சங்க இலக்கியம் கூறியதும் கூறாததும்


3. சங்க இலக்கியம் கூறியதும் கூறாததும்

            சங்க இலக்கியம் எதுவும் கடல் கொண்ட நிலத்துக்குக் குமரிக்கண்டம் என்ற பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. முந்திய தலைப்பின் கீழ் குறிப்பிட்டவாறு மூழ்கிய நிலத்தைப் பற்றிய தெளிவான செய்திகளையும் பாண்டிய அரச மரபு ஒரு பெண்ணிலிருந்து தோன்றியது குறித்து முழுமையாகவும் கழக இலக்கியத் தொகுப்பு மறைத்துள்ளது. இதன் அரசியல் பின்னணியையும் முன்பு அலசியுள்ளோம். குமரி என்பதற்குத் தொடியோள் என்ற சொல்லை இளங்கோ  கையாண்டதால் அது ஒரு தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை உய்த்துணரவே முடிகிறது. குமரித் தெய்வத்தை மறைக்கும் அரசியல் இன்றும் தொடர்கிறது.[1] இவ்வாறு பண்டை இலக்கியங்களில் குமரி என்ற பெயரோடு மலை, ஆறு போன்றவற்றைத் தொடர்புபடுத்தியமையால் குமரிக் கடலினுள் முழுகிய நிலப்பரப்புக்குக் குமரிக் கண்டம் என்ற பெயரை 19-ஆம் 20-ஆம் நூற்றாண்டு அறிஞர்கள் வழங்கினர்.

            குமரிக் கண்டம் கடலில் முழுகியது பற்றித் தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகள் முழுமையானவை அல்ல. கழக இலக்கியத் தொகுப்பே முழுமையானதல்ல; தொகுத்த காலத்திலிருந்த, தொகுத்தவர்களுக்கிருந்த கண்ணோட்டங்களுக்கு இசையாதவற்றைக் கழித்துவிட்டு தம் கண்ணோட்டங்களுக்கேற்ப புதியவற்றைப் பாடிச் சேர்த்துத் தொகுக்கப்பட்ட உயர் தரம் கொண்ட ஓர் அழகிய பாமாலை அது. எனவே அதை வைத்துக்கொண்டு முழுப் பண்டை வரலாற்றையும் அறிந்து விட முடியாது. இந்த அடிப்படையில் பார்த்தால் உரையாசிரியர்கள் குறிப்பிடும் முதற்கடற்கோளுக்கு முன்பே பல கடற்கோள்கள் நிகழ்ந்ததற்கான தடயங்களை நாம் இனங்காண முடியும்.

            அதுபோல் முதற்கடற்கோளுக்கும் இரண்டாம் கடற்கோளுக்கும் இடையிலும் கூட பல கடற்கோள்கள் நிகழ்ந்திருப்பதற்கான தடயங்கள் நாம் தேடினால் கிடைக்கும்.

            அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
            வடிவே லெறிந்த வான்பகை பொறாது
            பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
            குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
            வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு 
            தென்றிசை யாண்ட தென்னவன் வாழி                                 - சிலம்பு

            மலி திரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
            மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்     
            புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
            வலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்                   - முல்லைக் கலி 
                   
ஆகிய இரண்டு பாடல்களும் வெவ்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. முதலது கடற்கோள் என்றும் இரண்டாவது  திரை ஊர்ந்து வந்து மண் வௌவுதல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. கடற்கோள் என்று பதியப்படாமல் சிறுகச் சிறுக கடல் பற்றிக்கொண்ட நிலப்பரப்பை இது குறிக்கலாம்.

            முதற்கடற்கோள் பேரழிவை ஏற்படுத்தியது எனலாம். ஏனென்றால் முதற்கடற்கோளின் போது இருந்த முதற்சங்கத்து இறுதி வேந்தன் பாண்டியன் கடுங்கோன். இரண்டாம் கழகத்தை நிறுவியவன் வெண்டேர்ச் செழியன். இருவருக்குமிடையிலான கால இடைவெளி தெரியவில்லை. நிலநடுக்கோட்டில் முதற்கழகமிருந்த தென்மதுரையிலிருந்து ஏறக்குறைய 6 பாகைகள், அதாவது கிட்டத்தட்ட 480 அ. மா. வடக்கு நோக்கிச் சென்று இன்றைய இலங்கைத் தீவினூடாக ஓடும் அக்கக் கோட்டில் இருக்கும் ஓரிடத்தில் வெண்டேர்ச் செழியன் இரண்டாம் கழகத்தை நிறுவினான்.[2] உரையாசிரியர்கள் குறிப்பிடும் இரண்டாம் கடற்கோள் அவ்வளவு கொடியதாய் இல்லை என்பது அவர்கள் தரும் செய்திகளிலிருந்து தெளிவாகிறது; ஏனென்றால் இரண்டாம் கழகத்தின் இறுதியிலிருந்த முடத்திருமாறனே மூன்றாம் கழகத்தையும் நிறுவியதாக அவர்கள் கூறுகின்றனர்.

            உரையாசிரியர்களின் கூற்றுப்படி மூன்று கழகங்களும் இயங்கிய காலநீட்சி ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகள். இந்தக் காலத் தொடக்கத்தில் தான் இப்போது செயலில் இருக்கும் பனிப்படலப் பின்பெயர்ச்சி தொடங்கியது. தொடக்க நிலையை அடுத்து பெரும் பரப்பிலும் உயரத்திலுமிருந்த பனிப்பாறைகள் உருகியும் அப்படியே கடலில் வீழ்ந்து ஓங்கலைகளை[3] உருவாக்கியும் நிலத்தையும் அதில் வாழ்ந்த மனிதர் உட்பட உயிர்களையும் அழித்திருக்கும். இந்தப் பேரளவு உருகுதலால் பனிப்பாறைகள் இருந்த இடத்தில் சுமை குறைவதாலும் உருகிய நீர் புதிய இடங்களில் தங்குவதால் அவ்விடங்களில் புதிய சுமை ஏறுவதாலும் ஏற்படும் புவிச் சமநிலைப் பிறழ்வாலும் நிலப்பரப்புகள் மேலெழவும் கீழிறங்கவுமான மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும். புவியியல் பட்டம் பெறாத ஆனால் பொதுவான அறிவியல் உணர்வுடைய எவராலும் புரிந்துகொள்ளத்தக்க இந்த உண்மையைத் திரு. சு.கி.செயகரன் புரிந்துகொள்ள இயலாததில் நமக்கு வியப்பில்லை.

            பனிப் படலப் பின்பெயர்ச்சி தொடர்ந்து அதன் வீறு குறைந்திருந்த  காலத்தில் அதாவது ஏறக்குறைய கி.மு.(1850+3700-200=)5350-இல் பனி உருகும் விரைவு மட்டுப்பட்டிருக்கும். ஆனால் 3700 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகச் சிறுக உயர்ந்த கடல் மட்டத்தைத் தொடர்ந்து, கி.பி. 2004 திசம்பர் 26-இல் தமிழகக் கடற்கரையிலும் குமரிமாக் கடலின் கரையோர நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திய ஓங்கலை போன்ற ஒன்று மக்களைக் கபாடபுரத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம். கி.பி. 2004 ஓங்கலையையும் கடற்கோள் என்றே குமரிமாவட்ட மீனவர்கள் கூறுகின்றனர்[4]. உரையாசிரியர்களால் பதியப்பட்ட இரண்டாம் கடற்கோளின் போது கபாடபுரத்தை ஆண்ட முடத்திருமாறன் இயன்றதை யெல்லம் எடுத்துக்கொண்டு மணலூர் வந்தான். அங்கு அவன் நெடுநாள் இருக்கவில்லை. கடற்கரையில் அமைந்த தலைநகரங்கள் மீண்டும் மீண்டும் கடற்கோள்களால் அழிவதால் உள்நாட்டில் கடல் எட்ட முடியாத ஓரிடத்தில் தனது புதிய மதுரையை நிறுவினான்.

            மணலூர் பற்றிய செய்திகள் தமிழ் மொழியிலுள்ள எந்தப் பழம் குறிப்பிலும் இல்லை. மகாபாரதத்தில் வரும் ‘அருச்சினன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்’தில் அவன் பாண்டிநாட்டுத் தலைநகரான மணலூர் வந்து சித்திராங்கதன் எனும் பாண்டிய மன்னின் மகள் சித்திராங்கதையை மணந்துகொண்டதாக ஒரு குறிப்பு உள்ளது. அதுவும் தென்னிந்தியாவில் வழங்கும் மகாபாரதக் கதையில் தான் இது உள்ளது என்று வி.கனகசபையார் தனது ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்  என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்[5]. 
 
            இந்த மணலூர் கடல்கொள்ளப்படவில்லை. இன்று கொற்கையை அடுத்து கொற்கை மணலூர் என்ற பெயரில் உள்ளது. அதே பெயரில் தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் சேகரம் ஒன்று இருப்பதாகவும் தெரிகிறது.

            கடலில் வாழும் மீனைக் கொடியாகக் கொண்டு மீனவர்கள் என்றே அழைக்கப்படும் பாண்டியர்கள் கடற்கரையை எவ்வாறு முற்றிலுமாகத் துறக்க முடியும்? எனவே கொற்கையில் துறைமுகம் அமைத்து பட்டத்து இளவரசனை அங்கு வைத்தனர்.

            அன்று தொட்டு பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று கள வேள்வியால்.... என்று தொடரும் சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையால் இது தெளிவாகிறது. 

            கொற்கை என்ற பெயர் கொல்லர் தொழிலைக் குறிக்கும் கொல் என்பதன் அடியாகப் பிறந்தது என்பர். அங்கு போர்க் கருவிகளும் நாணயங்களும் படைக்கப்பட்டனவாகத் தெரிகிறது. இப் பணிகளைக் கண்காணிப்பதற்கு பட்டத்து இலவரசனே பொருத்தமானவன் என்பதால் அங்கு இத் தொழில்கள் நிறுவப்பட்டன. ஒருவேளை அங்கு ஏராளமாகக் குடியிருந்த பொற்கொல்லர்களிலிருந்துதான் கண்ணகிக்குப் பலியிட ஆட்களை எடுத்துக்கொண்டானோ என்னவோ! தொழிலாளர்களுக்கும் அவனுக்கும் இடையில் பூசல்கள் எதிர்பார்க்கத்தக்கதே.

            காலங்காலமாகக் கடற்கோளுக்கு ஆளான பாண்டிய மன்னர் தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. தமிழகக் கடற்கரை நெடுகிலும் மணற்குன்றுகள் என்று அறியப்படும் தேரிகளை* அமைத்துப் பராமரித்து அதன் நிலம் நோக்கிய பக்கத்தில் ஒரு கால்வாயையும் தோண்டியுள்ளனர். கடலினுள் ஒரு கப்பலோடையையும் அகழ்ந்துள்ளனர். தொடர்ந்து வந்த காலங்களில் இந்த மூன்றடுக்குக் காப்பரண் நிலத்தையும் நிலத்தில் வாழ்ந்த மக்களையும் காத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு கூட இந்த மணல் தேரியின் உச்சியிலன்றி அதிலிருந்து கடல் நோக்கிய திசையில் எந்த ஒரு மீனவர் குடியிருப்பும் இருந்ததில்லை. கடந்த ஐம்பதாண்டுகளாகத்தான் தேரியை நிரத்தி(சமப்படுத்தி)க் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். வாக்கு வங்கி உருவாக்கம் என்ற நோக்கில் அரசியல்வாணர்கள் இதனை ஊக்கியுள்ளனர். சவுக்கு மரம் நடுவதற்கென்று கான்துறையினர் அதாவது ஆட்சியாளர்கள் தம் பங்குக்கு நிரத்தியுள்ளனர். விறகுக்கென்று இவ்வாறு மரம் வளர்ப்பவர்கள் அதை வெட்டி அழிக்கும் போது கடற்கரை மணல் தன் கான் போர்வையை இழக்கிறது. கரையிலிருந்து கடல் நோக்கியும் கடலிலிருந்து கரை நோக்கியும் வீசும் பருவக் காற்றுகள் தக்க பிடிமானம் இல்லாத மணலைக் கடல் நோக்கியும் உள்நிலம் நோக்கியும் மாறி மாறிக் கொண்டுசெல்கிறது. தமிழகக் கடற்கரை நெடுகிலும் பல கல் தொலைவுக்கு மணல் மேடுகளைக் காணலாம். தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மைக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக இம் மணலைக் குவித்துப் பெரும் மேடுகலாக்கியுள்ளனர். குமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் வட்டத்தில் கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 3 கல் தொலைவிலுள்ள தெங்கம்புதூர் எனுமிடத்திலுள்ள தேரியிலிருந்து தான் அவ்வட்டாரத் தென்னை வேளாண்மை தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.

            தமிழ்நாட்டுக் கடற்கரை நெடுகிலும் தேரியை அடுத்து ஓர் உள்நாட்டு நாவிக வாய்க்கால் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. அதில் பக்கிங்காம் வாய்க்கால் எனப்படும் ப. வாய்க்காலும் (B- Canal) மேற்குக் கடற்கரையில் அனந்தன் விக்டோரியா மார்த்தண்டவர்மா (A.V.M.) வாய்க்கால் எனப்படும் அ.வி. மா. வாய்க்காலும் அடங்கும். ப. வாய்க்கால் விசாகப்பட்டினம் அல்லது மசூலிப்பட்டினத்திலிருந்து நாகப்பட்டினம் வரையிலும் அ.வி.மா. வாய்க்கால் கன்னியாகுமரியிலிருந்து கொல்லம் வரையிலும் செல்வதாகத் தெரிகிறது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஒருவர் ப. வாய்க்கால் பரங்கிப்பேட்டை வரைதான் உண்டு என்றார். ஆனால் சீர்காழியிலுள்ள பொதுப்பணித்துறை நீர்வள மேலாண்மைச் சிறுகோட்டத்தினர் தங்கல் சிறுகோட்ட எல்லைக்குள் ப. வாய்க்கால் தங்கள் பொறுப்பிலிருப்பதாகவும் ஆனால் அதைப் பற்றிய ஆவணங்கள் எதுவுமில்லை என்கின்றனர். பழையாறு என்று இப்போது அழைக்கப்படும் இடம் தமிழ்நாட்டுப் பெரிய ஆறுகளில் ஒன்றும் காவிரி ஆற்றுபரப்பின் வடிகாலுமான கொள்ளிடத்தின் கழிமுகத்தில் உள்ளது. ஆசிரியர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில், சோழப் பேரரசன் இராசராசன் பிறந்து வளர்ந்த அன்றைய சோழர் தலைநகராகிய பழையாறை ஆகும் இது.[6] இங்கு கொள்ளிடம் ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஒன்று நேராகவும் மற்றொன்று ஏறக்குறைய 8 அ.மா.வடக்கு நோக்கிச் சென்றும் கடலில் சேர்கின்றன. அந்தக் கிளையும் அடர்ந்த சுரபுன்னை மரங்களின் ஊடாக ப.வாய்க்காலும் இணைந்து உருவான காயல் வடக்கில் பிச்சாவரம் காயலாகி முடிகிறது. ப.வாய்க்கால் வடக்கில் தொடர்கிறது. இங்கே வெள்ளாறும் வந்து கடலில் கலக்கிறது. இந்தக் காயலுக்கும் கடற்கரைக்கும் நடுவிலிருந்த தேரிகளில் கடந்த 35 ஆண்டுகளாக, அரசியல்வாணர்களால் வாக்குவங்கிகளாகக் குடியமர்தப்பட்டவர்களே அவ் வட்டாரத்தில் 2004 ஓங்கலையால் அடித்துச்செல்லப்பட்ட மக்கள். பழையாற்றில் மணல்மேட்டிலிருந்து கடல் நோக்கிய தாழ்நிலத்தில் அண்மைக் காலத்தில் வீடுகட்டி வாழ்ந்தவர்கள் அழிந்தனர். மேட்டிலிருந்தவர்கள் தப்பினர். ப.வாய்க்கால் ஓங்கலையின் நீரை ஓரளவு உள்வாங்கி அவர்களைக் காத்தது. அதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் கொட்டில்பாடு என்னுமிடத்தில் மணவாளக்குறிச்சி அருமணல் தொழிற்சாலையால் மணல் அகற்றப்பட்ட தாழ்விடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மக்களோடு அடித்த்ச் செல்லப்பட்டு அடுத்து ஓடும் அ.வி.மா.வாய்க்காலினுள் நிரம்பின. இங்கு வாய்க்கல் சவக்குழியானது.

            காரைக்கால் பகுதியில் ப.வாய்க்காலின் சுவடுகள் தெளிவாகவே உள்ளன. செங்கல்லாலான பெரும் பெரும் கட்டுமானங்களின்  இடிபாடுகள் தூர்ந்து கிடக்கும் வாய்க்காலினுள்ளிருந்து நம்மை மறுக்கமாக எட்டிப்பார்க்கின்றன.
           
.வாய்க்காலில் சென்னை வட்டாரத்தில் அண்மைக்காலம் வரை படகுப் போக்குவரத்து இருந்தது.1968-இல் மாமல்லபுரத்துக்கு வடக்கே கடலை அடுத்துச் செல்லும் சாலைக்கு மேற்கில் பாய்மரம் விரித்துச் செல்லும் படகுகளைப் பார்த்திருக்கிறேன். வடக்கே ஆந்திரத்திலிருந்து பல்வேறு பண்டங்களை ஏற்றிவரும் படகுகள், வாய்க்காலின் படுக்கை உயர்மட்டத்திலிருந்து தாழ்மட்டத்துக்கு இறங்கும் இடத்தில் உள்ள வீழ்த்தம்(Drop) எனப்படும் அமைப்புகளைத் தாண்டுவதற்க்காக பூட்டி(Lock)என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்[7]. அவற்றை இயக்குவதற்கென்று பூட்டி கண்காணிப்பாளர் தலைமையில் அமைந்த ஓர் ஊழியர் குழு பூட்டிக் களங்களிலுள்ள குடியிருப்புகளில் இருந்தார்கள். இந்தப் பணிகளின் பொறுப்பில் ஒரு பொதுப்பணித்துறைக் கோட்டமும்  செயற்பட்டது. மேலிருந்து வரும் படகுகளை கீழிறக்கவும் கீழிருந்து வருவனவற்றை மேலேற்றவும் பூட்டிகளை இயக்கும் பணியாளர்களுக்கு படகுகளை இயக்குவோர் அன்பளிப்பாகக் கரைநோக்கி வீசும் பொருட்களில் தீப்பெட்டியும் உப்பும் தவிர்த்த அனைத்தும் அடங்கும் என்னுமளவுக்கு பொருள் போக்குவரத்து இந்த வாய்க்காலில் இருந்தது.

            இன்று அந்த அமைப்பு இயங்கவில்லை. பொதுப்பயன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள், அவை, குளங்களாக இருந்தாலும், வாய்க்கால்கள், கால்வாய்கள், ஆறுகள், சாலைகள், காடுகள் என்று எதுவாக இருந்தாலும் அதில் ஏதாவதொரு கட்டடத்தைக் கட்டி அல்லது தொண்டர்களுக்கு வழங்கி அரசியல் பொருளியல் ஆதாயம் காணும் மரபை ஊக்கி வளர்த்து வைத்திருக்கும் கருணாநிதி தன் தோழர்கள் வாழும் மலேசியாவிலிருந்து வந்த மூலதனத்தைக் கொண்டு செயல்படுத்திய பறக்கும் தொடர்வண்டித் திட்டத்தைச் சென்னை மாகர எல்லைக்குள் ஓடும் ப.வாய்க்காலின் மீது அமைத்துத் திருப்பணி புரிந்துள்ளார். ஆட்சியாளர்கள் விரும்பினால் எந்த நிலத்தையும் கையகப்படுத்தவும் எந்தக் கட்டடத்தையும் இடிக்கவும் அதிகாரம் உள்ளது. இந் நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக ம் மூதாதையர் உருவாக்கி வைத்துள்ள குமுகத்தின் உயிர்நாடியும் மதிப்பிட முடியா அருஞ்செல்வமுமான இது போன்ற உள்கட்டமைப்புகளை அழித்த, அழிக்கும் அரசியல் கயவாளிகளைத் தண்டித்தே ஆக வேண்டும்.

            ப.வாய்க்காலைப் பற்றி பொதுப்பணித்துறையினரிடம் சரியான செய்திகள் இல்லை; கிடைக்கும் செய்தி அது நாகப்பட்டினம் வரை செல்கிறது என்றும் அதற்கு அப்பால் வேதாரண்ணியம் வாய்க்கால்(வே.வாய்க்கால் – V.canal) கோடியக்கரை வரை செல்வதாகவும் பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். பழையாற்று மக்களோ அது குமரிவரை செல்கிறது என்கின்றனர். இது அங்கு நிலவும் பழமரபின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

            பொன்னியின் செல்வன் புதினத்தில் கதைத் தலைவன் அருள்மொழிவர்மன்(பின்னர் இராசராசன்) கடலில் புயலில் சிக்கி காய்ச்சலில் விழுந்தபோது அவனது தோழன் வந்தியத்தேவன் கோடியக்கரையிலிருந்து அவனை இந்த வாய்க்கால் வழியாக நாகப்பட்டினம் புத்த விகாரைக்கு யாருமறியாமல் கொண்டு சேர்ததாக ஆசிரியர் கல்கி எழுதியுள்ளார். இந்த வாய்க்கால் பற்றி உள்ளூர் உசாவல் ம்ற்றும் ஆவணங்களை ஆய்ந்து தான் இதனை அவர் எழுதியிருப்பார் என்பது உறுதி.

            ஆங்கிலர் தம் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் ஆறுகளிலிருந்து வாய்க்கால் தோண்டி ஏற்கனவே இருந்த கடற்கரையைத் தழுவி ஓடிய பழைய வாய்க்காலில் இணைத்துள்ளனர் என்பதே உண்மை. தூர்ந்து கிடந்த பழைய வாய்க்காலை பிச்சாவரம் வரையோ பொ.ப.து. செயற்பொறியாளர் குறிப்பிட்டது போல் பறங்கிப்பேட்டை வரையோ தூரகற்றி வாய்க்காலைப் படகுப் போக்குவரத்துக்கு மீட்டிருக்கலாம். அது போலவே திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவும் அ.வி.மா. வாய்க்காலைச் சீர்செய்திருக்கலாம். கன்னியகுமரி சென்று திரும்புவதற்கு இவ் வாய்க்காலை திருவிதாங்கூர் மன்னர்கள் பயன்படுத்தியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு பண்டைத் தமிழகத்தின் இரு கடற்கரைகளிலும் மணல் தேரித் தொடரையும் வாய்க்கால்களையும் உருவாக்கியதில் கடற்கோள்களிலிருந்து தமிழகத்தில் கரையேறிய சேர, சோழ, பாண்டியர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு இருந்திருக்கும். இதைக் கள ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்.

            அது போலவே கடலினுள் ஒரு கப்பல் பாதையும் இருந்ததற்கான சுவடும் உள்ளது. குமரி முனைக்குத் தெற்கே ஏறக்குறைய10 அ.மா. தொலைவில் கப்பலோடை என்ற ஒன்று இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். முன் நாட்களில் அங்கு கப்பல்கள் நின்று நங்கூரம் பாய்ச்சி படகுகள் மூலம் பண்டங்களை ஏற்றியும் இறக்கியும் சென்றதாகவும் கூறுகின்றனர். குமரிக் கடற்கரையில் பாறைகள் செறிந்துள்ளதால் இந்த ஏற்பாடு என்று தோன்றுகிறது. இந்தக் கப்பலோடை அமைப்பதற்காக ஆழம் குறைந்த கடற்பகுதிகளைத் தோண்டி ஆழப்படுத்தியதைக் குறிக்கவே வங்கக் கடலைத் தொடுகடல்(தோண்டப்பட்ட கடல்) என்று புறநானூறு 6ஆம் பாடல் கூறுகிறது. குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும், அதாவது கரையைக் கரைக்க இடைவிடாது தாக்கிக் கொண்டிருக்கும் கடல் என்ற அடைமொழியை நோக்க.  தொல்பழங்கால்ந்தொட்டு பெரும் கடலோடிகளாக இருந்த தமிழர்கள் தங்கள் புதிதாகக் குடியேறிய இன்றைய தமிழகத்தின் கடற்கரை நெடுகிலும் கப்பல் ஓடுவதற்கான பாதை ஒன்றை வகுத்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். இது பற்றிய ஒரு கண்ணோட்டம் இருந்திருந்தால் சேதுக் கால்வாய்த் திட்டப் புலனாய்வுகளின் போது அதை ஆய்ந்திருக்கலாம்.[8]
   
            ஆனால் அறிவியலில் ஓங்கி வளர்ந்துவிட்டதாக செயகரன் போன்றோர் மார்தட்டும் இந் நாளில் 2004 திசம்பர் 26 ஓங்கலையின் பின்னர் மீண்டும் ஓங்கலை தாக்கினால் மக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பதற்கு அல்லது அதன் தாக்குதலில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கென்று அரசும் அதரற்கு அறிவுரை கூறிய மெத்தப் படித்த பொறியியல் மேதைகளும் எந்தத் திட்டத்தையும் தரவில்லை; எதாவது செய்ய வேண்டுமென்று கூட நினைக்கவில்லை. ஓங்கலையின் வெறித்தாக்குதலிலிருந்து உயிர் தப்பினாலும் அந்தக் கிலியிலிருந்து மீளாத பச்சிளங் குழந்தைகளையும் பெண்டிரையும் பிறரையும் அதே கடற்கரையில் மீண்டும் குடியமர்த்தவே திட்டமிடுகின்றனர்.
           
            2005 அக்தோபரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஓங்கலை அழிவு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுசாரா அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் குழுவின் தலைவராகச் செயற்படும் விவேகானந்தன் என்பவர், தொடக்கத்தில் மீனவர்களைக் கடற்கரையிலிருந்து தொலைவில் குடியமர்த்துவதற்கான ஊக்குவிப்புகளைப் பற்றிச் சிந்தித்ததாகவும் இப்போது அவர்களை மீண்டும் கடற்கரையை ஒட்டிய பழைய அல்லது புதிய கடற்கரைக் குடியிருப்புகளிலேயே அமர்த்துவதற்கான ஊக்குவிப்புகளைத் தாங்கள் சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  

            இந்த விவேகானந்தன் தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமாவார். கடற்கரைக் குடியிருப்புகளிலுள்ள மீனவர்கள் பிடித்து வரும் மீனைச் சந்தைப் படுத்துவதில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படும் இந்தக் கூட்டமைப்பில் கோடிக்கணக்கான பணம் உள்ளதாம். மீன் தொழில்நுட்பம் மேம்படுவதும் மீனவர்களின் வாழ்க்கைத் தரமும் பண்பாட்டு மட்டமும் உயர்வதும் இவர் போன்றோரின் மேலாளுமைக்கு அறைகூவலாகவல்லவா முடியும்? அதனால்தான் இந்த நிலைப்படு போலும்.

            இவ்வாறு ஓங்கலை தாக்கிய மாவட்டங்களிலெல்லாம் கடற்கரையை அடுத்து மழை வெள்ளத்தில் மூழ்கும் இடங்களென்றும் பாராமல் நிலம் கையகப்படுத்துகிறர்கள் ஆட்சியாளர்கள். இவர்களது மறைமுக ஏமான்(எசமான்) உலகவங்கி, கட்டயப்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாதென்று பொதுப்படையாகவும் அவ்வாறு செய்ய நேர்ந்தால் நிலத்தைத் தருவோருக்குப் பண இழப்பீட்டுடன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டிய மாற்று ஏற்பாட்டையும் செய்ய வேண்டும் என்றும் ஒரு வரயறையை வைத்துள்ளது. வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கென்று உதவி வழங்கவும் அது ஆயத்தமாக உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் எதிர்ப்பு எதுவுமின்றி நிலம் கையகப்படுத்துகிறோம் என்று எதற்கும் உதவாத தாழ்நிலங்களையும் அங்கு குடியமர இருக்கின்ற மக்களின் உடல்நலனுக்கு ஏற்காத உவர் நிலங்களையுமே வாங்குகின்றனர். சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு ஆளும் கட்சிக்குப் பணம் திரட்ட இது ஓர் உத்தியாகும் என்பது நேர்மையாகச் செயரற்பட விரும்பிய,பண உதவி செய்யும் ஒரு சில நிறுவனங்களின் மனக்குறை.

            இந்த மூவரண் பாதுகாப்பை நாம் மீட்டாக வேண்டும். தினமலர் கூட்டத்துக்கு வேண்டுமானால் நீர்வழிகள் தேவையில்லாமலிருக்கலாம். மக்களுக்குக் கட்டயம் வேண்டும். கடலில் செல்பவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்து நம் கடற்பரப்பை  நிலையாக அயலவர் ஆதிக்கத்தினுள் வைத்திருக்க மனுச்சட்டம் வகுத்தவர்களின் வழி வந்தவர்களல்லவா அவர்கள்?

            நம் இலக்கியங்கள், உரைகள் தரும் வரலாறுகள் மூலம் பண்டைக் கடற்கோள்கள் பற்றி அறியும் நமக்கு நம் கண் முன்னால் எழுந்து தாக்கிய ஓங்கலை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால  தடுப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எமக்கு எழுந்த சிந்தனைகளை இங்கு பகிர்ந்துகொண்டோம். எமது புதுமையர் அரங்கம் அறக்கட்டளையும் கந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையிடம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளோம். குமரி மாவட்டத்திலுள்ள வள்ளியாற்றின் கரையிலிருந்து இராசாக்கமங்கலம் பன்றியாற்றின் கரைவரை தேரியை உருவாக்கி அதன் மீது ஒரு நால்வழிப் பாதை அமைக்கவும் அதன் இரு சாய்வுகளிலும் தென்னை மரங்களையும் பிற பாதுகாப்பு நிலைத்திணைகளை(தாவரங்களை)யும் வளர்க்கவும் அ.வி.ம.வாய்க்காலை மீண்டும் தோண்டவும் உள்நாட்டுடன் கடற்கரையை இணைக்கும் சாலைகளை,வாய்க்காலில் செல்லும் படகுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் உயர்ந்த மேம்பாலங்களில் கொண்டு செல்லவும் ஆன திட்ட மதிப்பீடு செய்வது இதன் நோக்கம். இந்தக் கட்டமைப்புக்கு வெளியே, அதாவது நிலநோக்கிய திசையில் தான் குடியிருப்புகள் இருக்கும். இத் திட்டத்துக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளது[9]. அடுத்த கட்டமாக உள்நாட்டு நாவிக வாய்க்கால் ஆறுகளைக் கடக்கும் இடத்தில் வீங்கலைகளின்(ஓதங்களின்) போதோ சூறாவளிகளின் போதோ ஓங்கலைகளின் போதோ கடல்நீரின் தாக்குதல் விசையை மட்டுப்படுத்தும் வகையில் வாய்க்காலினுள் சிறிது உட்புறம் சென்று துறைமுகங்கள் அமைப்பதற்கான ஒரு மதிப்பீட்டுத் திட்டம் உருவாக்கும் எண்ணம் உள்ளது.

            இலக்கியக் குறிப்புகள் குறித்துச் சில விளக்கங்களைத் தரவேண்டியது என் கடமை என்ற குறிப்புடன் தொடங்கும் செயகரன், இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள் வரலாற்றுக் காலத்திலும் வரலாற்றுக்குச் சற்றே முற்பட்ட காலத்திலும் நிகழ்ந்தவை என்று கூறுகிறார். வரலாற்றுக் காலம் என்பது புதிய புதிய வரலாற்றுக்க் கருப்பொருட்கள் கண்டுபிடிக்கும் போதெல்லாம் மாறக்கூடியது. அதனால் ஒவ்வொரு நாட்டிலும் அந் நாட்டின் வரலாற்றாய்வு வளர்ச்சிக்கேற்ப வெவ்வேறாக இருக்கும். ஒரு மிகச் சிக்கலான வரலாறு தொடர்பாக நூலெழுதப் புகுந்த இவர் பொருளற்ற இது போன்ற சொற்களைக் கையாளுவது நாணத்தக்க ஒரு தந்திரமாகும்.

            புவியியங்கியலில் மட்டுமல்ல நிகண்டு எனப்படும் அகராதியைக் கையாளுவதில் கூடச் சிக்கல். அவனிவகைகளை விளக்கும்பிங்கல நிகண்டு பைதிரம், மண்டிலம், பாடி,தேயம், தண்ணடை, நீவரம், கோட்டம், சனபதம், சும்மை, அகலுள், கண்டம், மேணி, இராச்சியம், உலகு, நாடென்ப என்று கூறும் செய்யுளைக் காட்டி கண்டம் என்றால் நாடு என்பதுதான் பொருள் என்று ஓங்கி ஒரே போடகப் போட்டுவிடுகிறார். அவர் கூற்றுப்ப்டியே, நிகண்டு கூறுவது நாடென்ற சொல்லின் பொருளை அல்லது அந்தப் பொருள் தரும் பிற சொற்கலையல்ல;
                              பெரியது உலகு
                             அதன் உட்பிரிவு கண்டம்
                             அதன் உட்பிரிவு பைதிரம்
                             அதன் உட்பிரிவு மண்டிலம்
                             அதன் உட்பிரிவு தேயம்
என்றவாறு பல்வேறுகைப்பட்ட நிலப்பரப்புகளைத் தொகுத்துக் கூறுவதே அச் செய்யுள். அவர் கூறுவது போல் எடுத்துக் கொண்டாலும் உலகு என்ற சொல்லும் அத் தொகுப்பில் உள்ளதே; எனவே உலகு என்ற சொல் வரும் இடங்களிலெல்லாம் அதற்கு நாடு என்ற ஒரே பொருளை மட்டும் கொள்வாரா?
           
உலகிலுள்ள எந்த மொழியிலும் ஒரே சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுக்கு ஒரே பொருளும் இருப்பது இயல்பு.(பிரஞ்சு மொழி மட்டும் இதற்கு விதிவிலக்கு என்பர். அங்கு ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் வழங்குகிறதாம். அதனால் ஒன்றிய நாடுகளவையில் அதுதான் ஆவண மொழியாக உள்ளதென்கின்றனர்.) எனவே அகராதியைக் கையாள்வோர் தாம் வினையாடும் சூழ்நிலைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கு நல்ல தெளிவான சிந்தனையும் உண்மை நாட்டமும் வேண்டும். அவரிடம் அந்த இரண்டும் இல்லை என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். ஆனால் தனக்கு ஓதப்பட்ட  குமரி எனும் நிலநீட்சி என்ற மந்திரத்தை உருப்போடும் பணிக்கு மிகுந்த நாணயத்துடன் செயல்பட்டிருக்கிறார்.

"நாடு  என்பது  இன்றைய ஒரு மாவட்டம் - வட்டத்துக்குச் சமம்" என்று பேரா.க.ப. அறவாணன் கூறுவதைக் காட்டிவிட்டு, 49 ஊர்கள் என்றே கொள்ள வேண்டும் என்பது இன்னொரு கருத்து என்று சேர்த்துச் சொல்கிறார் திருவானர் சு.கி.செயகரன்.

            “....மாவட்டம், வட்டத்துக்குச் சமம்“ என்றால் மாவட்டமும் வட்டமும் சமமா? மாவட்டம் அல்லது வட்டம் என்பதற்கு ஏதாவது வரையளவு உள்ளதா? 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு எனும் மாநிலம்,
1.       சென்னை,
2.       செங்கல்பட்டு,
3.       வடாற்காடு,
4.       தென்னாற்காடு,
5.       திருச்சி,
6.       நீலகிரி,
7.       சேலம்,
8.       கோயம்புத்தூர்,
9.       மதுரை,
10.   புதுக்கோட்டை,
11.   இராமநாதபுரம்,
12.   திருநெல்வேலி,
13.   கன்னியாகுமரி
என்ற 13 மாவட்டங்களாக இருந்தது இப்போது 29 மாவட்டங்களாக உள்ளது தொடர்ந்து அந்த எண்ணிக்கை பெருகிக்கொண்டும் செல்கிறது. அப்படியானால் தமிழ்நாடு 2 ³₁₃ மடங்கு “வளர்ந்து, விரிந்து“ அந்த வளர்ச்சி தொடர்கிறதா? இராதாபுரம் வட்டம் பிரிவதற்கு முன் நாங்குனேரி வட்டம் குமரி மாவட்டதை விடப் பரப்பில் பெரிதாக இருந்தது. நாடு என்று எடுத்துக் கொண்டால் கூட போப் ஆளும் வத்திக்கனும் ஒரு நாடுதான்; சீனமும் ஒரு நாடுதான். இவை ஒரு தன்னாட்சித் தலைவர் அல்லது அரசரின் கட்டுப்பாட்டில் இருப்பவை. முறப்பநாடும் வல்லநாடும் கூட நாடுகள்தாம். ஆனால் அவை ஒரு காலத்தில் நாடான்கள் அல்லது நாட்டார்கள் என்ற அதிகாரிகளின் ஆட்சி எல்லைகள். இவ்வாறு நாடு என்ற வெறும் சொல்லை வைத்துக்கொண்டு முழுகிய பரப்பைக் கணித்துவிட முடியாது. அது போல் எந்தத் துறையாயிருந்தாலும் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களில் சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பதற்கு அச் சொல்லைக் கையாண்டுள்ள இடம், அது இடம்பெற்றுள்ள சூழல், பிற குறிப்புகள் ஏதாவதிருந்தால் அது முதலிய பல கோணங்களில் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும். “அறிவியல்“ அடிப்படையிலும் “நடுநிலை“யாகவும் “புதிய அணுகலிலும் கூறுகிறோம் என்றோ புதுமையாகச் சொல்கிறோம் என்றோ நினைத்தோ யாருக்கோ மகிழ்வூட்டவோ ஆதாயங்களை எதிர்பார்த்தோ சகட்டுமேனிக்குப் பொருள் சொல்லக் கிளம்பிவிடுவதோ அப்படிப்பட்ட உரைகளை மேற்கொள்வதோ அறிவும் நாணயமும் உடையவர் செயலல்ல.

            உரையாசிரியர்கள் வெறுமே நாடுகள் என்று சொல்லியதுடன் நிற்கவில்லை. முழுகிய நிலப் பரப்பின் விரிவைப் புலப்படுத்தும் வகையில் அதன் நீளத்தையும் தந்திருக்கின்றனர். அது அவ்வளவுதான் இருந்திருக்க வேண்டும் இவ்வளவுதான் இருந்திருக்க வேண்டும் என்று க.ப.அறவாணனும் என்.சுப்பிரமணியனும் கூறியிருக்கிறார்களென்றால் உரையாசிரியர்கள் கூற்றை மறுக்க அவர்கள் முன்வைத்த சான்றுகள் என்னென்னவென்று நூலாசிரியர் காட்டியிருக்க வெண்டும். அவை மிகை என்று மனம்போன போக்கில் கூறினால், அவை குறை, முழுகிய நிலப்பரப்பு மிகுதியாக இருக்கும் என்றும் சிலர் வாதிடக்கூடும். அறவாணன் வகையறாக்கள் கூற்றை ஏற்றுக்கொண்டு ஒப்புவிக்கும் செயகரன் இப்படி யாராவது கூறினாலும் ஏற்று மதிப்பாரா? தான் புவியியங்கியல் சான்றுகள் தரப்போவதாக அவர் வாதிடலாம். அவற்றின் அழகையும் நாம் பார்க்கத்தானே போகிறோம்!


1 பேரா. இரா. மதிவாணன் போன்ற வெள்ளாளக்கட்டு அறிஞர்கள் குமரிக் கண்டம் என்ற பெயர் ஒரு பெண்ணின் பெயரிலிருந்து வந்தது என்பதையோ மனித நாகரிக வளர்ச்சியில் பெண்களுக்கு ஒரு முன்மையும் முதன்மையுமான பங்கு இருந்தது என்பதையோ ஏற்றுக்கொள்ள மனமின்றி, குமரி என்பது காடுகளை எரித்து புதிய வேளாண் நிலங்களை உருவாக்கும் நடைமுறையைக் குறிக்கும் சொல் என்றெல்லாம் கூறுகின்றனர்.பார்க்க: லெமுரியா முதல் அரப்பா வரை
[2] தைப் பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும் என்ற நூலாசிரியரின் கட்டுரை பார்க்க- இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள். வானியல், குமரிமைந்தன்,வேங்கை பதிப்பகம், மதுரை 2004.
[3] ஓங்குநீர், ஓங்கல், வீங்குநீர் என்ற சொற்களைப் பழம் புலவர்கள் கடலைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.வீங்கலை என்பதை உலகை நாளொன்றுக்கு இருமுறை சுற்றிவரும் ஓதம் எனப்படும் ஏற்ற(Ebb or high tide)அலையையும் ஓங்கலை என்பது கடலின் அடியில் ஆற்றலைச் சுமந்து பெருவிரைவோடு வந்து கடலடித்தரை உயரும் இடத்தில் பனை போல் ஓங்கி உயர்ந்து கரையைத் தாக்கும் சுனாமி எனப்படும் அலையையும் குறிப்பதாகக் கொள்ளலம்.  
3இந்த ஓங்கலையில் உயிரிழந்தவர்களின் உற்றார் உறவினர்கள் துயரத்தில் ஆழ்ந்துகிடக்க, அவர்கள் பெயரால் சிலர் மீட்புத்தொகைகளைப் பெற்றுக் கொண்டனர். துயரத்திலிருந்து ஓரளவு மீண்டு மீட்புதவி கேட்கச் சென்றபோது நடந்ததை அறிந்து “இவன்களைக் கடல் இன்னொரு முறை வந்து ‘கொள்ளும்’ “ என்று இரு மீனவர்கள் தமக்குள் குமுறிக்கொண்டதை நண்பர் ம.எட்வின்  பிரகாசு கேட்டதாகக் கூறினார்.  
[5] திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை,19
* தேரி எனப்படும் இந்தச் சொல் குமரி மாவட்டத்துக்கு வெளியே வழக்கிலில்லை. அங்கு கூட இந்தத் தலைமுறையினருக்கு இச்சொல் தெரியவில்லை. முன் தலைமுறையினரில் பலரும் கூட மறந்து விட்டது போல் தெரிகிறது. நெல்லை மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நாகரிகச் சுவடுகளைத் தேரி நாகரிகம் என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பதைக் காண்க. சென்ற நூற்றாண்டில் வழக்கில் இருந்த இந்தச் சொல் இன்று முற்றிலும் மறைந்துள்ளது.
[6] இன்று பழையாறு என்ற பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு பழைய நகரமோ ஊரோ இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லை. இப்போது அங்கு குடியிருக்கும் மீனவர்கள் ஓர் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான் தாம் அங்கு குடியேறியதாகக் கூறுகிறார்கள். அங்கு பழங்காலக் குடியிருப்புகளின் தடயம் எதுவும் இல்லை. ஆனால் தஞ்சைப் பெரியகோயிலில் காணப்படும் இராசராசனின் கல்வெட்டில்  பழையாற்றிலிருந்து வடதளி, தென்தளி, பழையாற்று முள்ளூர் நக்கன் தளி, அரையெருமான் தளி ஆயிரத்தளி ஆகிய கோயில்களிலிருந்தும் அவனிநாராயணபுரம், சங்கீசுவரம் ஆகிய பகுதிகளிலிருந்தும்  பெரியகோயிலில் பனிசெய்வதற்காகக் குடியேற்றிய தளிச்சேரிப் பெண்களுக்கு வழங்கப்படவேண்டிய நிவந்தங்கள் பற்றிய செய்தி தரப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த இவ்வளவு பெரிய ஓர் ஊர் அல்லது நகரம் கடலில் முழுகியே இருக்க வேண்டும். பார்க்க கருணாமிர்தசாகாம், முதற்பாகம், மு. ஆபிரகாம் பண்டிதர், தஞ்சாவூர், 1917, பக். 157-168. இவ்வூர் முழுகியது பற்றிய செய்தி எங்கும் பதிவாகியிருக்கவில்லை.

[7] வாய்க்கால் மேட்டுநிலத்திலிருந்து தாழ்நிலம் நோக்கிப் பாய்ந்தால்தான் அதாவது உள்நாட்டில் ஆறுகளிலிருந்து கடற்கரை நோக்கி ஓடும் வாய்க்கால்களில்தான் இந்த அமைப்புகள் தேவைப்படும். உள்நாட்டுச் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக ஏற்கனவே கடற்கரையில் ஓடிய வாய்க்காலுடன் ஆறுகளில் உள்நாட்டிலிருந்து வாய்க்கால் தோண்டியதுதான் ஆங்கிலர் செய்த பணியாக இருக்கக்கூடும். 1890களில்  தொடங்கிய பெரியாற்று அணைக் களத்துக்குத் தேக்கடியிலிருந்துள்ள 12 அ.மா. தொலைவைக் கடக்க இது போன்ற வீழ்ச்சிகளையும் பூட்டிகளையும் அமைத்திருந்தனர்       பொ - ர்.பென்னிக்குயிக்கு தலைமையில் இயங்கிய குழுவினர். இன்று கேரள சுற்றுலாத்துறையினரின் கெடுபிடிகளாலும் தமிழகப் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான படகை இயக்கும் தேக்கடியிலுள்ள தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பாராமுகத்தாலும் அணையின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அணைக்களத்திலிருந்த பணியாளர்கள் பெரும் இடர்படவேண்டியிருந்தது 1980 களின் நிலை.
[8] இந்தியா போன்ற பரந்து விரிந்த, முப்புறம் கடலால் சூழப்பட்ட, நூறுகோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட, வல்லரசாக வளரக் கனவு காணுமாறு மிகப்பெரிய’ ‘அறிவியல் மேதையால் ஏமாற்றுப் பரப்பல் செய்யப்படுகின்ற இந்தியாவின் கடற்கரை நெடுகிலும் சுற்றிவருவதற்கு ஒரு கடற்பாதை இல்லை. ஒரு மாநிலத்தின்(தமிழகத்தின்) இரு கோடிகளையும் இணைக்கும் விளைவைக் கொண்ட சேதுக் கால்வாய்த் திட்டத்தைக் கூட எதிர்க்கிறார்கள் தினமலர் வகையறாக்கள். அவர்களின் பின்னணியில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுநலன்கள் செயற்படுகின்றன. இதற்கான மூலதனம் மலேசியாவிலிருந்து வருவதால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்த எதிர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளன. அமெரிக்க மூலதனமாயிருந்தால் நம் பொதுமைக் கட்சியினர் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்திருப்பர். உருசிய மூலதனத்தில் உருவாவதுடன் அதன் படைத்துறை நலன்களுக்குப் பயன்படும் என்பதாலும் வாளாவிருப்பது போல் இங்கும் வாளாவிருக்கின்றனர். கொழும்புத் துறைமுகத்தின் வருவாய் பாதிக்கும் என்பதால் இலங்கை அரசுக்கும் இந்த எதிர்ப்பில் பங்குண்டு. இது கருணாநிதியின் குடும்ப நலன்களுக்கு உகந்தது என்பதுடன் அவரது ஆட்சியின் அரும்பணிகளுள் ஒன்றாக மதிக்கப்பட்டுவிடும் என்பதால் செயலலிதா இந்த எதிர்ப்பில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

            இன்று தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளும் பிடிக்கப்படும் மீனும் மற்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ பொருட்களும் இக்ன்கு உரிய கடல்வழி இல்லாததால் கேரளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு பக்குவப்படுத்தப்பட்டு அங்குள்ள துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் அங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகப்பெரும் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே கேரளத்திலுள்ள பொருளியல் நலங்களின் பின்புலமும் தினமலருக்கு உண்டு அதனால் அது இங்கு சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரது போதும் புதிய கடல்வழியெல்லாம் தேவையில்லை என்று புதிய வேதம் படிக்கிறது. கடற்கரையை ஒட்டிய மக்கள் வளம்பெற்றால் தங்கள் ஆதிக்கத்துக்கு அறைகூவல் என்ற அச்சத்தால் கடற்கரைவாழ் மக்களை ஒடுக்கி கடற்கரையைப் புறக்கணித்ததால்தான் கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இ ம்மாபெரும் நாடு சின்னஞ்சிறு நாடுகளுக்கும் பாபர் போன்று ஆயுதம் தாங்கிய ஒரு குண்டர் கூட்டத்தைத் திரட்ட முடிந்த தனியாட்களுக்கும் கூட  அடிமைப்பட நேர்ந்தது. அப்படி அடிமைப்பட்டாலும் கேடில்லை உள்நாட்டு மக்கள் மீதுள்ள தங்கள் மேலாளுமை நிலைத்தால் போதும் என்ற நம் நாட்டு ஆட்சியாளர்கள் அவர்களின் கூட்டாளிகளான ஒட்டுண்ணிகளின் நாட்பட்ட சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதைத் தான் தினமலரின் பின்னணியிலுள்ள உள்நாட்டுக் கும்பல்களின் செயல்கள் பறைசாற்றுகின்றன.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  
                                                                                                                                                                                                     
[9] இந்தத திட்டம் செயலுக்கு வரவில்லை.

0 மறுமொழிகள்: