராமன் நோபல் பரிசு பெறவும் உள்ளூர் பொறியாளரான விசுவேசுவரய்யா பல அணைகளைத் தானே வடிவமைத்துக் கட்டவும் இயலச் செய்த ஆங்கிலராட்சி முடிந்து 67 ஆண்டுகளில் இங்கு பிறந்த அறிவியல் மேதைகள் நாட்டை விட்டுத் துரத்தப்படவும் பெரும் கட்டுமானங்கள் வெளிநாடுகளுக்கு ஒப்படைக்கப்பட்டு ஆட்சியாளர் தரகு பெறவுமான சூழல் உருவாகியுள்ளது. இங்குள்ளமனித வளம்அமெரிக்காவுக்கு ஏற்றுமதி சேய்யப்பட்டு அது அங்கிருந்து நம் நாட்டை அமெரிக்காவுக்காக மேலைளுமை செய்கிறது.

            இந்தப் பின்னணியில் ஐரோப்பாவில் புவியியங்கியல், உயிர்களின் திரிவாக்கம், இடப்பெயர்ச்சி போன்ற துறைகளில் ஐரோப்பியர் படிப்படியாக முன்னேறியதைத் தடம்பிடிக்கிறார் திருவாளர் செயகரன். எந்த ஓர் ஆய்வாளரின் முடிவும் அவர் காலத்திலும் அடுத்து வருவோராலும் மறுக்கப்படாமலும் திறனாயப்படாமலும் இருந்ததில்லை. ஆனால் அதில் சிலவற்றை மட்டும் சொல்லிவிட்டு தனக்கு வேண்டிய கருத்துகளுக்கு இருக்கும் மறுப்புகளையும் திறனாய்வுகளையும் மறைக்கிறார் என்பதையும் இப்போதே கூறிவிடுகிறேன்.

            குமரிக் கண்டம் என்பதையும் லெமுரியாக் கண்டம் என்பதையும் ஒன்றாகவே கொள்ளும் போக்கு தமிழ் ஆர்வலர்களிடையில் உண்டு. இந்த லெமுரியாக் கண்டம் என்ற கருத்துருவை உருவாக்கியவர் செருமானிய ஆய்வாளரான எக்கேல் என்பவர். இவர் மனிதனின் மூதாதையர் என்ற கருத்தில் லெமூர் எனப்படும் தேவாங்கு தோற்றமுள்ள லெமூர் என்ற விலங்கிலிருந்து இன்றைய இந்தியக் கடல் இருக்கும் இடத்தில் இருந்த நிலப்பரப்பில்தான் மனிதன் தோன்றினான் என்று கூறினார். அவர்களிலிருந்து தோன்றிய, திரிவாக்கத்தில் உயர்ந்த கட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம் செருமானியர்கள் என்று கூறிவிட்டாராம். அது அவர் செய்த பெரும் குற்றம் என்று கூறுகிறார் திருவாளர் செயகரன்.

            அவர் அப்படிக் கூறியதில் என்ன குற்றம்? தன் நாட்டு மக்கள் பிறரிடமிருந்து மேம்பட்டவர்கள் என்றுதான் எந்ந ஒரு சராசரி மனிதனும் கூறுவான். எக்கேல் அறிவியலில் மேம்பட்டவராயிருந்தும் நாட்டுப்பற்றில் சராசரி மனிதராய் இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்னொன்று அன்றைய நிலையில் மட்டுமென்ன இன்றைய நிலையில் கூட தமிழர் என்ன இந்தியர், சீனர் என்று கீழை நாட்டினர் மேலை நாட்டினர்க்கு உட்பட்டுத்தானே வாழ்கின்றனர்?

            எக்கேலைத் தொடர்ந்து கிலேட்டர் என்பவர் இந்து மாக்கடல் பகுதியில் இருந்த பழந்தீவுக்கு லெமூரியா என்று பெயர் வைத்ததார் என்கிறார். அதே வேளையில் இன்றைய சாவா இருக்கும் இந்தோனேசியத் தீவுக்குக் கடற்படையை விடுத்துப் போர் புரிந்த இராசேந்திர சோழனின் மெய்சீர்த்தியில் அவன் கைப்பற்றிய இடங்களில் ஒன்றின் பெயர் இலாமுரி தேசம் என்றிருக்கிறது. அதற்கும் ஐரோப்பியர் வைத்த லெமூரியா என்பதற்கும் ஏதாவது தொடர்புண்டா என்பதை ஆய்ந்தறிய வேண்டியுள்ளது, ஏனென்றால் கோண்டுவானா என்று உடையாத உலக நிலப்பரப்புக்கு வைத்த பெயர் வட இந்தியாவில் வாழும் பழங்குடியினரான கோண்டுகளின் பெயர் அடிப்படையிலும் இருக்க வாய்ப்புள்ளது.

            இப்படித் தடம் பிடிக்கும் திருவாளர் செயகரன் லெமுரியாக் கண்டத்தைப் பற்றி தமிழ் ஆர்வலர்கள் மேற்கோள் காட்டுபவை இறையியல் கழகத்தார் எழுதியவையாகும் என்று தொடங்கி அந்த அமைப்பைப் பற்றிய விரிவான செய்திகளைக் கூறுகிறார். ஆனால் அந்த செய்திகள் உண்மையின் ஒரு பக்கத்தைத்தான் கூறுகின்றன. நாம் சற்று விரிவாகவே பார்ப்போம்.

            ஐரோப்பாவில் செருமானியர்கள் பிரசியப் பேரரசின் கீழும் சுற்றிலுமுள்ள நாடுகளிலும் சிதறிக்கிடந்தனர். பிரசியப் பேரரசு சிதைந்த சூழ்நிலையில் செருமன் மொழி பேசும் மக்களைக் கொண்ட பகுதிகளை அரும்பாடுபட்டு இணைத்து முழுமையான செருமனியை உருவாக்கினார் இளவரசர் பிம்மாக்கு என்பவர். அப்படி உருவாகிய புதிய நாட்டின் பல்வேறு பகுதி மக்களிடையில் உணர்வொன்றிய ஓர் ஒருமைப்பாடு இல்லை என்பதைக் கண்டு ஒரு வெளி எதிரியுடனான போர் அந்த உணர்வொன்றிய ஒற்றுமையை உருவாக்கும் என்ற கணிப்பில் ஒரு தூதுவனை ஒரு பணியைக் காட்டி அப்போது பிரான்சை ஆண்டுகொண்டிருந்த மூன்றாம் நெப்போலியன் அரசவைக்கு அனுப்பினார். மூன்றாம் நெப்போலியன் தன்னைப் பற்றிய அளவுக்கு மீறிய கற்பனையில் இருந்த ஒரு முட்டாள் என்பது வரலாற்றாசிரியர்களின் கணிப்பு. அவனை அவன் அரசவையிலேயே பிம்மாக்கின் தூதுவன் வேண்டுமென்றே இழிவுபடுத்தினான். அதனால் சீற்றமடைந்த நெப்போலியன் செருமனி மீது படையெடுக்க, அதை எதிர்கொள்ள செருமானியர்கள் வாழிட வேற்றுமைகளைக் கைவிட்டு ஒன்றிணைந்தனர் என்கிறது வரலாறு. இந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய நாடுகள் உலகில் நாடு பிடிக்கும் போட்டியில் இறுதியில் இங்கிலாந்தும் பிரான்சும் முகாமையான போட்டியாளர்களாகக் களத்தில் நின்றனர். இந்தப் போட்டியில் முதலிடம் பிடிப்பதற்காக பிரிட்டனின் தலைமையமைச்சராயிருந்த வில்லியம் பிட்டு என்பார் ஒரு தந்திரம் செய்தார். செருமனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான பழைய பகைமையைப் பயன்படுத்தி பிரான்சுக்கு எதிரான செய்திகளை செருமனிக்கு ஊட்டி கருத்துரைகளும் போர்க்கருவிகளும் பணமும் வழங்கி பிரான்சு மீது ஏவிவிட்டார். எனவே தாய்நாட்டைக் காக்க பிரான்சு உலகமெல்லாம் நாடுபிடிப்பதில் இங்கிலாந்தை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த தன் படைகளைத் தாய்நாட்டுக்கு அழைக்க வேண்டியதாயிற்று. ஆக, ஒருவழியாக பிரான்சு, செருமனிப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்த போது உலகம் முழுவதையும் இங்கிலாந்தும் பிரான்சும் சிற்சில சிறு நிலப்பரப்புகளைச் சின்னஞ்சிறிய நாடுகளும் பங்குபோட்டு முடித்திருந்தன. செருமனிக்கு எதுவும் மிஞ்சவில்லை. அப்போதுதான் பிரிட்டனால் மிக இழிவாக தான் வஞ்சித்து ஏமாற்றப்பட்டது செருமனிக்கு உறைத்தது. இந்த ஆத்திரம் அதன் குருதியில் நன்றாகவே ஊறியிருந்தது. அதுதான் மாக்சு முல்லரும் ஆரிய இனம் பற்றியும் செருமானியரின் உடற்கூறுகளையே ஆரியர்களின் உடற்கூறுகளாகவும் கூறி பின்னர் பின்வாங்கிக் கொண்டார். அதன் தொடர்ச்சியே செருமானியர்களால் தொடங்கப்பட்ட இரு உலகப் போர்களும் அவற்றின் விளைவாக இங்கிலாந்து தன் பேரரசுப் பெருமையை இழந்ததையும். செருமனி இரண்டாகப் பிளக்கப்பட்டாலும் இன்று தன் முழுமையை மீட்டுவிட்டதையும் காண்கிறோம்.

            அடுத்து இறையியல் கழகத்தைப் பார்ப்போம். துருக்கி காண்டாண்டிநோபிளைக் கைப்பற்றிவிட்ட படியால் இந்தியாவுடன் நண்ணில(மத்தியதரை)க் கடல்செங்கடல் வழியாக நடைபெற்ற வாணிகம் தடைபட்டதால் புதிய கடற்பாதைக்கான தேடலில் பெயின் நாட்டுக் கப்பல் மூலம் கொலம்பன் அமெரிக்காவைக் கண்டான், அடுத்து நன்னம்பிக்கை முனை வழியே ஆப்பிரிக்காவின் தென்கோடியைச் சுற்றிக் கேரளத்தை அடைந்தான் வாக்கோடகாமா. இப்படி தொடங்கிவைத்து தென்னமெரிக்காவைப் பிடித்துவிட்ட ஐபீரியத் தீவக்குறை நாடுகளான பெயினையும் போர்ச்சுக்கல்லையும் களத்திலிருந்து வெளியேற்றி பிரான்சும் பிரிட்டனும் இறங்கி வட அமெரிக்காவைப் பங்குபோட்டுக்கொண்டன. வட அமெரிக்காவில் எதிர்த்துப் போரிட்ட மூலக்குடி மக்களான செவ்விந்தியர்களை ஐரோப்பியர்கள் கொன்றொழித்தனர். தென்னமெரிக்காவைக் கைப்பற்றிய பெயின், போரச்சுக்கல் வந்தேறிகள் மூலக்குடிகள் தங்கள் பண்பாடுகளை ஏற்றுக்கொண்டால் சேர்த்துக்கொண்டனர், எதிர்த்தவர்களை ஒதுக்கி வைத்தனர்.

            வட அமெரிக்காவில் எல்லையற்ற வளமிக்க நிலத்தைக் கண்டனர். அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மனித வளத்துக்கு என்ன செய்வது? தாய்நாட்டில் கொலை, கொள்ளை வழிப்பறி, பரத்தைமை, ஏமாற்று போன்ற குற்றங்களைச் செய்து சிறைகளில் தண்டனை பெற்றுவந்தவர்கள் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொண்டால் விடுதலை செய்வதாக வாக்களித்து ஆயத்தமாக இருந்தோரை அமெரிக்காவில் குடியேற்றியது பிரிட்டன். அதுவும் போதாமல் ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களைக் கும்பல் கும்பலாகப் பிடித்துக்கொண்டுவந்து அடிமைகளாக்கியது. இப்படி அமெரிக்க மண்ணில் விளைந்த தவசங்கள் இங்கிலாந்து மக்களுக்குப் போதும் என்ற நிலையில் இங்கிலாந்தில் குத்தகை வேளாண்மையின் கீழ் இருந்த நிலங்களில் பயிரிட்டுக்கொண்டிருந்த உழவர்களைத் துரத்திவிட்டு வேலியிட்ட பெரும் பெரும் கம்பிளி ஆட்டுப்பண்ணைகளை உருவாக்கினர் அங்குள்ள பண்ணையார்கள். பிரிட்டனின் சுரண்டல் எல்லை மீறிய நிலையில் அமெரிக்காவில் உருவான தேசிய இயக்கம் போசுட்டன் தேனீர் விருந்துஎன்றறியப்படும், இங்கிலாந்துக்குத் தேயிலை ஏற்றிப் புறப்பட ஆயத்தமாக நின்ற கப்பலில் இருந்த தேயிலை முழுவதையும் கப்பலில் கொட்டியதிலிருந்து வெடித்தது. உழவராக இருந்த சியார்சு வாசிங்க்டன் தலைமையில் வெற்றிபெற்ற அமெரிக்க விடுதலைப் போராட்டம் பின்னர் வெவ்வேறு வட்டாரங்கள் தனியாட்சி அமைக்க முயன்ற போது மீண்டும் வாசிங்க்டனின் தலைமையில் ஒரு போரின் பின் அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் என்ற தன்னாட்சி உடைய மாநிலங்களின் கூட்டாட்சி என்ற அரசியலமைப்பின் மீது ஒரு நாடாக கட்டியெழுப்பப்பட்டது. ஐரோப்பாவில் உருவான அடிமை முறைக்கு எதிரான கோட்பாடுகளும் சட்டங்களும் அத்துடன் அமெரிக்க ஒன்றியத்தின் வட மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி படிவங்களின் உருவான தொழிலகச் சூழலில் கருப்பின அடிமைகளுக்கான தேவையைக் குறைத்தது. அதே வேளையில் பருத்தி, சணல், தேயிலை போன்ற வேளாண்மையை நம்பியிருந்த தென்மாநிலங்களில் இந்த அடிமை மறுப்புப் போக்கு எதிர்ப்பை உருவாக்கியது. அதனால் அவர்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவுசெய்தனர். அதை ஏதிர்த்துக் களம் இறங்கி அந்த முயற்சியை முறியடித்தார் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஆபிரகாம் லிங்கன். இவ்வாறு குறுகிய காலத்தில் வலிமை பெற்று வந்த அமெரிக்கா உலக வாணிகத்தில் பங்கேற்க முயன்றது இயல்பே. அதற்காக அது முதலில் சீனத்தைத் தேர்ந்தெடுத்தது.

            சீனம் மிகுந்த பரப்பையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட ஒரு நாடு. அது எண்ணற்ற சிற்றரசர்களால் ஆளப்பட்டுவந்தது. நாம் வினையாடும் காலத்தில் நடுவரசு வலுக்குன்றியிருந்தது. இந்தப் பின்னணியில் ஐரோப்பிய வாணிக நிறுவனங்கள் நடுவரசோடு ஒப்பந்தம் செய்து சிறப்புப் பொருளியல் மண்டலங்களை அமைத்தன. அவற்றுள் உள்நாட்டு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது, வாணிக நிறுவன நாடுகளின் சட்டங்கள்தாம் செல்லுபடியாகும். இந்தச் சூழலில் இந்த சிறப்புப் பொருளியல் மண்டலக் கோட்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா குரலெழுப்பியது. அனைவருக்கும் சீனத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாணிகம் செய்யும் உரிமை வேண்டும் என்ற திறந்த வாயில் கொள்கை(Open Door Policy)யைக் கேட்டுப் பெற்றுக்கொண்டது. சீனத்துக்கு தங்கள் கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியாக சப்பானையும் மிரட்டி அந் நாட்டுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டது. அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியாவாக இருந்தது. ஆனால் இந்தியா ஒட்டுமொத்தமாக பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. எனவே குறுக்கு வழிகளைச் சிந்தித்தது. பிரிட்டனின் ஆட்சிக் காலத்தில் இராசாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தர்களின் முயற்சிகளால், இந்தியக் குமுகத்தில் நிலவிய பல கொடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் கருத்துகள் உருவாக்கமும் அவற்றுக்கு ஈடுகட்டும் சட்ட நடைமுறைகளின் தோற்றமும் நிகழ்ந்துகொண்டிருந்தன. அது போல் முன்னாள் சென்னை மாகாணத்திலும் இந்து சமய சீர்திருத்த இயக்கங்களும் வருண முறை எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறுமண உரிமை வேண்டல் என்ற திசைகளில் நடைபோட்டுக்கொண்டிருந்தன. இதனால் பார்ப்பனர்களும் சாதி வெறியர்களும் மனம் கொதித்துப் போய் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைத் தன் நோக்கங்களுக்குப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதன் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் ஆல்காட் என்பவரும் பிளாவட்கி அம்மையார் என்பவரும் இணைந்து உருவாக்கிய பிரம்மஞான சபை (Theosophiccal Society) எனப்படும் இறையியல் கழகம். அமெரிக்காவில் 1875இல் தொடங்கப்பட்டு மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு அவர்களை யாரும் சீண்டவில்லை என்பதால் சென்னைக்கு மாற்றப்பட்டது. இங்கு பார்ப்பனர்களும் சாதிவெறியர்களும் அதனை மொய்த்துக்கொண்டனர்.

            இவர்களின் பரப்பல் என்னவென்றால் உலகில் உயர்ந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் ஆரியர்கள், அவர்களின் வேதங்கள் உலகில் தோன்றிய கோட்பாடுகள் அனைத்திலும் உயர்வானவற்றின் பதிவுகளைக் கொண்டுள்ளன, ஆரியர்கள் படையெடுத்து இந்தியாவினுள் புகுந்து தங்கள் நாகரிகத்தை நிலைநிறுத்தியுள்ளனர். ஆனால் தன் படை வலிமையால் இன்று இந்தியாவை ஆளும் ஆங்கில அரசு அந்த நாகரிகத்தை அழிக்கிறது என்பதாகும். அதாவது இந்தியாவில் ஆங்கிலராட்சிக்கு எதிராக வெறுப்பூட்டி அதன் மூலம் அமெரிக்காவுக்கு இந்திய மேட்டுக் குடியினரிடையில் பரிவுணர்வை உருவாக்குவதாகும். இந்த அமைப்பில் என்ன நடைபெறுகிறது என்பதை அறியத்தான் இந்திய அரசில் அதிகாரியாயிருந்து ஓய்வுபெற்ற இயூம் என்ற ஆங்கிலர் இதில் இணைந்து அங்கு ஆங்கிலருக்கு எதிரான பரப்பல் நடைபெறுவதைக் கண்டு பிளாவட்கி அம்மையார் ஓர் ஏமாற்றுக்காரர் என்று குற்றம் சாட்டி வெளியேறி இந்திய மக்கள், இங்குள்ள ஆங்கில ஊழியர்கள், ஆங்கில அரசு ஆகியவர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் இந்தியத் தேசியப் பேராயம்(காங்கிரசு) என்ற கட்சியைத் தொடங்கினார். அதே வேளையில் ஆங்கில அரசு அன்னி பெசன்று என்ற பெண்ணை இந்து இலக்கியங்களைப் படிக்க வைத்து அவரை முதலில் இறையியல் கழக உறுப்பினராக்கி, அடுத்து பிளாவட்கி இறந்தபின் கழகத்தின் தலைவியாக்கி தன் நலன்களை அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து காத்துக்கொண்டது.

            இருந்தாலும் அமெரிக்கா வாளாவிருக்கவில்லை. அனைத்துலகச் சமய மாநாடு என்ற பெயரில் ஒன்றை ஏற்பாடு செய்து சாதி வெறியரான இராமநாதபுரம் மன்னர் சேதுபதியை அழைத்தது. அவரோ தன்னைவிட பெரும் படிப்பாளியாக இருந்த விவேகானந்தரை விடுத்துவைத்தார். அவர் அங்கு உரையாற்றிய திறமையைப் பலவாறாக இங்குள்ளோர் புகழ்ந்தனர். அவர் வாழ்ந்த காலத்தில் இந்து சமயத்தின் சாதியத்தைச் சாடினார் என்பதற்காக ஒதுக்கிவைத்த சாதி வெறியர்கள் அவரது சாவுக்குப் பிறகு அவரையும் அவரது ஆசானாகக் கருதப்படும் இராமகிருட்டினரையும் அவரது மனைவி சாரதாவையும் சாதி வெறி அரசியலுக்கு அடையாளமாகக் கொண்டனர். இரா.சே. .(இராட்டிரிய சுயம் செவக் சங்கம்ஆர்.எசு.எசு.), இந்து மகாசபை ஆகியவற்றுடன் சனசங்கம் என்ற அரசியல் கட்சியையும் உருவாக்கினார்கள். இவர்களது செயற்பாடு பிரிட்டீசு அரசின் கையாளாகச் செயற்பட்ட காந்திக்குப் போட்டியாக அமெரிக்க எடுபிடிகளாகச் செயற்படுவதுதான். உள்நாட்டைப் பொறுத்தவரை இருவரும் பனியாபார்சிகளின் கையாட்கள் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

            1975இல் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்ற அலகபாத்து உயர் நயமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் நெருக்கடி நிலையை அறிவித்தார். அதை எதிர்த்துப் போராடிய செயப்பிரகாசு நாராயணன், மொரார்சி தேசாய் ஆகியோர் அடுத்த தேர்தலில் உருவாக்கிய கூட்டணியாகிய சனதா கட்சியில் சனசங்கமும் இணைந்தது. மொரார்சி தேசாய் அமெரிக்கா பக்கம் சாயாமல் ஐரோப்பா பக்கம் சாய்ந்ததால் அமெரிக்க சார்பு கட்சியாகிய மக்கள் நிகர்மை(பிரசா சோசலிச)க் கட்சியைச் சேர்ந்த இராசநாராயணனின் முயற்சியால் ஆட்சி கவிழ்ந்தது. இப்போது முன்னாள் சன சங்கத்தினர் பாரதீய சனதா என்ற பெயருடன் பிரிந்துசென்றனர்.

            1984இல் இந்திரா கொலையைத் தொடர்ந்து வீசிய பரிவு அலையில் அவரது மகன் இராசீவு காந்தி ஆட்சிக்கு வந்தார். அவரிடம் பண அமைச்சராக இருந்த வி.பி.சிங் இராசீவுக்கு நெருக்கமான புள்ளிகள் என்று பாராமல் பலர் மீது வருமான வரி தேடல்கள் நிகழ்த்தியதால் அவரைப் பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். அங்கேயும் காலங்காலமாக நிகழ்ந்த ஆயுதக் கொள்முதல் ஊழல்களை அவர் தேடித்துருவியதால் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். இப்போது மக்கள் விடுதலை இயக்கம்(சன் மோர்ச்சா) என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடங்கி அடித்தள மக்களிடமிருந்து ஓர் அரசியல் இயக்கத்தை உருவாக்கும் ஒப்பற்ற ஒரு திட்டத்துடன் களமிறங்கினார். இதைப் பொறுத்துக்கொள்வார்களா நம் பொதுமைத் தோழர்கள்? வழக்கமான திருதிராட்டிர அணைப்பில் அணுகி பாரதீய சனதா உள்பட ஒரு கூட்டணியை உருவாக்கி அவரைத் தலைமையமைச்சராக்கினர். பிற்பட்டோருக்கு நடுவரசுப் பணிகளில் ஒதுக்கீடு வழங்கும் மண்டல் ஆணையப் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுத்ததை எதிர்த்தும் பாபர் மசூதியை எதிர்த்து தேர் வலம் தொடங்கியும் பாரதீய சனதாவின் நடவடிக்கைகளின் பின்னணியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பேரவைக் கட்சியின் நிகர்மைக் குழுத் தலைவர் என்று அறியப்பட்ட சந்திரசேகர் என்பவர் தலைமையில் அமைந்த குழுவினர் உட்பட பலரும் காலைவாரிவிட பதவி விலகினார். இவ்வாறு நம் பொதுமை, நிகர்மைத் தோழர்களின் முழுமையான ஒத்துழைப்புடன்தான் அமெரிக்காவின் கள்ளப்பிள்ளையான பாரதீய சனதாக் கட்சி வளர்ந்தது.

            இந்தப் பின்னணியில் இறையியற் கழகத்தை உருவாக்கியவர்களுக்கும் அதற்கு கோட்பாட்டியல் வரலாற்றியல் பின்னணி வகுத்துக்கொடுத்தவர்களுக்கும் டார்வினாயினும் சரி எக்கேலாயினும் சரி புவியியங்கியல் அறிவியலின் பின்னணி தொடக்கமாக அமைந்திருக்கும். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை கடலினுள் நிலம் முழுகியமை பற்றிய செய்திகள் ஏற்கெனவே இலக்கியங்களிலும் மரபிலும் பதிவாகியுள்ளன. கில்காமேசுக் காப்பியம், யூத மறைநூல் ஆகியவை வெள்ளப் பெருக்குக்கு மழைப் பொழிவைக் காரணமாகக் காட்ட தமிழ் இலக்கியங்கள் கடலில் மூழ்குவதைப் பற்றியே குறிப்பிடுகின்றன. சமற்கிருத இலக்கியங்கள் ஊழி(பிரளயம்) பற்றி குறிப்பிடுகின்றன. இந்த வகையில் நம் பண்டை மக்களுக்குக் கடற்கோள் பற்றிய குழப்பம் எதுவும் இருந்ததில்லை. ஐரோப்பியர்களுக்கும் அவர்களின் வழிகாட்டலில் கற்றதாக நம்பும் வெறும் எழுத்தறிவைக் கல்வி என்ற பெயரில் கற்கும் தற்காலத் தமிழர், இந்தியர்களுக்குதாம் குழப்பம்.

            எக்கேலும் சிலேட்டரும் உருவாக்கிய இலெமுரியாக் கண்டக் கோட்பாட்டினுள் இறையியல் கழகத்தினர் உயிர்களின் தோற்றம் பற்றிய கற்பனைகளைப் புகுத்தினர்(காட்டு எலியட்டு என்பவர்) என்கிறார் திருவாளர் செயகரன். அதற்கு நாமென்ன செய்ய? அந்தக் கற்பனைகளைப் கா.அப்பாத்துரையார் பெயர்த்துத் தந்தாலும் தமிழ் இலக்கிய மரபில் வரும் கடற்கோளுக்கு அறிவியல் சான்றாக அவற்றிலுள்ள புவியியங்கியல் செய்திகளை மட்டுமே கொண்டோம். தமிழகத்தில் இன்றும் குண்டியிலிருந்து ஆற்றலை உருவாக்கிக் கடவுளாகிவிடலாம் என்று சிலர் நம்புவதற்கு என்னையோ திருவாளர் செயகரனையோ குறை சொல்ல முடியுமா? ஒரு வேளை திருவாளர் செயகரன் அதை நம்புவாரென்றால் அவர் அப்பாத்துரையார் பெயர்த்துத் தந்ததை நம்புவோரைக் குறை சொல்லக் கூடுமோ?

            இனி, பக்கம் 45இல் ஓர் விந்தை இடம் பெற்றுள்ளது: இவர்களில் ஒருவர்தான், குமரிக்கண்டம் கருத்தாக்கத்தின் ஆர்வலர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் காட்டு எலியட்டு. 1904இல் அவர் எழுதிய மறைந்த லெமுரியா(The Lost Lemuria) என்ற நூல் மனித இனத்தின் ஐந்து மில்லியன் ஆண்டு வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சியாகும். மனித குலம் தோன்றியே ஒன்றரை மில்லியன் ஆண்டுகள்தான் ஆயின என்று அறியும் போது எலியட் கூற்று எவ்வளவு ஆதாரமற்றது என்பது விளங்கும். இதை எண் (1) எனக் குறித்துக்கொள்ளுங்கள். பக். 17இல், ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர் தோன்றிய பின்னர், இதை எண் (2) என்று குறித்துக்கொள்ளுங்கள். பக். 47இல், மனிதயினம் தோன்றியதோ இன்றைக்கு சுமார் 5லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், இதை எண் (3)என்று குறித்துக்கொள்ளுங்கள். பக. 59இல், இது நடந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது, இதை எண் (4) என்று குறித்துக்கொள்ளுங்கள். ஒரு நூலில் அதன் ஆசிரியர் மனிதன் தோன்றிய காலமாக 50 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து 50 இலக்கம்(135 – 130 மில்லியன்)  ஆண்டுகள் வரை வெவ்வேறிடங்களில் கூறியுள்ளதைக் கண்டுகொள்ளாமல், ஆகா, ஓகோ அருமையான அறிவியல் அணுகல், இதன் மூலம் குமரிக் கண்டக் கோட்பாட்டினரின் முகமூடிகளைக் கிழித்தெறிந்துவிட்டார் என்று ஒரு கூட்டம் குதிபோடுகிறது. மிக நுட்பமான திறனாய்வாளர் செயமோகன் கூட இந்த நூலைப் படித்துவிட்டு, குமரிக் கண்டக் கோட்பாடு இல்லாமல் இந்தியப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அது அறிவியலில் மெய்ப்பிக்கப்படவில்லை என்பதை செயகரனின் குமரி நிலநீட்சி காட்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது. மில்லியன் என்பதன் பொருள் நமக்கு மறந்துபோய்விட்டதோ என்ற ஐயுறவில் அகராதியையும் பார்த்துவிட்டேன். கொடுக்கும் எண்களில் சிறு ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், அதற்காக இப்படி 100 மடங்கா? என்னையா இது கொடுமை?
             இன்றிருக்கும் பாலித்தீவுடனும் அதைத்தொட்டுக்கிடக்க வாய்ப்புள்ளதாகிய அடியார்க்குநல்லார் காட்டும் தென்பாலிமுகத்தையும்(முகம் எனும் பின்னொட்டைக் காண்க. அதாவது இன்று எஞ்சிக் கிடக்கும் பாலித்தீவின் தொடர்ச்சியும் அதன் தென் முனையும் என்பதை இது காட்டுகிறது. பாலி என்னும் முழு நிலப்பரப்பும் கடற்கோளுக்கு முன்பு தீவாக இருந்திருக்க வாய்ப்பில்லை, எஞ்சிய இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தோடு ஒரே நிலப்பரப்பாக இருந்திருப்பதற்கு வாய்ப்புகள் மிகுதி)  இவ்விரண்டுக்கும் இடையே இந்தியக் கண்டத்தட்டின் எல்லை இருப்பதையும் அறியும் வாய்ப்புடைய புவியியங்கியல் துறை அறிவுடையவராக அறியப்படும் திருவாளர் செயகரன் க். 48 முதல் 55 வரை ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் காட்டப்பட்டதும் அதன் முன்னும் பின்னும் பல்வேறு ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டவையுமாகிய குமரிக் கண்ட வரைபடங்களைக் காட்டி கேலி செய்கிறார், வழக்கம் போல் குமரி நிலநீட்சி என்ற சொல்லைத் தவிர தன் சொந்தக் கருத்து எதையும் முன்வைக்காமல் பிறரது ஆக்கங்களிலிருந்து எடுத்தாள்வதையே இங்கும் தொடர்கிறார். பி.சோசப்பு என்பவரின், ”கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்க் காவியங்களுக்கு உரையெழுதியவர்களால் உருவாக்கப்பட்ட மரபாகும் இது. இதன் தோற்றத்தை நக்கீரனாரின் இறையனார் அகப்பொருளுரையில் காணலாம். பின் வந்த நச்சினார்க்கினியர் மற்றும் அடியார்க்கு நல்லார் போன்ற புலவர்களும் அதே மரபைப் பின்பற்றினர். புராணக்கதையொன்று நாளாவட்டத்தில் வலுவடைந்ததாக இந்தக் கூற்றை ஒதுக்கிவிடவும் முடியாது. அப்படியே உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எப்படியிருந்தாலும் அன்றிருந்த நிலத்தின் ஒரு பகுதியைக் கடல்கொண்டது என்பது இந்த மரபின் சாரம். லெமூரியா பற்றிய இந்த மரபு எக்கல், டோபினார்ட், அக்சிலி போன்ற விஞ்ஞானிகளின் கருத்துகளால் வலுப்பெற்றது. இதை ஓல் டர்னசு மற்றும் காட்டு எலியட்டு போன்ற எழுத்தாளர்களும் அக்கறையுடன் குறிப்பிட்டுள்ளனர். மறைந்த லெமுரியா பற்றிய கருத்தாக்கம், கடல்கோள் விழுங்கிய தமிழ்ச் சங்கம் இருந்த நிலப்பரப்பு பற்றிய மரபு இவ்விரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் பெரும் குழப்பம் நிலவுகிறது. சங்கம் பற்றிய மரபு பழந்தமிழ் இலக்கியங்களின் உரையாசிரியர்களால் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவாக்கப்பட்டது. இவ்விரண்டு மரபுகளும் கூறும் நிகழ்ச்சிகளுக்கு காலத்தால் எந்தத் தொடர்பும் இருக்க சாத்தியமில்லை. இந்தியாவிற்குத் தெற்கே இருந்த நிலம் அழிந்தது பழங்கற்காலத்தில்; சங்கத்தை அழித்த கடற்கோள் நிகழ்ந்ததோ ஒப்பீட்டலவில் மிக அண்மைக் காலத்தில்என்ற கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். திருவாளர் செயகரனின் இந்த ஆக்கம் முன்வைக்கும் கருத்தும் இதேதான் என்பது அவரது நூலை முழுமையாகப் படிப்பவர்க்கு எளிதில் விளங்கும். எனவே திரு. சோசப்பு அவர்கள் கூறியவை பற்றி சில கருத்துகளைக் கூறுவோம்.

            இவருடைய அணுகல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் அணுகலை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் அணுகல் இந்திய பனியா அரசின் அணுகலைக் கொண்டது. இந்திய பனியா அரசின் அணுகல் திட்டவட்டமானது: அதாவது,
1. ஆரியர்கள் என்று இவர்கள் கூறும் கற்பனை இனம் இந்தியாவில் நுழைந்ததாகக் கூறப்படும் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எந்த நாகரிக வளர்ச்சியும் இருந்ததாக வரலாறு எழுதக்கூடாது.
2. இவர்களின் மதத் தலைவர் ஆன மகாவீரருக்கு முன்பு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சொந்தமான நாகரிகம் உருவாகியிருந்ததாக வரலாறு வரையக் கூடாது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சமயத்தை நுழைத்து முகம்மதியர்களை உசுப்பி அவர்களை அடித்து பாக்கித்தானுக்குத் துரத்திவிட்டு ஆங்கிலரிடமிருந்து பனியாவான காந்தி பெற்றுத்தந்த ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்த பனியாக்கள் என்ன ஆட்டம் போடுகிறான்கள் பாருங்களேன்!

இந்த அடிப்படையில் வரலாறு, தமிழ் தொடர்பான துறைகள் சார்ந்த ஒருவர் தமிழகப் பல்கலைக் கழகம் ஒன்றில் துணைவேந்தராக வேண்டுமென்றால் தமிழ் இலக்கியங்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவாயின என்று உயர்திரு மு.. அவர்களைப் போல்தமிழ் இலக்கிய வரலாறுஎழுத வேண்டும் அல்லது அம்மணர்கள்தாம் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்தனர் என்று பண்டிதர் ..அறவாணன் போல் வரலாற்று நூல் அல்லது ஆய்வுநூல் எழுத வேண்டும். அதன் ஒரு வடிவம்தான் தமிழர்களின் பண்டை வாழிடத்தில் கொஞ்சம் கடலால் அழிந்தது, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன் தமிழர்கள் நாகரிக வளர்ச்சி எதையும் எய்தவில்லை என்பவையாகும். இந்த எல்லையில் நின்று திரு.சோசப்பு அவர்கள் நன்றாகவே நடமாடியுள்ளார். நன்றி ஐயா, மிக்க நன்றி. ஆனால் சில கேள்விகள்: 1. சங்கம் பற்றிய மரபு பழந்தமிழ் இலக்கியங்களின் உரையாசிரியர்களால் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவாக்கப்பட்டது. இவ்விரண்டு மரபுகளும் கூறும் நிகழ்ச்சிகளுக்கு காலத்தால் எந்தத் தொடர்பும் இருக்க சாத்தியமில்லை என்கிறீர்களே, கி.மு. 2ஆம் நூற்றாண்டில்(123 சரியாக) கலிங்க மன்னன் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டில் மூவேந்தர்களுக்கும் 12 குறுநில மன்னர்களுக்கும் இருந்த 1300 ஆண்டு உடன்படிக்கை பற்றிய குறிப்பு இருக்கிறதே, அத்துடன் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடைக் கழகம் முடிவடைவது வரை 4 நூற்றாண்டுகளையும் சேர்த்தால் 1700 ஆண்டுகள் ஆகின்றன அல்லவா? ஆக, கி.மு. 1500(2+13நூற்றாண்டுகள்)க்கு முன்பு கடற்கோளிலிருந்து தப்பிய முடத்திருமாறனே மூன்றாம் கழகத்தைத் தொடங்கியதாகிய செய்தியிலிருந்து, கி.மு.1700 நடந்த, தமிழ் மரபு கூறும் இரண்டாம் கடற்கோள் நடந்த நாளில் இருந்து, மண்ணின் மைந்தர்களான குறுநில மன்னர்களுக்கும் வந்தேறிகளான மூவேந்தர்களுக்கும் இடையிலான, மோதல்கள், வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகளை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் தொடக்கம் ஆகியவற்றுக்காக ஏறக்குறைய 200 ஆண்டையும் சேர்த்து 1900 ஆண்டுகள் ஆகின்றன. நூற்றாண்டுகளை முழுமைப்படுத்தியதில் 50 ஆண்டுகளைக் கழித்தால் மூன்றாம் கழகத்துக்கு மரபு கூறும் 1850 ஆண்டுகள் பொருந்திவரவில்லையா?

            பழங்கற்காலம், புதுக்கற்காலம், பெருங்கற்காலம் நுண்கற்காலம் என்றெல்லாம் சொல்கிறீர்களே உங்கள் மண்டைகளைக் கொஞ்சம் குலுக்கிவிட்டுக்கொண்டு என் கேள்விக்கு விடை சொல்லுங்கள். உலகளாவிய அளவில் பல்வேறான இந்தக்கற்காலங்களுக்கு திட்டவட்டமான ஆண்டு என்று ஒரு வரிசை இருந்தால் துறைசாராத என்னைப் போன்றவர்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன். நான் அறிந்தவரை உலகில் இன்று கூடகல்நாகரிகக் கட்டத்தில் வாழும் மக்கள் குழுக்கள் பல உள்ளன. எனவே அருள்கூர்ந்து இந்த மக்கள் இந்த நூற்றாண்டில் இந்தகல்நாகரிக கட்டத்தில், stone age அல்ல, stone stage இல் இருந்தார்கள் என்று கூறப் பழகிக்கொள்ளுங்கள். தெற்கே இருந்த நிலம் அழிந்தது பழங்கற்காலத்தில் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? சங்கத்தை அழித்த கடற்கோள் நிகழ்ந்ததோ ஒப்பீட்டளவில் மிக அண்மையில் என்று கூறி தப்பி ஓடப்பார்க்கிறீர்களே அது தோராயமாக எத்தனை ஆண்டுகள் இருக்கும்?

நாகர்கோயில்காரன் சென்னையில் இருந்து புறப்பட்டால் திருச்சி பக்கத்து ஊராகத் தோன்றும் ஆனால் நாகர்கோயிலுக்குச் சென்ற பின் குளச்சலுடன் ஒப்பிட்டால் திருச்சி அப்பப்பா எத்தனை தொலைவு? ஆக நீங்கள் எந்தக் காலத்தை எந்தக் காலத்துடன் ஒப்பிடுகிறீர்கள் என்று இரண்டில் ஒன்றையாவது சொல்லக்கூடாதா? ஆக, ஒன்றை மட்டும் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளீர்ள், கடற்கோள்கள் திருவாளர் செயகரன் கூறுவது போல் ஒன்றல்ல, இரண்டு என்று. சங்கங்கள் இரண்டு என்பதில்தான் உங்களுக்கு உடன்பாடு இல்லை அப்படித்தானே?

மறுபடியும் திருவாளர் செயகரனிடம் வருவோம். கா.அப்பாத்துரையார் பின்பற்றிய எழுத்தாளர்களான காட்டு எலியட்டு, விசார் செர்வு போன்றவர்கள் தமிழைப் பற்றியோ திராவிடர்களைப் பற்றியோ ஒரு சொல் கூடக் கூறவில்லை என்று குமரிக் கண்டக் கோட்பாட்டளர்கள் மீது இரக்கப்படுகிறார். இந்த வேளையில் ஓர் உண்மையை, அதை நாடுவோருக்கு எடுத்துரைக்க வேண்டும். ஐரோப்பியர் இந்தியா வந்த போது இந்தக் குமுகத்தின் உச்சியில் இன்றும் இருக்கும் பார்ப்பனர்களுடன்தான் தொடர்புகொள்ள முடிந்தது. எனவே, சமற்கிருதம்தான் இந்தியாவின் மூல மொழி என்ற எண்ணமே அவர்களிடையில் படிந்தது. ஏன் தமிழகத்தில் கூட அன்றைய காலகட்டத்தில் சமற்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்ற எண்ணம்தானே ஆளும் கூட்டத்தின் உச்சியிலிருந்த பிறமொழிப் பார்ப்பனரால் நிலைநிறுத்தப்பட்டிருந்தது? இத்தாலியிலிருந்து தமிழகத்துக்கு வந்த துறவியான கான்சுட்டண்டைன் பெசுக்கி தன் பெயரை முதலில் தைரியநாதர் என்றும் பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்றும் மாற்றிக்கொள்ளவில்லையா? சமற்கிருதத்தை அயல் மொழிப் பார்ப்பனர் தூக்கிப் பிடிப்பதைக் கண்டு மனம் கொதித்துப் போயிருந்த ஒரு கூட்டம் அன்று இருந்தது என்பதையும் இந்த நிகழ்ச்சி காட்டவில்லையா? தமிழகத்துக்கு மட்டும் உரிய இந்த உள்ளூர் அரசியலை அறியாத ஐரோப்பியர் சமற்கிருத நூல்களை மொழிபெயர்க்க முயன்ற போது இலத்தீன், கிரேக்க மொழிகளோடு சமற்கிருதச் சொற்களுக்கு நெருங்கிய உறவு இருப்பதைக் கண்டனர். 1783இல் கல்கத்தா உயர் நயமன்ற நயவராகப் பொறுப்பேற்ற வயவர்(சர்.)வில்லியம் சோன்சு என்பவர் சமற்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்ற போது எதிர்கொண்ட சிக்கலை கிரேக்க, உரோமன் மொழிகளின் துணையால் எளிதில் மீதுற முடிவதைக் கண்டுதான் சமற்கிருத்தத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவுகளை ஆய ஆசியவியல் கழகம் என்ற ஒன்றை கல்கத்தாவில் தொடங்கினார்.

இதன் அடுத்த கட்டமாகத்தான் செருமானியரான மாக்சு முல்லர் ஆரிய இனம், ஆரிய மொழிக் குடும்பம் என்ற கருத்துகளை முன்வைத்து மொழிகளின் ஒரு வகைப்பாட்டுப் பட்டியலையும் முன்வைத்தார். ஆரிய இனத்தவரின் உடலமைப்பாக செருமானியரின் உடலமைப்பையே கூறினார். இதுவே பின்னர் பிரெடெரிக் மன்னருக்கும் இட்லருக்கும் தூய ஆரியரான செருமானியரே உலகை ஆளும் தகுதியுள்ளவர் என்ற நிலைப்பாட்டுக்கு பின்னணி சேர்த்தது. ஆனால் தன் கருத்தை வெளியிட்ட உடனே பல பகுதிகளிலுமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியாமல், ஒன்றுக்கொன்று தொடர்புடைய மொழிகளைப் பேசும் மக்கள் என்றே தான் கூறியதாகவும் மொழி அடிப்படையில் இனம் குறித்துப் பேசுவது குற்றம் என்றும் பின்வாங்கிவிட்டார்(V.R.Ramachandra Dikshitar - Origin and Spread of the Tamils பார்க்க) . ஆனால் உலகம் முழுதும் நடைபெற்ற அரசியல் பின்னணியில் இந்த போலிக் கோட்பாடு இன்றுவரை நிலைத்துநிற்கிறது. 

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தெற்கே நெல்லை மாவட்டத்திலும் தென் திருவிதாங்கூரிலும் குமுக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்த, பின்னர் நாடார்கள் என்ற பெயர் மாற்றம் பெற்ற, சாணார்களை மதமாற்றம் செய்து வைத்திருந்த பகுதிக்கு வந்து இறுதியில் நெல்லை மாவட்டத்தின் இடையன்குடியில் குடியமர்ந்த சீர்திருத்த கிறித்துவ மதகுருவான கால்டுவெல் ஐயர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதி, திராவிடர்கள் நண்ணில(மத்தியதரை)க் கடற்கரை முதலிய 6 பகுதிகளிலிருந்து குறியேறியவர்கள் என்றும் எழுதினார். மாக்சு முல்லர் Lectures on the Science of Language என்ற நூலின் முதல் மடலத்தில் அடிக்குறிப்பில் கால்டுவெல் ஐயரின் நூல் பற்றிக் கூறியிருக்கிறார்.  

திராவிடர்கள் இந்தியா முழுவதும் உயர் நாகரிகத்துடன் பரந்து வாழ்ந்தவர் என்றும் நாடோடிகளாக இருந்த ஆரியர் பெரும் கும்பலாக கைபர் கணவாய் வழியாக இந்தியாவுள் நுழைந்து திராவிடர்களைத் தெற்கு நோக்கித் துரத்திவிட்டனர் என்றும் ஆங்கிலர்கள் வரலாறு எழுதினர். அரப்பா மோகஞ்சதாரா நாகரிக அகழ்வாய்வு இதற்கு உதவியது. இப்போது, செருமானியர் ஒடுக்கப்பட்டுவிட்டதும் இன்று அடிமைகளாக இருக்கும் தமிழர்கள் உட்பட்ட திராவிட மொழி பேசும் மக்களை ஒடுக்கியவர்கள் ஆரியராகிய தாம் என்ற வரலாற்று வரைவை நிலைநிறுத்துவதில் அவர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். திருவாளர் செயகரன் இந்த உண்மைகளைப் பற்றி மூச்சே விடவில்லை.

இறையியல் கழகமான பிரம்ம ஞான சபை இந்தியா வருவதற்கு முன்பே அது இரண்டாகப் பிளவுண்டுவிட்டது. அதில் ஒன்றுதான் ஐரோப்பாவில் செருமானியருக்கு ஆரிய இன வெறி ஊட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்த அந்தக் குழுவின் குறி பிரிட்டனுக்கு எதிராக செருமனிக்கு உதவுவதுதான். அவர்களின் படைப்புகளைத்தான் திருவாளர் செயகரன் பெரும்பாலும் சுட்டிக்காட்டுகிறார் தன் நூலில் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அடுத்து இன்னொரு உண்மையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் பல அடிப்படைச் சொற்களின் வேர்கள் தமிழில் உள்ளன என்பதை எனது சில தமிழாக்கப் பணிகளின் போது அறிந்தேன். மேலே குறிப்பிட்ட CHAMBERS DICTIONARYஇல் வேர்ச்சொற்களாகக் காட்டப்பட்டுள்ள பெரும்பாலான முன்னொட்டுகளும் பின்னொட்டுகளும் தமிழாக இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்து ஓர் எடுத்துக்காட்டாக in, inn என்ற சொற்களை எடுத்துக்கொள்வோம். முதல் சொல் தமிழின் ஏழாம் வேற்றுமை உருபாகிய உள்ளே என்ற பொருள் தரும் இல் என்பதன் திரிபு அல்லவா? இரண்டாம் சொல் சத்திரத்தைக் குறிப்பது. தமிழில் வீடு என்று பொருள் தரும் இல் என்பதன் திரிபுதானே! அது போல் origin not known, origin obscure, origin doubtful என்று குறிப்படப்பட்டுள்ள சொற்களில் மிகப் பெரும்பாலானவற்றின் வேர் தமிழாக இருந்தத்தைப் பார்த்துள்ளேன். (எனது வலைப்பக்கமான http://kumarimainthan.blogspot.com இல் குமரிமைந்தன் படைப்புகள் என்ற தலைப்பில் தமிழ்ஆங்கில சொல் தொடர்புகள் என்ற இடுகையில் ஒரு பட்டியலைப் பார்க்கலாம்.)

இவ்வாறு மேலை உலகம் அறியாது அல்லது பொருட்படுத்தாது இருந்த தமிழர்களைப் பற்றி அவர்கள் சிறிது சிறிதாக அறியத்தக்க சூழல்களை வரலாறு உருவாக்கியது. முதன்முதல் ஆங்கிலர்களுக்குப் போட்டியாக ஒரு கப்பல் குழுமம் அமைத்து ஆங்கிலரின் வயிற்றில் புளியைக் கரைத்த கப்பலோட்டிய தமிழன் ..சிதம்பரனார், வாய்மைக்கே பெரும் அறைகூவலாக உலகில் தோன்றிய மோகனதாசு கரம் சந்து காந்தியின் பாசாங்குகளை நம்பி பின்னணி கொடுத்த தென்னாப்பிரிக்க அப்பாவித் தமிழர்கள், தமிழகத்திலிருந்து செருமனி சென்று மன்னன் பிரெடரிக்குடனும் இட்லருடனும் உறவு வைத்திருந்த செய்கிந்து செண்பகராமன், சுபாசு சந்திர போசின் இந்தியத் தேசியப் படையில் தங்கள் கொண்டைகளை வெட்டி தொப்பியணிந்து துப்பாக்கி ஏந்தி களத்திலிறங்கிய தமிழ்ப் பெண்கள் உட்பட கீழை நாடுகளில் வாழ்ந்த தமிழக மக்கள், {இவ்வளவுக்கும் முன்னரே உலகெங்கும் தேயிலை, தொய்யம்(ரப்பர்) தோட்டங்கள் அமைக்க அடிமைகளாக ஆங்கிலர் அழைத்துச் சென்ற தமிழர்கள்தாம் இப்படி காந்தி, போசு பின்னால் சென்றவர்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்} பெரியார், அண்ணாத்துரை போன்ற பொய்யர்களை நம்பி திராவிடநாடு என்ற பெயரில் தமிழகத்தின் அரசியல் விடுதலைக் குறிக்கோளுக்காகக் குரல் கொடுத்த தமிழக மக்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் உழவர்கள் போராட்டத்திலும் தமிழக மக்கள் காட்டிய எல்லையற்ற வீரம், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஈழ விடுதலைப் போரில் வல்லரசுச் சுரண்டலுக்கு எள்ளளவும் இடம் தரமாட்டேன் என்று இறுதிவரை உறுதியாக நின்ற மாவீரன் பிரபாகரன், அவர் பின்னால் மலையென நிமிர்ந்து நின்ற ஈழ மறவர்கள் என்று வல்லரசியத்தின் கண்களைச் சிறிது சிறிதாகத் தொடங்கி இன்றுதான் மிகவும் உறுத்தத் தொடங்கியுள்ளனர் தமிழ் மக்களும் அவர்கள் பேசும் தமிழ் மொழியும், அவர்களது வரலாற்றுப்பின்னணியில் வானளாவி நிற்கும் அறிவியல்தொழில்நுட்ப எய்தல்களும். அதன் எதிர்வினைதான் திருவாளர் செயகரனின் இந்தப் போலி அறிவியல்ஆய்வு.

இங்கே இடைக்கிடையே இவர் சொல்லும் சில கருத்துகள் அல்லது சொற்களுக்கு விளக்கம் சொல்லாமல் தாண்டிச் செல்ல முடியவில்லை. எடுத்துக்காட்டாக, பக்.52இல் 3ஆம் பத்தியில்லெமூரியர் ஒரு சொல் வார்த்தைகளைப்(Monosylables) பேசினர். சீன மொழியே லெமூரியர் பேசிய மொழியின் மூலம் வந்த மொழி’(பக்.31). இக்கூற்று மொழி ஆய்வாளர்களைத் திகைக்க வைப்பது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் பற்றி எலியட்டு எங்கும் குறிப்பிடவில்லை.”

இதில் மொழி ஆய்வாளர்களைத் திகைக்க வைக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. முக்கழகக் காலம் கி.மு. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது, எலியட்டு வினையாடுவதோ பல இலக்கங்கள் ஆண்டுகளுக்கு முன் இருந்த இலெமுரியாக் கண்டம் பற்றி. ஆமாம், மனிதன் தோன்றிய போதே தமிழ் இன்றைய வடிவத்தில் தோன்றியது என்று தமிழர்கள் உரிமை கொண்டாடுவதாக திருவாளர் செயகரன் கூறுகிறாரா? அது வேண்டுமானால் யூத மறைநூலுக்குப் பொருந்தும். இறைவன் மனிதனை நேரடியாகப் படைத்து அவனோடு பேசவும் செய்தார் என்கிறது அது. ஆனால் அவர் என்ன மொழியில் மனிதனோடும் அவன் விலா எலும்பிலிருந்து வந்த பெண்ணிடமும் பேசினார் என்பது பற்றி மேற்கத்திய ஆய்வாளர்களிடையிலே குழப்பம் உள்ளது. ஆனால் இங்கு நாம் வினையாடுவது வரலாறு. மனிதன் பேச்சு மொழியைப் படிப்படியாகத்தான் உருவாக்கி இறுதியில் குறுங்கணக்கியல்(Alphbetical) எனும் ஐரோப்பிய மொழிகளின் நிலையைத் தாண்டி தமிழையும் அதைத் தொடர்ந்து இந்திய மொழிகளையும் அசைநிலை(Isolating) எனப்படும் நெடுங்கணக்கியல் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறான். 12 உயிரெழுத்துகள், 18 மெய்யெழுத்துகள், 12 x 18 = 216 உயிர் மெய்யெழுத்துகள் என 246 எழுத்துகளும் அசை எழுத்துகளாகும். இது தெளிவில்லா ஒலிக்குறிப்புகளிலிருந்து படிப்படியாகத் திரிவாக்கம் பெற்ற நடைமுறையின் உச்ச நிலையாகும்.

மீண்டும் ஒரு முறை திருவாளர் செயகரன் சொல்லாய்வில் இறங்கியுள்ளார். கண்டம் என்ற சொல்லாட்சி பற்றி குறிப்பிட்டு தீவக்குறை ஆகிய தீபகற்பத்தையும் தீவு என்று கூறும் வழக்கு இருப்பதாகக் கூறுகிறார். இந்தியக் கண்டத்தட்டு தெற்கிலிருந்து நகர்ந்து 90° திரும்பி ஆசியத் தட்டுடன் மோதுவதற்கு முன் அது கண்டமாகவோ தீவாகவோதானே இருந்தது? அந்நிலையில் இருந்த நிலப்பரப்பு பின்னர் தீவக்குறை ஆன பின்னரும் அச்சொல்லால் வழங்கப்பட வாய்ப்பு உண்டுதானே!

அடுத்துநாவலந்தீவுஎன்ற அருமையான பெயர். நாவலம் என்பது நாவன்மை என்ற சொல்லின் அடிப்படையில் அமைந்தது. சிலப்பதிகாரம், கட்டுரை காதையில்
               நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி….
என்ற வரிகளுக்கு(71 – 72), "நாவன்மையைக் கொண்டு எதிர்த்தவர்களைப் புறங்கண்டு பார்ப்பன வாகையாகிய அறிவுப் போட்டியில் வென்றுஎன்று நா.மு.வேங்கடசாமியார் உரை எழுதியிருக்கிறார். அதாவது பிற நிலப்பகுதிகளில் மக்களிடையில் பேச்சு மொழி என்ற ஒன்று உருவாகாத நிலையில் தாம் வாழும் நிலப்பரப்பில் மட்டும் பேச்சுமொழி வழக்கு இருந்ததால் தங்கள் நிலத்துக்கு நாவலந்தீவு என்றும் நாவலந் தண்பொழில் என்றும் பெயரிட்டு வழங்கினர் தமிழர்கள் என்றுதான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். பிற நிலத்தில் பேசப்படும் மொழிகள் புரியாததாலும் இவ்வாறு குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்ல வாதப் போர்கள் நடைபெறும் இடங்களில் முதலில் ஒரு கட்சியினர் நாவல் கிளையொன்றை நட்டுநாவலோ நாவல்என்று அறைகூவும் வழக்கமும் பின்னாட்களில் இருந்துள்ளது. இவ்வாறு நாவன்மைப் போட்டிக்கும் நாவல் மரத்துக்கும் இருக்கும் சொல் ஒப்புமையை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர். இதை அறியாத பிற்கால சமற்கிருதக் கிறுக்கர்கள் நாவலந்தீவு என்ற இந்திய நிலப்பரப்பின் பெயரை சம்புத்தீவு என்று பெயர்த்துக்கொண்டனர். இவை எவற்றையும் அறியாத திருவாளர் செயகரன் சம்புத் தீவு எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து நாவலந்தீவு என்ற பெயரைத் தமிழார்வலர்கள் திருடிக்கொண்டனர் என்று இன்றைய இந்தியக் காவல்துறையினிரின் பாணியில் பேசுகிறார்.

            இந்தச் சமற்கிருதக் கிறுக்கர்களின் கோமாளித்தனத்துக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு வேதாரண்ணியம். இப் பகுதி அகன்ற சதுப்பு நிலமாகும். இங்கு மரைகள் எனப்படும் சதுப்பு மான்களும்(Marsh deer) அவற்றை வேட்டையாடி வாழும் வரிப்புலிகளும் சிறப்பான விலங்குகளாகும். இந்தப் புலிகள்தாம் சோழ மன்னர்களின் கொடியில் இடம்பெற்றிருக்கிறது என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு. மரை என்பதை மறை என்று தவறாகப் புரிந்துகொண்டு இந்த மடையர்கள் மான் இருந்த இடத்தில் வேதத்தை வைத்து மரைக்காட்டை வேதக்காடாக வேத ஆரண்யமாக, வேதாரண்யமாகத் திரித்துத் திருநடமாடிவிட்டார்கள். இவர்களது திருவிளையாடல்களை விரித்தால் நமக்கு இடமும் போதாது நேரமும் போதாது.

            இவ்வாறு புவியியல், புவியியங்கியல் கோணங்களில் ஆய்ந்து பார்த்து முடிவு செய்வதற்கு, முடிவு செய்வதென்ன, ஏற்றுக்கொள்வதற்கு மிகத் தெளிவான தரவுகளைத் தந்துள்ள அடியார்க்குநல்லார் கூற்றை நக்கீரர் கூற்றோடு சேர்த்துக் குப்பை போல் பெருக்கித்தள்ளி படிப்போரைத் திட்டமிட்டு ஏமாற்றிய புவியியங்கியல் புலி, இறையனார் என்ற பெயர் கொண்ட இக்காலத்து எழுத்தாளர், .சி.கந்தையாபிள்ளை, தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் போன்றோர், முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிய தமிழர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியதாகக் கூறியவற்றை விரிவாக மேற்கொண்டுவிட்டு அவர்களுக்கு மறுப்பாக மதுரை காமராசர் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைத் தலைவராகப் பணியாற்றிய நா.சுப்பிரமணியன் என்பவர் கூறியதை எடுத்துக்கூறி குப்பைகளால் பக்கங்களை நிரப்புகிறார். வேண்டுமானால் நா.சுப்பிரமணாயன் கூறியதைக் கேளுங்கள்: ”தமிழர்களின் வரலாற்றை ஆராய்பவர்களுக்குப் பல தடைகள் உள்ளன. முதலாவதாக, அரிதாக உள்ள மூல விவரங்கள் மற்றும் அவற்றைத் தக்க கோணத்தில் பார்க்க இயலாத நிலை. இரண்டாவதாக, அவர்களது ஆய்வுக்கு முட்டுக்கட்டைகளாக உள்ள புராணங்கள், ஐதிகங்கள் மற்றும் மரபுகள். புராணங்கள் இந்தியர்களுக்கோ தமிழருக்கோ புதியவேயல்ல. ஐதிகம் என்பது தெளிவற்ற குழம்பிய பழம் நினைவுகள். இவற்றை பொதுவாகவே நம்மவர்கள் கேள்விகள் ஏதும் எழுப்பாமல் நம்புவதுண்டு. தமிழ் நாட்டில் தமிழில் வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட பல நூல்களில், புராணங்கள், கர்ண பரம்பரைக் கதை, பழம்பெருமை ஆகியன பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் எது வரலாற்றுப்பூர்வமான உண்மை என்ற கேள்வி கேட்கப்படுவதில்லை. தமிழர்களின் அறிவின் மீது இருக்கும் இந்த ஐதிகத்தின் பிடி சாமானியமானதல்ல. ஐதிகம் மரபு வெறும் கட்டுக்கதைகள் என்றிருந்தால் அவற்றால் அதிகம் பாதிப்பில்லை. ஆனால் பழம் வரலாற்று நிகழ்ச்சிகளுடன் இணைக்கப்பட்டு கற்பனையால் மிகைப்படுத்தப்படும்போதுதான் அவை இடையூறுகளை விளைவிக்கின்றன. வரலாற்று ஆதாரத்தைத் தேடும்போதுதான் அது எவ்வளவாகக் கற்பனையில் சோடிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்த மாதிரியான கற்பனையான மரபுகளில் தலையானது குமரிக்குத் தெற்கே பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு கண்டம் இருந்தது என்றும் அது கட்ற்கோளால் அழிந்துபட்டதனால் அரசன் தன் தலைநகரை வடக்கே பாதுகாப்பான இடத்தில் நிறுவினான் என்றும் கருதும் மரபு. உண்மையில் இவையெல்லாம் பாண்டிய மன்னன் தமிழ்ச் சங்கம் நிறுவியபோது ஏற்பட்ட நிகழ்ச்சிகள்”.

            இந்த வரலாற்றுப் பேராசிரியரின் கூற்றைப் படித்தோரிடம் ஒரேயொரு கேள்வியை முன்வைக்கிறேன். மக்கள் நடுவில் காலங்காலமாக வழங்கி வரும் தம் பழைய வரலாற்றை வெறும் ஐதிகம் என்று ஒதுக்கித்தள்ளுவதற்கு திருவாளர் செயகரன் தன் சொந்த வைப்பாக எதை நமக்குத் தருகிறார்?

            ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளும் மண்டை ஓடுகளையும் பானை ஓடுகளையும் மட்டும் வைத்து வரலாறு எழுதும் ஒரு பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியருக்கு மனித வரலாற்று வளர்ச்சிக் காலகட்டங்களில் இடம்பெற்ற பூசகராட்சி, அதிலிருந்து மன்னராட்சியின் மலர்ச்சி, இரண்டுக்கும் இடையிலான இன்றும் தொடரும் நீண்டகால நெடும் போராட்டம், அவை பற்றிய இந்தியத் தொன்மங்களிலும் மறவனப்புகளிலும்(இதிகாசங்களிலும்) காணப்படும் வியக்கவைக்கும் பதிவுகள் பற்றித் தெரிந்துகொள்ளத் தேவையே இல்லை. அத்தகைய ஒருவர் கூறுகிறார் என்பதற்காக நாம் நமக்குக் கிடைத்த அரிய தடயங்களை திருவாளர் செயகரன் போல் குப்பையாகப் பெருக்கித்தள்ளிவிட முடியாது. அவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பின்னர் பேசுவோம். அதற்கு முன் உருசிய ஆய்வாளராகிய அலக்சாந்தர் கோந்திரத்தோவின் கருத்துகளை திருவாளர் செயகரன் மறுத்துக் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்.

தொடரும்.......

0 மறுமொழிகள்: