என் கேள்விக்கென்ன விடை?



11.என் கேள்விக்கென்ன விடை?
           
            அடுத்து நம் புவியியங்கியல் புலி பூமி ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் எழுதுகிறார். கதிரவன், புவி உட்பட கதிரவனின் கோள்களின் தோற்றம் பற்றிய இன்றைய கருத்து என்ற ஒரு தரப்புக் கருத்திலிருந்து தொடங்கி வழக்கம் போல் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டினுள் காலூன்றுகிறார். அதாவது புவியுடன் கதிரவ மண்டலத்தின் பிற கோள்களின் உருவாக்கத்துக்கும் கதிரவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் அவை வெடித்த விண்மீன் கூட்டத்தின் சிதறல்கள், ஈர்ப்பு சக்தியால் மெல்லத்திரண்டு ஒரு தீக்கோளமாக உருவாகின. விண்கற்களின் தாக்கம், சேர்க்கை, அணுக்கதிர் வீச்சு ஆகிய செயல்களால் வெம்மையடைந்திருந்த இக்கோளம், குளர்ந்து 12,600 கி.மீ. விட்டமுடைய பூமியாக ஆனது. இது போலவேதான் சூரிய மண்டலத்திரலுள்ள இதர கோள்களும் உருவாயின”.  நீர்மக் குழம்பாயிருந்த புவி குளிர்ந்த போது நியூட்டன் கூறியது போல் காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் போல் புவியின் மேலோடு மேடும் பள்ளமுமாக உருவாக பள்ளங்களில் கடலும் மேடுகளில் நிலப்பரப்பும் உருவாயினவாம். ஆனால் எனக்கொரு ஐயம் கொதித்துக்கொண்டிருந்த குழம்பாக இருந்த புவியின் புறத்தேயுள்ள விண்வெளியில் இருந்த மின்னணுக்கள் இணைந்து தீவளி(பிராணவாயு எனப்படும் உயிர்வளி), நீர்வளி(ஐட்ரசன்) ஆகியவை உருவாகி அவையும் இணைந்து நீராவியாகி அதுவும் குளிர்ந்து மழையாகி புவியை நோக்கி வரவர புவிச்சூழலின் வெப்பம் அதை மீண்டும் நீராவியாக்கி மேலே துரத்த அதில் தானும் கொஞ்சம் குளிர்வடைய ஒருவாறு ஒரு கட்டத்தில் மழைநீர் புவியைத்தொட்டு குளிர்விக்கும் தன் பணியைத் தொடர்ந்து அதன் மூலம் புவியின் மேலோடு உருவாகியிருக்கலாமல்லவா?

இன்றும் புவி வெப்பமாதல் என்பதைக் காட்டி உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்குக் கைகொடுக்கும், கதிரவனிலிருந்து இடைவிடாமல் வெளிப்படும், வெப்பம் மட்டும் ஏன் நான் மேலே கூறியிருப்பது போன்ற ஒரு நிகழ்முறையில் குறையவில்லை? கதிரவனில் செயல்படும் இடைவிடாத அணுவெடிப்புகள்தாம் காரணம் என்பது நமக்குத் தெரியும். அப்படியானால் இன்று கதிரவனைச் சுற்றி அதன் ஈர்ப்பு விசையால் அதனைச் சுற்றிவரும் இன்றைய கோளங்கள் அவர் கூறுவது போல், ‘வெடித்த விண்மீன் கூட்டத்தின் சிதறல்கள்’, அப்படிச் சிதறல்களாக இருக்கும் போதே ஏன் கதிரவனுடன் இணைந்துகொள்ளவில்லை? மிகுந்த தொலைவில் வேண்டிய ஈர்ப்பாற்றல் இல்லாமை காரணமாகலாம், அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் கூட்டணி மவுசுபோல். அப்படியானால், சிதறல்களாக இருந்தவை ஒன்றோடொன்று இணைந்து சுற்றி இருந்த சிதறல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்க அந்தப் புது மொத்தைக்கு சிறிது சிறிதாக ஓர் ஈர்ப்பு விசை உருவாக அதற்கும் கதிரவனின் ஈர்ப்பு விசைக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டு கதிரவன் தன் அணுவுலையிலிருந்து புவிக்கு இடைவிடாது வெப்பத்தை வழங்கிவருகிறது என்று சொல்ல்லாமா? ஆக, இப்படி தன்னந்தனியாக துறவு வாழ்க்கை வாழ்ந்த கதிரவனுக்கு ஒரு குடும்பம் அமைந்துவிட்டது. அந்தக் குடும்பமும் ஒரே நேரத்தில் உருவாகியிருக்க முடியாது இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால். இந்தக் கேள்விக்கு நமக்கு விடையும் தேவையில்லை நாம் எடுத்துக்கொண்ட நோக்கத்திலிருந்து பார்த்தால்.

   
            இப்போது அவர் காட்டும் புவிக் கோளத்தினுள் போவோம். மேலோடு எனப்படும், நிலப்பரப்பு, கடலடித்தரை இரண்டையும் சேர்த்து ஏறக்குறைய 8 மைல்கள் அதாவது 12.6 கிலோ மீற்றர்கள் ஆழம். அதற்கு அடுத்து 100 கிலோமீற்றர் ஆழத்திலும் 250 கிலோமீற்றர் ஆழத்திலும் இரண்டு அடுக்குகளும் அவற்றுக்கும் கீழேஇடைப்பட்ட பகுதி (வெப்பமான இளகிய பகுதி, வெப்பச்சலனம் ஏற்படும் பகுதி)” என்று கொடுத்திருக்கிறார். அந்த 350 கி.மீ. என்ன வென்று தெரிவதற்காகவே இப்படத்தை வலைத்தளத்திலிருந்து எடுத்தேன்.

100 கிலோ மீற்றர், அதாவது 60 மைல் சராசரி கனமுள்ள பாறை அடுக்குக்குக் கீழே வலுவற்ற அடுக்கு என்ற பொருடள்படும் 700 கி.மீ. அதாவது 430 மைல்கள் கனமுள்ள  ஆத்தனோபியர்(asthenosphere) உள்ளது. இது அழுத்தினால் வழியும் குழம்பு போன்றது. அதற்குக் கீழே கீழ்ப் போர்வை(lower mantle) எனப் பொருள்படும் இறுக்கமான களிம்பு போன்ற அடுக்கு உள்ளது. The Mystery of the Mantle of the Earth என்ற நூல் புவியின் போர்வை வழிந்தோடும் குழம்பு
  


போன்றதா அல்லது களிம்பு போன்று சிறிது சிறிதாக இழிகின்ற ஒன்றா என்ற கேள்வியை உலகில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களின் போது வெளிப்பட்ட பாறைக்குழம்புகளின் செயற்பாட்டின் அடிப்படையில் எழுப்பியது. இப்போது இரண்டில் எது வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்று தோன்றுகிறது. அது இப்போது இங்கு முகாமையல்ல. திருவாளர் செயகரனின் குமரி நிலநீட்சி பக்கம் 86இல் தாளின் படம் போட்டு விளக்கியிருப்பது போல் கீழே இருந்து மேல் நோக்கித் தள்ளுந்தோறும் இரண்டு பக்கங்களிலும் உள்ள தாளின் முனைகள் நகர்வது போல் குமரிக் கடல் ஆகிய இந்து மாக்கடலில் எங்கே கண்டத்தட்டுகளின் வெடிப்பு அல்லது சந்திப்பு இருக்கிறது? பக்.70இல் உள்ள படத்தைப் பாருங்கள். ஆப்பிரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்துக்கும் இடைப்பட்ட ஒரு வெடிப்பு உள்ளது. அது தெற்கில் கிழக்கு நோக்கித் திரும்பி ஆத்திரேலியாவுக்குத் தெற்கே செல்லுகிறது. ஆக இந்த வெடிப்பு ஆத்திரேலியாவை வடக்கு நோக்கி நகர்த்தியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தோனேசியாவின் தெற்கு, மேற்கு எல்லைகளைத் தொட்டு ஒரு கண்டத்தட்டு சந்திப்பு இருக்கிறதே அதிலிருந்து நான் மேலே குறிப்பிட்ட எந்தக் குழம்பும் மேலேறி வந்து இந்தோனேசியாவை வடக்கிலும் கிழக்கிலும் நகர்த்தவில்லையே! இங்கே திருவாளர் படம் போட்டுக்காட்டிய குழம்பு வெளிப்பட்டு கடலடித் தரையை நகர்த்தும் நிகழ்முறை செயல்படவில்லையே! இங்குதானே அடியார்க்குநல்லார் குறிப்பிடும் தென்பாலிமுகம் இருந்திருக்கிறது! அந்தப் பேரழிவுக்கு அப்புறம் கீழேயிருந்து குழம்போ களிம்போ வெளிப்படவில்லையே. அது போல்தானே ஒரு புறம் வட, தென் அமெரிக்காக்களின் மேற்கு எல்லை நெடுகிலும் கிழக்குக் கோடியையும் இந்தியக் கண்டத்தட்டு எல்லையில்
மேற்குக்கோடியையும் கொண்டுள்ள அமைதிவாரி(பசிபிக்) கண்டத்தட்டை ஒட்டியும் குழம்போ களிம்போ மேலேறி வந்து அமெரிக்காவையோ இந்தோனேசியாவையோ நகர்த்திச் செல்லவில்லையே ஏன்? இந்தக் கேள்வியை வாக்கினர் கொள்கையைத் திறனாய்ந்தவர்கள் அல்லது குறை சொன்னவர்கள் எவராவது சுட்டிக்காட்டினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நம் புவியியங்கியல் புலிக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வி நமக்குத் தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவே கண்டத்தட்டுகளைக் காட்டுவதாக அவர் தந்துள்ள படம் இந்த இடத்தை ஒரு கோடியில் காட்டுவதாக உள்ளது. மேலே முன் பக்கத்தில் நான் தந்துள்ளதைப் போன்ற, குமரி நிலநீட்சியின் 84ஆம் பக்கத்தில் அவர் தந்துள்ள படத்தைப் பாருங்கள். அதே வேளையில் மேலே பக், 70 உலகப் படத்தைப் பார்த்த உடன் நம் கவனத்துக்கு வருபவை, இந்தக் கண்டத்தட்டு எல்லைகளிலிருந்து குழம்பு வெளிவந்து அவற்றை நகர்த்தவில்லை என்பதோடு இந்தியக் கண்டத்தட்டு லாரேசியாவுடன் மோதி உலகிலேயே உயரமான இமய மலையையும் உலகிலேயே உயரமான திபேத்து மேட்டு நிலத்தையும் உருவாக்கியிருப்பது போல் எதுவோ அமெரிக்காவின் மேற்கு எல்லைகளில் மோதி அந்த எல்லை நெடுகிலும் உயரமான மலைத்தொடர்களை உருவாக்கியிருப்பது. இது போன்ற ஒரு விரைவையும் ஆற்றலையும் மோதிய அந்தப் பொருளுக்குக் கொடுத்தது எது? இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால் மேலே(பக்.79) நான் சுட்டியுள்ளது போல் கண்டத்தட்டுகளை ஒட்டுப்போட்டுக்காட்டியுள்ள படங்களில் காணாமல் போயுள்ள நிலப்பரப்புகள் எங்கே போயுள்ளன என்பது தெரிந்துவிடும்.

            அதே நேரத்தில் திருவாளர் செயகரன் நாம் மேலே சுட்டியுள்ள இந்தோனேசியாவின் தெற்கு மேற்கு எல்லைகள் தொடங்கி இரண்டு அமெரிக்காக்களின் மேற்கு எல்லை வரை இடைவிடாத எரிமலைச் சீற்றங்களும் நில நடுக்கங்களும் தாக்கும் நெருப்பு வளையம் பற்றியும் கூறுகிறார். இங்கே ஒரு கண்டத்தட்டு இன்னொரு கண்டத்தட்டின் கீழே சொருகிக்கொள்வதால் இந்த நிலநடுக்கங்களும் எரிமலைகளும் உருவாவதாகக் கூறுகிறார். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இதில் புள்ளிகளால் காட்டப்பட்டுள்ளதுநெருப்பு வளையம்”. இங்கு அமைதிவாரி கண்டத்தட்டின் கிழக்குக் கோடியில், அதாவது அமெரிக்காவின் மேற்கு ஓரத்தில் நிலம் உயர்ந்து மலைத்தொடர்கள் உருவானது போல் மேற்குக் கோடியாகிய இந்தோனேசியபாப்புவா நியூகினிய வட்டாரத்தில் நிலம் எதுவும் உயரவில்லையே அது ஏன்? இங்கு ஒரு கண்டத்தட்டின் அடியில் இன்னோரு கண்டத்தட்டு சொருகவில்லை மாறாக ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு கிடக்கின்றன என்பது தெளிவாகிறது. அல்லது இந்தியத் தட்டு திருவாளர் செயகரன் கூறுவதுபோல் அமைதிவாரித் தட்டின் அடியில் சொருகாமல் நேரே கீழே
இறங்கி ஆதனோபியரின் வெப்பத்தில் உருகி அதனுடன் தொடர்ந்து கலந்து மறைந்துகொண்டிருக்க வேண்டும். இந்த நிகழ்முறையில்தான் அங்கு எரிமலைக் குமுறல்களும் புவி அதிர்ச்சிகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆக, ஆப்பிரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்துக்கும் இடைப்பட்ட வெடிப்பிலிருந்து வெளிப்படும் குழம்பு கடலடித்தரையாக மாறி மீண்டும் இந்தோனேசியாவின் விளிம்பில் கீழிறங்கி குழம்பாக மீண்டும் ஆதனோபியரில் கலந்து விடுகிறதா? அப்படியானால் முன்பு கடலில் மூழ்கிய குமரிக் கண்ட நிலப்பகுதிகள் இப்போது ஆதனோபியரில் குழம்பாகக் கலந்திருக்குமோ? குமரிக் கடல் பகுதியில் மேலே குறிப்பிட்டது போல் ஆப்பிரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும இந்தோனேசியத் தீவுக்கூட்டத்துக்கும் இடையில் ஓரு வெடிப்பு இருப்பது போல் இந்தோனேசியத் தீவுக் கூட்டத்துக்கும் அமெரிக்காக்களுக்கும் இடையில் அமைதிவாரியில் வெடிப்பு எதுவும் இல்லையே, அப்படியிருக்க எந்த ஆற்றல் அமைதிவாரியின எல்லைகளைநெருப்பு வளையத்தின் எல்லையாக்கி உள்ளது?

அடுத்து கீழே தந்திருக்கும், கடலடி மலைத்தொடர்களைக் காட்டும் உலகப் படத்தைப் பாருங்கள். அமைதிவாரியின் நடுவில், கண்டத்தட்டு எல்லைக்குக் குறுக்கே சின்னஞ்சிறு தீவுகளை உச்சியில் கொண்டு ஓடும், ஆங்காங்கு இடை முறிந்து காணப்படும் ஒரு நீண்ட மலைத்தொடரையும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து தெற்கு நோக்கிக் கிடக்கும் ஒப்பீட்டளவில குறுகிய மலைத்தொடரையும் வங்காள தேசத்திலிருந்து தெற்கு நோக்கிக் கிடக்கும் ஓரளவு நீண்ட மலைத்தொடரையும் தவிர ஏறக்குறைய அனைத்தும் கண்டத்தட்டு வெடிப்புகளிலேயே அமைந்துள்ளன. அப்படியானால் மேற்கூறிய விதிவிலக்கான இவை மூன்றும் கண்டத்தட்டு வெடிப்புகளிலிருந்து வெளிப்பட்ட குழம்பினால் உருவாயினவல்ல என்பதும் கடலினுள் மூழுகியவை என்பதும் தெளிவாகிறது
அல்லவா? அத்துடன்பனிப்பரப்புகளின் பளுவால் துருவப் பகுதிகளிலுள்ள நிலம் அழுந்திய நிலையில் உள்ளது. உருகினால் அந்நிலம் உயரும். எடுத்துக்காட்டாக பால்டிக் பகுதியில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பனிப்பரப்பு உருகியதால் நிலமட்டம் உயர்ந்துள்ளது என்று குமரி நிலநீட்சி பக். 93இல் குறிப்பிட்டுள்ள திருவாளர் செயகரன் உயர்ந்த அளவு எவ்வளவு எனக் கூறவில்லை. அதே வேளையில் நாம் மேலே பக்.14 இல் சுட்டியுள்ள The Crust of the Earth என்ற நூலில் ஆர்தர் ஓம்சு என்பவர் எழுதியுள்ள Interpretation of Nature என்ற தலைப்புள்ள கட்டுரையில் (பக். 42 – 43) தந்துள்ள செய்தியைக் கீழே தருகிறேன்:

            குறிப்பிட்ட சில புவியியங்கியல் நிகழ்முறைகள் புவியின் கீழடுக்குகளின் ஆழத்தில் நிகழும் குழம்பின் பாய்தல்களால் மீட்க முடியாத அளவு மிகுந்த விரைவில் ஏற்கனவே இருக்கும் சமநிலை நிலைப்பைக் குலைக்கின்றன. எடுத்துக்காட்டாக, பனி ஊழியின் இறுதியில் ஏறக்குறைய இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்க பனிப்பாளங்கள் உருகத்தொடங்கிய போது இப்பகுதிகள் பனியின் மேபெரும் ஒரு பாரத்திலிருந்து விரைவாக விடுபட்டன. அதன் விளைவான மேலுந்தல்கள் இன்றுவரை தொடர்கின்றன. பின்லாந்து, காண்டினேவியா ஓரங்களில் மிகுந்த உயரத்துக்கு ஓங்கிய கடற்கரைகள் ஏற்கனவே ஏறக்குறைய தொள்ளாயிரம் அடிகள் உயர்ந்துள்ளதையும் இந்த மொத்த உயரத்தோடு ஒவ்வொரு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கும் போத்தினியா வளைகுடாவைச் சுற்றி ஒவ்வோர் அடி சேர்ந்துகொண்டிருப்பதையும் காட்டுகின்றன. இந்தப் பகுதி இன்னும் தன் சமநிலை நிலைப்புக்குத் திரும்பவில்லை, அது தன் சமநிலையை மீளப்பெறும் முன் இன்னும் ஓர் எழுநூறு அடிகள் உயர வேண்டுமென்று மதிப்பிட முடியும்”.

            பனிச்சுமையை இழந்த பகுதி 25,000 ஆண்டுகளில் பின்லாந்து வட்டாரத்தில் 900 அடிகள் உயர்ந்ததென்றால் புவிமுனை(துருவ)ப் பகுதிகளில் இப்போது எஞ்சியிருப்பது போக உருகிய பனிச்சுமை குறைந்ததால் இன்னும் கூடுதலாக உயர்ந்திருக்குமே. உயர்ந்ததற்கு ஈடுசெய்யவும் பனி உருகியதால் கடல் மட்டம் உயர்ந்ததால் கூடுதல் கடல்நீர்ச் சுமையாகப் பெற்றதன் விளைவாகவும் நிலநடுக்கோட்டு வட்டாரத்தில் கடலடித்தரை அதற்குக் கால் பகுதியாவது, அதாவது 225 அடிகள்(68 மீற்றர்கள்) தாழ்ந்திருக்க வேண்டாமா? அதனுடன் இவர்கள் காட்டும் கடல் மட்ட வளைவின் படி (பக்.80) 12,000 ஆண்டுகளில் 70 மீற்றர்கள் அதாவது 230 அடிகள் ஆக மொத்தம் 455அடிகள்(158 மீற்றர்கள்) நீர்மட்டம் உயர்ந்திருக்குமே!

            புவி முழுவதும் சிமா எனும் செறிவு மிக்க பாறை அடுக்கு சூழ்ந்துள்ளது. அதன் மீது நிலப்பரப்புகளில் சியால் என்னும் செறிவு குறைந்த பாறைப் பரப்பு உள்ளது. பெரும்பாலான கடலடித்தரையின் மேற்பகுதியில் பல்வேறு, குறிப்பாக உயிரியல் நடப்புகளால் படிந்த செறிவு குறைந்த ஒரு மெல்லிய அடுக்கு உள்ளது. ஆனால் இந்தப் பொது விதிக்கு மாறாக அட்லாண்டிக் கடலடித்தரை ஓரளவுக்கும் இந்தியக் கடலடித்தரை இன்னும் கூடுதலாகவும் பரலுற்ற(crysteline) பசால்ற்று எனப்படும் சிமா அடுக்கு மீது கனத்த கிரானைட்டிலான சியால் அடுக்கு உள்ளது (N.Gorsky என்பார் எழுதிய The Sea – Friend and Foe என்ற நூல் பக். 32, Foreign Languages Publishing House, Moscow, 1961). திருவாளர் செயகரன் தன் குமரி நிலநீட்சி நூல் பக்.89இல்பெர்மோகார்போனிபெரசு காலத்திலிருந்த தென்னிந்திய நிலப்பரப்பு, பிற்காலத்தே இயற்கையின் சக்திகளால் வெகுவாக உயர்த்தப்பட்ட பகுதியாகும்”. அந்த இயற்கையின் சக்திகள்எவையெவை என்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர் அவற்றைச் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார். நான் சொல்கிறேன்.


 மேலே 75, 79 ஆகிய பக்கங்களில் காட்டப்பட்டுள்ள உலகப் படங்களையும் பக். 60இல் தரப்பட்டுள்ள பாலித் தீவுப் படத்தையும் பாருங்கள். இவற்றிலெல்லாம் ஆத்திரேலியாவுக்கு வடக்கும் கிழக்கும் தாய்லாந்து ஒரு கோடி என்றால் பிலிப்பைன்சு வட்டாரம் இன்னொரு கோடியாக நிலப்பரப்புகள் பல்வேறு அளவுகளைக் கொண்ட தீவுகளாக உடைந்து சிதறிக்கிடக்கும் தோற்றம் தெரியவில்லையா? இதன் காரணம் என்ன?

சாவகம் என்று பண்டை இந்தியர் குறிப்பிட்ட சாவாத் தீவை(சாவகம் எனும் தமிழ்ச் சொல்லே அங்கு அடிக்கடி மனிதர்களின் சாவுக்குக் காரணமான புவி அதிர்ச்சிகளாலும் அவற்றின் விளைவான ஓங்கலைகளாலம் மனிதர்கள் அடிக்கடி சாவதினால்தான் உருவாகியிருக்குமோ?) ஒட்டி சாவா பள்ளம் எனப்படும் சுண்டாப் பள்ளம் என்ற கடலடிப் பள்ளம் ஒன்று உள்ளது. அது 7725 மீற்றர்கள், அதாவது 25,344 அடிகள் ஆழமும் 2000 மைல்கள் நீளமும் உள்ளது. இந்தப் பகுதியில் 2004இல் உருவான சுனாமி எனப்படும் ஓங்கலையே தமிழகம் உட்பட மிக விரிவான பரப்புகளில் பேரழிவுகளை       
 

விளைத்தது நமக்குத் தெரியும். இந்த ஓங்கலையின் பின்விளைவு இதை விடவும் அழிவுதரும் நிலப்பெயர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று அஞ்சப்படுகிறது. (There is scientific evidence that the 2004 earthquake activity in the area of the Java Trench could lead to further catastrophic shifting within a relatively short period of time, perhaps less than a decade. – Wikipedia, the free encyclopedia.)
                
       அடுத்து பிலிப்பைன்சு வட்டாரத்தில், அதற்கு அண்மையில் உலகின் மிக ஆழமான சியாலஞ்சர்(Challenger) பள்ளம் எனும் கடலடிப் பள்ளம் உள்ளது. இதை மரியானா பள்ளம் என்றும் கூறுவர். இதன் ஆழம் பற்றிய சிறு வேறுபாடுகளுடன் பல மதிப்பீடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் படி 36,037 அடிகள் அதாவது 6.825 மைல்கள் அல்லது 10,984 மீற்றர்கள்(10.984 கிலோ மீற்றர்கள்). இந்த ஆழம் கடல் மட்டத்தில் இருந்து இமயமலையின் எவரற்று முனையின் உயரத்தை விட 7044 அடிகள்(1.334 மைல்கள், அதாவது 2147 மீற்றர்கள்(2.147 கி.மீ.க்கள்) கூடுதல். கடலடி மட்டத்தில் இதன் பரப்பு 67,940 இலிருந்து 1,29,000 சதுர மைல்கள் வரை மதிப்பிடப்பட்டிருக்கிறது. பரப்புக்கு எடுத்துக்கொண்ட நிலம் பற்றிய மாறுபட்ட அணுகல்களால் இந்த வேறுபாடு என்று தெரிகிறது.

            இந்தப் பள்ளங்களின் உருவாக்கம் பற்றி புவியியங்கியலாளர்களால் விந்தையான ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது, இரு கண்டத்தட்டுகள் ஒன்றையொன்று மோதிய போது இரண்டில் ஒன்று கீழ்நோக்கி இறங்க மற்றொன்று அதன் உராய்வினால் மடிந்து முனை கீழ் நோக்கி இறங்க தரை மட்டத்தில் கொஞ்சமும் மேல் நோக்கி கொஞ்சமும் உயர்வதால் உருவாகின்றனவாம். இதற்கு உள்வாங்கல் (subduction) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இமயமலை உயர்ச்சியின் எடையை ஈடு செய்ய அதன் கீழ் புவிக்குழம்புக்குள் வேர் என்ற என்ற ஒன்று மலையின் தொடர்ச்சியாக புவிக்குழம்பினுள் இறங்குகிறது என்கிறது புவியியங்கியல். அது போல் இந்தப் பள்ளங்களால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப புவியின் சமநிலைப் பராமரிப்பு விசைகள் எந்த விதமான எதிர் வினைகளைப் புரிகின்றன என்று யாரும் எந்த விளக்கமும் கொடுத்ததாகத் தெரியவில்லை.

            உலக கண்டத்தட்டுகளில் மிக இளையது இந்தியக் கண்டத்தட்டு என்கிறார்கள். அது எளிதாக கீழ்நோக்கி இறங்கியிருக்க முடியும், ஆனால் இதனோடு மோதிக்கொண்டிருக்கும் அதைவிட முதிர்ந்த யூரோசியத்தட்டு அதிலும் இந்தப் பகுதியில் அது மிக ஒடுங்கிக் கிடக்கும் நிலையில் அதுவும் கீழ் நோக்கி இறங்கி இந்தப் பள்ளத்தை உருவாக்கியிருக்கும் என்பது பொருந்தி வரவில்லை. அது போல்தான் மரியானா பள்ளமும். பெரிய பரந்த அமைதிவாரி கண்டத்தட்டு சின்னஞ்சிறு பிலிப்பைன்சு கண்டத்தட்டை நெருக்கி எளிதாக இமயமலையைப் போல உயர்த்தியிருக்க முடியும். அது கீழ்நோக்கி இறங்கினால் சிறிதாகிய பிலிப்பைன்சு தட்டு அதற்கு ஈடுகொடுத்து கீழ்நோக்கி பாய்த்தது என்று சொல்வது, திருவாளர் செயகரன் சொற்களில் கூறுவதானால்,”அபத்தம்”.

            இந்த இரண்டு பள்ளங்களின் உருவாக்கத்தையும் வேறொரு வகையில் விளக்க முடியும் என நான் கருதுகிறேன். புவியின் மீது சிறிதும் பெரிதுமான விண்கற்கள் விழுந்துகொண்டேயிருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. பாளையங்கோட்டைக்கு கிழக்கே தரிசாகப் போடப்பட்ட நிலங்களில் மனைப்பிரிவு வாணிகம் செய்வோருக்காக நான் பணியாற்றியிருக்கிறேன். அங்கே சிறிது  தொலைவிலிருந்து பார்க்கும் போது காய்ந்த மாட்டுச் சாணம் போல் பரவலாகக் காணக்கிடக்கும் பொருளை நெருங்கிப் பார்த்தால் அது கொல்லங்கட்டி போல் தோற்றமளிக்கும். கொல்லங்கட்டி என்பது கொல்லர்களின் இரும்புப் பட்டறையில் திரளும் ஒரு கழிவு. உருகிய இரும்பு கரித்துணுக்குகளுடனும் சாம்பலுடனும் குழிழிகள் வெடித்தாற் போன்ற குழிவுகளுடனும் உலையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது அது. உண்மையில் நான் கண்ட பொருள் இரும்புக் கனிமம் என்று கூறுகிறார்கள். இது அந்த வட்டாரத்தில் பல இடங்களிலும் காணக்கிடைக்கும் என்கிறார்கள். இது விண்ணிலிருந்து விண்கள்களாகப் பொழிந்தவை என்றும் கூறுகின்றனர். இந்த வட்டாரத்தில் அமைந்திருந்த ஆதித்தநல்லூரில் வாழ்ந்த மக்கள் இயற்கையில் நிலத்தின் மேற்பரப்பில் கிடைத்த இந்தக் கனிமத்திலிருந்துதான் இரும்பைப் பிரித்தெடுத்து இரும்பு ஊழியை உலகுக்கு அளித்தார்கள் என்பது சிலரது கருத்து.         
விண்ணிலிருந்து கண்ணுக்குப் புலப்படாமல் அலை வடிவில் இடைவிடாமல் பாயும் துகள்களாலான கதிர்வீச்சு முதல் பல மைல்கள் விட்டம் கொண்ட பெரும் விண்கற்களும் புவியைத் தாக்குவது புதிதல்ல. வானில் தனித்துத் திரியும் ஒன்றுதிரளாத கற்களோ அல்லது உடைந்து சிதறிய கோளங்களின் சிதறல்களோ வால்வெள்ளிகளியின் துணுக்குகளோ வால்வெள்ளிகளோ கூட புவியின் ஈர்ப்பு மண்டலத்துக்குள் சிக்கி புவியை நோக்கி விரையும் போது உண்டாகும் வெப்பத்தால் வரும் வழியிலேயே எரிந்து அழியும் அளவை விடப் பெரிதானவை புவியை வந்தடைகின்றன.

இப்படி 65 மில்லியன் அதாவதுகோடி ஆண்டுகளுக்கும் முன் ஒரு வால்வெள்ளி புவியைத் தாக்கியதால்தான் அரக்கப்பல்லி இனமாகிய டயனோசர்கள் அழிந்தன என்கின்றனர் புவியியங்கியலாளர்கள். 230 அல்லது 250 மில்லியன், அதாவது 23 அல்லது 25 கோடி  ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு வால்வெள்ளி உலகைத்தாக்கியுள்ளது என்கிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிய உயிரினங்கள்தாம் திரிவாக்கம் பெற்று இன்றைய உயிரினங்களாக மலர்ந்தன என்றும் கூறுகின்றனர்.  
          
இப்படிப் பல கேள்விகள் எழுவதைப் பற்றி எதுவுமே கூறாமல் அவர் தன் காரியத்திலேயே குறியாக அடுத்த அடியை எடுத்துவைக்கிறார். ஆனால் நாம் நமது தேடலைத் தொடர வேண்டியவர்களாக உள்ளோம்
 
 



            பக்கத்தில் (மூன்றாவதாக) உள்ள மரியானா பள்ளப் படத்தைப் பாருங்கள். மேலே இருக்கும் இரண்டும் இரு வேறு காலகட்டங்களில் நேரடியாக பள்ளத்தை அளந்து வரையப்பட்டது. இது கண்டத்தட்டு நகர்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையப்பட்டது. இந்த மூன்றாவது படத்தில் முதல் இரண்டிலும் காணக்கிடக்கும் ஆப்பு அடித்தது போன்ற ஊசி அடிமுனை இல்லாதிருப்பதைப் பாருங்கள். இந்த ஊசிமுனை கனத்த ஒரு பொருள் பாய்ந்து கண்டத்தட்டு மேலோட்டைத் தகர்த்து ஊடுருவி புவிக்குழம்பினுள் ஆழமாக இறங்கிக் கரைந்துவிட கண்டத்தட்டு முனைகள் நாலாபுறங்களிலுமிருந்து மேலெழும்புகையில் உருவான ஊசிமுனைப் பள்ளம் என்பது தெளிவு. வால்வெள்ளியின் தாக்கத்தால் கீழிறங்கிய கண்டத்தட்டுப் பகுதி குழம்பின் மேலுந்து அழுத்தத்தால் மேலெழும்பி ஒரு கனமான சுவரை பள்ளத்துக்கு உருவாக்கிவிட்டதால் தாழ்ந்துள்ள இந்த இடத்தைச் சமன்செய்ய உருவான மேலுந்து அழுத்தம் பள்ளத்தின் மேல் மட்டத்தைச் சுற்றியுள்ள கனம் குறைந்த இடத்தில் எரிமலைகளை உருவாக்கி அவ்வப்போது கக்கி வருகிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள் இது முற்றிலும் வேறான ஒரு வடிவத்தை மரியானா பள்ளத்துக்குக் காட்டுகிறது. இதில் பள்ளத்தைச் சுற்றி ஏரிமலைகள் உருவாகும் தன்மையைக் காட்டுகிறது. புவியியங்கியல் துறையின் பிற பிரிவுகளைப் போல பள்ளங்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஒருமித்த கருத்து எதுவும் இன்றளவும் உருவாகவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது.

            அது மட்டுமல்ல மேலே, அமைதிவாரியில் உள்ள 20 கடலடிப் பள்ளங்களைக் காட்டும் படத்தைப் பாருங்கள். அவற்றில் 11 முதல் 15ஆம் எண் வரையிலான பள்ளங்கள் நடுக்கடலில் உள்ளன, 16 முதல் 19 வரை உள்ளவை கண்டத்தட்டு வெடிப்பிலிருந்து புவிக்குழம்பு வெளிப்படும் முகட்டிலேயே அமைந்துள்ளன. இங்கு தட்டு ஒன்றுள் ஒன்று சோருகுவது எப்படி நிகழும்? ஆக இவை அனைத்தும் சாவா எனப்படும் சுண்டாப் பள்ளமும் ஓரு வால்வெள்ளித் தாக்குதலின் விளைவு என்பது உறுதி.
    இந்த மாபெரும் தாக்குதலால் அன்றார்ட்டிக்கா தட்டு உடைந்து ஆத்திரேலியாவும் இந்தியாவும் ஒரு மொத்தையாகத் தனியாகப் பிரிந்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு வடக்குப் பகுதிகளிலிருந்து இந்தியத்தட்டு வெடிப்புற்றுத் தனியாகியுள்ளது. அத்துடன் புவிக்குழம்பில் அலைகளும் உருவாகியுள்ளன. அந்த அலைகளின் விளைவாய் ஒரே நிலப்பரப்பாக இருந்த இந்திய ஆத்திரேலியத் தட்டு உடைந்து இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. நகரும் போது நாம் மேலே சுட்டியது போல் குழந்தைகளாக இருந்த கர்ணனும் மோசேயும் வைக்கப்பட்ட கூடைகளைப் போலன்றி கடலினுள் அமுங்கியும் கடலிலிருந்து மேலெழும்பியும் சென்றுள்ளது. அப்படிக் கடலில் அமுங்கியதுதான் 78 நூற்றாண்டுகளுக்கு முந்திய முதற் கழகம் இருந்த பாண்டியனின் தென்மதுரையும் 49 நாடுகளும் தென்பாலிமுகம் முதலியனவும்.

            திருவாளர் செயகரன் தந்துள்ள தரவுகளிலிருந்து மேலே 90ஆம் பக்கத்தில் நாம் எய்தியுள்ள முடிவின்படி திபேத்தை நோக்கி டெத்தீசுக் கடல் எழும்பிவர வங்காளத்தில்
அது உடைத்துக்கொண்டு கடல் மட்டம் இறங்க அங்கு வந்த குமரிக் கண்ட மக்கள் அவர்களுக்கு நாகரிகங்களைக் கற்றுத்தந்த காலம் 13½ கோடி ஆண்டுகளுக்கு முன்னால். உலகப் படத்தை வரையும் அளவுக்கு அவர்கள் வளர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களது மூல உயிரினம் வால்வெள்ளி விழுந்ததாகக் கூறப்படும் குறைந்தது 23 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்றைய மனித இனத்தை நோக்கிய திரிவாக்கத்தைத் தொடங்கியிருக்கலாம். காட் எலியட் கூறியதாக திருவாளர் செயகரன் தன் நூலில் 52ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல் மனித இனத் தோற்றம் 22½ கோடி ஆண்டுகள், இன்னும் தெளிவாக, 13½ - 22½ என்பது எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திவருகிறது பாருங்கள். இவ்வளவு தெளிவான தரவுகளையும் தன் கையில் வைத்துக்கொண்டு அவற்றைத் துண்டுதுண்டாக வெட்டி நூல் முழுவதும் கலைத்துப்போட்டு எல்லோரையும் எப்படி ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள்!


            லாரேசியாத் தட்டை நோக்கி புவிக்குழம்பின் அலைகளால் தள்ளப்பட்ட குமரி(இந்திய)க் கண்டத்தட்டு நேராகச் செல்லவில்லை என்பது மட்டுமல்ல அது 90° சுழன்றும் இருக்கிறது என்பதை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநுலில் இடம்பெற்றுள்ள பக்கத்தில் தரப்பட்டுள்ள படம் காட்டுகிறது. ஆனால் இது ஒரு கருத்துவரைவுதானே ஒழிய இந் நிலப்பரப்பு தொடக்கத்திலிருந்து ஒரே வடிவில் இருக்கவில்லை. ஆங்காங்கே ஒவ்வொரு நிலப்பகுதி கடலுக்குள் முழுகியும் இன்னொரு பகுதி கடலிலிருந்து வெளிப்பட்டும், அதை நேரத்தில் சுழலில் அகப்பட்ட பரிசல் போல் சுற்றிச் சுழன்றும் லாரேசியாவில் வந்து மோதியிருக்கிறது. அதில் தமிழர்களாகிய நமக்குக் கிடைத்தது முதல் கடற்கோள் பற்றிய ஓரே பதிவுதான். இரண்டாம் கடற்கோள் சிறுகச் சிறுக கடல் மட்டம் உயர உயர இறுதியில் ஓர் ஓங்கலையால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து மக்கள் இன்றைய தமிழகத்துக்கு வந்தேறியதுன். மேலே குறிப்பிட்டது போல் பல்வேறு மூலங்களில் வெவ்வேறு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்று கொள்ள வேண்டியுள்ளது.

            குமரி மாக்கடல் கடலடித்தரை கண்டங்களுக்குரிய செறிவு குறைந்த சியால் பாறையாகவும் தக்காணம் எனும் தென்னிந்திய நிலம் கடலடித்தரைக்குரிய செறிவுமிக்க சிமா பாறையாகவும் உள்ளது என்று கூறினோம்(பக்.97 - 98 பார்க்க). அதனால் தமிழகத்தின் தெற்கு மாவட்டக் கடற்கரைகளில் கடலுக்குள் நிலத்தை அடுத்து உருவாகும் சிப்பி போன்ற அடுக்குகள் காணப்படுவதை வைத்து நிலம் உயரந்திருப்பதற்குத்தான் களத்தில் சான்று இருக்கிறதே அன்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவது போல் கடலில் அமிழ்ந்ததற்குச் சான்றில்லை என்று வாதிடுவர் சிலர். உண்மைதான் இந்த வட்டாரத்தில் நிலம் கடலடியிலிருந்து வெளிப்பட்டுத்தான் இருக்கிறது, ஆனால் அது புவிக்குழம்பின் அலையின் விளைவாக நிலம் கடலடித்தரையாகக் கீழிறங்க கடலடித்தரை மேலெழும்பியதன் வெளிப்பாடு என்பதுதான் உண்மை.

            குமரி மாவட்டம் தென்தாமரைக் குளத்துக்கு ஒரு வேலையாக நான் போயிருந்த போது தென்னந்தோப்பில் சிலர் குழி வெட்டி சிப்பிகள் எடுப்பதைப் பார்த்தேன். ஒன்றிரண்டு அடிகளிலேயே தண்ணீர் ஊறும் அந்தக் குழிகளில் கொட்டிவைத்தாற் போல் மண்ணுடன் கலந்து மண்ணைவிட மிக அதிக விகிதத்தில் சிப்பிகள் இருந்தன. அந்தக் குழி ஒன்றில் இருவர் நின்றிருந்தனர். செம்முநத் திண்ணக்கம்(சிமென்றுக் கான்கிரீட்டு)ப் போட சல்லியைச் சலிக்கப் பயன்படும் பூலாத்திக் கொடியால் பின்னப்பட்ட கூடையில் ஒருவர் மண்வெட்டியால் மண்கலந்த சிப்பிகளைப் போட கூடையில் அதை வாங்கிக்கொண்ட மற்றவர் அதைத் தண்ணீரில் முக்கி அலசி மண் அகன்ற பின் மேலே கூடையை தூக்க அதை வெளியே நிற்பவர் வாங்கித் தரையில் கொட்டும் பணி நடந்தது. இந்தச் சிப்பியை நீற்றி(சுட்டு) வெள்ளை அடிக்கவும் கட்டடங்களில் அலங்கார வேலைகள் செய்யவும் குமரி மாவட்டத்தில் பயன்படுத்தினார்கள். சுவர் கட்டும் சாந்து(கலவை)க்கு கடற்கரையில் அலைகொண்டு சேர்க்கும் சிறிய சங்குகளைத் திரட்டி நீற்றி எடுத்தார்கள். மண்ணைத் தோண்டி எடுத்த மேற்கூறிய சிப்பிப் படிவுகள் புவிக்குழம்பின் அலைவால் சிறிதாக உயர்ந்த கடலடித்தரையில் ஒரு கட்டத்தில் உகந்த மட்டத்தில் உருவாகி அதிலிருந்து மேலே உயர்ந்த போது படிவுகளாக மாறியவையாகும். நான் குறிப்பிட்ட தென்தாமரைகுளம் கடற்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

            1990களின் தொடக்கத்தில் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள சீர்காட்சி என்ற ஊரில் ஒரு கட்டடப் பணிக்காக வாணம் தோண்டிய போது 5 அடி ஆழத்தில் சிப்பிகள் தென்பட்டன. ஆனால் தொடர்ந்து தோண்டிய போது அது வெறும் சிப்பிகளின் அடுக்கல்ல பாறையாக மாறிவிட்ட சிப்பிப்படிவு என்று தெரிந்தது. ஆக, குமரி மாவட்டக் கடற்கரை வட்டாரத்தில் காணப்படும் சிப்பிகளின் படிவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி கடலிலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அது போல் முன்பு கடற்கரையிலிருந்த, அந்த வட்டாரத்திலிருக்கும் கொற்கை மணலூரும் சில மைல்கள் தொலைவுக்கு உள்வாங்கியிருக்கிறது.
 
            அதே வேளையில் யுரேசியத் தட்டின் அடியில் சொருகிய குமரிக் கண்டத்தட்டு அதனை உந்தித் தள்ளும் புவிக்குழம்பின் அழுத்ததால் மேலும் மேலும் கீழ்நோக்கிச் செல்லச்செல்ல அதன் எடையை ஈடுசெய்ய இமய மலையும் அதைத் தொட்டுக்கிடக்கும் திபேத்தும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்காக குமரிக் கடலடித்தரையிலிருக்கும் சியால் அடுக்கு சிமா அடுக்கு வழியாக உறிஞ்சப்பட்டு இமயத்தின் வேர்ப்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த நிகழ்முறையை மேலே  சுட்டப்பட்டுள்ள The Crust of the Earth என்ற நூலின் பக்.41இல் இருக்கும் படம் காட்டுகிறது. இவ்வாறு புவிக்குழம்பின் அலைவுகளால் நிலம் கடலாகவும் கடல் நிலமாகவும் மாறிமாறி வடக்கு நோக்கி நகர நகர அவ்வப்போது திடீர் திடீரென நிலம் கடலுள் அமிழ்ந்து மக்கள் அழிவதும் நிகழ்ந்ததால் மக்கள் படகுகளிலும் கப்பல்களிலும் வெளியேறி உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் குடியேறி அங்கு தங்களுக்கென்று தனித்தனி நாகரிகங்களை அமைத்துக்கொண்டனர். பெரும்பாலான பழம் நாகரிகங்களில் தமிழர்களின் பண்பாட்டுத் தடங்களைக் காண முடிவது இதனால்தான். உலக அழிவுக் கதைகள் இவ்வாறான தப்பிப் பிழைத்த வரலாறுகளின் பதிவுகளாக இருக்க தமிழர்களின் இந்தப் பதிவு காலத்தால் பிந்தியதாயினும் அடியார்க்குநல்லாரால் விளக்கம் பெறும் முதற்கடற்கோள் பற்றிய பதிவு இன்றைய அறிவியலுக்கு மிகப் பொருந்தி வருகிறது.  
            அடுத்து ஆதிமனிதக் குடியேற்றங்கள் என்ற தலைப்புக்குள் நுழைகிறார், திருவாளர் செயகரன். அந்த அழகையும் பார்த்துவிடுவோமே!

உப்பும் பருப்பும்



10.உப்பும் பருப்பும்
            குமரி நிலநீட்சி பக். 67இல் ஒரு விந்தையைக் காட்டுகிறார் திருவாளர் செயகரன். “ஆத்திரேலியப் பழங்குடியினரின் கதையில் தம் முன்னோர் உலகின் மத்தியப் பகுதியில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுவது ஒரு சுவாரசியமான விசயம், ஏனெனில் இன்றைய மானிடவியல் கண்டுபிடிப்புகள் அவர்கள் மேற்கிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்ததைக் குறிப்பிடுகின்றன”, என்று ஒரு நூலையும் மேற்கோள் காட்டுகிறார். நம் கேள்வி ஆத்திரேலியப் பழங்குடியினர் உலகின் மத்தியப் பகுதி என்று எந்தத் தீசையைக் குறிப்பிடுகிறார்கள் என்று இவருக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அந்த திசையைக் குறிப்பிட்டு அவர்கள் காட்டிய திசை தப்பு, அவர்கள் மேற்கிலிருந்து வந்தார்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? மாறாக மத்தியஎன்பதற்கு எதிராக ஏதோ ஒரு திசையை ப்படி வைக்க முடியும்? இத்தனை எண்ணிக்கையில் மறுப்புகள் சொல்ல வேண்டும் என்று ஏதாவது வரையறை வைத்துக்கொண்டு உப்பென்று கேட்டால், பருப்பு இருக்கிறது என்று கூறுகிறாரா என்று ஐயமாக இருக்கிறது.

            அடுத்து அட்லாண்டிசு கண்டத்தை ஓர் அலசு அலசுகிறார் நம் புவியியங்கியல் புலி. அட்லாண்டிசைப் பற்றி முதன்முதலில் கூறியவர் பிளாட்டோ என்கிறார். பிளாட்டோ எழுதியவற்றில் முழுக் கற்பனை சாக்கிரட்டீசு எனப்படும் சோக்ரதர்[1]என்பது என் கருத்து. அப்படி எவராவது இருந்திருந்தாலும் அவர் மீது தன் கருத்துகளைச் சார்த்தி சோக்ரதர் கருத்துகளாக அவர் வெளியிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பிளாட்டோவின் குறிக்கோள் ஒரு பொறுப்புள்ள குடிமக்களாக ஏதன்சு மக்களை மேம்படுத்துவதுதான் என்பது அவரது படைப்புகளிலிருந்து நம்மால் புரிந்துகொள்ளத்தக்க உண்மை. அது போல் அவர் சுட்டிக்காட்டியுள்ள அட்லாண்டிசுக் கண்ட மக்களின் குமுக அமைப்பு அவர்களின் பருப்பொருள் மற்றும் நடத்தைப் பண்பாடுகள்(material and behaviourial culture) பற்றிய தன் விளக்கங்கள் ஏதென்சு மக்களிடையில் நல்ல  மேம்பாடுகளை ஏற்படுத்தலாம் என்று அவர் கருதியிருக்கிறார். அதே நேரத்தில் பிளாட்டோவின் அட்லாண்டிசுக் கோட்பாடுகளை மறுத்தவர் என்று திருவாளர் செயகரன் காட்டுபவரும் பிளாட்டோவின் மாணவர் என்று அறியப்படுபவரும் ஆன அரிட்டாட்டிலின் கண்ணோட்டம் பிளாட்டோவின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நகர அரசுகள் என்ற நிலையில் மக்களின் நேரடிப் பங்களிப்புள்ள ஒருவகையான மக்களாட்சியைக் கொண்டிருந்த நகர அரசுகளாகத் தனித்தனியாக இருந்த கிரேக்கத்தைப் போர்களின் மூலம் பேரரசாக மாற்றிய அலக்சாந்தரின் ஆசானான அரிட்டாட்டில் அந்த மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் அறிவுரையை அலக்சாந்தருக்கு வழங்கியவர் என்ற நிலையில் அட்லாண்டிசு மக்களின் உயர்ந்த பண்பாடு, குமுக அமைப்பு பற்றிய பிளாட்டோவின் கருத்துகளை மறுக்க முனைந்து அட்லாண்டிசு கண்டம் இருந்ததே கற்பனை என்ற எல்லைக்குப் போய்விட்டார் என்பதுதான் உண்மை.

            தன் நூலில் பக்கங்கள் 68 முதல் 72 வரை தனக்குத் தோதான சான்றுகளை வரிசைப் படுத்தி அட்லாண்டிசுக் கோட்பாடு நிலைக்கவில்லை என்ற அவரது கூற்று உண்மை அல்ல என்பதற்கு இன்றும் அப்பகுதியில் நண்ணில(மத்தியதரை)க் கடற்பகுதியிலும் பெயின் நாட்டை ஒட்டியும் வெளியிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. எனவே அட்சாண்டிசு எனும் கற்பனை போல் குமரிக் கண்டமும் கற்பனையே என்று காட்டுவதற்காக திருவாளர் செயகரன் கையாண்ட இந்த உத்தியும் பயனளிக்கவில்லை. ஆமாம், அட்லாண்டிசு கற்பனையாக இருந்துவிட்டுப் போகட்டுமே, அதனாலேயே குமரிக் கண்டக் கோட்பாடும் பொய்யாகி விடுமா என்ன?

            அப்புறம், ஒரு கண்டம் என்னுமளவுக்கு அது இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் விரிவான பரப்பு இல்லை என்பது இவரது ஒரு கூற்று. மேலே பக்கம் 75இல் உள்ள உலகப் படத்தில் வலப்பக்கம் ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் இடப்பக்கம் இரு அமெரிக்காக்களுக்கும் நடுவில் ஆத்திரேலியா அளவுக்கு ஒரு நிலப்பரப்பு இருக்க வாய்ப்பில்லையா என்ன? இதில் உண்மையான கேள்வி என்னவென்றால் புவிக்குழம்பினுள் நிலப்பகுதிகள் இறங்குமா இறங்காதா என்பதுதான். இமயமலை போன்று ஐந்து மைல்கள் (ஏறக்குறைய 8000 மீற்றர்கள்) உயரத்துக்கு ஒரு பெரும் மலைத்தொடருடன் சராசரி 4500 மீற்றர்கள் உயரமும் 25 இலக்கம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பும் உள்ள இமய மேட்டுநிலம் எஎனப்படும் திபேத்து மேட்டுநிலமும்(பீடபூமியும்) உயர முடியும் என்றால் குமரிக் கண்டம், அட்லாண்டிசு போன்று புவிப் பரப்புகள் புவிக் குழம்புக்குள் இறங்குவதும் இயலத்தக்கதே என்பதுதான் விடை. இமயமலை உயர்ந்ததில் குமரிக் கண்டப் பரப்பில் எந்த அளவு அதனுள் ஈர்க்கப்பட்டது என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டியிருக்கும் அல்லவா?

            திருவாளர் செயகரன் வழிகாட்ட நாம் அட்லாண்டிசு கண்டம் புதைந்ததாகக் கூறப்படும் செய்திக் களத்தினுள் நுழைந்தோம். அருமையான செய்திகள் கிடைத்தன. கிரேக்கர்களுக்கு முதன் முதல் விரிவான சட்டங்கள், குறிப்பாக நிலவுடைமைச் சட்டங்களை வகுத்தவர் சோலோன் எனப்படுபவர். கி.மு.640 முதல் 558 வரை வாழ்ந்தவர். கந்து வட்டிக்காரர்பளிடையில் சிக்கி தங்கள் நிலங்களில் அவ்வட்டிக்காரர்கள் தங்கள் அடையாளங்களான கொடிகளை நட்டுக் கொடுமைகள் புரிந்துகொண்டிருந்த காலத்தில அவற்றைப் பிடுங்கி எறிந்து பண்டைக் கிரேக்க உழவர்களின் நிலங்களை மீட்டவர்தான் சோலன் என்றும் படித்திருக்கிறேன். இவர்தான் அட்லாண்டிசு இருந்ததையும் அது மூழ்கியதையும் பற்றி எழுதியவராம். அதைப் படித்துத்தான் பிளாட்டோ அட்லாண்டிசு பற்றிய செய்திகளைப் பதிவுசெய்துள்ளார். சொலோன் எழுத்துகள் என்ற பெயரில் சில துணுக்குகள் தவிர வேறெதுவும் தற்போது கிடைக்கவில்லை என்கிறார்கள். பிளாட்டோ பிறந்தது கி.மு.428/27 எனவும் 424/23 எனவும் இரு ஆண்டுகள் குறிக்கப்படுகின்றன. இறந்தது 348/47.
 
            கிரேக்க வட்டாரத்தில் உள்ள நண்ணிலக் கடலில் இருக்கும் கிரேட்டா தீவு ஒப்பற்ற ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. கி.மு.16, அல்லது 17ஆம் நூற்றாண்டில் வெடித்துச் சிதறிய எரிமலையாலும் தொடர்ந்த சுனாமி எனும் ஓங்கலையாலும் அங்கிருந்த மினோவன் நாகரிகம் அழிந்தது என்று வரலாறு கூறுகிறது. இங்குதான் ஓமரின் இலியது காப்பியம் கூறும் டிராய் நகரம் இருந்திருக்கிறது. எலனின் கடத்தலே குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறி நண்ணிலக் கடற்கரையில் அசிரியாவில் குடியேறியவர்களும் தொல்லுலகின் மிகச்சிறந்த கடலோடிகளுமான பினீசியர்கள் நிகழ்த்திய ஒரு பெண்கடத்திலின் பழிவாங்கல் என்று புகழ்பெற்ற பண்டைக் கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோட்டசு கூறியுள்ளார். மினோவர்களும் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிப் பரவிய மக்களில் ஒரு பிரிவினர் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து. மீனவர்கள் என்பதன் திரிபே மினோவன் என்பது அவர்கள் கூற்று. இங்குள்ள நாகரிகத்தின் சிறப்பு அடையாளமாக குமரிக்கண்டத் தமிழர்களின் சிறப்பு விளையாட்டான bull leaping எனப்படும் ஏறுதழுவல் கூறப்படுகிறது. இந்த காலகட்டம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் இரண்டாம் கடற்கோள் காலத்துக்கு தற்செயலாக(?) ஒத்து வருகிறது. ஆனால் பிளாட்டோ கூறும் அட்லாண்டிசு நில அழிவோ அவர் காலத்துக்கு 9000 ஆண்டுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்.

            சோலோன் குறிப்புகளிலிருந்து, அட்லாண்டிசுக் கண்டம் நண்ணிலக்கடலிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலுள் நுழையும் சிபரால்டர் நீரிணை(சலசந்தி)க்கு வெளியே இருக்கும் எரிக்குலிசுத்தூண்கள் எனப்படும் இரு தீவுகளுக்கு அப்பால் இருப்பதாக பிளாட்டோ கூறியிருக்கிறார். இந்த இரு தூண்களைப் பற்றிப் படிக்கும் போதே வேறு இரு தூண்களின் நினைவு நமக்கு வருகிறது, அதுதான் கில்காமேசு கதையில் வரும் உட்நாப்பிட்டிம் இருக்கும் தீவுக்குச் செல்லும் கடல்வழிப்பாதைக்கு இட்டுச் செல்லும் பெரும் கதவின் இருபுறமும் உள்ள மலைகளாலான தூண்கள். சோலோனின் குறிப்புகள் முழுமையாகக் கிடைக்காததாலும் மினோவன் நாகரிகத்தின் அழிவைப் பற்றிய மரபுச் செய்திகளாலும் எரிக்கிலிசுத் தூண்களுக்கு அப்பால் ஒரு பழம் நாகரிகம் இருந்து அழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளர் என்பதில் ஐயமில்லை.

            ஊத மறையின் நோவா, கில்காமேசு காப்பியத்தின் உட்நாப்பிட்டிம் மட்டுமல்ல சுமேரியாவின் சியுசுத்திரன், பாபிலோனியாவின் சிசுத்துரோசு போன்றோரும் ஊழி வெள்ளத்திலிருந்து தப்பியவர்களாக் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் திருவாளர் செயகரன் மினோவன் என்ற பெயரைக் குறிப்பிட்டு அம்மக்கள் எகிப்து மெசப்பொட்டோமியா ஆகிய பகுதிகளிலிருந்து பஞ்சம், போர்களால் இடம் பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். கி.மு.6000 ஆண்டிலிருந்து இந்த நாகரிகம் இருந்ததாகவும் கூறுகிறார்(பக்.70). எகிப்திய உயர் நாகரிகம் அங்குள்ள மூலக்குடிகளுக்கு உரியதல்ல, நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மக்கள் குடியேறிய பின் உருவானது என்பது வரலாற்றாசிரியர்கள் கருத்து. பாபிலோனிய, சுமேரிய நாகரிகங்களைப் பொறுத்த வரை அவை வந்தேறிகளால் புகுத்தப்பட்டவை என்பதற்கு அவற்றிலேயே மரபுகள் உள்ளன. ஆக இவையனைத்தும் எங்கிருந்து வந்தனவோ அவற்றோடு தொடர்புடையதே மினோவன் நாகரிகமும் என்பது வெளிப்படை.

கிரீட் தீவு எரிமலையாலும் நிலநடுக்கத்தாலும் ஓங்கலையாலும் அழிந்ததாகக் கூறும் திருவாளர் செயகரன் பொதுவாக இது போன்ற நில நடுக்கங்கள், ஓங்கலைகளால் மக்கள் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதான செய்திகளை இகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி நிலநீட்சி பக். 67இல்   இதோ அவர் தந்திருப்பதைப் படியுங்கள்:

ஒரு பெரிய கடற்கோள் அல்லது பிரளயம் பற்றிய ஐதிகம் பல சமூகங்களில் உள்ளன. ஆகவே உலக மக்கள் அனைவரும், மத்திய இடமொன்றிலிருந்து பரவியதற்கு முன் இக்கடற்கோள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு சாரரின் வாதம். இந்த வாதத்தின் தொடர்ச்சி அப்படி ஒரு இடத்தில் மானிடர் தோன்றி நாகரிகம் அடைந்திருந்தால் அது அட்லாண்டிசு, லெமூரியா அல்லது குமரிக் கண்டமாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பதாகும். ஆனால் உலக முழுவதும் உள்ள கடற்கோள் பற்றிய கதைகளைக் கவனித்தால், மனித குலம் தோன்றியது முதல் பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் கடற்கோள்கள், பிரளயங்கள் ஏற்பட்டன என்பதையே இவை காண்பிக்கின்றன. பிரளயத்துக்குத் தப்பிப் பிழைத்த முன்னோர்களின் அனுபவங்களை, நினைவுகளைச் சுற்றி சோடிக்கப்பட்ட, உலகின் வெவ்வேறு இடங்களில் உருவாகிய புராணங்களிலும் கதைகளிலும் ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். சிலவற்றில் பிரளயம் ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றியும் ஓரளவு அறியும் வாய்ப்புகள் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலகட்டங்களில், பல காரணங்களால்(பார்க்க: கடல் மட்ட மாற்றங்கள்) வெள்ளப்பெருக்குக்கு, கடற்கோள்கள் ஏற்பட்டன. உதாரணமாக சிலி நாட்டுக் கதை ஒன்று, எரிமலையாலும் அதைச் சார்ந்து உண்டான நில நடுக்கத்தாலும் உருவான கடற்கோள் பற்றிக் கூறுகிறது. அமெரிந்திய பிரளயக்கதை பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து பிரளயம் உண்டானதாகக் கூறுகிறது. அமெரிக்காவில் ஆதி மனிதக் குடியேற்றகள் பனிப்பரப்புகளின் எல்லைகளை ஒட்டி ஏற்பட்டன. எனவே இக்கதைகளில் பனிப்பரப்புகள் உருகியதால் ஏற்பட்ட பிரளயங்கள் சொல்லப்படுகின்றன”.             

            மேலே தரப்பட்டுள்ள செய்திகளில், ‘பிரளயத்துக்குத் தப்பிப்பிழைத்த முன்னோர்களின் அனுபவங்களை, நினைவுகளைச் சுற்றிச் சோடிக்கப்பட்ட………புராணங்களிலும் கதைகளிலும்என்று கூறுவதன் மூலம் மூலம் இவர் சொல்ல வருவதென்ன? இந்தக் கதைகளெல்லாம் கற்பனை என்கிறாரா, அல்லது கடல் மட்ட மாற்றங்கள் குறித்த படத்துக்கு (குமரி நிலநீட்சி பக். 120) நம்மைக் கோட்சுட்டுவதன் மூலம் கடல்மட்ட மாற்றங்களால்தான் அழிவுகள் நேர்ந்தன என்கிறாரா?

            மேற்கொண்டு செல்வதற்கு முன் அவர் சுட்டிய கடல் மட்டங்களைக் காட்டும் படத்தைப் பார்ப்போம். மேலே பக். 80 தரப்பட்டுள்ள படத்தின் இன்னொரு வடிவம் என்று இது கூறத்தக்கது. மேலேயுள்ள படம் ஆங்கிலத்தில் இருக்க இவரது படம் தமிழில் இருக்கிறது. நாம் தந்துள்ள படத்தின்(வளைவு curve என்போம்) தோற்றப்புள்ளி வலது பக்கம் என்றால் இவர் தந்திருக்கும் வளைவின் தோற்றப்புள்ளி இடது பக்கத்தில் உள்ளது. நாம் தந்துள்ள வளைவின் கிடப்பு அச்சு 24 ஆயிரம் ஆண்டுகளைக் காட்டுகிறதென்றால் இவர் தந்துள்ளது 20 ஆயிரம் ஆண்டுகளோடு நின்றுவிடுகிறது. நட்டுக்குத்து அச்சு நாம் தந்திருக்கும் படத்தில் மேலே 0 மீற்றரிலிருந்து தொடங்கி கீழே 140 மீற்றர் ஆழத்தில் முடிகிறதென்றால் திருவாளர் செயகரன் தந்துள்ள படத்தில் 0 சென்றி மீற்றரிலிருந்து தொடங்கி 140 சென்றி மீற்றரில் முடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் படத்தின் அடியில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பு, “இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் 120 மீ. தாழ்ந்திருந்த கடல்மட்டம்……” என்றவாறு செல்கிறது. ஆக, இந்தப் பேராய்வாளர் எதை எழுதுகிறோம் என்ற தெளிவே இல்லாத நிலையில் இந்த நூலை எழுதினாரா அல்லது அவர் எப்போதும் இப்படித்தான் எழுதுவாரா என்ற கேள்வி வருகிறது. இவரை நம்பி புத்தகம் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தார் திறமையானவர்கள்தான். ஒரு குப்பைத்தாள் தொகுப்பைப் புத்தகம் என்று அழகான அட்டையும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வோரையும் மறுப்போரையும் சுண்டியிழுக்கும் தலைப்பும் கவச்சியான அட்டையும் போட்டு இரு பதிப்புகள் வெளியிட்டு நல்ல காசும் பார்த்துவிட்டார்களே. இன்னொரு பக்கம் பார்த்தால் எழுதியதைச் சரிபார்க்கவோ பிழை திருத்தவோ நேரமில்லாத ஒரு நெருக்கடியில் இந்நூல் வெளியிடப்பட்டதோ, அப்படி நெருக்கியது எது, நெருக்கியவர் யார் என்றெல்லாம் விடை தெரியாத கேள்விகள் எழுகின்றன.

            இன்னொரு கொடுமை என்னவென்றால் இதிலுள்ள நுட்பமான செய்திகளைத் திறனாயவில்லை என்றாலும் இதில் இதுவரை நான் சுட்டிக்காட்டியுள்ள வெளிப்படையான முரண்பாடுகளைக் கூட இதுவரை சுட்டிக்காட்டவில்லை குமரிக்கண்டக் கோட்பாட்டு ஆர்வலர் எவரும் என்பதாகும். இது ஒட்டுமொத்தமாக தமிழ்ப் பற்றாளர்களிடமும் பிறரிடமும் உருவாகிவிட்ட மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

            திருவாளர் செயகரன் மேலே கூறியவற்றில் எரிமலைகளால் ஊழி அழிவுகள்(பிரளயங்கள்) உருவாகியுள்ளன, பனி மலைகள் திடீரென கடலினுள் வீழ்வதால் பேரலைகளால் அழிவுகள் நிகழ்த்துள்ளன, ஆனால் குமரிப் பெருங்கடலில் மட்டும் இவை எதுவும் நிகழவில்லை, பனிப் படர்ச்சி உருகி சிறிது சிறிதாகக் கடல் மட்டம் உயர்ந்ததுதான் நடந்தது என்பதை நோக்கித் தன் உரையை நகர்த்துகிறார் என்பது புரிகிறது. இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.



[1]   சாக்ரடீசு இப்பெயரை சோக்ரதர் என்று தமிழ்ப் படுத்தியவர் இராசாசி எனப்படும் இராசகோபாலாச்சாரியார், சோக்ரதர் சம்வாதங்கள் என்ற நூலில்

இலெமுரியாவும் குமரிக் கண்டமும் - 3



இங்கும் இவர் முழுகியது கண்டமா நிலப்பரப்பா என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறார். கோண்டுவானாவோ லாரேசியாவோ லெமூரியாவோ மூழ்கவில்லை உடையத்தான் செய்தது என்கிறார்.
கோந்திரத்தோவின் கூற்றுகளாக அவர் தந்திருப்பவற்றையும் அவற்றுக்கு அவர் கூறும் மறுப்புரைகளையும் பாருங்கள்:

            1.திராவிட மக்களான தமிழர்களைப் பற்றி சர்ச்சைகளை உண்டு. தமிழர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பூமத்தியரேகையின் அருகில் தோன்றிய பல நிலங்களில் ஒன்றான நாவலந்தீவின் தென்பகுதியில் தமிழர்களின் தாயகம் இருந்ததென்று நம்புகின்றனர். இடைக்கால இலக்கியங்கள், புலவர்களைக் கொண்டு இயங்கிய தமிழ்ச் சங்கங்கள் பற்றிக் கூறுகின்றன. தமிழ் வரலாற்றின் தொடக்க காலத்தில், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், தென் கண்டமான லெமூரியாவில் இந்த சங்கங்கள் தோன்றின. நாகரிகத்தின் தொட்டில் என்று கருதப்பட்ட லெமூரியாவும் அதன் தலைநகரான தென்மதுரையும் மூழ்கிய பிறகு இச்சங்கங்கள் அழிந்தன. இந்துமாக் கடலில் மூழ்கிய கோண்டுவானாக் கண்டத்தின் வடபுலத்தின் நீட்சியே லெமூரியா என்று தமிழர் நம்பினர். இந்தியத் துணைக்கண்டம் மேலைக் கடலில் மூழ்கிப்போன பெரியதொரு கண்டத்தின் எஞ்சிய பகுதி என்றும், இலங்கை இதன் ஒரு பகுதி என்றும் நில நூலார் கருதுகின்றனர்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            இதற்கு மறுப்பாக திருவாளர் செயகரன் கூறுவதைக் கேளுங்கள்:
            லெமூரியா என்பது அறிவியல் ஆதாரமற்ற ஒரு மேல்நாட்டுக் கருதுகோள். நமது இலக்கியங்கள் குமரி என்ற நிலப்பரப்பைக் குறித்தாலும் கண்டம் போன்ற ஒரு பெரிய நிலப்பரப்பைப் பற்றிக் குறிக்கவில்லை. பெரிய கண்டமான கோண்டுவானாக் கண்டம் இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கவில்லை. உடைந்த பகுதிகளாக பல்லாயிரக் கணக்கான மைல்கள் நகர்ந்து இன்றும் மக்கள் வாழும் நிலப்பரப்புகளாக அது உள்ளது. கோண்டுவானாக் கண்டத்தின் வடபுலத்தின் நீட்சி, இன்றைய சிந்துகங்கை சமவெளிகளின் தெற்கேயுள்ள இந்தியத் தீபகற்பமும் இலங்கைத் தீவுமாகும். இது மூழ்கிப்போன ஒரு பெரும் நிலப்பரப்பின் எஞ்சிய பகுதி என்பது தவறு. சிதறுண்ட கோண்டுவானாக் கண்டத்தின், வடக்காக நகர்ந்த பகுதி என்பதே சரி”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            கண்டம் என்பதற்கும் தீவு என்பதற்கும் பரப்பளவு வரையறை ஏதாவது இருந்தால் அதை திருவாளர் செயகரன் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆசியா, ஐரோப்பா ஆகியவை இரு வேறு கண்டங்கள் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றன. இந்தப் பிரிவினை அரசியல் சார்ந்து. ஆனால் இந்த இரண்டும் சேர்ந்து யூரேசியா என்ற உலகிலேயே மிகப் பெரிய கண்டமாக உள்ளது என்பதுதான் உண்மை. இந்த மாப்பெரிய கண்டத்தோடு ஆத்திரேலியாவும் கண்டம் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கவில்லையா? அது போல் ஏழு நாடுகளையும் பாலிமுகம் எனும் நிலப்பரப்பையும் ஆறுகளையும் மலைகளையும் கொண்டதாக அடியார்க்குநல்லார் கூறும் நிலப்பகுதியை ஒரு கண்டம் என்று குறிப்பிடுவதற்காகத் தமிழ் ஆர்வலர்களைக் குற்றம் சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? – இது நம் கேள்வி.

            2.கோண்டுவானா சிதைந்தது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்துமாக் கடலின் வட பகுதியில் லெமூரியா என்ற பெருநிலம் இருந்தது என்று கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழந்த ஆங்கில உயிர் நூலார் பிலிப் கிலேட்டர் கூறினார்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            கோண்டுவானாக் கண்டம் உடைந்து நகரஆரம்பித்தது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அப்போது இந்துமாக்கனலில் வட பகுதியில் இருந்தது ஒரு நிலநீட்சியல்ல, ‘டெதிஸ்எனும் ஆதிப்பெருங்கடல். கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம், வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கிலிருந்து லாரேசியா எனும் பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிஸ் எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம்: இது நடந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்கும் பின்னரே மனித இனம் தோன்றியது”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            கோண்டுவானா சிதைந்துபல மில்லியன்ஆண்டுகளுக்குப் பின் இருந்த நிலையை கோந்திரத்தோவ் கூற, இவர் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உடைந்து அதன் ஒரு பகுதியான இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கிலிருந்த டெதீசு எனும் ஆதிப்பெருங்கடல் சுருங்கி 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியத் துணைக்கண்டம் லாரேசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்கியது என்பதை எப்படி மறுப்பாக வைக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. ஒரே செய்தியை இரு வகையில் சொல்வது தவிர இது வேறென்ன? அவர் லெமூரியா என்கிறார், இவர் இந்தியத் துணைக்கண்டம் என்கிறார், ஆமாம் கண்டம் என்ற கருத்து துணைக்கண்டம் என்பதிலும் இருக்கிறதே! ஒரு பெரும் நிலப்பகுதி உடைந்து அதிலிருந்து பிரிந்து எப்போதும் சுழன்றும் கொதித்தும் மேலும் கீழும் உயர்ந்து தாழ்ந்தும் இயங்கும் புவிநடுக்குழம்பின் மீது பல நூறு மில்லியன் ஆண்டுகளில் பல ஆயிரம் மைல் தொலைவு நகர்ந்துகொண்டிருக்கும் இன்னோரு பெரும் நிலப்பரப்பு குந்தி தேவியும் மோசேயின் தாயும் ஆறுகளில் கூடைகளில் வைத்து இட்ட குழந்தைகள், அவற்றோடு இட்ட உடைகள், நகைநட்டுகள்  போன்று எந்த ஊறுபாடும் இன்றி அச்சு அசலாக லாரேசியாவில் போய் மோதியிருக்கும் என்று திருவாளர், புவியியங்கியல் புலி செயகரன் நம்புகிறாரா அல்லது நம்மை நம்பச் சொல்கிறாரா? இது நம் கேள்வி.  

             3.மனித இனங்களின் தோற்றம் பற்றி ஆராயும் போது கடல் கொண்டதாக இப்போது கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில்ஓமோசெபியன்எனும் ஆதிமனிதன் தோன்றினான் என டார்வினின் இணை ஆய்வாளரான தாமசு அக்சிலி கருதுகிறார். மேலும் ஆதிமனிதன் தோற்றத்துக்கு லெமூரியாவே முதலிடம் என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றனர். மேலும் உயிர்களும் தாவரங்களும் பரவுவதற்கு பாலமாக இது இருந்தது என்றும் சிலர் கூறுவர்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            உண்மையில் மனித இனங்களின் தோற்றம் ஏற்பட்டது ஆப்பிரிக்காவில்தான் என்பதை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதிமனித எலும்புகளின் மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மானிடத்தின் தொட்டில் ஆப்பிரிக்காதான் என்பது உறுதியான நிலையில், இல்லாத ஒரு இடத்தைக் காட்டி இங்கு ஆதிமனிதன் தோன்றியிருக்கலாம் என்ற தாமசு அக்சிலியின் கருத்து தவறு என்பதை இன்றைய ஆய்வுகள் காட்டுகின்றன. சில உயிர்களும் தாவரங்களும் பரவியது கண்டங்களின் பெயர்ச்சியால் கண்டங்கள் பிளவுபடாத போது இருந்த சில உயிரினங்களும் தாவரங்களும் மிதப்புகள் போல் நகர்ந்து கண்டங்கள் போல் வியாபித்தன. தட்ப வெப்ப மாற்றங்களால் சில உயிரினங்கள் அற்றும் போயின எடுத்துக்காட்டு, கண்டங்கள் பிளவுபட்ட போது வாழ்ந்த டினோசார்கள்”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            அவ்வப்போது ஐரோப்பியர்களில் செல்வாக்குள்ள ஒரு குழு ஓர் இடத்தில் எடுத்ததாகச் சொல்லி ஓர் எலும்புத் துண்டையோ மண்டையோட்டையோ காட்டி இதுதான் உலகின் முதன்முதல் தோன்றிய மனிதனின் எலும்புக்கூடு என்று தங்கள் ஆய்வகத்தில் முடிவுசெய்ததாகக் கூறுவர், அதைக் காட்டி திருவாளர் செயகரன் போன்றோர் கட்டுரையோ நூலோ எழுதுவர், அதை, கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றுவிட்டதால் தாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கு வெட்கப்படும் ஒரு கூட்டம் ஆகாஓகோ என்று குதியாட்டம் போடும், அதைப் பார்த்து நாம் தலை குனிந்து நிற்க வேண்டும். கடலில் முழுகியதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள தொல்லெச்சங்கள் குறித்து இன்று வரை எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. உலகப் புவியியல் ஆண்டு என்று 1964 அறிவித்து அமெரிக்கா, சோவியத்து இரு நாடுகளும் உலகப் பெருங்கடல்களில் ஆய்வு செய்ததில் சோவியத்து வெளியிட்டது மூவாரியின் புதிர்கள் – Riddles of Three Oceans என்ற நூல். அட்லாண்டிக் பெருங்கடல், அமைதிவாரி, இந்தியக் கடல் மூன்றிலும் மூழ்கியதாக மரபுகளில் வழங்கும் பல்வேறு தொல் பண்பாடுகளைப் பற்றிய செய்திகளை அலசுகிறது இந்த நூல். அதில் இந்தியக் கடல் பகுதியை மட்டும் தமிழாக்கி வெளியிட்டுள்ளது இருபதாம் நூற்றாண்டு புத்தக நிறுவனம். அமெரிக்காவும் இந்தக் காலகட்டத்தில் இது குறித்துக் கட்டுரை ஒன்றை வெளியிட்டதாகத் தெரிகிறது. மற்றப்படி கடலில் வரலாற்றுத் தடங்களையோ தடயங்களையோ இரு தரப்பினரும் தேடவில்லை. உண்மையில் இரு வல்லரசுகளின் இலக்கும் உலகக் கடலடிகளில் கிடைக்கும் கனிமப் பொருள்களை ஆய்வதே. இன்று உருசியா அமெரிக்காவின் சரிசமமான போட்டியாளர் என்ற நிலையிலிருந்து அகன்றுவிட்டதால் அந்த ஆய்வை மேற்கொள்வதற்கு வசதியாக தமிழகத்தில் தமிழார்வலர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி இந்தியக் கடலை ஆய்வு செய்யுமாறு ஓர் போராட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன்தான் தமிழில் திருவாளர் செயகரன், ஆங்கிலத்தில் பாரதியாரின் பேர்த்தியார் என்ற ஒரு பெண்மணி ஆகியோரைக் கொண்டு ஒரு நூல்களை உலவவிட்டிருக்கிறார்கள். ஆனால் அகழ்வாய்வுகள் இல்லாமலேயே குமரிக்கண்டக் கோட்பாட்டை நம்மால் நிறுவ முடியும்.      

            அடுத்து, வேக்கனர் கோட்பாடு புவியியங்கியலார் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு கோட்பாடல்ல. குறிப்பாக உருசிய ஆய்வாளர்கள் இதற்கொரு மாற்றுக் கோட்பாட்டை வைத்துள்ளனர். அதாவது கொதிக்கும் குழம்பாக இருந்த புவி குளிரத் தொடங்கியதும் உருவான மேலோடு உள்ளிருந்த குழம்பு மேலும் குளிர்ந்து சுருங்கிய போது ஆங்காங்கே பிளந்தது என்கின்றனர் இவர்கள். அடுத்து வேக்கனர் கொள்கைப்படி புவி குளிர்ந்து மேலோடு உருவான போது அடர்த்தி குறைந்த சியால் என்பது அடர்த்தி மிகுந்த சிமா மீது மிதந்து கொதிக்கும் குழம்பில் கசடுகள் மிதந்து ஒரே இடத்தில் திரள்வது போல் திரண்டு பாஞ்சியா என்ற, நிலப்பரப்பின் ஒரே தொகுப்பாகத் திரண்டது என்பது என்றால் அடர்த்தி குறைந்த சியாலுக்கு அடியில் உருவாகியிருந்த சிமாவும் திடநிலைக்கு வந்திருக்குமே, அதன் மீது சியால் எப்படிமிதந்துசென்றிருக்க முடியும்? அப்படியானால் நிலத்தட்டுகள் உருவான பின்தான் கடலடித்தரைகள் உருவாயினவா? ஆனால் மேலே(பக்.70) தரப்பட்டுள்ள நிலத்தட்டுகளின் எல்லைகள் கடலுக்குள்ளும் உள்ளனவே, இது கடலடித்தரை உருவான பின்தான் கண்டத்தட்டுகளாக புவியின் மேலோடு உடைந்தது என்பதைக் காட்டவில்லையா? புவிக் குழம்பின் எந்தக் கொதிப்பு அசைவு விசை நிலப்பரப்புகளை ஒன்றிணைத்ததோ அதே அசைவு விசையே ஒன்றிணைந்த அந்தத் தொகுதியை உடைத்ததாக வேக்கினர் கோட்பாடு கூறுகிறதே, அது இயற்பியல் மற்றும் பருமைப் பொறியாண்மையியலின் (quantum mechanics) படி நடக்கத்தக்க இயற்பாடா (phenomenon) என்பதையும் பார்க்க வேண்டும். இக் கோட்பாட்டின் படி துணுக்குகளாக இருப்பவை ஒன்று திரளும் போது அதிக எதிர்ப்பாற்றலை உருவாக்குகின்றன என்பதாகும். நிலப் பகுதிகள் சிறு சிறு துண்டுகளாக இருந்து பாஞ்சியா என்ற மாபெரும் ஒரு திரட்சியாக இணைந்த பின்னர் அவற்றை இணைத்த புவிக்குழம்பின் அதே விசை அதை உடைக்கப் போதாது என்பது இந்த இயற்பாட்டின் விளைவாகும். அதாவது ஓரிடத்தில் கொஞ்சம் சல்லிக் கற்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து ஒரு சிறுவன் விளையாட்டாக ஒவ்வொரு சல்லியாக இன்னோரிடத்தை நோக்கி எறிந்துகொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். சல்லிக்குரியவன் ஒரு பெரும் சாக்குப்பையுடன் வந்து அந்தப் பையனை நோக்கி அனைத்துச் சல்லியையும் இந்தச் சாக்கில் நிறைத்து முன்பிருந்த இடத்துக்குக் கொண்டு சேர் என்று சொன்னால் அந்தச் சின்னஞ்சிறுவனால் முடியுமா? இது போன்ற பொருத்தமற்ற ஒன்றுதான் வேக்கினர் கோட்பாடும். அதோடு புவிக்குழம்பும் பழைய வெப்பநிலையைக் கொஞ்சமாவது இழந்து நிலப்பகுதிகள் அதன் மீது நகர்வதற்கு இப்போது அதிக எதிர்ப்பைத் தரும் நிலை உருவாகியிருக்கும்.
 
            வேக்கினர் கொள்கைக்குத் துணையாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்கு ஓரமும் வடதென் அமெரிக்காக்களின் கிழற்கு ஓரங்களும் மிகத் துல்லியமாகப் பொருந்துவதைக் காட்டுகின்றனர். ஆனால் இது இந்துமாக்கடல் எனும் குமரி மாக்கடலைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்புக்குப் பொருந்தவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாம் வினையாடுவதே இந்தக் கடற்பரப்பைத்தான். இன்று இருக்கும் நிலப்பரப்புகளை ஒன்றிணைத்து உருவாக்கிய பாஞ்சியா என்ற உடைபடாத நிலமென்று புவியியல், புவியியங்கியலாளர் கூறும் நில மொத்தையைப் பாருங்கள். இதில் இந்தியத் தீவக்குறைக்கும் லாரேசியா, அதாவது யூரேசியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் ஒரு இடைவெளி தெரியவில்லையா? ஒரு மொத்தையாக ஒரு பெரும் நிலப்பரப்பு புவிக்குழம்பின் கொதிப்பால் உருவான ஒரு கசட்டுத் திரள் இருந்திருந்தால் அது கிட்டத்தட்ட ஏதாவது ஒரு மொழுக்கை, வட்டம் அதாவது தீள்வட்டம் போன்ற ஒரு வடிவத்தை எய்தியிருக்காதா? இப்படியா எலிகடித்த செய்தித்தாள் போல், பெருங்கறையான் அரித்த பலாச் சருகு போல் இருக்கும்? இப்போது இந்த இரண்டாவது படத்தைப் பாருங்கள். ஆப்பிரிக்காவுக்குக் கீழே அன்றாற்டிக்காவையும் அதன் வலது புறம் கீழே ஆத்திரேலியாவையும் மேலே இந்தியாவையும் பொருத்தியிருக்கிறார்கள். அப்போதும் இந்தியாவின் வலது இடது பகுதிகள் வெறுமையாகக் காட்சியளிக்கின்றனவே, இதற்கு என்ன விளக்கம்? அவர்கள் குறிப்பிடுவது போல் வெறும் மண்ணரிப்பால் இவ்வளவு விரிவான பகுதி நிலமே இல்லைமல் போகுமா? இந்தப் படத்தில் கூட மொழுக்கையான ஒரு வடிவம் கிடைக்கவில்லை என்பது உறுதி.
            மேலே(பக்.70) உள்ள கண்டத் தட்டுகளைக் காட்டும் படத்தைப் பார்த்தால் கண்டத் திட்டுகளின் எல்லைகள் அமெரிக்காக்களின் மேற்குக் கோடியை பசிபிக் பெருங்கடல் எனப்படும் அமைதிவாரி சந்திக்கும் எல்லை நெடுகிலும், அடியார்க்குநல்லார் கூறிய பாலிமுகத்தின் தொடர்ச்சியான பாலித்தீவு சார்ந்த இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் எல்லையிலும் தவிர பிற அனைத்து இடங்களிலும் நடுக்கடலில்தான் செல்கின்றன. இது எதைக் காட்டுகிறது? உருசியப் புவியியங்கியலார் கூறுவதுபோல் புவி ஓடு குளிர்ந்து உள்ளிருந்த குழம்புக்கும் மேலோட்டுக்கும் இடைவெளி ஏற்பட்டு மேலோடு வெடித்து பாஞ்சியா உடைந்தது. பின்னர் உடைந்த நிலப்பரப்புகள் கடலடித் தரைகளுடன் குழம்பின் மீது அமர்ந்தன, அமர்ந்த நிலப்பரப்பின் இடைவெளிகளில் புவிக்குழம்பு வெளிப்பட்டு கடலடித்தரைகளாக விரிவடைந்து உறைய உறைய நிலப்பரப்புகள் ஒன்றை விட்டொன்று விலகிச் சென்றன. அதே நேரத்தில் வெளியிலிருந்து ஏற்பட்ட ஒன்றோ பலவோ தாக்கங்களினால் நிலத்தட்டுகள் வேறு சில உடைந்து புதிய நிலத்தட்டுகள் உருவாயின. அவை இந்திய நிலத்தட்டைத் தனியாக உருவாக்கி, தென்னமெரிக்காவுக்கு மேற்கில் நாசுக்கா தட்டு வட அமெரிக்காவின் மேற்கில் அமைதிவாரித் தட்டு போன்ற வற்றையும் உருவாக்கியுள்ளன. பிற இடங்களில் இல்லாத வகையில் இந்த வட்டாரங்களில் மிகக் குறைந்த கடலாழத்தைக் காண முடிகிறது. ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடல் பாஞ்சியா நிலப்பரப்பில் காணப்படவில்லை. அங்கே இருந்த வெடிப்பின் வழியாகக் கசிந்த குழம்பு கடல் மட்டத்து மேல் எழுந்து நிலப்பரப்பாக இருந்து பின்னர் ஏற்பட்ட வெளித்தாக்கத்தால் கடலினுள் அமிழ்ந்ததால் பழைய வெடிப்பின் எல்லைகளில் சிதைவு ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கு வரலாம். இந்த வட்டாரத்திலும் கடல் ஆழம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. உயிரினங்கள்வியாபித்ததுபற்றி வேறோர் இடத்தில் பேசலாம்.


            4.எரிமலைப் பிழம்பின் படிவம் கடலுள் காணப்படுகிறது. இது ஒரு காலத்தில் நிலமாக இருந்த பகுதி கடலுள் மூழ்கியதாக இருக்கலாம்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            கடலின் அடித்தளத்திலும் எரிமலைகள் உண்டு. அவை குழம்பை உமிழ்வது இன்றும் நடந்துவரும் நிகழ்வு. எனவே எரிமலைப் படிவங்கள் கடலின் அடியில் இருப்பதால் அது மூழ்கிய நிலப்பகுதியென்று கருதுவது தவறானது. சில சமயங்களில் எரிமலைக் குழம்பினால் உருவாகிய மலைகள், அவற்றின் சிகரங்கள், கடல்மட்டத்துக்கு மேலே வந்து தீவுகளாகப் பரிணமிக்கின்றன. இவ்வாறு உருவானதே மொரீசியசுத் தீவு. 2000 ஆண்டு மே மாதம் சாலமோன் தீவுகளுக்கருகே கடலடியில் எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பு வெளியேறி இறுகி, சிறிய தீவு ஒன்று உருவானதைத் தொலைக்காட்சிகள் தீவின் பிறப்பு என்ற தலைப்பில் காட்டின. இவ்வாறு உருவான ஒரு தீவைத் தரையாகிய மாறிய கடல் மட்டம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதேபோல் கடலடி எரிமலைப் படிவங்களைக் கடலுக்குள் மூழ்கிய தரை என்று கூறுவதும் அபத்தமாகும்”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

              திருவாளர் செயகரன் ஏன் இவ்வளவு எரிச்சல் படுகிறார் என்று தெரியவில்லை. தவறானது, அபத்தமானது என்றெல்லாம் சொற்களை வீசுகிறார். அதாவது கடலடியில் நிலங்கள் மூழ்கின என்ற கருத்தே ஒட்டுமொத்தமாக, தவறானவை, அபத்தமானவை அவை கருதிப்பார்க்கத்தகாதவை என்று ஓங்கி அடிக்கிறாரே அதைத்தான் கூறுகிறேன். இப்போது நம் பக்கத்தை முன்வைப்போம்.

            கீழே (பக்.80) இருக்கும் படத்தில் கடல் மட்டத்திலிருந்து 200 மீற்றர்கள், அதாவது 656 அடிகளுக்குக் குறைவான ஆழத்துக்குள் இருக்கும் நிலப்பரப்புகளைப் பாருங்கள். அத்துடன் அதைஅடுத்து இருக்கும் பனி ஊழிக்குப் பின் கடல்மட்ட உயர்வைக் காட்டும் வளைவைப்

 பாருங்கள். கடந்த10,000 ஆண்டுகளில் 60 மீற்றர்களும், அதாவது ஏறக்குறைய 200 அடிகளும் 8000 ஆண்டுகளில் 30 மீற்றர்களும், அதாவது ஏறக்குறைய 100 அடிகளும் உயர்ந்திருக்கிறது. இதில், இந்த 656 அடிகளுக்கு உட்பட்ட நிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு நிலம் குமரி மாக்கடலுக்குள் ஆங்காங்கே முழுகியிருக்க வேண்டுமல்லவா? அல்லது இந்த 200 அடி மட்டத்தில் குமரிமாக்கடலில் இருக்கும் கடலடித்தளம் அப்பட்டமான தட்டையாக இருக்கிறது அல்லது இருந்தது என்று சொல்ல வருகிறாரா? படங்களைப் பார்த்து விடை கூறட்டும்.

அத்துடன் பெரும்பாலான எரிமலைகள் நிலப்பகுதியில்தாம் உள்ளன, எனவே கடலில் காணப்படும் எரிமலைக் குழம்புப் படிவுகளை முதலில் கடலினுள் அமிழ்ந்த நிலப்பகுதிகள் இல்லை என்று உறுதிப்படுத்திய பின்னரே அவை கடலடியில் இருந்த எரிமலைகள் உமிழ்ந்த குழம்புப் படிவங்களா என ஆய வேண்டும். இந்த இடத்தில் அவர் கையாளும்அபத்தம்என்ற சொல் தேவையற்றது, அபத்தமானது.

            5. பல மில்லியன் ஆண்டுகள் மாற்றத்தில் கோண்டுவானாக் கண்டம் உடைந்தது. நிலம் ஆழ்ந்துநீர் மேலிட அது கடலின் அடித்தரையாயிற்று. குறைந்த அழமுள்ள கடல்பகுதிகளில் பவளத் திட்டுகள் தோன்றின.இது கோந்திரத்தோவ் கூற்று.
             
            கோண்டுவானாக் கண்டம் உடைந்தது உண்மை, ஆனால் அது கடலின் அடித்தரையாக மாறவில்லை. ஆப்பிரிக்கா, அரேபியா, இலங்கையுடன் இணைந்த இந்தியத் தீபகற்பம், ஆத்திரேலியா, அண்டார்ட்டிக்கா எனப் பெரும் நிலத்தட்டுகளாக பிளந்து, நகர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தது. கடல் மட்டத்திற்கு மேல் பூமியின் மேற்பரப்பாக உள்ள பகுதிகளில், பல யுகங்களாக மெதுவாக நகர்ந்த போது கண்டத்தட்டுகளின் ஓரங்களிலும் கண்டங்களின் சரிவிலும் ஏற்பட்ட சில மாற்றங்கள் தவிர, அவை வெகுவாக உருமாறவில்லை. பவளத்திட்டுகள் பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் கடற்கரையை ஒட்டி வளரும். எல்லாத் தாழ்வான கடற்பகுதியிலும் வளரா. ஆகவே பவளத்திட்டுகள் இருப்பதை நிலம் மறைந்ததற்கு ஆதாரமாகக் கூற முடியாது”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            பவளப்பாறைகள் புவிநடுக்கோட்டை ஒட்டிய பகுதிகளில் மட்டும் வளரும் என்ற திருவாளர் செயகரனின் கூற்றுக்கு மகரக் கோட்டை தன் நடுவில் கொண்டுள்ள ஆத்திரேலியக் கடற்கரையில் தொடங்கும் உலகிலேயே நீண்ட கடலடி பவளத்திட்டு மறுப்பாக உள்ளது(ஆத்திரேலியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் இப்பவளத்திட்டுகளின் பங்கு முதன்மையனது). அத்துடன் கதிரொளி எட்டும் ஆழம் வரைதான் பவளப்பாறைகள் வளரும் என்பது ஓர் அறிவியல் செய்தி. இந்த அடிப்படையில் இலங்கையை நோக்கிய தமிழகக் கடற்கரையில் நீரோட்டங்கள் வலமாகவும் இடமாகவும் இயங்கும் காலங்களில் கடல் நீர் கலங்கலாகவே இருப்பதால் 1.5 மீற்றர்கள் ஆழத்துக்குக் கீழே பவளப்பாறைகள் உருவாவதில்லை. அதனால் இங்கு ஆழத்தில் இருக்கும் பவளப்பாறைகள் அவற்றின் மட்டத்தில் கடல் இருந்த போது உருவானவையே என்பது உறுதி. அதாவது இப்பவளப்பாறைகளின் உயரத்துக்கு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது என்பதற்கு இப்பவளப் பாறைகளே சான்றாகும். ஆத்திரேலியப் பகுதிக் கடலின் நீர் மிகத் தெளிவாக இருப்பதால் அங்கு ஆழ்கடலிலும் பவளப்பாறைகள் வளர்கின்றன.

            அத்துடன் வேக்கினரின் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாடு எந்த எதிர்ப்பும் இல்லாமல் எவராலும் மறுக்கப்படாத ஒன்றாக இருப்பது போல் திருவாளர் செயகரன் கூறுகிறாரே அதற்கு ஒரு மறுப்பை ஏற்கனவே பக்.78இல் தந்திருக்கிறோம். இன்னொன்று இப்போது கண்டங்களின் எல்லைகளில் காணப்பப்படும் இயைபு தற்செயலானது, இன்றைய கடல் மட்டத்துக்குக் கீழே அத்தகைய இயைபைக் காணவில்லையே அதற்கென்ன விளக்கத்தை வைத்திருக்கிறார் திருவாளர் செயகரன்?  

            இனி, திருவாளர் செயகரனின் நாணயத்தைப் பார்ப்போம். அவர் மேற்கோள் காட்டியுள்ள பார்த்தசாரதி மொழிபெயர்த்த நூலின் மூல நூல் தரும் செய்திகளை அவற்றின் முழுமையில் பார்ப்போம்.

Gondwana land broke up over the course of millions of years. Land areas subsided were covered with water, became the floor of ocean. Coral colonies appeared in the shallow waters and unobstrusively set about their titanic labours, with the result that in the Indian Ocean, as in the Pacific, there arose coral atolls and reefs and the Maldives, Lacadives, Cocos and Chagos islands.

Nevertheless, the existance of these islands cannot explain the resemblances between the fauna and flora of India and Ceylon, Madagaskar and Indian Ocean islands of the “continental type”, like the Seychelles and Comoro, which are granite, not coral islands. This is what led the English Zoologist Phillip Sclatter to advance the supposition, in the middle of the last century, that a large land mass, called Lemuria, continued to exist in the northern part of the Indian Ocean many millions of years after the break-up of Gondwanaland…..

கோண்டுவானாக் கண்டம் பல மில்லியன் ஆண்டுகளின் போக்கில் உடைந்தது. முழுகிய நிலப்பரப்புகள் நீரால் சூழப்பட்டு கடலடித் தரைகளாயின. ஆழம் குறைந்த நீர்நிலைகளில் பவளப்பாறைகள் தோன்றி தம் அரக்கத்தனமான பணிகளைத் தொடங்கின. அதன் விளைவாக, அமைதிவாரியைப் போன்று குமரிமாக்கடலிலும் பவளப்பாறைகளும் குன்றுகளும் எழுந்து மாலத்தீவு, இலக்கத்தீவு, கோக்கோ, சாக்கோ தீவுகள் உருவாயின.                  

            இருந்த போதிலும் இந்தியாவிலும் பவழத் தீவுகளல்லாத கருங்கல்லாலான சேக்கில்லை, கோமோரோ தீவுகள் போன்றுகண்டவகைசார்ந்த இலங்கை, மடகாசுக்கர், பிற குமரிப் பெருங்கடல் தீவுகளிலும் உள்ள மாவடை, மரவடைகளின்[1] ஒப்புமையை இந்தத் தீவுகளின் இருப்பால் விளக்க முடியாது. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆங்கில விலங்கியலாளரான கிலேட்டரை கோண்டுவானாக் கண்டம் உடைந்ததற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் லெமூரியா எனும் ஒரு பெரும் நிலப்பகுதி குமரி மாக்கடலின் வட பகுதியில் தொடர்ந்து நிலைத்திருந்தது என்ற கருத்தை முன்வைக்க இதுதான் இட்டுச்சென்றது….. எனபது இதன் பொருள்.

            பவளப்பாறைத் தீவுகள் மட்டுமல்ல, கண்டத்தட்டுத் தீவுகளும் குமரி மாக்கடல் பகுதியில் இருக்கின்றன என்ற கோந்திரத்தோவ் கூற்றை மறைத்து நாடகமாடியுள்ள திருவாளர் செயகரனிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். கடல்நீர் மட்டத்துக்குக் கீழே மட்டும் வளர்ந்து வாழக்கூடிய பவளப்பாறைகள் எப்படி கடல் மட்டத்துக்கு மேல், அதுவும் மனிதர்கள் வாழும் தீவுகளாயின? இந்தக் கேள்விக்கு அவரால் விடை கூற முடியாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கேள்விக்கு விடையை உரிய இடத்தில் நானே தருகிறேன்.

            6. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாவரவியல் வல்லுநர் எர்னெட் ஏக்கல் குரங்குகளுக்கும் மனிதநிலைக்கும் இடைப்பட்ட மறைந்த இணைப்பாகக் கருதப்பட்ட உயிரினம் லெமூரியாவில் தோன்றி வட கிழக்கில் இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் பரவியது என்ற முடிவிற்கு வந்தார். டச்சு ஆய்வாளர் தூப்வாவின் கண்டுபிடிப்பான சாவா மனிதனின் மண்டையோடு இதை உறுதிப்படுத்தியது.இது கோந்திரத்தோவ் கூற்று.
        
            ஆதிமனிதக் குடியேற்றம் ஆப்பிரிக்காவில் துவங்கி ஆசியாவிற்குப் பரவியது என்பது இன்று நிரூபிக்கப்பட்ட உண்மை. டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சி பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர், வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் வாலில்லாக் குரங்கு மனிதராகப் பரிணமித்தது என்றால் குரங்கிற்கும் மனிதருக்கும் இடைப்பட்ட நிலையொன்று இருந்திருக்க வேண்டும் என்றும் என்றாவது ஒரு நாள் அது கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்றும் நம்பினர். இந்தக் கற்பனை விலங்கை மறைந்த பரிணாம இணைப்பு என்று குறிப்பிட்டனர். பரிணாம வளர்ச்சியில் கீழ்மட்ட உயிரினங்களிலிருந்து ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒரு சங்கிலித் தொடர்போல் மேல்மட்ட விலங்குகள் தோன்றின என எர்னெட் ஏக்கல் போன்றோர் தவறாக எண்ணியதால் ஏற்பட்ட குழப்பம் இது. முதன்முறையாக ஓமோ எரக்டசின் தொல்லெச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது அதேயே மறைந்த இணைப்பாக எண்ணிகுரங்கு மனிதன்எனப் பொருள்படுமாறு பித்தகேந்த்ரோபசு எனப் பெயரிட்டனர். பின்னர் நடந்த ஆய்வுகளால் இந்தக் கண்டுபிடிப்பு பற்றித் தெளிவு ஏற்பட்டது.

            தூப்வா(Eugene Dubois) எனும் டச்சு இராணுவ மருத்துவர் ஆதிமனிதயினத்தின் தொல்லெச்சங்கள் சாவாவில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு என்ற நம்பிக்கையுடன் அங்கு ஆய்வுகள் நடத்தினார்.1891இல் சோலோ நதிக்கரையிலுள்ள டிரினில்(Trinil) என்ற கிராமத்தருகே ஒரு மண்டையோட்டின் மேற்பகுதியை இவர் அகழ்ந்தெடுத்தார். அருகாமையிலேயே தொடை எலும்பு  ஒன்றும் கிடைத்தது. மண்டையோட்டின் பகுதி கனமானதாகவும் தட்டையாகவும் மனிதக் குரங்குக்கு உள்ளது போல முன்புறம் நீண்டும் இருந்தது. ஆனால் தொடை எலும்போ கற்கால மனிதனுக்குள்ளது போல் இருந்தது. எனவே இவை இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையா என்ற கேள்வி எழுந்தது. (கண்டுபிடிப்பு நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரே கால நிர்ணயம் செய்யப்பட்டு, இரண்டும் சமகாலத்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.) சாவாவின் புவியியலமைப்பு புரியாததாலும் காலக்கணிப்பு செய்ய அப்போது உபகரணங்கள் இல்லாததாலும் தூப்வா இந்த இனத்தை, நின்ற மந்தி மனிதன்(Pithecanthropine Erectus) என்று அழைத்தார். உலகின் இதர பகுதிகளில்ஓமோ எரக்டசுகண்டுபிடிப்புகள் வெளிவர, தூப்வாவின் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட சில ஐயப்பாடுகள் தெளிவடைய ஆரம்பித்தன”. – இது திருவாளர் செயகரனின் மறுப்பு.

            டார்வினின் திரிவாக்க(பரிணாம)க் கோட்பாடு சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று திருவாளர் செயகரன் தொடங்குகிறார். எந்த வகையில் தவறு என்றோ எப்படி சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. நாம் அறிந்தவரை ஊதர்களின் திருமறையில் கூறப்பட்டுள்ள கடவுளின் படைப்புக் கோட்பாட்டுக்கு மாறாக டார்வினின் கோட்பாடு இருப்பதாக கிறித்துவ வட்டாரங்களில் ஒரு மனக்குறை உண்டு. அதற்காக, உயிர்கள் தாமாக தங்களை மேம்படுத்திக்கொள்ளவில்லை, ஒன்றை விட மேம்பட்டதாக அடுத்தது என்ற வரிசாயில் கடவுளே நேரடியாகப் படைத்தார் என்று டார்வின் கோட்பாட்டுக்கு ஒரு விளக்கம் கிறித்துவ வட்டாரங்களிலிருந்து வந்ததை நான் அறிவேன். அதாவது, சில நூறு அடிகளே பறந்தஆகாயக் கப்பலைஅமெரிக்காவின் ரைட் பிறந்தைகள்(உடன்பிறப்புகள்) உருவாக்க இன்று ஆறு மணி நேரத்தில் உலகையே வலம் வரும் வானூர்திகளைத் தொடர்ந்து வந்த மனிதர்கள் உருவாக்குவது போல் கடவுளும் ஒரு தொழிலகத்தை அமைத்து, தான் படைக்கும் உயிர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ஆய்வகங்களையும் அமைத்து ஒன்றுக்கு மேம்பட்டதாக அடுத்ததை அத்தொழிலகத்திலிருந்து களத்துக்கு விடுகிறார் என்பது அந்த விளக்கம். அதைத்தான் திருவாளர் குறிப்பிடுகிறாரா என்பது பெரும் புதிராக இருக்கிறது. இதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? கடவுள் நடத்தும் இத்தொழிற்சாலாயில் உருவாகும் பண்டங்களில் மனிதன் இயக்கும் தொழிற்சாலைகளில் போல் விளைப்புக் குறைபாடு(manufacturing defect) உள்ள சரக்குகளும் கணிசமாக வெளிவரும்(வந்துகொண்டிருக்கின்றன).

ஆனால் டார்வினின் கோட்பாடு கருவுருவாக்கம்(embryogeny) என்ற மட்டத்திலேயே இயற்கையால் ஒவ்வொரு குழந்தை உருவாக்கத்திலும் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதக் கருவும் ஒரு பெண்ணின் கருமுட்டையினுள் ஆணின் விந்தணு புகுந்து அதை இரண்டாகப் பிளந்து இரண்டிரண்டாக பெருக்குத் தொடர்முறை(geometric progression)யில் பெருகி ஒரு கட்டத்தில் தவளையின் தலைப்பிரட்டையாகவும் பின்னர் மீனாகவும் ஒரு கட்டத்தில் ஒரு சிறு வாலுடன் குரங்காகவும் பின்னர் வால் கழிந்து சிறிது குரங்கு முகத்தோற்றத்துடன் குழந்தையாகவும் பிறக்கிறது. அத்துடன் அதன் திரிவாக்கம் முடிந்துவிடவில்லை. கருப்பை எனும் நீர்மத் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த குழந்தை தரையாகிய கரையை அடைந்ததும் அழுகை எனும் வடிவத்தில் தன் உயிர்ப்பு, அதாவது மூச்சுவிடுதல் என்ற புதிய நடைமுறையைத் தொடங்குகிறது. அது மட்டுமல்ல தொடக்கத்தில் கடல் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாறுபாடுகளால் கடல் வற்றிப்போக அரைகுறை ஆழத்தில் மூச்சுமண்டலம் உருவாகும் வரை அலைப்புறும் நீரில் மல்லாக்கக் கிடந்து தவித்தது போல் குறைந்தது 5 மாதங்கள் மனிதக் குழந்தையும் கையையும் காலையும் உதறித் தவிக்கிறது. பெரும்பாலான பிற உயிரினங்களும் ஆடு மாடுகள் போல் பிறந்து சில மணி நேரம் அல்லது நாய், பூனை போல் சில நாட்களில் எழுந்து நடமாட மனிதக் குழந்தை மட்டும் புரண்டு படுத்தல், கவிழ்தல், எழுந்து உட்கார்தல், தவழ்தல், எழுந்து நிற்றல், சுவரைப் பற்றிக்கொண்டு நடத்தல், தானே தத்தித்தத்தி நடத்தல் என்று இயல்பாக நடப்பதற்குள் படும் பாடு நம் அனைவருக்கும் தெரியும். மொத்தத்தில் ஓரணு உயிராகத் தொடங்கி மனிதனாகத் திரிவாக்கம் பெற எடுத்துக்கொண்ட பல நூறு கோடி ஆண்டுகளாகளின் நிகழ்ச்சிகளின் தொடரைத் தாயின் வயிற்றில் அவளின் மாதவிடாய்க் காலத்தின் 10 மடங்கு காலத்திலும் நிலத்தில் ஒன்றிரண்டு ஆண்டுகளிலும் முடித்துவிடுகிறது ஒவ்வொரு மனிதக் குழந்தையும். எனவே டார்வினின் திரிவாக்கக் கோட்பாட்டில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

            முதன்முறையாக ஓமோ எரக்டசின் தொல்லெச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது அதையே மறைந்த இணைப்பாக எண்ணிகுரங்கு மனிதன்எனப் பொருள்படுமாறு பித்தகேந்த்ரோபசு எனப் பெயரிட்டனர். பின்னர் நடந்த ஆய்வுகளால் இந்தக் கண்டுபிடிப்பு பற்றித் தெளிவு ஏற்பட்டதுஎன்றும்உலகின் இதர பகுதிகளில்ஓமோ எரக்டசுகண்டுபிடிப்புகள் வெளிவர, தூப்வாவின் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட சில ஐயப்பாடுகள் தெளிவடைய ஆரம்பித்தனஎன்றெல்லாம் கூறுகிறாரே, இவற்றில் என்னதெளிவுஏற்பட்டது, எந்தஐயப்பாடுகள்தெளிவடைய ஆரம்பித்தன, ‘ஆரம்பித்தவைமுடிவடைந்துவிட்டனவா என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. இவை எல்லாம்இந்துசமய வேத மறையங்களா அவர் போன்றோர் தவிர எம் போன்றசாமான்யர்கள்அறியக் கூடாதவையா?

            நம் அறிவுக்கு எட்டியவரை, 2008இல் வெளிவந்துள்ள, David R.Angerhofer என்பார் The American Response to Pithecanthropus Erectus, the Missing Link and the General Reader என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளவாறு, அறிவியல் கண்ணோட்டத்துக்கும் சமய நோக்குக்கும், ஆப்பிரிக்கர்கள், ஆசியர்களோடு தாமும் ஒரே வகைக் குரங்கிலிருந்து வந்தவர்தாமா என்ற வெள்ளைத்தோலர் கண்ணோட்டத்துக்கும் இடையில் இந்தநிமிர்ந்த குரங்கு மனிதன்சிக்கிக்கொண்டு திணறுவதைத்தான் திருவாளர் செயகரன் மனதில் கொண்டு கூறுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது(கொரில்லாவிலிருந்து ஆப்பிரிக்கர்களும் சிம்பன்சியிலிருந்து பிறரும் வந்திருக்கலாம் என்று வேள்ளைத்தோல் வெறியர்கள் கூறுகிறார்கள்). அப்படியானால் ஆப்பிரிக்காவில்தான் முதல் மனிதன் தோன்றினான் என்பதும் இதே கேள்விக்குள் சிக்கித்தானே இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி, “ஆதிமனிதக் குடியேற்றம் ஆப்பிரிக்காவில் துவங்கி ஆசியாவிற்குப் பரவியது என்பது இன்று நிரூபிக்கப்பட்ட உண்மைஎன்று திருவாளர் செயகரன் கூற முடியும்? அதனால்தான வழக்கம் போல் அரைகுறையாகச் செய்திகளைத் தந்து தப்பிக்க முயன்றுள்ளார் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

            7. ஆத்திரேலிய இயலின் முதல் மாணவர்கள் ஆத்திரேலியப் பழங்குடி மக்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டு வியந்தனர். ஆத்திரேலியப் பழங்குடியினரின் மூதாதையர்கள் சிறு படகுகளிலும் ஓடங்களிலும் மாக்கடலில் சென்றிருக்க முடியாது. சிலர் ஆத்திரேலியப் பழங்குடியினரின் பிறப்பிடம் இந்தியத் துணைக்கண்டம் என்பர். எனவே திராவிடர், ஆத்திரேலியர் தாயகம் எது? இந்த ஆத்திரேலியப் புதிரை விடுவிக்க 1931ஆம் ஆண்டில் சோவியத் இனநூல் வல்லுநர் செல்டார் யாவ் என்பவர் கடல்நூல் நிலநூல் விவரங்களைப் பயன்படுத்தினார். அவர் இந்தியத் துணைக்கண்டமும் ஆத்திரேலியாவும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்து, பின்னர் பிரிந்து, கடல் இடைப்பட்டதனாலும் ஆத்திரேலியரும்(அபாரிசின்கள்) திராவிடரும் பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பார். ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த வெக்கினர் கொள்கையை ஒட்டியது இவரது கொள்கை.இது கோந்திரத்தோவ் கூற்று.

            ஆத்திரேலியப் பழங்குடியினரின் தாயகம் இந்தியத் துணைக்கண்டம் என்பதை ஆய்வுகள் திட்டவட்டமாகக் காட்டுகின்றன. இப்பழங்குடியினரின் முன்னோர்கள் திமோருக்கும் நியூகினியாவுக்கும் இடையேயிருந்த குறுகிய கடல்வெளியைத் தாண்டி அன்றைய நியூகினியா ஆத்திரேலியா இணைந்த நிலப்பரப்பில் குடியேறினர். இதற்கும் வெக்கினர் கொள்கைக்கும் கண்டங்களின் பெயர்ச்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் கண்டங்கள் பிரிந்த போது ஆதி மனிதன் தோன்றியிருக்கவில்லை”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.


            கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். ஆத்திரேலியா எங்கே இருக்கிறது? இந்தியா எங்கே இருக்கிறது?(இதற்கு முன் பக்கங்களிலுள்ள படங்களைப் பார்க்க) நியூகினியாவும் திமோரும் எங்கே இருக்கின்றன? இந்த அழகில் எங்கோ இருக்கும் இந்தியாவிலிருந்து கடல் வழியாக திமோருக்கும் நியூகினாயாவுக்கும் வந்து ஆத்திரேலியாவை அடைந்தனராம் ஆத்திரேலியப் பழங்குடி மக்கள். இந்தியா தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து சென்ற போது இது நடந்திருக்கலாம் என்று வாதிடலாம். இங்கிருந்து பல ஆயிரம் கிலோமீற்றர்கள் தொலைவு இந்தியா கடந்து செல்வதற்கு முன் ஆத்திரேலியாவும் நியூகினாயாவும் திமோரும் இதே இடத்தில்தான் இருந்தனவா? இந்தியா ஆத்திரேலியாவை அதற்கு வடக்குப்பக்கமாகக் கடந்ததா, தெற்குப்பக்கமாகக் கடந்ததா? அப்போது இந்தோனேசியத் தீவுக்கூட்டம் எங்கிருந்தது? பல்லாயிரம் கிலோமீற்றர் கடலையும் சிறிதளவு கூட கூறுபாடின்றி கடல் மீது கடந்து சென்றஇந்தியத் துணைக்கண்டம்அல்லது இன்று நிலப்பரப்புகளை நிலத்திலும் கடலிலும் ஓடும் இன்றைய ரோவர்கள் போன்று அல்லது வானூர்திகள் போன்று தட்டுத் தடங்கலில்லாமல் கடந்ததா? அப்படிக் கடந்த போது திமோரையும் நியூகினியாவையும் ஆத்திரேலியாவையும் கண்டு மயங்கி அங்கே குதித்துவிட்டார்களா? அல்லது இந்தியா லாரேசியாக் கண்டத்துடன் மோதி இன்றைய நிலைக்கு வந்த பின் அங்கிருந்து கடல் வழியாக திமோருக்கும் நியூகினியாவுக்கும் வந்து அங்கிருந்து ஆத்திரேலியா வந்தார்களா? இவ்வளவு இடையூறுகளையும் தாண்டி கடல் கடந்து இந்தியாவைத் துறந்து வரும் வகையில் அவர்களைத் துரத்தியது எது? திமோருக்கும் நியூகினியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் அவர்களைக் கவர்ந்து இழுத்தது எது? இலங்கைக்கு விசயன் வந்தது போல் இந்தியாவிலிருந்து, அவரது கூற்றுப்படி திராவிடத்திலிருந்து, யாராவது அவர்களைத் துரத்தினார்களா? அல்லது இற்றைக்கால ஐரோப்பியல்கள் போல் உலகில் புது நிலங்களைத் தேடி அவர்கள் போனார்களா? இந்தக் கடல் பரப்புகளை அவர்கள் எப்படிக் கடந்தார்கள்? ஏதாவது கட்டையைப் பிடித்துக்கொண்டு நீந்தினார்களா அல்லது மரக்கலம் போன்றவற்றைப் பயன்படுத்தினார்களா? இத்தனை கேள்விகள் திருவாளர் செயகரன் கூற்றிலிருந்து எழுகின்றன. நேரிலிருந்து பார்த்தவர் போல் அவ்வளவு ஆணித்தரமாகக் கூறும் அவர்தான் இக் கேள்விகளுக்கு விடை கூற வேண்டும்.

            குமரிக் கண்டம், அதாவது அவர் மொழியில் லெமூரியாக் கண்டம் உடைந்த போது மனித இனம் தோன்றியிருக்கவில்லை என்ற அவரது கூற்றுக்கு வேறிடத்தில் நாம் மறுமொழி கூறுவோம்.

            8. இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையே பெரும் நிலப்பரப்பு இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டால், பூமத்தியரேகை இனத்தவர் பரவிக் காணப்படுவதற்கு தர்க்கரீதியான விளக்கம் கிடைக்கும்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            கோந்த்ரத்தோவ் காலத்தில் பூமத்தியரேகை இனத்தவர் பரவியதற்கு தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லாததால், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா இவற்றுக்கு இடையே இருந்ததாகச் சொல்வது மிக இலகுவான வழியாகப் போனது. ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா இவை ஒருங்கிணைந்த கண்டம் ஒன்றிலிருந்து பிரிந்தவை. இப்படிப் பிரிந்த பின்னர் இவற்றுக்கு இடையே பெருங்கடல் தவிர நிலப்பரப்பு ஏதும் இருக்கவில்லை. பூமத்தியரேகையினத்தவர் பரவியதைத் தர்க்க ரீதியாக விளக்க இயலாத கட்டத்தில் உருவான இந்தக் கற்பனைப் பாலத்திற்க்கு அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            பூமத்தியரேகையினத்தவர்பரவியதற்கு தர்க்க ரீதியாகஇப்போது விளக்க இயன்றுள்ளதாக திரும்பத் திரும்பக் கூறும் பொய் மூலம் குமரிக் கண்டம் முழுகியதை மறுக்கும் இவரது முயற்சியை ஏற்கெனவே முறியடித்துவிட்டோம். இருப்பினும் மீண்டுமொரு முறை படிக்குநர்களுக்கு நினைவூட்டுகிறோம் வேக்கினரின் கோட்பாட்டுப் பற்றாளர்கள் உருவாக்கியுள்ள, பாஞ்சியா பெருநிலப்பரப்புப் படங்கள் இரண்டிலும்(பக். 78) இவர்களால் தவிர்க்க முடியாமல் லாரேசியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரும் பரப்பிலான வெற்றிடம் நமது வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்ல லெமூரியாக் கண்டம் மூழ்கிய கடல் பரப்பு உலகின் மொத்தக் கடல் பரப்பில் ஐந்தில் ஒன்று என்ற கூற்றுக்கும் சான்றாக இவ்விரண்டு படங்களும் உள்ளன.

            இப்போது வேலிக்கு ஓணான் சாட்சி என கொடுமுடி சண்முகன் என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார். குசராத்துப் பகுதியில் டயனோசரசுகளின் கற்படிவங்களும் தமிழகத்தில் மரங்களின் கற்படிவங்களும் கிடைத்துள்ளனவாம். (நானும்தான் பாளையங்கோட்டைக்குத் தெற்கில் போக்குவரத்துக் கழகப் பல்தொழில் பயிலகத்தின் எதிர்ப்புறத்தில் சாலைக்கு மேற்கில் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் நிலத்துக்கு மேலே நின்ற கல்மரத்தின் அடித்தண்டை பாளையங்கோட்டை தொல்பொருளாய்வுத்துறை உதவி இயக்குனர் செந்தில் செல்வக்குமரன் அவர்களை அழைத்துப்போய்க் காட்டினேன். அவர் இது தன் துறை சார்ந்ததில்லை என்று கூறி நழுவிவிட்டார். பக்.35 பார்க்க.) அதனால ஆத்திரேலியாவிலிருந்து உடைத்துக்கொண்டு பல்லாயிரம் கிலோமீற்றர்கள் கடலில் அல்லது புவிக்குழம்பில் மிதந்து லாரேசியாவோடு மோதி ஏறக்குறைய 29,000 அடிகள் உயரத்துக்கு இமயமலை உயர்வது வரைஓரம் பாரத்தில் இருந்த மிகச்சிறிய பகுதிகள் அவ்வப்போது கடலுக்குள் சரிந்து விழுந்த போது அக்காலப் புலவர்களால் கடற்கோள்கள் என விளக்கப்பட்டது’. பாவம்! அரசுத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற போது புதிதாக வேலை ஏதாவது வேண்டுமென்று பனியாக்களின் இந்திய அரசை அணுக வேண்டுமாயின் தமிழ் அல்லது வரலாற்றுத்துறையினருக்கு என்று சில வரையறைகள் பற்றி தொடக்கத்தில்(பக். 3 – 4) கூறியது போல் ஏதாவது தேவைக்காக இக்கட்டுரையை எழுதினாரோ என்னவோ?
 
            திரு.சண்முகம் கூறுவதில் நாம் முகாமையாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இந்தியத் துணைக் கண்டத்தில் விந்திய மலைக்கு வடக்கிலிருக்கும் பகுதி லாரேசியாவாம், அவரது கூற்றை அப்படியே தருகிறேன், “கண்ட பெயர்ச்சி கொள்கையின்படி எல்லாக் கண்டங்களும் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்ததை பாஞ்சியா என்பர். அதன் ஒரு பகுதி கோண்டுவானா நிலம். கோண்டுவானாவின் ஒரு துண்டு தனியாகப் பிரிந்து, ஆத்திரேலியாக் கண்டத்திலிருந்து பிரிந்து மெல்ல நகர்ந்து வந்து கொண்டேயிருந்தது. இந்தப் பகுதியே விந்திய மலைக்குக் கீழுள்ள தென்னிந்தியப் பகுதி. இந்துமாக் கடலில் தனியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போதுதான் அதனைக் குமரிக்கண்டம் என்றனர். அதுவே மேலும் நகர்ந்து ஆசியப்பகுதியில் முட்டியது. இந்த முட்டலின் அழுத்தத்தாலேயே, இமயமலை தோன்றி படிபடியாக உயர்ந்து கொண்டே வந்து பெரிய மலைத்தொடராகிவிட்டது.....குமரிக்கண்டம் கடலுள் முழுகவில்லை. விந்தியமலை உள்ளிட்ட தீபகற்ப இந்தியா ஆசியாவோடு மோதுவதற்கு முன்னிருந்த தீவு நிலையே குமரிக்கண்டம் ஆகும். வெப்ப மண்டலமே உயிரினம் தோன்றத் தோதான இடம் என்பது அறிவியல் முடிவு. மாந்தன் தோன்றிய முதல் இடங்களுள் தென்னிந்தியாவும் ஒன்று”(பக.62 – 63).

            திருவாளர் செயகரனின் குமரி நிலநீட்சியில் மேலே தரப்பட்டுள்ள மேற்கோளில் அச்சகப் பேய்(printer’s devil) எவ்வளவு விளையாடியிருக்கிறது என்று தெரியவில்லை. ‘கோண்டுவானாவின் ஒரு துண்டு தனியாகப் பிரிந்து, ஆத்திரேலியாக் கண்டத்திலிருந்து பிரிந்துஎன்பது குழப்பமாக இல்லையா?

            சரி அதை விடுங்கள், இப்போது அதைவிட மிகப் பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளோம். அதாவது, இமய மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பரப்புதான் தெற்கே இருந்து நகர்ந்து லாரேசியா எனும் ஆசியக் கண்டத்தட்டின் தென் கோடியில் முட்டியது என்றிருந்தோம் இதுவரை. கண்டத்தட்டுகளைக் காட்டும் வரைபடங்களும் இந்தியத் தட்டின் எல்லையை இமய மலைக்கு வடக்கில்தான் காட்டுகின்றன. ஆனால் இவரோ விந்தியமலை வரை ஆசியத் தட்டும் அதற்குத் தெற்குதான் தெற்கிலிருந்து நகர்ந்து வந்த தீவக்குறை இந்தியப் பகுதியும் என்று கூறுகிறார். இப்படி வந்த இந்தச் சிறு பகுதி விந்தியத்திலிருந்து வடக்கே கணிசமான நிலப்பகுதியை இடையில் விட்டு அதற்கு வடக்கிலிருந்த நிலத்தை நகர்த்தி உலகிலேயே உயரமான மலையாகிய இமயமலையை உருவாக்கிவிட்டதாம். தலை சுற்றுதப்பா!

            கோந்திரத்தோவ் மீதான திறனாய்வு 2இல் (பக்.76 – 7) இந்தியப் பெருங்கடலின் வடக்கில் லெமூரியா இருந்தது என்று சொன்னதற்காக கோந்திரத்தோவைக் குறை கூறிய திருவாளர் செயகரன் இப்போது அங்கு விந்திய மலை வரையிலான இந்தியா இருந்தது என்ற கொடுமுடி சண்முகனாரின் கருத்தைத் தனக்குச் சான்றாகக் காட்டுகிறாரே எப்படி?

            எனக்கு ஓர் ஐயம், குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கிண்டல் செய்யத்தான் இப்படி ஒரு நூலை வெளியிட்டிருப்பார்களோ திருவாளர் செயகரன் காலச்சுவடு குழுவினர்?

            கொடுமுடி சண்முகனாரை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்ப்போம். தீவக்குறை இந்தியத் தட்டு அலுங்காமல் குலுங்காமல் காசுமீரத்து தால் ஏரியில் இன்ப உலாச் செல்வது போல் சென்றுகொண்டிருக்க ஓரம் பாரத்தில் அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் மண் சரிந்து கடலில் மூழ்க அதனைக் கண்ட புலவர்கள் அவற்றைக் கடற்கோள்கள் என்று பாடிவைத்துவிட்டனராம்.

            ஆனால் இங்கு ஓர் உண்மையைக் குறிப்பிட்டாக வேண்டும். கடற்கோள்கள் நிகழ்ந்ததாக நாம் அறியும் கி.மு.56ஆம், கி.மு.17ஆம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட பாடல் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. மூன்றாம் கழகக் காலத்தின் இறுதியில் பாடப்பட்டதாகக் கருதப்படும் கலித்தொகையில் இரண்டாம் கடற்கோளும் மூன்றாம் கழகக் காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதற் கடற்கோளும் கூறப்பட்டுள்ளன. கலித்தொகை இன்னும் காலத்தால் பிற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரைக்கு மேற்கோளாக உதவ இது எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இவ்விரு இலக்கியப் படைப்புகளும் தரும் செய்திகளை விடத் தெளிவாகவும் விரிவாகவும் செய்திகளைத் தருபவர் காப்பியப் புலவர் இல்லாதவரும் சிலப்பதிகாரம் உரையாசிரியர்களில் ஒருவருமான அடியார்க்குநல்லாராகும். புவியியல் நிலையிலும் புவியியங்கியல் நிலையிலும் எந்த ஐயத்துக்கும் இடமில்லாத வகையில் செய்திகளை அவர் தந்துள்ளதை நாம் ஏற்கனவே பக்.57இல் விளக்கியுள்ளதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்துகிறோம்.      
*                                             *                                       *
            ஆதிப்பெருங்கண்டமான கோண்டவானாக் கண்டத்திலிருந்து இந்தியத் துணைக் கண்டம் பிரிந்தது ஏறத்தாழ 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது மனித குலத்தின் முன்னோடிகள் கூடத் தோன்றியிருக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டம் வடக்காக நகர்ந்து வந்தபோதுதான் அதனைக் குமரிக்கண்டம் என்றனர் எனும் கூற்றும் தவறு. ஏனெனில், இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கு நோக்கிய பயணம் மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நடந்தது. அப்போதும் ஆதிமனிதயினம் தோன்றியிருக்கவில்லை. மேலும் இந்தியத் துணைக்கண்டம் ஆசியப் பகுதியுடன் முட்டியதும் மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னரே”(குமரி நிலநீட்சி பக்.63).

            அப்பப்பா, தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டம் கோண்டவானாக் கண்டத்திலிருந்து பிரிந்தது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாம். ஆனால் அது வடக்கு நோக்கி நகர்ந்தது மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தானாம். அப்படியானால் இவற்றுக்கு இடைப்பட்ட 149 சொச்சம் மில்லியன் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டம் குமரிப் பெருங்கடலில் இன்பச் சுற்றுலா வந்ததா? அல்லது முட்டுவதற்கு எந்தத் திசையில் செல்லலாம் என்பது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்ததா? இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் மேலே பக்.76 – 77 நாம் சுட்டிக்காட்டியுள்ளபடி இந்தியத் துணைக்கண்டம் ஆசியத் தட்டுடன் மோதி இமயமலை உயர்ந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்று வேறு கோந்திரத்தோவுக்கு மறுப்புரை 2 எழுதும் போது குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, டார்வினின் மனிதத் தோற்றக் கொள்கையில் ஐயப்பாடுகளைத் தெரிவித்த(பக்.83) இவர் இங்கே மனித குலத்தின் முன்னோடிகளைப் பற்றிக் கூறுகிறார்.

            ஒரு காலத்தில் கண்டங்கள் உடைந்து சிதறி தெப்பங்களாக கடலில் மிதந்து சென்றதாகவும் நிலப்பாலங்கள் தோன்றுவதும் அழிவதும் எரிமலை, நில நடுக்கங்கள் ஏற்படுவதும் அன்றாடம் நிகழ்ச்சிகள் போலவும் கருதி, மனித இனத்தின் குடியேற்றம், இனத்தின் தொன்மை, கண்டங்களின் மறைவு ஆகியவை பற்றி முன்னரே உருவாக்கிய முடிவுகளுக்கு காரணங்களைத் தேடினர் குமரிக்கண்ட ஆய்வாளர்கள்.  

            அறிவியல் பதங்களைப் பயன்படுத்தி, ஐதிகங்களுக்கு விளக்கங்கள் தந்து, அறிவுலகின் அங்கீகாரம் பெற முயற்சிகள் நடந்தன. இதற்கு எரிமலை, அதிர்ச்சி, கண்டங்களின் பெயர்ச்சி, நிலப்பாலம், கடற்கோள் போன்ற நிலவியல் சார்ந்த கலைச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டன. ஒரு மேம்பட்ட நாகரிகம் அல்லது பொற்காலம் இருந்ததாகக் கூறி, அது இருந்த பகுதி மறைந்துவிட்டதாகக் கூறும் மரபு எல்லாக் கலாச்சாரங்களிலும் உண்டு. குமரி அல்லது லெமூரியா போலவே, மேலை நாடுகளிலும் சீரிய நாகரிகம் கொண்ட அட்லாண்டிசு கண்டம் எரிமலை சீற்றத்தால் கடலில் மூழ்கியதாகக் கூறும் மரபு உள்ளது.

            தமிழகம் இலங்கை நிலப்பகுதிகள் பற்றிய சில விவரங்களை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக இது பெரும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக்கூடிய கண்டத்தட்டுகள் முட்டும் பகுதி அல்ல. இது நிலநடுக்கமற்ற திற (Seismologically stable)ப் பகுதி என்று கருதப்படுகிறது. இரண்டாவது, இப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இது எரிமலை சார்ந்த பகுதியுமல்ல(Non Volcanic zone). எனவே, இப்பகுதியில் நிலம் அதிர்ந்து, எரிமலை குமுறி அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஆதிமனிதத் தோற்றத்துக்குப் பின், சுமார் இன்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தென்னிந்தியாவுடன் நிலத்தால் இலங்கை இணைந்திருந்தது. அப்போது எத்தகைய நிலப்பாலமும் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா மற்றும் ஆத்திரேலியாவை இணைக்கவில்லை என்பது நிலவியல் அடிப்படையில் உண்மை”(குமரி நிலநீட்சி பக். 63 – 4).

             ஒரு காலத்தில் கண்டங்கள் உடைந்து சிதறி தெப்பங்களாக கடலில் மிதந்து சென்றதாகவும் நிலப்பாலங்கள் தோன்றுவதும் அழிவதும் எரிமலை, நில நடுக்கங்கள் ஏற்படுவதும் அன்றாடம் நிகழ்ச்சிகள் போல பண்டைத் தமிழர்கள் எப்போதும் கூறவில்லை. கடற்கோள்கள் பற்றியே கூறியுள்ளனர். திருவாளர் செயகரன் எழுத்துக்கு எழுத்து போற்றும் வேக்கினர்தான் முதன்முதலில் கண்டங்கள் உலாச் செல்வது பற்றி கூறினார். அதை அடிப்படையாக வைத்துத்தான் தம் பண்டை வரலாற்றை மீட்டுரைக்க முயன்ற தமிழ் அறிஞர் அத்திசையில் கருத்துகளை முன்வைத்தனர்.

            இரண்டாவது பத்தியில் அவர் கூறியிருப்பதைப் பொறுத்தவரை மக்கள், அதிலும் தொல்லியல் மனிதர்கள் தங்கள் கண்ணால் கண்ட நிகழ்வுகளுக்குக் கற்பனைப் பூச்சு பூசுவாரே அன்றி வானிலிருந்து கற்பனைகளை உதிர்க்க மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் கூறியவற்றில் எவை எவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை எவை எவை தள்ளத்தக்கன என்று முடிவுசெய்ய வேண்டுமேயன்றி அவற்றை ஒட்டுமொத்தமாகக் கற்பனை என்று ஒதுக்குவது உள்நோக்கத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல.

            தமிழ் மரபில் 64 கலைகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் 50, 51 ஆகியவை முறையே ஆகாயப் பிரவேசம்(வானில் புகுதல்), ஆகாய கமனம்(வானிற் செல்லல்) என்பவை. 20ஆம் நூற்றாண்டு பிறப்பதற்கு முன் வேண்டுமானால் இவை கற்பனையாக இருந்திருக்கும். இன்று இரண்டும் நம் கண் முன் நிகழ்வதைக் காண்கிறோம். அப்படியானால் இத்திறன்களை நம் முன்னோரும் ஒருவேளை எய்தியிருக்கக் கூடுமோ என்று தேடுவதில் என்ன தவறு என்று திருவாளர் செயகரனையும் அவரைக் கண்மூடிப் புகழ்வோரையும் கேட்கிறேன். அதைப் போலத்தான் நம் மரபில் பதியப்பட்டிருக்கும் கடற்கோள் பற்றிய செய்தியையும் தமிழக அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

            மூன்றாவது பத்தியில் தமிழகம் இலங்கை நிலப்பகுதிகள் பற்றிய சில விவரங்களை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக இது பெரும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக்கூடிய கண்டத்தட்டுகள் முட்டும் பகுதி அல்ல. இது நிலநடுக்கமற்ற திறப்(Seismologically stable) பகுதி என்று கருதப்படுகிறது. இரண்டாவது இப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இது எரிமலை சார்ந்த பகுதியுமல்ல(Non Volcanic zone). எனவே, இப்பகுதியில் நிலம் அதிர்ந்து, எரிமலை குமுறி அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு

            திருவாளர் செயகரன் கூறுவது தமிழகம் இலங்கை நிலப்பகுதிகள் பற்றி, ஆனால் அவர் வினையாடப்புகுந்ததோ தமிழ் இலக்கியங்கள் கூறும் கடற்கோள் பற்றி. அக்கடற்கோளில் அழிந்தனவாக அடியார்க்குநல்லார் கூறியிருப்பதோ இன்றும் நின்று நிலவும் பாலித்தீவின் தென் பகுதியும் அதை அடுத்திருந்த ஏழேழ் நாடுகளையும் பற்றி. இந்த எல்லையில்தான் இந்தியக் கண்டத்தட்டு யூரேசியத் தட்டைச் சந்திக்கிறது. இந்தோனேசியாவின் எல்லையோடு மோதிக்கொண்டிருக்கும் இந்தியத்தட்டால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் சுனாமி எனப்படும் ஓங்கலைகளும் உருவாவது இப்போதும் நாமறிந்த செய்தி. அது மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையும் பிரிந்தது கி.மு.1700 வாக்கில், அதாவது 3700 ஆண்டுகளுக்கு முன்தானே அன்றி திருவாளர் செயகரன் குறிப்பிடுவது போல் 7000 ஆண்டுகளுக்கு முன் அல்ல. 7000 ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய இன்றிலிருந்து 7800 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தமிழ் இலக்கியங்கள் காட்டும் முதல் கடற்கோள். அது போல் குமரிக் கண்டம் முழுகிய போது தப்பிப் பிழைத்தவர்கள் வெளியேற கப்பல்கள் பயன்பட்டன. அப்போது அவர்கள் உலகின் தலைசிறந்த கடலோடிகள். அவர் குறிப்பிடும் இன்றைய தமிழகம் இலங்கைக் கடற்பகுதியில் நிலம் அதிர்ந்து, எரிமலை குமுறி அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவுஎன்றுதான் கூறுகிறாரே அன்றி வாய்ப்பு இல்லை என்று கூறவில்லை என்பது அவர் நழுவுகிறார் என்பதைக் காட்டும் தடயங்களில் ஒன்றாகும்.

            இப்போது நான் கூறப்போவது மிக முகாமையான செய்தி. அவர் தந்துள்ள இரு செய்திகள் எப்படி அவரது ஒட்டுமொத்த அணுகலுக்கும் வேட்டுவைக்கின்றன என்பதைக் காட்டும் சிறந்த ஆவணங்கள்.

            பிற கலாச்சாரங்களில் கடற்கோள், பிரளயம், பற்றிய மரபுகள் என்ற தலைப்பில் அவர் தந்திருப்பவற்றில் திபெத்தில் வழங்கும் மரபென்று அவர் தந்திருப்பதை மட்டும் நான் இங்கு எடுத்துக்கொள்கிறேன். இதோ அது: ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் முழுகும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு, வங்காளம் வழியாக நீரை ஓட விட்டு வெள்ளத்தை வற்றச் செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளைவிட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும், அறிவுப்பாதையில் இட்டுச் செல்லும்முகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் அங்கு அனுப்பியதாகக் கூறுகிறது இக்கதை(குமரி நிலநீட்சி பக்.64).

            இக்கதையைப் படித்தவுடன் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் இது எதைக் குறிக்கிறது என்பது. இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து லாரோசியாவோடு மோதி இரு நிலப்பரப்புகளுக்கும் இடையில் சிக்கி டெத்தீசு எனும் ஆதிக்கடல்சுருங்கி அதன் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்து இறுதியில் இரு நிலப்பரப்புகளின் சந்திப்பில் மட்டம் தாழ்ந்திருந்த வங்காளக் குடாப்பகுதியில் உடைந்து இன்றைய கங்கைப் பள்ளத்தாக்கு உருவானதையன்றி வேறெதைக் குறிக்கிறது? ஆனால் இந்த இயற்காட்சிகளை விளக்கி நமக்குப் புரியவைத்த திருவாளர் செயகரனுக்குப் புரியாததுதான் நமக்கு வியப்பாக இருக்கிறது.

          கோண்டுவானாக் கண்டம் உடைந்து நகரஆரம்பித்தது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது இந்துமாக்கடலில் வட பகுதியில் இருந்தது ஒரு நிலநீட்சியல்ல, ‘டெதிஸ்எனும் ஆதிப்பெருங்கடல். கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம், வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கிலிருந்து லாரேசியா எனும் பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிஸ் எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம்: இது நடந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்….”

            மேலேயுள்ள கூற்று இடம் பெற்றிருப்பது குமரி நிலநீட்சி நூலின் 59ஆம் பக்கத்தில், கோந்திரத்தோவைத் திறனாய்ந்த இனம் 2இல் மேலே இதை ஏற்கனவே பக். 81இல் தந்துள்ளோம். திபேத் மக்களிடையில் நிலவும் வெள்ளச் செய்தியையும் மேலே நாம் கோட்சுட்டியுள்ள திருவாளர் செயகரனின் கூற்றையும் இணைத்துப் பார்த்தால் 135 மில்லியன், அதாவது 13½ கோடி ஆண்டுகளுக்கு  முன்பே திபெத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதும், அவர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்த ஒரு மக்கள் குழுவினர் இருந்தாரென இந்த வெள்ளக் கதையோடு இணைத்து அவர்கள் கூறுவதிலிருந்தும் லாரேசியாவோடு மோதிய குமரிக்கண்ட மக்கள்தாம் அவர்கள் என்றும் புரியவில்லையா? மேலே பக். 45இல் தாலமி உலகப் படம் தொடர்பாக நாம் தந்திருக்கும் படம் எண்.2ஐப் பாருங்கள். லாரேசியாவை கிழக்கு முனையால் தொட்டு கடிகாரச் சுற்றில் மறுமுனையால் தொட இருக்கும் நிலையை அது காட்டவில்லையா? இந்தப் படத்தை யார் வரைந்திருப்பார்கள்? குமரிக்கண்ட மக்களன்றி வேறு யாராக இருக்க முடியும்? அப்படியானால் இம் மக்கள் இந்நாகரிக வளர்ச்சியடைவதற்கு முன் எத்தனை கோடி ஆண்டுகள் தோன்றி வாழ்ந்திருக்க வேண்டும்?


[1]   மாவடை, மரவடை என்ற சொல்வழக்கு ஓரிடத்திலுள்ள விலங்குகள், நிலத்திணைகளை(தாவரங்களை)க் குறிக்கும் fauna and flora ஆங்கிலச் சொற்கட்டுக்கு இணையான தமிழ் மரபுச் சொற்கட்டு. நெல்லை மாவட்டம் தச்சநல்லூருக்கு மேற்கிலுள்ள, ரெட்டியார்புரம் என்று நினைவு, ஒருவரிடமிருந்த பழைய சொத்தாவணத்தில் இதை நான் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.