இலெமுரியாவும் குமரிக் கண்டமும் - 3



இங்கும் இவர் முழுகியது கண்டமா நிலப்பரப்பா என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறார். கோண்டுவானாவோ லாரேசியாவோ லெமூரியாவோ மூழ்கவில்லை உடையத்தான் செய்தது என்கிறார்.
கோந்திரத்தோவின் கூற்றுகளாக அவர் தந்திருப்பவற்றையும் அவற்றுக்கு அவர் கூறும் மறுப்புரைகளையும் பாருங்கள்:

            1.திராவிட மக்களான தமிழர்களைப் பற்றி சர்ச்சைகளை உண்டு. தமிழர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பூமத்தியரேகையின் அருகில் தோன்றிய பல நிலங்களில் ஒன்றான நாவலந்தீவின் தென்பகுதியில் தமிழர்களின் தாயகம் இருந்ததென்று நம்புகின்றனர். இடைக்கால இலக்கியங்கள், புலவர்களைக் கொண்டு இயங்கிய தமிழ்ச் சங்கங்கள் பற்றிக் கூறுகின்றன. தமிழ் வரலாற்றின் தொடக்க காலத்தில், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், தென் கண்டமான லெமூரியாவில் இந்த சங்கங்கள் தோன்றின. நாகரிகத்தின் தொட்டில் என்று கருதப்பட்ட லெமூரியாவும் அதன் தலைநகரான தென்மதுரையும் மூழ்கிய பிறகு இச்சங்கங்கள் அழிந்தன. இந்துமாக் கடலில் மூழ்கிய கோண்டுவானாக் கண்டத்தின் வடபுலத்தின் நீட்சியே லெமூரியா என்று தமிழர் நம்பினர். இந்தியத் துணைக்கண்டம் மேலைக் கடலில் மூழ்கிப்போன பெரியதொரு கண்டத்தின் எஞ்சிய பகுதி என்றும், இலங்கை இதன் ஒரு பகுதி என்றும் நில நூலார் கருதுகின்றனர்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            இதற்கு மறுப்பாக திருவாளர் செயகரன் கூறுவதைக் கேளுங்கள்:
            லெமூரியா என்பது அறிவியல் ஆதாரமற்ற ஒரு மேல்நாட்டுக் கருதுகோள். நமது இலக்கியங்கள் குமரி என்ற நிலப்பரப்பைக் குறித்தாலும் கண்டம் போன்ற ஒரு பெரிய நிலப்பரப்பைப் பற்றிக் குறிக்கவில்லை. பெரிய கண்டமான கோண்டுவானாக் கண்டம் இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கவில்லை. உடைந்த பகுதிகளாக பல்லாயிரக் கணக்கான மைல்கள் நகர்ந்து இன்றும் மக்கள் வாழும் நிலப்பரப்புகளாக அது உள்ளது. கோண்டுவானாக் கண்டத்தின் வடபுலத்தின் நீட்சி, இன்றைய சிந்துகங்கை சமவெளிகளின் தெற்கேயுள்ள இந்தியத் தீபகற்பமும் இலங்கைத் தீவுமாகும். இது மூழ்கிப்போன ஒரு பெரும் நிலப்பரப்பின் எஞ்சிய பகுதி என்பது தவறு. சிதறுண்ட கோண்டுவானாக் கண்டத்தின், வடக்காக நகர்ந்த பகுதி என்பதே சரி”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            கண்டம் என்பதற்கும் தீவு என்பதற்கும் பரப்பளவு வரையறை ஏதாவது இருந்தால் அதை திருவாளர் செயகரன் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆசியா, ஐரோப்பா ஆகியவை இரு வேறு கண்டங்கள் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றன. இந்தப் பிரிவினை அரசியல் சார்ந்து. ஆனால் இந்த இரண்டும் சேர்ந்து யூரேசியா என்ற உலகிலேயே மிகப் பெரிய கண்டமாக உள்ளது என்பதுதான் உண்மை. இந்த மாப்பெரிய கண்டத்தோடு ஆத்திரேலியாவும் கண்டம் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கவில்லையா? அது போல் ஏழு நாடுகளையும் பாலிமுகம் எனும் நிலப்பரப்பையும் ஆறுகளையும் மலைகளையும் கொண்டதாக அடியார்க்குநல்லார் கூறும் நிலப்பகுதியை ஒரு கண்டம் என்று குறிப்பிடுவதற்காகத் தமிழ் ஆர்வலர்களைக் குற்றம் சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? – இது நம் கேள்வி.

            2.கோண்டுவானா சிதைந்தது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்துமாக் கடலின் வட பகுதியில் லெமூரியா என்ற பெருநிலம் இருந்தது என்று கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழந்த ஆங்கில உயிர் நூலார் பிலிப் கிலேட்டர் கூறினார்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            கோண்டுவானாக் கண்டம் உடைந்து நகரஆரம்பித்தது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அப்போது இந்துமாக்கனலில் வட பகுதியில் இருந்தது ஒரு நிலநீட்சியல்ல, ‘டெதிஸ்எனும் ஆதிப்பெருங்கடல். கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம், வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கிலிருந்து லாரேசியா எனும் பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிஸ் எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம்: இது நடந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்கும் பின்னரே மனித இனம் தோன்றியது”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            கோண்டுவானா சிதைந்துபல மில்லியன்ஆண்டுகளுக்குப் பின் இருந்த நிலையை கோந்திரத்தோவ் கூற, இவர் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உடைந்து அதன் ஒரு பகுதியான இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கிலிருந்த டெதீசு எனும் ஆதிப்பெருங்கடல் சுருங்கி 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியத் துணைக்கண்டம் லாரேசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்கியது என்பதை எப்படி மறுப்பாக வைக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. ஒரே செய்தியை இரு வகையில் சொல்வது தவிர இது வேறென்ன? அவர் லெமூரியா என்கிறார், இவர் இந்தியத் துணைக்கண்டம் என்கிறார், ஆமாம் கண்டம் என்ற கருத்து துணைக்கண்டம் என்பதிலும் இருக்கிறதே! ஒரு பெரும் நிலப்பகுதி உடைந்து அதிலிருந்து பிரிந்து எப்போதும் சுழன்றும் கொதித்தும் மேலும் கீழும் உயர்ந்து தாழ்ந்தும் இயங்கும் புவிநடுக்குழம்பின் மீது பல நூறு மில்லியன் ஆண்டுகளில் பல ஆயிரம் மைல் தொலைவு நகர்ந்துகொண்டிருக்கும் இன்னோரு பெரும் நிலப்பரப்பு குந்தி தேவியும் மோசேயின் தாயும் ஆறுகளில் கூடைகளில் வைத்து இட்ட குழந்தைகள், அவற்றோடு இட்ட உடைகள், நகைநட்டுகள்  போன்று எந்த ஊறுபாடும் இன்றி அச்சு அசலாக லாரேசியாவில் போய் மோதியிருக்கும் என்று திருவாளர், புவியியங்கியல் புலி செயகரன் நம்புகிறாரா அல்லது நம்மை நம்பச் சொல்கிறாரா? இது நம் கேள்வி.  

             3.மனித இனங்களின் தோற்றம் பற்றி ஆராயும் போது கடல் கொண்டதாக இப்போது கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில்ஓமோசெபியன்எனும் ஆதிமனிதன் தோன்றினான் என டார்வினின் இணை ஆய்வாளரான தாமசு அக்சிலி கருதுகிறார். மேலும் ஆதிமனிதன் தோற்றத்துக்கு லெமூரியாவே முதலிடம் என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றனர். மேலும் உயிர்களும் தாவரங்களும் பரவுவதற்கு பாலமாக இது இருந்தது என்றும் சிலர் கூறுவர்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            உண்மையில் மனித இனங்களின் தோற்றம் ஏற்பட்டது ஆப்பிரிக்காவில்தான் என்பதை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதிமனித எலும்புகளின் மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மானிடத்தின் தொட்டில் ஆப்பிரிக்காதான் என்பது உறுதியான நிலையில், இல்லாத ஒரு இடத்தைக் காட்டி இங்கு ஆதிமனிதன் தோன்றியிருக்கலாம் என்ற தாமசு அக்சிலியின் கருத்து தவறு என்பதை இன்றைய ஆய்வுகள் காட்டுகின்றன. சில உயிர்களும் தாவரங்களும் பரவியது கண்டங்களின் பெயர்ச்சியால் கண்டங்கள் பிளவுபடாத போது இருந்த சில உயிரினங்களும் தாவரங்களும் மிதப்புகள் போல் நகர்ந்து கண்டங்கள் போல் வியாபித்தன. தட்ப வெப்ப மாற்றங்களால் சில உயிரினங்கள் அற்றும் போயின எடுத்துக்காட்டு, கண்டங்கள் பிளவுபட்ட போது வாழ்ந்த டினோசார்கள்”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            அவ்வப்போது ஐரோப்பியர்களில் செல்வாக்குள்ள ஒரு குழு ஓர் இடத்தில் எடுத்ததாகச் சொல்லி ஓர் எலும்புத் துண்டையோ மண்டையோட்டையோ காட்டி இதுதான் உலகின் முதன்முதல் தோன்றிய மனிதனின் எலும்புக்கூடு என்று தங்கள் ஆய்வகத்தில் முடிவுசெய்ததாகக் கூறுவர், அதைக் காட்டி திருவாளர் செயகரன் போன்றோர் கட்டுரையோ நூலோ எழுதுவர், அதை, கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றுவிட்டதால் தாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கு வெட்கப்படும் ஒரு கூட்டம் ஆகாஓகோ என்று குதியாட்டம் போடும், அதைப் பார்த்து நாம் தலை குனிந்து நிற்க வேண்டும். கடலில் முழுகியதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள தொல்லெச்சங்கள் குறித்து இன்று வரை எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. உலகப் புவியியல் ஆண்டு என்று 1964 அறிவித்து அமெரிக்கா, சோவியத்து இரு நாடுகளும் உலகப் பெருங்கடல்களில் ஆய்வு செய்ததில் சோவியத்து வெளியிட்டது மூவாரியின் புதிர்கள் – Riddles of Three Oceans என்ற நூல். அட்லாண்டிக் பெருங்கடல், அமைதிவாரி, இந்தியக் கடல் மூன்றிலும் மூழ்கியதாக மரபுகளில் வழங்கும் பல்வேறு தொல் பண்பாடுகளைப் பற்றிய செய்திகளை அலசுகிறது இந்த நூல். அதில் இந்தியக் கடல் பகுதியை மட்டும் தமிழாக்கி வெளியிட்டுள்ளது இருபதாம் நூற்றாண்டு புத்தக நிறுவனம். அமெரிக்காவும் இந்தக் காலகட்டத்தில் இது குறித்துக் கட்டுரை ஒன்றை வெளியிட்டதாகத் தெரிகிறது. மற்றப்படி கடலில் வரலாற்றுத் தடங்களையோ தடயங்களையோ இரு தரப்பினரும் தேடவில்லை. உண்மையில் இரு வல்லரசுகளின் இலக்கும் உலகக் கடலடிகளில் கிடைக்கும் கனிமப் பொருள்களை ஆய்வதே. இன்று உருசியா அமெரிக்காவின் சரிசமமான போட்டியாளர் என்ற நிலையிலிருந்து அகன்றுவிட்டதால் அந்த ஆய்வை மேற்கொள்வதற்கு வசதியாக தமிழகத்தில் தமிழார்வலர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி இந்தியக் கடலை ஆய்வு செய்யுமாறு ஓர் போராட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன்தான் தமிழில் திருவாளர் செயகரன், ஆங்கிலத்தில் பாரதியாரின் பேர்த்தியார் என்ற ஒரு பெண்மணி ஆகியோரைக் கொண்டு ஒரு நூல்களை உலவவிட்டிருக்கிறார்கள். ஆனால் அகழ்வாய்வுகள் இல்லாமலேயே குமரிக்கண்டக் கோட்பாட்டை நம்மால் நிறுவ முடியும்.      

            அடுத்து, வேக்கனர் கோட்பாடு புவியியங்கியலார் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு கோட்பாடல்ல. குறிப்பாக உருசிய ஆய்வாளர்கள் இதற்கொரு மாற்றுக் கோட்பாட்டை வைத்துள்ளனர். அதாவது கொதிக்கும் குழம்பாக இருந்த புவி குளிரத் தொடங்கியதும் உருவான மேலோடு உள்ளிருந்த குழம்பு மேலும் குளிர்ந்து சுருங்கிய போது ஆங்காங்கே பிளந்தது என்கின்றனர் இவர்கள். அடுத்து வேக்கனர் கொள்கைப்படி புவி குளிர்ந்து மேலோடு உருவான போது அடர்த்தி குறைந்த சியால் என்பது அடர்த்தி மிகுந்த சிமா மீது மிதந்து கொதிக்கும் குழம்பில் கசடுகள் மிதந்து ஒரே இடத்தில் திரள்வது போல் திரண்டு பாஞ்சியா என்ற, நிலப்பரப்பின் ஒரே தொகுப்பாகத் திரண்டது என்பது என்றால் அடர்த்தி குறைந்த சியாலுக்கு அடியில் உருவாகியிருந்த சிமாவும் திடநிலைக்கு வந்திருக்குமே, அதன் மீது சியால் எப்படிமிதந்துசென்றிருக்க முடியும்? அப்படியானால் நிலத்தட்டுகள் உருவான பின்தான் கடலடித்தரைகள் உருவாயினவா? ஆனால் மேலே(பக்.70) தரப்பட்டுள்ள நிலத்தட்டுகளின் எல்லைகள் கடலுக்குள்ளும் உள்ளனவே, இது கடலடித்தரை உருவான பின்தான் கண்டத்தட்டுகளாக புவியின் மேலோடு உடைந்தது என்பதைக் காட்டவில்லையா? புவிக் குழம்பின் எந்தக் கொதிப்பு அசைவு விசை நிலப்பரப்புகளை ஒன்றிணைத்ததோ அதே அசைவு விசையே ஒன்றிணைந்த அந்தத் தொகுதியை உடைத்ததாக வேக்கினர் கோட்பாடு கூறுகிறதே, அது இயற்பியல் மற்றும் பருமைப் பொறியாண்மையியலின் (quantum mechanics) படி நடக்கத்தக்க இயற்பாடா (phenomenon) என்பதையும் பார்க்க வேண்டும். இக் கோட்பாட்டின் படி துணுக்குகளாக இருப்பவை ஒன்று திரளும் போது அதிக எதிர்ப்பாற்றலை உருவாக்குகின்றன என்பதாகும். நிலப் பகுதிகள் சிறு சிறு துண்டுகளாக இருந்து பாஞ்சியா என்ற மாபெரும் ஒரு திரட்சியாக இணைந்த பின்னர் அவற்றை இணைத்த புவிக்குழம்பின் அதே விசை அதை உடைக்கப் போதாது என்பது இந்த இயற்பாட்டின் விளைவாகும். அதாவது ஓரிடத்தில் கொஞ்சம் சல்லிக் கற்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து ஒரு சிறுவன் விளையாட்டாக ஒவ்வொரு சல்லியாக இன்னோரிடத்தை நோக்கி எறிந்துகொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். சல்லிக்குரியவன் ஒரு பெரும் சாக்குப்பையுடன் வந்து அந்தப் பையனை நோக்கி அனைத்துச் சல்லியையும் இந்தச் சாக்கில் நிறைத்து முன்பிருந்த இடத்துக்குக் கொண்டு சேர் என்று சொன்னால் அந்தச் சின்னஞ்சிறுவனால் முடியுமா? இது போன்ற பொருத்தமற்ற ஒன்றுதான் வேக்கினர் கோட்பாடும். அதோடு புவிக்குழம்பும் பழைய வெப்பநிலையைக் கொஞ்சமாவது இழந்து நிலப்பகுதிகள் அதன் மீது நகர்வதற்கு இப்போது அதிக எதிர்ப்பைத் தரும் நிலை உருவாகியிருக்கும்.
 
            வேக்கினர் கொள்கைக்குத் துணையாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்கு ஓரமும் வடதென் அமெரிக்காக்களின் கிழற்கு ஓரங்களும் மிகத் துல்லியமாகப் பொருந்துவதைக் காட்டுகின்றனர். ஆனால் இது இந்துமாக்கடல் எனும் குமரி மாக்கடலைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்புக்குப் பொருந்தவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாம் வினையாடுவதே இந்தக் கடற்பரப்பைத்தான். இன்று இருக்கும் நிலப்பரப்புகளை ஒன்றிணைத்து உருவாக்கிய பாஞ்சியா என்ற உடைபடாத நிலமென்று புவியியல், புவியியங்கியலாளர் கூறும் நில மொத்தையைப் பாருங்கள். இதில் இந்தியத் தீவக்குறைக்கும் லாரேசியா, அதாவது யூரேசியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் ஒரு இடைவெளி தெரியவில்லையா? ஒரு மொத்தையாக ஒரு பெரும் நிலப்பரப்பு புவிக்குழம்பின் கொதிப்பால் உருவான ஒரு கசட்டுத் திரள் இருந்திருந்தால் அது கிட்டத்தட்ட ஏதாவது ஒரு மொழுக்கை, வட்டம் அதாவது தீள்வட்டம் போன்ற ஒரு வடிவத்தை எய்தியிருக்காதா? இப்படியா எலிகடித்த செய்தித்தாள் போல், பெருங்கறையான் அரித்த பலாச் சருகு போல் இருக்கும்? இப்போது இந்த இரண்டாவது படத்தைப் பாருங்கள். ஆப்பிரிக்காவுக்குக் கீழே அன்றாற்டிக்காவையும் அதன் வலது புறம் கீழே ஆத்திரேலியாவையும் மேலே இந்தியாவையும் பொருத்தியிருக்கிறார்கள். அப்போதும் இந்தியாவின் வலது இடது பகுதிகள் வெறுமையாகக் காட்சியளிக்கின்றனவே, இதற்கு என்ன விளக்கம்? அவர்கள் குறிப்பிடுவது போல் வெறும் மண்ணரிப்பால் இவ்வளவு விரிவான பகுதி நிலமே இல்லைமல் போகுமா? இந்தப் படத்தில் கூட மொழுக்கையான ஒரு வடிவம் கிடைக்கவில்லை என்பது உறுதி.
            மேலே(பக்.70) உள்ள கண்டத் தட்டுகளைக் காட்டும் படத்தைப் பார்த்தால் கண்டத் திட்டுகளின் எல்லைகள் அமெரிக்காக்களின் மேற்குக் கோடியை பசிபிக் பெருங்கடல் எனப்படும் அமைதிவாரி சந்திக்கும் எல்லை நெடுகிலும், அடியார்க்குநல்லார் கூறிய பாலிமுகத்தின் தொடர்ச்சியான பாலித்தீவு சார்ந்த இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் எல்லையிலும் தவிர பிற அனைத்து இடங்களிலும் நடுக்கடலில்தான் செல்கின்றன. இது எதைக் காட்டுகிறது? உருசியப் புவியியங்கியலார் கூறுவதுபோல் புவி ஓடு குளிர்ந்து உள்ளிருந்த குழம்புக்கும் மேலோட்டுக்கும் இடைவெளி ஏற்பட்டு மேலோடு வெடித்து பாஞ்சியா உடைந்தது. பின்னர் உடைந்த நிலப்பரப்புகள் கடலடித் தரைகளுடன் குழம்பின் மீது அமர்ந்தன, அமர்ந்த நிலப்பரப்பின் இடைவெளிகளில் புவிக்குழம்பு வெளிப்பட்டு கடலடித்தரைகளாக விரிவடைந்து உறைய உறைய நிலப்பரப்புகள் ஒன்றை விட்டொன்று விலகிச் சென்றன. அதே நேரத்தில் வெளியிலிருந்து ஏற்பட்ட ஒன்றோ பலவோ தாக்கங்களினால் நிலத்தட்டுகள் வேறு சில உடைந்து புதிய நிலத்தட்டுகள் உருவாயின. அவை இந்திய நிலத்தட்டைத் தனியாக உருவாக்கி, தென்னமெரிக்காவுக்கு மேற்கில் நாசுக்கா தட்டு வட அமெரிக்காவின் மேற்கில் அமைதிவாரித் தட்டு போன்ற வற்றையும் உருவாக்கியுள்ளன. பிற இடங்களில் இல்லாத வகையில் இந்த வட்டாரங்களில் மிகக் குறைந்த கடலாழத்தைக் காண முடிகிறது. ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடல் பாஞ்சியா நிலப்பரப்பில் காணப்படவில்லை. அங்கே இருந்த வெடிப்பின் வழியாகக் கசிந்த குழம்பு கடல் மட்டத்து மேல் எழுந்து நிலப்பரப்பாக இருந்து பின்னர் ஏற்பட்ட வெளித்தாக்கத்தால் கடலினுள் அமிழ்ந்ததால் பழைய வெடிப்பின் எல்லைகளில் சிதைவு ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கு வரலாம். இந்த வட்டாரத்திலும் கடல் ஆழம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. உயிரினங்கள்வியாபித்ததுபற்றி வேறோர் இடத்தில் பேசலாம்.


            4.எரிமலைப் பிழம்பின் படிவம் கடலுள் காணப்படுகிறது. இது ஒரு காலத்தில் நிலமாக இருந்த பகுதி கடலுள் மூழ்கியதாக இருக்கலாம்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            கடலின் அடித்தளத்திலும் எரிமலைகள் உண்டு. அவை குழம்பை உமிழ்வது இன்றும் நடந்துவரும் நிகழ்வு. எனவே எரிமலைப் படிவங்கள் கடலின் அடியில் இருப்பதால் அது மூழ்கிய நிலப்பகுதியென்று கருதுவது தவறானது. சில சமயங்களில் எரிமலைக் குழம்பினால் உருவாகிய மலைகள், அவற்றின் சிகரங்கள், கடல்மட்டத்துக்கு மேலே வந்து தீவுகளாகப் பரிணமிக்கின்றன. இவ்வாறு உருவானதே மொரீசியசுத் தீவு. 2000 ஆண்டு மே மாதம் சாலமோன் தீவுகளுக்கருகே கடலடியில் எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பு வெளியேறி இறுகி, சிறிய தீவு ஒன்று உருவானதைத் தொலைக்காட்சிகள் தீவின் பிறப்பு என்ற தலைப்பில் காட்டின. இவ்வாறு உருவான ஒரு தீவைத் தரையாகிய மாறிய கடல் மட்டம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதேபோல் கடலடி எரிமலைப் படிவங்களைக் கடலுக்குள் மூழ்கிய தரை என்று கூறுவதும் அபத்தமாகும்”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

              திருவாளர் செயகரன் ஏன் இவ்வளவு எரிச்சல் படுகிறார் என்று தெரியவில்லை. தவறானது, அபத்தமானது என்றெல்லாம் சொற்களை வீசுகிறார். அதாவது கடலடியில் நிலங்கள் மூழ்கின என்ற கருத்தே ஒட்டுமொத்தமாக, தவறானவை, அபத்தமானவை அவை கருதிப்பார்க்கத்தகாதவை என்று ஓங்கி அடிக்கிறாரே அதைத்தான் கூறுகிறேன். இப்போது நம் பக்கத்தை முன்வைப்போம்.

            கீழே (பக்.80) இருக்கும் படத்தில் கடல் மட்டத்திலிருந்து 200 மீற்றர்கள், அதாவது 656 அடிகளுக்குக் குறைவான ஆழத்துக்குள் இருக்கும் நிலப்பரப்புகளைப் பாருங்கள். அத்துடன் அதைஅடுத்து இருக்கும் பனி ஊழிக்குப் பின் கடல்மட்ட உயர்வைக் காட்டும் வளைவைப்

 பாருங்கள். கடந்த10,000 ஆண்டுகளில் 60 மீற்றர்களும், அதாவது ஏறக்குறைய 200 அடிகளும் 8000 ஆண்டுகளில் 30 மீற்றர்களும், அதாவது ஏறக்குறைய 100 அடிகளும் உயர்ந்திருக்கிறது. இதில், இந்த 656 அடிகளுக்கு உட்பட்ட நிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு நிலம் குமரி மாக்கடலுக்குள் ஆங்காங்கே முழுகியிருக்க வேண்டுமல்லவா? அல்லது இந்த 200 அடி மட்டத்தில் குமரிமாக்கடலில் இருக்கும் கடலடித்தளம் அப்பட்டமான தட்டையாக இருக்கிறது அல்லது இருந்தது என்று சொல்ல வருகிறாரா? படங்களைப் பார்த்து விடை கூறட்டும்.

அத்துடன் பெரும்பாலான எரிமலைகள் நிலப்பகுதியில்தாம் உள்ளன, எனவே கடலில் காணப்படும் எரிமலைக் குழம்புப் படிவுகளை முதலில் கடலினுள் அமிழ்ந்த நிலப்பகுதிகள் இல்லை என்று உறுதிப்படுத்திய பின்னரே அவை கடலடியில் இருந்த எரிமலைகள் உமிழ்ந்த குழம்புப் படிவங்களா என ஆய வேண்டும். இந்த இடத்தில் அவர் கையாளும்அபத்தம்என்ற சொல் தேவையற்றது, அபத்தமானது.

            5. பல மில்லியன் ஆண்டுகள் மாற்றத்தில் கோண்டுவானாக் கண்டம் உடைந்தது. நிலம் ஆழ்ந்துநீர் மேலிட அது கடலின் அடித்தரையாயிற்று. குறைந்த அழமுள்ள கடல்பகுதிகளில் பவளத் திட்டுகள் தோன்றின.இது கோந்திரத்தோவ் கூற்று.
             
            கோண்டுவானாக் கண்டம் உடைந்தது உண்மை, ஆனால் அது கடலின் அடித்தரையாக மாறவில்லை. ஆப்பிரிக்கா, அரேபியா, இலங்கையுடன் இணைந்த இந்தியத் தீபகற்பம், ஆத்திரேலியா, அண்டார்ட்டிக்கா எனப் பெரும் நிலத்தட்டுகளாக பிளந்து, நகர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தது. கடல் மட்டத்திற்கு மேல் பூமியின் மேற்பரப்பாக உள்ள பகுதிகளில், பல யுகங்களாக மெதுவாக நகர்ந்த போது கண்டத்தட்டுகளின் ஓரங்களிலும் கண்டங்களின் சரிவிலும் ஏற்பட்ட சில மாற்றங்கள் தவிர, அவை வெகுவாக உருமாறவில்லை. பவளத்திட்டுகள் பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் கடற்கரையை ஒட்டி வளரும். எல்லாத் தாழ்வான கடற்பகுதியிலும் வளரா. ஆகவே பவளத்திட்டுகள் இருப்பதை நிலம் மறைந்ததற்கு ஆதாரமாகக் கூற முடியாது”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            பவளப்பாறைகள் புவிநடுக்கோட்டை ஒட்டிய பகுதிகளில் மட்டும் வளரும் என்ற திருவாளர் செயகரனின் கூற்றுக்கு மகரக் கோட்டை தன் நடுவில் கொண்டுள்ள ஆத்திரேலியக் கடற்கரையில் தொடங்கும் உலகிலேயே நீண்ட கடலடி பவளத்திட்டு மறுப்பாக உள்ளது(ஆத்திரேலியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் இப்பவளத்திட்டுகளின் பங்கு முதன்மையனது). அத்துடன் கதிரொளி எட்டும் ஆழம் வரைதான் பவளப்பாறைகள் வளரும் என்பது ஓர் அறிவியல் செய்தி. இந்த அடிப்படையில் இலங்கையை நோக்கிய தமிழகக் கடற்கரையில் நீரோட்டங்கள் வலமாகவும் இடமாகவும் இயங்கும் காலங்களில் கடல் நீர் கலங்கலாகவே இருப்பதால் 1.5 மீற்றர்கள் ஆழத்துக்குக் கீழே பவளப்பாறைகள் உருவாவதில்லை. அதனால் இங்கு ஆழத்தில் இருக்கும் பவளப்பாறைகள் அவற்றின் மட்டத்தில் கடல் இருந்த போது உருவானவையே என்பது உறுதி. அதாவது இப்பவளப்பாறைகளின் உயரத்துக்கு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது என்பதற்கு இப்பவளப் பாறைகளே சான்றாகும். ஆத்திரேலியப் பகுதிக் கடலின் நீர் மிகத் தெளிவாக இருப்பதால் அங்கு ஆழ்கடலிலும் பவளப்பாறைகள் வளர்கின்றன.

            அத்துடன் வேக்கினரின் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாடு எந்த எதிர்ப்பும் இல்லாமல் எவராலும் மறுக்கப்படாத ஒன்றாக இருப்பது போல் திருவாளர் செயகரன் கூறுகிறாரே அதற்கு ஒரு மறுப்பை ஏற்கனவே பக்.78இல் தந்திருக்கிறோம். இன்னொன்று இப்போது கண்டங்களின் எல்லைகளில் காணப்பப்படும் இயைபு தற்செயலானது, இன்றைய கடல் மட்டத்துக்குக் கீழே அத்தகைய இயைபைக் காணவில்லையே அதற்கென்ன விளக்கத்தை வைத்திருக்கிறார் திருவாளர் செயகரன்?  

            இனி, திருவாளர் செயகரனின் நாணயத்தைப் பார்ப்போம். அவர் மேற்கோள் காட்டியுள்ள பார்த்தசாரதி மொழிபெயர்த்த நூலின் மூல நூல் தரும் செய்திகளை அவற்றின் முழுமையில் பார்ப்போம்.

Gondwana land broke up over the course of millions of years. Land areas subsided were covered with water, became the floor of ocean. Coral colonies appeared in the shallow waters and unobstrusively set about their titanic labours, with the result that in the Indian Ocean, as in the Pacific, there arose coral atolls and reefs and the Maldives, Lacadives, Cocos and Chagos islands.

Nevertheless, the existance of these islands cannot explain the resemblances between the fauna and flora of India and Ceylon, Madagaskar and Indian Ocean islands of the “continental type”, like the Seychelles and Comoro, which are granite, not coral islands. This is what led the English Zoologist Phillip Sclatter to advance the supposition, in the middle of the last century, that a large land mass, called Lemuria, continued to exist in the northern part of the Indian Ocean many millions of years after the break-up of Gondwanaland…..

கோண்டுவானாக் கண்டம் பல மில்லியன் ஆண்டுகளின் போக்கில் உடைந்தது. முழுகிய நிலப்பரப்புகள் நீரால் சூழப்பட்டு கடலடித் தரைகளாயின. ஆழம் குறைந்த நீர்நிலைகளில் பவளப்பாறைகள் தோன்றி தம் அரக்கத்தனமான பணிகளைத் தொடங்கின. அதன் விளைவாக, அமைதிவாரியைப் போன்று குமரிமாக்கடலிலும் பவளப்பாறைகளும் குன்றுகளும் எழுந்து மாலத்தீவு, இலக்கத்தீவு, கோக்கோ, சாக்கோ தீவுகள் உருவாயின.                  

            இருந்த போதிலும் இந்தியாவிலும் பவழத் தீவுகளல்லாத கருங்கல்லாலான சேக்கில்லை, கோமோரோ தீவுகள் போன்றுகண்டவகைசார்ந்த இலங்கை, மடகாசுக்கர், பிற குமரிப் பெருங்கடல் தீவுகளிலும் உள்ள மாவடை, மரவடைகளின்[1] ஒப்புமையை இந்தத் தீவுகளின் இருப்பால் விளக்க முடியாது. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆங்கில விலங்கியலாளரான கிலேட்டரை கோண்டுவானாக் கண்டம் உடைந்ததற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் லெமூரியா எனும் ஒரு பெரும் நிலப்பகுதி குமரி மாக்கடலின் வட பகுதியில் தொடர்ந்து நிலைத்திருந்தது என்ற கருத்தை முன்வைக்க இதுதான் இட்டுச்சென்றது….. எனபது இதன் பொருள்.

            பவளப்பாறைத் தீவுகள் மட்டுமல்ல, கண்டத்தட்டுத் தீவுகளும் குமரி மாக்கடல் பகுதியில் இருக்கின்றன என்ற கோந்திரத்தோவ் கூற்றை மறைத்து நாடகமாடியுள்ள திருவாளர் செயகரனிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். கடல்நீர் மட்டத்துக்குக் கீழே மட்டும் வளர்ந்து வாழக்கூடிய பவளப்பாறைகள் எப்படி கடல் மட்டத்துக்கு மேல், அதுவும் மனிதர்கள் வாழும் தீவுகளாயின? இந்தக் கேள்விக்கு அவரால் விடை கூற முடியாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கேள்விக்கு விடையை உரிய இடத்தில் நானே தருகிறேன்.

            6. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாவரவியல் வல்லுநர் எர்னெட் ஏக்கல் குரங்குகளுக்கும் மனிதநிலைக்கும் இடைப்பட்ட மறைந்த இணைப்பாகக் கருதப்பட்ட உயிரினம் லெமூரியாவில் தோன்றி வட கிழக்கில் இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் பரவியது என்ற முடிவிற்கு வந்தார். டச்சு ஆய்வாளர் தூப்வாவின் கண்டுபிடிப்பான சாவா மனிதனின் மண்டையோடு இதை உறுதிப்படுத்தியது.இது கோந்திரத்தோவ் கூற்று.
        
            ஆதிமனிதக் குடியேற்றம் ஆப்பிரிக்காவில் துவங்கி ஆசியாவிற்குப் பரவியது என்பது இன்று நிரூபிக்கப்பட்ட உண்மை. டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சி பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர், வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் வாலில்லாக் குரங்கு மனிதராகப் பரிணமித்தது என்றால் குரங்கிற்கும் மனிதருக்கும் இடைப்பட்ட நிலையொன்று இருந்திருக்க வேண்டும் என்றும் என்றாவது ஒரு நாள் அது கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்றும் நம்பினர். இந்தக் கற்பனை விலங்கை மறைந்த பரிணாம இணைப்பு என்று குறிப்பிட்டனர். பரிணாம வளர்ச்சியில் கீழ்மட்ட உயிரினங்களிலிருந்து ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒரு சங்கிலித் தொடர்போல் மேல்மட்ட விலங்குகள் தோன்றின என எர்னெட் ஏக்கல் போன்றோர் தவறாக எண்ணியதால் ஏற்பட்ட குழப்பம் இது. முதன்முறையாக ஓமோ எரக்டசின் தொல்லெச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது அதேயே மறைந்த இணைப்பாக எண்ணிகுரங்கு மனிதன்எனப் பொருள்படுமாறு பித்தகேந்த்ரோபசு எனப் பெயரிட்டனர். பின்னர் நடந்த ஆய்வுகளால் இந்தக் கண்டுபிடிப்பு பற்றித் தெளிவு ஏற்பட்டது.

            தூப்வா(Eugene Dubois) எனும் டச்சு இராணுவ மருத்துவர் ஆதிமனிதயினத்தின் தொல்லெச்சங்கள் சாவாவில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு என்ற நம்பிக்கையுடன் அங்கு ஆய்வுகள் நடத்தினார்.1891இல் சோலோ நதிக்கரையிலுள்ள டிரினில்(Trinil) என்ற கிராமத்தருகே ஒரு மண்டையோட்டின் மேற்பகுதியை இவர் அகழ்ந்தெடுத்தார். அருகாமையிலேயே தொடை எலும்பு  ஒன்றும் கிடைத்தது. மண்டையோட்டின் பகுதி கனமானதாகவும் தட்டையாகவும் மனிதக் குரங்குக்கு உள்ளது போல முன்புறம் நீண்டும் இருந்தது. ஆனால் தொடை எலும்போ கற்கால மனிதனுக்குள்ளது போல் இருந்தது. எனவே இவை இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையா என்ற கேள்வி எழுந்தது. (கண்டுபிடிப்பு நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரே கால நிர்ணயம் செய்யப்பட்டு, இரண்டும் சமகாலத்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.) சாவாவின் புவியியலமைப்பு புரியாததாலும் காலக்கணிப்பு செய்ய அப்போது உபகரணங்கள் இல்லாததாலும் தூப்வா இந்த இனத்தை, நின்ற மந்தி மனிதன்(Pithecanthropine Erectus) என்று அழைத்தார். உலகின் இதர பகுதிகளில்ஓமோ எரக்டசுகண்டுபிடிப்புகள் வெளிவர, தூப்வாவின் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட சில ஐயப்பாடுகள் தெளிவடைய ஆரம்பித்தன”. – இது திருவாளர் செயகரனின் மறுப்பு.

            டார்வினின் திரிவாக்க(பரிணாம)க் கோட்பாடு சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று திருவாளர் செயகரன் தொடங்குகிறார். எந்த வகையில் தவறு என்றோ எப்படி சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. நாம் அறிந்தவரை ஊதர்களின் திருமறையில் கூறப்பட்டுள்ள கடவுளின் படைப்புக் கோட்பாட்டுக்கு மாறாக டார்வினின் கோட்பாடு இருப்பதாக கிறித்துவ வட்டாரங்களில் ஒரு மனக்குறை உண்டு. அதற்காக, உயிர்கள் தாமாக தங்களை மேம்படுத்திக்கொள்ளவில்லை, ஒன்றை விட மேம்பட்டதாக அடுத்தது என்ற வரிசாயில் கடவுளே நேரடியாகப் படைத்தார் என்று டார்வின் கோட்பாட்டுக்கு ஒரு விளக்கம் கிறித்துவ வட்டாரங்களிலிருந்து வந்ததை நான் அறிவேன். அதாவது, சில நூறு அடிகளே பறந்தஆகாயக் கப்பலைஅமெரிக்காவின் ரைட் பிறந்தைகள்(உடன்பிறப்புகள்) உருவாக்க இன்று ஆறு மணி நேரத்தில் உலகையே வலம் வரும் வானூர்திகளைத் தொடர்ந்து வந்த மனிதர்கள் உருவாக்குவது போல் கடவுளும் ஒரு தொழிலகத்தை அமைத்து, தான் படைக்கும் உயிர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ஆய்வகங்களையும் அமைத்து ஒன்றுக்கு மேம்பட்டதாக அடுத்ததை அத்தொழிலகத்திலிருந்து களத்துக்கு விடுகிறார் என்பது அந்த விளக்கம். அதைத்தான் திருவாளர் குறிப்பிடுகிறாரா என்பது பெரும் புதிராக இருக்கிறது. இதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? கடவுள் நடத்தும் இத்தொழிற்சாலாயில் உருவாகும் பண்டங்களில் மனிதன் இயக்கும் தொழிற்சாலைகளில் போல் விளைப்புக் குறைபாடு(manufacturing defect) உள்ள சரக்குகளும் கணிசமாக வெளிவரும்(வந்துகொண்டிருக்கின்றன).

ஆனால் டார்வினின் கோட்பாடு கருவுருவாக்கம்(embryogeny) என்ற மட்டத்திலேயே இயற்கையால் ஒவ்வொரு குழந்தை உருவாக்கத்திலும் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதக் கருவும் ஒரு பெண்ணின் கருமுட்டையினுள் ஆணின் விந்தணு புகுந்து அதை இரண்டாகப் பிளந்து இரண்டிரண்டாக பெருக்குத் தொடர்முறை(geometric progression)யில் பெருகி ஒரு கட்டத்தில் தவளையின் தலைப்பிரட்டையாகவும் பின்னர் மீனாகவும் ஒரு கட்டத்தில் ஒரு சிறு வாலுடன் குரங்காகவும் பின்னர் வால் கழிந்து சிறிது குரங்கு முகத்தோற்றத்துடன் குழந்தையாகவும் பிறக்கிறது. அத்துடன் அதன் திரிவாக்கம் முடிந்துவிடவில்லை. கருப்பை எனும் நீர்மத் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த குழந்தை தரையாகிய கரையை அடைந்ததும் அழுகை எனும் வடிவத்தில் தன் உயிர்ப்பு, அதாவது மூச்சுவிடுதல் என்ற புதிய நடைமுறையைத் தொடங்குகிறது. அது மட்டுமல்ல தொடக்கத்தில் கடல் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாறுபாடுகளால் கடல் வற்றிப்போக அரைகுறை ஆழத்தில் மூச்சுமண்டலம் உருவாகும் வரை அலைப்புறும் நீரில் மல்லாக்கக் கிடந்து தவித்தது போல் குறைந்தது 5 மாதங்கள் மனிதக் குழந்தையும் கையையும் காலையும் உதறித் தவிக்கிறது. பெரும்பாலான பிற உயிரினங்களும் ஆடு மாடுகள் போல் பிறந்து சில மணி நேரம் அல்லது நாய், பூனை போல் சில நாட்களில் எழுந்து நடமாட மனிதக் குழந்தை மட்டும் புரண்டு படுத்தல், கவிழ்தல், எழுந்து உட்கார்தல், தவழ்தல், எழுந்து நிற்றல், சுவரைப் பற்றிக்கொண்டு நடத்தல், தானே தத்தித்தத்தி நடத்தல் என்று இயல்பாக நடப்பதற்குள் படும் பாடு நம் அனைவருக்கும் தெரியும். மொத்தத்தில் ஓரணு உயிராகத் தொடங்கி மனிதனாகத் திரிவாக்கம் பெற எடுத்துக்கொண்ட பல நூறு கோடி ஆண்டுகளாகளின் நிகழ்ச்சிகளின் தொடரைத் தாயின் வயிற்றில் அவளின் மாதவிடாய்க் காலத்தின் 10 மடங்கு காலத்திலும் நிலத்தில் ஒன்றிரண்டு ஆண்டுகளிலும் முடித்துவிடுகிறது ஒவ்வொரு மனிதக் குழந்தையும். எனவே டார்வினின் திரிவாக்கக் கோட்பாட்டில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

            முதன்முறையாக ஓமோ எரக்டசின் தொல்லெச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது அதையே மறைந்த இணைப்பாக எண்ணிகுரங்கு மனிதன்எனப் பொருள்படுமாறு பித்தகேந்த்ரோபசு எனப் பெயரிட்டனர். பின்னர் நடந்த ஆய்வுகளால் இந்தக் கண்டுபிடிப்பு பற்றித் தெளிவு ஏற்பட்டதுஎன்றும்உலகின் இதர பகுதிகளில்ஓமோ எரக்டசுகண்டுபிடிப்புகள் வெளிவர, தூப்வாவின் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட சில ஐயப்பாடுகள் தெளிவடைய ஆரம்பித்தனஎன்றெல்லாம் கூறுகிறாரே, இவற்றில் என்னதெளிவுஏற்பட்டது, எந்தஐயப்பாடுகள்தெளிவடைய ஆரம்பித்தன, ‘ஆரம்பித்தவைமுடிவடைந்துவிட்டனவா என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. இவை எல்லாம்இந்துசமய வேத மறையங்களா அவர் போன்றோர் தவிர எம் போன்றசாமான்யர்கள்அறியக் கூடாதவையா?

            நம் அறிவுக்கு எட்டியவரை, 2008இல் வெளிவந்துள்ள, David R.Angerhofer என்பார் The American Response to Pithecanthropus Erectus, the Missing Link and the General Reader என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளவாறு, அறிவியல் கண்ணோட்டத்துக்கும் சமய நோக்குக்கும், ஆப்பிரிக்கர்கள், ஆசியர்களோடு தாமும் ஒரே வகைக் குரங்கிலிருந்து வந்தவர்தாமா என்ற வெள்ளைத்தோலர் கண்ணோட்டத்துக்கும் இடையில் இந்தநிமிர்ந்த குரங்கு மனிதன்சிக்கிக்கொண்டு திணறுவதைத்தான் திருவாளர் செயகரன் மனதில் கொண்டு கூறுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது(கொரில்லாவிலிருந்து ஆப்பிரிக்கர்களும் சிம்பன்சியிலிருந்து பிறரும் வந்திருக்கலாம் என்று வேள்ளைத்தோல் வெறியர்கள் கூறுகிறார்கள்). அப்படியானால் ஆப்பிரிக்காவில்தான் முதல் மனிதன் தோன்றினான் என்பதும் இதே கேள்விக்குள் சிக்கித்தானே இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி, “ஆதிமனிதக் குடியேற்றம் ஆப்பிரிக்காவில் துவங்கி ஆசியாவிற்குப் பரவியது என்பது இன்று நிரூபிக்கப்பட்ட உண்மைஎன்று திருவாளர் செயகரன் கூற முடியும்? அதனால்தான வழக்கம் போல் அரைகுறையாகச் செய்திகளைத் தந்து தப்பிக்க முயன்றுள்ளார் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

            7. ஆத்திரேலிய இயலின் முதல் மாணவர்கள் ஆத்திரேலியப் பழங்குடி மக்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டு வியந்தனர். ஆத்திரேலியப் பழங்குடியினரின் மூதாதையர்கள் சிறு படகுகளிலும் ஓடங்களிலும் மாக்கடலில் சென்றிருக்க முடியாது. சிலர் ஆத்திரேலியப் பழங்குடியினரின் பிறப்பிடம் இந்தியத் துணைக்கண்டம் என்பர். எனவே திராவிடர், ஆத்திரேலியர் தாயகம் எது? இந்த ஆத்திரேலியப் புதிரை விடுவிக்க 1931ஆம் ஆண்டில் சோவியத் இனநூல் வல்லுநர் செல்டார் யாவ் என்பவர் கடல்நூல் நிலநூல் விவரங்களைப் பயன்படுத்தினார். அவர் இந்தியத் துணைக்கண்டமும் ஆத்திரேலியாவும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்து, பின்னர் பிரிந்து, கடல் இடைப்பட்டதனாலும் ஆத்திரேலியரும்(அபாரிசின்கள்) திராவிடரும் பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பார். ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த வெக்கினர் கொள்கையை ஒட்டியது இவரது கொள்கை.இது கோந்திரத்தோவ் கூற்று.

            ஆத்திரேலியப் பழங்குடியினரின் தாயகம் இந்தியத் துணைக்கண்டம் என்பதை ஆய்வுகள் திட்டவட்டமாகக் காட்டுகின்றன. இப்பழங்குடியினரின் முன்னோர்கள் திமோருக்கும் நியூகினியாவுக்கும் இடையேயிருந்த குறுகிய கடல்வெளியைத் தாண்டி அன்றைய நியூகினியா ஆத்திரேலியா இணைந்த நிலப்பரப்பில் குடியேறினர். இதற்கும் வெக்கினர் கொள்கைக்கும் கண்டங்களின் பெயர்ச்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் கண்டங்கள் பிரிந்த போது ஆதி மனிதன் தோன்றியிருக்கவில்லை”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.


            கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். ஆத்திரேலியா எங்கே இருக்கிறது? இந்தியா எங்கே இருக்கிறது?(இதற்கு முன் பக்கங்களிலுள்ள படங்களைப் பார்க்க) நியூகினியாவும் திமோரும் எங்கே இருக்கின்றன? இந்த அழகில் எங்கோ இருக்கும் இந்தியாவிலிருந்து கடல் வழியாக திமோருக்கும் நியூகினாயாவுக்கும் வந்து ஆத்திரேலியாவை அடைந்தனராம் ஆத்திரேலியப் பழங்குடி மக்கள். இந்தியா தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து சென்ற போது இது நடந்திருக்கலாம் என்று வாதிடலாம். இங்கிருந்து பல ஆயிரம் கிலோமீற்றர்கள் தொலைவு இந்தியா கடந்து செல்வதற்கு முன் ஆத்திரேலியாவும் நியூகினாயாவும் திமோரும் இதே இடத்தில்தான் இருந்தனவா? இந்தியா ஆத்திரேலியாவை அதற்கு வடக்குப்பக்கமாகக் கடந்ததா, தெற்குப்பக்கமாகக் கடந்ததா? அப்போது இந்தோனேசியத் தீவுக்கூட்டம் எங்கிருந்தது? பல்லாயிரம் கிலோமீற்றர் கடலையும் சிறிதளவு கூட கூறுபாடின்றி கடல் மீது கடந்து சென்றஇந்தியத் துணைக்கண்டம்அல்லது இன்று நிலப்பரப்புகளை நிலத்திலும் கடலிலும் ஓடும் இன்றைய ரோவர்கள் போன்று அல்லது வானூர்திகள் போன்று தட்டுத் தடங்கலில்லாமல் கடந்ததா? அப்படிக் கடந்த போது திமோரையும் நியூகினியாவையும் ஆத்திரேலியாவையும் கண்டு மயங்கி அங்கே குதித்துவிட்டார்களா? அல்லது இந்தியா லாரேசியாக் கண்டத்துடன் மோதி இன்றைய நிலைக்கு வந்த பின் அங்கிருந்து கடல் வழியாக திமோருக்கும் நியூகினியாவுக்கும் வந்து அங்கிருந்து ஆத்திரேலியா வந்தார்களா? இவ்வளவு இடையூறுகளையும் தாண்டி கடல் கடந்து இந்தியாவைத் துறந்து வரும் வகையில் அவர்களைத் துரத்தியது எது? திமோருக்கும் நியூகினியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் அவர்களைக் கவர்ந்து இழுத்தது எது? இலங்கைக்கு விசயன் வந்தது போல் இந்தியாவிலிருந்து, அவரது கூற்றுப்படி திராவிடத்திலிருந்து, யாராவது அவர்களைத் துரத்தினார்களா? அல்லது இற்றைக்கால ஐரோப்பியல்கள் போல் உலகில் புது நிலங்களைத் தேடி அவர்கள் போனார்களா? இந்தக் கடல் பரப்புகளை அவர்கள் எப்படிக் கடந்தார்கள்? ஏதாவது கட்டையைப் பிடித்துக்கொண்டு நீந்தினார்களா அல்லது மரக்கலம் போன்றவற்றைப் பயன்படுத்தினார்களா? இத்தனை கேள்விகள் திருவாளர் செயகரன் கூற்றிலிருந்து எழுகின்றன. நேரிலிருந்து பார்த்தவர் போல் அவ்வளவு ஆணித்தரமாகக் கூறும் அவர்தான் இக் கேள்விகளுக்கு விடை கூற வேண்டும்.

            குமரிக் கண்டம், அதாவது அவர் மொழியில் லெமூரியாக் கண்டம் உடைந்த போது மனித இனம் தோன்றியிருக்கவில்லை என்ற அவரது கூற்றுக்கு வேறிடத்தில் நாம் மறுமொழி கூறுவோம்.

            8. இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையே பெரும் நிலப்பரப்பு இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டால், பூமத்தியரேகை இனத்தவர் பரவிக் காணப்படுவதற்கு தர்க்கரீதியான விளக்கம் கிடைக்கும்.இது கோந்திரத்தோவ் கூற்று.

            கோந்த்ரத்தோவ் காலத்தில் பூமத்தியரேகை இனத்தவர் பரவியதற்கு தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லாததால், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா இவற்றுக்கு இடையே இருந்ததாகச் சொல்வது மிக இலகுவான வழியாகப் போனது. ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா இவை ஒருங்கிணைந்த கண்டம் ஒன்றிலிருந்து பிரிந்தவை. இப்படிப் பிரிந்த பின்னர் இவற்றுக்கு இடையே பெருங்கடல் தவிர நிலப்பரப்பு ஏதும் இருக்கவில்லை. பூமத்தியரேகையினத்தவர் பரவியதைத் தர்க்க ரீதியாக விளக்க இயலாத கட்டத்தில் உருவான இந்தக் கற்பனைப் பாலத்திற்க்கு அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை”. – இது திருவாளர் செயகரன் மறுப்பு.

            பூமத்தியரேகையினத்தவர்பரவியதற்கு தர்க்க ரீதியாகஇப்போது விளக்க இயன்றுள்ளதாக திரும்பத் திரும்பக் கூறும் பொய் மூலம் குமரிக் கண்டம் முழுகியதை மறுக்கும் இவரது முயற்சியை ஏற்கெனவே முறியடித்துவிட்டோம். இருப்பினும் மீண்டுமொரு முறை படிக்குநர்களுக்கு நினைவூட்டுகிறோம் வேக்கினரின் கோட்பாட்டுப் பற்றாளர்கள் உருவாக்கியுள்ள, பாஞ்சியா பெருநிலப்பரப்புப் படங்கள் இரண்டிலும்(பக். 78) இவர்களால் தவிர்க்க முடியாமல் லாரேசியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரும் பரப்பிலான வெற்றிடம் நமது வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்ல லெமூரியாக் கண்டம் மூழ்கிய கடல் பரப்பு உலகின் மொத்தக் கடல் பரப்பில் ஐந்தில் ஒன்று என்ற கூற்றுக்கும் சான்றாக இவ்விரண்டு படங்களும் உள்ளன.

            இப்போது வேலிக்கு ஓணான் சாட்சி என கொடுமுடி சண்முகன் என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார். குசராத்துப் பகுதியில் டயனோசரசுகளின் கற்படிவங்களும் தமிழகத்தில் மரங்களின் கற்படிவங்களும் கிடைத்துள்ளனவாம். (நானும்தான் பாளையங்கோட்டைக்குத் தெற்கில் போக்குவரத்துக் கழகப் பல்தொழில் பயிலகத்தின் எதிர்ப்புறத்தில் சாலைக்கு மேற்கில் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் நிலத்துக்கு மேலே நின்ற கல்மரத்தின் அடித்தண்டை பாளையங்கோட்டை தொல்பொருளாய்வுத்துறை உதவி இயக்குனர் செந்தில் செல்வக்குமரன் அவர்களை அழைத்துப்போய்க் காட்டினேன். அவர் இது தன் துறை சார்ந்ததில்லை என்று கூறி நழுவிவிட்டார். பக்.35 பார்க்க.) அதனால ஆத்திரேலியாவிலிருந்து உடைத்துக்கொண்டு பல்லாயிரம் கிலோமீற்றர்கள் கடலில் அல்லது புவிக்குழம்பில் மிதந்து லாரேசியாவோடு மோதி ஏறக்குறைய 29,000 அடிகள் உயரத்துக்கு இமயமலை உயர்வது வரைஓரம் பாரத்தில் இருந்த மிகச்சிறிய பகுதிகள் அவ்வப்போது கடலுக்குள் சரிந்து விழுந்த போது அக்காலப் புலவர்களால் கடற்கோள்கள் என விளக்கப்பட்டது’. பாவம்! அரசுத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற போது புதிதாக வேலை ஏதாவது வேண்டுமென்று பனியாக்களின் இந்திய அரசை அணுக வேண்டுமாயின் தமிழ் அல்லது வரலாற்றுத்துறையினருக்கு என்று சில வரையறைகள் பற்றி தொடக்கத்தில்(பக். 3 – 4) கூறியது போல் ஏதாவது தேவைக்காக இக்கட்டுரையை எழுதினாரோ என்னவோ?
 
            திரு.சண்முகம் கூறுவதில் நாம் முகாமையாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இந்தியத் துணைக் கண்டத்தில் விந்திய மலைக்கு வடக்கிலிருக்கும் பகுதி லாரேசியாவாம், அவரது கூற்றை அப்படியே தருகிறேன், “கண்ட பெயர்ச்சி கொள்கையின்படி எல்லாக் கண்டங்களும் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்ததை பாஞ்சியா என்பர். அதன் ஒரு பகுதி கோண்டுவானா நிலம். கோண்டுவானாவின் ஒரு துண்டு தனியாகப் பிரிந்து, ஆத்திரேலியாக் கண்டத்திலிருந்து பிரிந்து மெல்ல நகர்ந்து வந்து கொண்டேயிருந்தது. இந்தப் பகுதியே விந்திய மலைக்குக் கீழுள்ள தென்னிந்தியப் பகுதி. இந்துமாக் கடலில் தனியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போதுதான் அதனைக் குமரிக்கண்டம் என்றனர். அதுவே மேலும் நகர்ந்து ஆசியப்பகுதியில் முட்டியது. இந்த முட்டலின் அழுத்தத்தாலேயே, இமயமலை தோன்றி படிபடியாக உயர்ந்து கொண்டே வந்து பெரிய மலைத்தொடராகிவிட்டது.....குமரிக்கண்டம் கடலுள் முழுகவில்லை. விந்தியமலை உள்ளிட்ட தீபகற்ப இந்தியா ஆசியாவோடு மோதுவதற்கு முன்னிருந்த தீவு நிலையே குமரிக்கண்டம் ஆகும். வெப்ப மண்டலமே உயிரினம் தோன்றத் தோதான இடம் என்பது அறிவியல் முடிவு. மாந்தன் தோன்றிய முதல் இடங்களுள் தென்னிந்தியாவும் ஒன்று”(பக.62 – 63).

            திருவாளர் செயகரனின் குமரி நிலநீட்சியில் மேலே தரப்பட்டுள்ள மேற்கோளில் அச்சகப் பேய்(printer’s devil) எவ்வளவு விளையாடியிருக்கிறது என்று தெரியவில்லை. ‘கோண்டுவானாவின் ஒரு துண்டு தனியாகப் பிரிந்து, ஆத்திரேலியாக் கண்டத்திலிருந்து பிரிந்துஎன்பது குழப்பமாக இல்லையா?

            சரி அதை விடுங்கள், இப்போது அதைவிட மிகப் பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளோம். அதாவது, இமய மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பரப்புதான் தெற்கே இருந்து நகர்ந்து லாரேசியா எனும் ஆசியக் கண்டத்தட்டின் தென் கோடியில் முட்டியது என்றிருந்தோம் இதுவரை. கண்டத்தட்டுகளைக் காட்டும் வரைபடங்களும் இந்தியத் தட்டின் எல்லையை இமய மலைக்கு வடக்கில்தான் காட்டுகின்றன. ஆனால் இவரோ விந்தியமலை வரை ஆசியத் தட்டும் அதற்குத் தெற்குதான் தெற்கிலிருந்து நகர்ந்து வந்த தீவக்குறை இந்தியப் பகுதியும் என்று கூறுகிறார். இப்படி வந்த இந்தச் சிறு பகுதி விந்தியத்திலிருந்து வடக்கே கணிசமான நிலப்பகுதியை இடையில் விட்டு அதற்கு வடக்கிலிருந்த நிலத்தை நகர்த்தி உலகிலேயே உயரமான மலையாகிய இமயமலையை உருவாக்கிவிட்டதாம். தலை சுற்றுதப்பா!

            கோந்திரத்தோவ் மீதான திறனாய்வு 2இல் (பக்.76 – 7) இந்தியப் பெருங்கடலின் வடக்கில் லெமூரியா இருந்தது என்று சொன்னதற்காக கோந்திரத்தோவைக் குறை கூறிய திருவாளர் செயகரன் இப்போது அங்கு விந்திய மலை வரையிலான இந்தியா இருந்தது என்ற கொடுமுடி சண்முகனாரின் கருத்தைத் தனக்குச் சான்றாகக் காட்டுகிறாரே எப்படி?

            எனக்கு ஓர் ஐயம், குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கிண்டல் செய்யத்தான் இப்படி ஒரு நூலை வெளியிட்டிருப்பார்களோ திருவாளர் செயகரன் காலச்சுவடு குழுவினர்?

            கொடுமுடி சண்முகனாரை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்ப்போம். தீவக்குறை இந்தியத் தட்டு அலுங்காமல் குலுங்காமல் காசுமீரத்து தால் ஏரியில் இன்ப உலாச் செல்வது போல் சென்றுகொண்டிருக்க ஓரம் பாரத்தில் அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் மண் சரிந்து கடலில் மூழ்க அதனைக் கண்ட புலவர்கள் அவற்றைக் கடற்கோள்கள் என்று பாடிவைத்துவிட்டனராம்.

            ஆனால் இங்கு ஓர் உண்மையைக் குறிப்பிட்டாக வேண்டும். கடற்கோள்கள் நிகழ்ந்ததாக நாம் அறியும் கி.மு.56ஆம், கி.மு.17ஆம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட பாடல் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. மூன்றாம் கழகக் காலத்தின் இறுதியில் பாடப்பட்டதாகக் கருதப்படும் கலித்தொகையில் இரண்டாம் கடற்கோளும் மூன்றாம் கழகக் காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதற் கடற்கோளும் கூறப்பட்டுள்ளன. கலித்தொகை இன்னும் காலத்தால் பிற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரைக்கு மேற்கோளாக உதவ இது எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இவ்விரு இலக்கியப் படைப்புகளும் தரும் செய்திகளை விடத் தெளிவாகவும் விரிவாகவும் செய்திகளைத் தருபவர் காப்பியப் புலவர் இல்லாதவரும் சிலப்பதிகாரம் உரையாசிரியர்களில் ஒருவருமான அடியார்க்குநல்லாராகும். புவியியல் நிலையிலும் புவியியங்கியல் நிலையிலும் எந்த ஐயத்துக்கும் இடமில்லாத வகையில் செய்திகளை அவர் தந்துள்ளதை நாம் ஏற்கனவே பக்.57இல் விளக்கியுள்ளதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்துகிறோம்.      
*                                             *                                       *
            ஆதிப்பெருங்கண்டமான கோண்டவானாக் கண்டத்திலிருந்து இந்தியத் துணைக் கண்டம் பிரிந்தது ஏறத்தாழ 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது மனித குலத்தின் முன்னோடிகள் கூடத் தோன்றியிருக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டம் வடக்காக நகர்ந்து வந்தபோதுதான் அதனைக் குமரிக்கண்டம் என்றனர் எனும் கூற்றும் தவறு. ஏனெனில், இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கு நோக்கிய பயணம் மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நடந்தது. அப்போதும் ஆதிமனிதயினம் தோன்றியிருக்கவில்லை. மேலும் இந்தியத் துணைக்கண்டம் ஆசியப் பகுதியுடன் முட்டியதும் மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னரே”(குமரி நிலநீட்சி பக்.63).

            அப்பப்பா, தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டம் கோண்டவானாக் கண்டத்திலிருந்து பிரிந்தது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாம். ஆனால் அது வடக்கு நோக்கி நகர்ந்தது மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தானாம். அப்படியானால் இவற்றுக்கு இடைப்பட்ட 149 சொச்சம் மில்லியன் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டம் குமரிப் பெருங்கடலில் இன்பச் சுற்றுலா வந்ததா? அல்லது முட்டுவதற்கு எந்தத் திசையில் செல்லலாம் என்பது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்ததா? இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் மேலே பக்.76 – 77 நாம் சுட்டிக்காட்டியுள்ளபடி இந்தியத் துணைக்கண்டம் ஆசியத் தட்டுடன் மோதி இமயமலை உயர்ந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்று வேறு கோந்திரத்தோவுக்கு மறுப்புரை 2 எழுதும் போது குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, டார்வினின் மனிதத் தோற்றக் கொள்கையில் ஐயப்பாடுகளைத் தெரிவித்த(பக்.83) இவர் இங்கே மனித குலத்தின் முன்னோடிகளைப் பற்றிக் கூறுகிறார்.

            ஒரு காலத்தில் கண்டங்கள் உடைந்து சிதறி தெப்பங்களாக கடலில் மிதந்து சென்றதாகவும் நிலப்பாலங்கள் தோன்றுவதும் அழிவதும் எரிமலை, நில நடுக்கங்கள் ஏற்படுவதும் அன்றாடம் நிகழ்ச்சிகள் போலவும் கருதி, மனித இனத்தின் குடியேற்றம், இனத்தின் தொன்மை, கண்டங்களின் மறைவு ஆகியவை பற்றி முன்னரே உருவாக்கிய முடிவுகளுக்கு காரணங்களைத் தேடினர் குமரிக்கண்ட ஆய்வாளர்கள்.  

            அறிவியல் பதங்களைப் பயன்படுத்தி, ஐதிகங்களுக்கு விளக்கங்கள் தந்து, அறிவுலகின் அங்கீகாரம் பெற முயற்சிகள் நடந்தன. இதற்கு எரிமலை, அதிர்ச்சி, கண்டங்களின் பெயர்ச்சி, நிலப்பாலம், கடற்கோள் போன்ற நிலவியல் சார்ந்த கலைச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டன. ஒரு மேம்பட்ட நாகரிகம் அல்லது பொற்காலம் இருந்ததாகக் கூறி, அது இருந்த பகுதி மறைந்துவிட்டதாகக் கூறும் மரபு எல்லாக் கலாச்சாரங்களிலும் உண்டு. குமரி அல்லது லெமூரியா போலவே, மேலை நாடுகளிலும் சீரிய நாகரிகம் கொண்ட அட்லாண்டிசு கண்டம் எரிமலை சீற்றத்தால் கடலில் மூழ்கியதாகக் கூறும் மரபு உள்ளது.

            தமிழகம் இலங்கை நிலப்பகுதிகள் பற்றிய சில விவரங்களை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக இது பெரும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக்கூடிய கண்டத்தட்டுகள் முட்டும் பகுதி அல்ல. இது நிலநடுக்கமற்ற திற (Seismologically stable)ப் பகுதி என்று கருதப்படுகிறது. இரண்டாவது, இப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இது எரிமலை சார்ந்த பகுதியுமல்ல(Non Volcanic zone). எனவே, இப்பகுதியில் நிலம் அதிர்ந்து, எரிமலை குமுறி அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஆதிமனிதத் தோற்றத்துக்குப் பின், சுமார் இன்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தென்னிந்தியாவுடன் நிலத்தால் இலங்கை இணைந்திருந்தது. அப்போது எத்தகைய நிலப்பாலமும் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா மற்றும் ஆத்திரேலியாவை இணைக்கவில்லை என்பது நிலவியல் அடிப்படையில் உண்மை”(குமரி நிலநீட்சி பக். 63 – 4).

             ஒரு காலத்தில் கண்டங்கள் உடைந்து சிதறி தெப்பங்களாக கடலில் மிதந்து சென்றதாகவும் நிலப்பாலங்கள் தோன்றுவதும் அழிவதும் எரிமலை, நில நடுக்கங்கள் ஏற்படுவதும் அன்றாடம் நிகழ்ச்சிகள் போல பண்டைத் தமிழர்கள் எப்போதும் கூறவில்லை. கடற்கோள்கள் பற்றியே கூறியுள்ளனர். திருவாளர் செயகரன் எழுத்துக்கு எழுத்து போற்றும் வேக்கினர்தான் முதன்முதலில் கண்டங்கள் உலாச் செல்வது பற்றி கூறினார். அதை அடிப்படையாக வைத்துத்தான் தம் பண்டை வரலாற்றை மீட்டுரைக்க முயன்ற தமிழ் அறிஞர் அத்திசையில் கருத்துகளை முன்வைத்தனர்.

            இரண்டாவது பத்தியில் அவர் கூறியிருப்பதைப் பொறுத்தவரை மக்கள், அதிலும் தொல்லியல் மனிதர்கள் தங்கள் கண்ணால் கண்ட நிகழ்வுகளுக்குக் கற்பனைப் பூச்சு பூசுவாரே அன்றி வானிலிருந்து கற்பனைகளை உதிர்க்க மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் கூறியவற்றில் எவை எவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை எவை எவை தள்ளத்தக்கன என்று முடிவுசெய்ய வேண்டுமேயன்றி அவற்றை ஒட்டுமொத்தமாகக் கற்பனை என்று ஒதுக்குவது உள்நோக்கத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல.

            தமிழ் மரபில் 64 கலைகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் 50, 51 ஆகியவை முறையே ஆகாயப் பிரவேசம்(வானில் புகுதல்), ஆகாய கமனம்(வானிற் செல்லல்) என்பவை. 20ஆம் நூற்றாண்டு பிறப்பதற்கு முன் வேண்டுமானால் இவை கற்பனையாக இருந்திருக்கும். இன்று இரண்டும் நம் கண் முன் நிகழ்வதைக் காண்கிறோம். அப்படியானால் இத்திறன்களை நம் முன்னோரும் ஒருவேளை எய்தியிருக்கக் கூடுமோ என்று தேடுவதில் என்ன தவறு என்று திருவாளர் செயகரனையும் அவரைக் கண்மூடிப் புகழ்வோரையும் கேட்கிறேன். அதைப் போலத்தான் நம் மரபில் பதியப்பட்டிருக்கும் கடற்கோள் பற்றிய செய்தியையும் தமிழக அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

            மூன்றாவது பத்தியில் தமிழகம் இலங்கை நிலப்பகுதிகள் பற்றிய சில விவரங்களை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக இது பெரும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக்கூடிய கண்டத்தட்டுகள் முட்டும் பகுதி அல்ல. இது நிலநடுக்கமற்ற திறப்(Seismologically stable) பகுதி என்று கருதப்படுகிறது. இரண்டாவது இப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இது எரிமலை சார்ந்த பகுதியுமல்ல(Non Volcanic zone). எனவே, இப்பகுதியில் நிலம் அதிர்ந்து, எரிமலை குமுறி அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு

            திருவாளர் செயகரன் கூறுவது தமிழகம் இலங்கை நிலப்பகுதிகள் பற்றி, ஆனால் அவர் வினையாடப்புகுந்ததோ தமிழ் இலக்கியங்கள் கூறும் கடற்கோள் பற்றி. அக்கடற்கோளில் அழிந்தனவாக அடியார்க்குநல்லார் கூறியிருப்பதோ இன்றும் நின்று நிலவும் பாலித்தீவின் தென் பகுதியும் அதை அடுத்திருந்த ஏழேழ் நாடுகளையும் பற்றி. இந்த எல்லையில்தான் இந்தியக் கண்டத்தட்டு யூரேசியத் தட்டைச் சந்திக்கிறது. இந்தோனேசியாவின் எல்லையோடு மோதிக்கொண்டிருக்கும் இந்தியத்தட்டால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் சுனாமி எனப்படும் ஓங்கலைகளும் உருவாவது இப்போதும் நாமறிந்த செய்தி. அது மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையும் பிரிந்தது கி.மு.1700 வாக்கில், அதாவது 3700 ஆண்டுகளுக்கு முன்தானே அன்றி திருவாளர் செயகரன் குறிப்பிடுவது போல் 7000 ஆண்டுகளுக்கு முன் அல்ல. 7000 ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய இன்றிலிருந்து 7800 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தமிழ் இலக்கியங்கள் காட்டும் முதல் கடற்கோள். அது போல் குமரிக் கண்டம் முழுகிய போது தப்பிப் பிழைத்தவர்கள் வெளியேற கப்பல்கள் பயன்பட்டன. அப்போது அவர்கள் உலகின் தலைசிறந்த கடலோடிகள். அவர் குறிப்பிடும் இன்றைய தமிழகம் இலங்கைக் கடற்பகுதியில் நிலம் அதிர்ந்து, எரிமலை குமுறி அழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவுஎன்றுதான் கூறுகிறாரே அன்றி வாய்ப்பு இல்லை என்று கூறவில்லை என்பது அவர் நழுவுகிறார் என்பதைக் காட்டும் தடயங்களில் ஒன்றாகும்.

            இப்போது நான் கூறப்போவது மிக முகாமையான செய்தி. அவர் தந்துள்ள இரு செய்திகள் எப்படி அவரது ஒட்டுமொத்த அணுகலுக்கும் வேட்டுவைக்கின்றன என்பதைக் காட்டும் சிறந்த ஆவணங்கள்.

            பிற கலாச்சாரங்களில் கடற்கோள், பிரளயம், பற்றிய மரபுகள் என்ற தலைப்பில் அவர் தந்திருப்பவற்றில் திபெத்தில் வழங்கும் மரபென்று அவர் தந்திருப்பதை மட்டும் நான் இங்கு எடுத்துக்கொள்கிறேன். இதோ அது: ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் முழுகும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு, வங்காளம் வழியாக நீரை ஓட விட்டு வெள்ளத்தை வற்றச் செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளைவிட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும், அறிவுப்பாதையில் இட்டுச் செல்லும்முகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் அங்கு அனுப்பியதாகக் கூறுகிறது இக்கதை(குமரி நிலநீட்சி பக்.64).

            இக்கதையைப் படித்தவுடன் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் இது எதைக் குறிக்கிறது என்பது. இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து லாரோசியாவோடு மோதி இரு நிலப்பரப்புகளுக்கும் இடையில் சிக்கி டெத்தீசு எனும் ஆதிக்கடல்சுருங்கி அதன் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்து இறுதியில் இரு நிலப்பரப்புகளின் சந்திப்பில் மட்டம் தாழ்ந்திருந்த வங்காளக் குடாப்பகுதியில் உடைந்து இன்றைய கங்கைப் பள்ளத்தாக்கு உருவானதையன்றி வேறெதைக் குறிக்கிறது? ஆனால் இந்த இயற்காட்சிகளை விளக்கி நமக்குப் புரியவைத்த திருவாளர் செயகரனுக்குப் புரியாததுதான் நமக்கு வியப்பாக இருக்கிறது.

          கோண்டுவானாக் கண்டம் உடைந்து நகரஆரம்பித்தது 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது இந்துமாக்கடலில் வட பகுதியில் இருந்தது ஒரு நிலநீட்சியல்ல, ‘டெதிஸ்எனும் ஆதிப்பெருங்கடல். கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம், வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கிலிருந்து லாரேசியா எனும் பெருங்கண்டத்தை நெருங்க, அப்பகுதியில் இருந்த டெதிஸ் எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம்: இது நடந்தது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்….”

            மேலேயுள்ள கூற்று இடம் பெற்றிருப்பது குமரி நிலநீட்சி நூலின் 59ஆம் பக்கத்தில், கோந்திரத்தோவைத் திறனாய்ந்த இனம் 2இல் மேலே இதை ஏற்கனவே பக். 81இல் தந்துள்ளோம். திபேத் மக்களிடையில் நிலவும் வெள்ளச் செய்தியையும் மேலே நாம் கோட்சுட்டியுள்ள திருவாளர் செயகரனின் கூற்றையும் இணைத்துப் பார்த்தால் 135 மில்லியன், அதாவது 13½ கோடி ஆண்டுகளுக்கு  முன்பே திபெத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதும், அவர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்த ஒரு மக்கள் குழுவினர் இருந்தாரென இந்த வெள்ளக் கதையோடு இணைத்து அவர்கள் கூறுவதிலிருந்தும் லாரேசியாவோடு மோதிய குமரிக்கண்ட மக்கள்தாம் அவர்கள் என்றும் புரியவில்லையா? மேலே பக். 45இல் தாலமி உலகப் படம் தொடர்பாக நாம் தந்திருக்கும் படம் எண்.2ஐப் பாருங்கள். லாரேசியாவை கிழக்கு முனையால் தொட்டு கடிகாரச் சுற்றில் மறுமுனையால் தொட இருக்கும் நிலையை அது காட்டவில்லையா? இந்தப் படத்தை யார் வரைந்திருப்பார்கள்? குமரிக்கண்ட மக்களன்றி வேறு யாராக இருக்க முடியும்? அப்படியானால் இம் மக்கள் இந்நாகரிக வளர்ச்சியடைவதற்கு முன் எத்தனை கோடி ஆண்டுகள் தோன்றி வாழ்ந்திருக்க வேண்டும்?


[1]   மாவடை, மரவடை என்ற சொல்வழக்கு ஓரிடத்திலுள்ள விலங்குகள், நிலத்திணைகளை(தாவரங்களை)க் குறிக்கும் fauna and flora ஆங்கிலச் சொற்கட்டுக்கு இணையான தமிழ் மரபுச் சொற்கட்டு. நெல்லை மாவட்டம் தச்சநல்லூருக்கு மேற்கிலுள்ள, ரெட்டியார்புரம் என்று நினைவு, ஒருவரிடமிருந்த பழைய சொத்தாவணத்தில் இதை நான் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

0 மறுமொழிகள்: