ஊரும் நகரும் ஊர், நகர்ப் பெயர்கள்


5. ஊரும் நகரும் ஊர், நகர்ப் பெயர்கள்

            செய்யுள் வகைகளைப் பற்றிய தன் நுண்ணறிவை வையாபுரியாரின் துணையோடு வெளிப்படுத்திய திரு.செயகரன் அடுத்து ஊர்ப்பெயரியல் துறையினுள் இறங்கி துறை என்ற சொல்லைப் பற்றிக் கூறுகிறார். அதற்கும் பல ஆசிரியர்க‌ளின் துணையை நாடியுள்ளார்.

            ......புகார் என்பது காவிரியின் சங்க‌மத்துக்குரிய பெயராக வழங்கியது. அதுபோல் குமரித் துறை என்பது பஃறுளியாற்றின் சங்கமத்துறைக்கு உரிய பெயராக வழங்கியிருக்க வேண்டும். புகார்த் துறையின் பெயர் ஒரு ஊருக்கு ஆகி வந்ததைப் போல் குமரித் துறையின் பெயர் அதன் கரையிலிருந்த ஊருக்கு ஆகி, குமரிக்கோடு என வழங்கியது. கடல் கோளினால் குமரிக்கோடும் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியும் அழிந்துவிட்டதால் புதிதாகத் தோன்றிய கடல் முனைக்கு குமரித் துறையின் நினைவாகவே குமரித்துறை என்றும் குமரிமுனை என்றும் பெயர் வழங்கியது என்று பெயர் வைத்ததை நேரில் இருந்து பார்த்தவர் போல் முனைவர் கண்மணி என்பவர் சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் என்ற நூலில் கூறியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் திரு.செயகரன்.
           
            புகார் என்பது புகு + ஆறு = புகாறுபுகார். காவிரிப்பூம்பட்டனம் என்பது காவிரி புகும் பட்டினம். இந்த இரு பெயர்களும் இணைந்து பூம்புகார் ஆயிற்று என்பது சிறிது சிந்தனைக்கு வேலை கொடுத்தால் புரிந்துகொள்ளலாம். கண்மணிதான் முனைவர் ஆயிற்றே. சொந்தச் சிந்தனையைச் செயற்படவிட்டால் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகளை ஏற்காவே! அப்புறம் அவர் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? பாவம் முனைவர்கள்!
           
பண்டைத் தமிழர்கள் துறைமுகங்களை நேராகக் கழிமுகங்களில் அமைத்தார்களா அல்லது ஓத நீர், அதாவது வீங்கல், சூறாவளி அல்லது ஓங்கல்(சுனாமி) அலைகளால் அலைப்புறாமலும் மணல் திரளாமலும் இருப்பதற்காக ஆற்றினுள் அல்லது நாம் மேலே குறிப்பிட்டவாறு நாவிக வாய்க்கால்களினுள் அமைத்தார்களா என்று தெரியவில்லை. அதனால்தான் புகாரைத் துறை என்ற சொல்லால் குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது. இன்றும் கடற்கரைத் துறைமுகங்களின் பட்டறிவிலிருந்து புதிதாகக் கட்டும் துறைமுகங்களைக் கழிமுகத்தில் அமைக்காமல் கடலுக்கு ஒருபோகாகச் செல்லும் வாய்க்கால்களினுள் அமைப்பது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

            எடுத்துக்காட்டாக நாம் முன்பு கூறிய கொள்ளிடத்தின் கழிமுமாகிய பழையாற்றை எடுத்துக்கொள்வோம். இங்கு ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்க மதிப்பீடு ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறையின் எதிர்ப்பினால் அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் கழிமுக வாயிலில் தூண்டில் வளைவுகள் அமைத்து ‌நீர்வழியைத் மிகவும் குறுக்கிவிடுவர் (பார்க்க படம் எண். ). கடல் அலைகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல்களைக் காப்பதற்கான ஏற்பாடு இது. இது ஆற்றுநீர் கடலினுள் பாயும் நீர் வழி பரப்பை மிகக் கு‌றைத்து வெள்ளக் காலங்களில் ஆற்றினுள் வெள்ளமட்டம் உயர்ந்து ஆ‌ற்றின் கரைகள் உடைந்து உள்நாட்டினுள் அழிவுகள் ஏற்படுகின்றன.  2005இல், கழிமுகத்தில் எந்தச் செயற்கைத் தடையும் இல்லாதிருந்துமே கொள்ளிடத்தின் கரைகள் உடைப்பெடுத்து கடலூர் மாவட்டத்தில் பேரளவிலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறு அளவிலும் அழிவுகளை ஏற்படுத்தியது நமக்குத் தெரியும். அப்படியிருக்க, தூண்டில் வளைவு அமைத்து ஆற்றுவழியைச் செயற்கையாக மறித்தால் என்னாகும்?

            க‌ழிமுகங்கள் வழியே கப்பல்களை ஆற்றினுள் விடுவது என்பதே தவறாகும், ஏனென்றால் நீர் ஆற்றிலிருந்து (வெள்ளக் காலத்திலும் தாழ்வோதங்களின் போதும்) கடலினுள்ளும் கடலினுள்ளிருந்து (உயர் ஒதங்கள், சுறாவளிகளின் போதும் ஆற்று நீர் மட்டம் கீழிறங்கும் போது அல்லது பாய்ச்சல் இல்லாத போதும்)  ஆற்றினுள்ளும் பாய்வதால், கழிமுகத்தில் குவியும் மணல் மேடுகளான பொழிகள், அதாவது பார்களை அகற்றுதல் அல்லது அதை அகழ்ந்து வழியைத் துலக்குதல் ஓர் இடைவிடாத் தொல்லையாகும். இன்றிருக்கும் தூர் வாரிகள் முற்காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே கழிமுகங்களில் துறைமுகங்கள் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

          அது போல் இன்றைய குமரி முனையிலும் துறைமுகம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. ஏனென்றால் அந்த வட்டாரக் கடலில் பாறைகள் மிகுதி. அத்துடன் கப்பல்கள் உள்நுழைந்து நங்கூரம் பாய்ச்சி நிற்கத் தேவையான கடல் ஆழமோ அண்மைத் தாழ்நிலமோ அங்கு இல்லை.

            இயற்கைத் துறைமுகங்கள் எனப்படுபவை ஆறு கடளினுள் கழியுமிடத்தைச் சுற்றி உருவாகும் காயல்களில் வாய்ப்பான இடத்தில் அமைவனவாகும். இங்கு கடல் மட்ட ஏற்றத்தாழ்வுகள், ஆற்றிலுள்ள வெள்ள மட்டத்தின் ஏற்றிழிவுகள் நேரடியான திடீர்ப் பாதிப்பை  ஏற்படுத்தா. மெதுவாக ஏறி இறங்கும் நீர்மட்டத்துக்கு ஈடுகொடுத்து கலன்கள் கடலிலிருந்து நுழைந்து வெளியேறத் தக்க ஆழமுள்ள ஓரிடத்தில் அவை அமையும்.

            இன்றைய தமிழகத்தில் கடலில் கலக்கும் இடத்தில் காவிரி ஆறு நான்கைந்து அடிகள் அகலம் கொண்ட ஒரு வாய்க்கால் போல அமைந்துள்ளது, ஓருவேளை சிலப்பதிகாரக் காலத்துக்குப் பிறகு, குறிப்பாக வெள்ளையராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட குறுக்கணைகளின் மூலம் வெள்ளக் காலங்களில் மீத்த நீர் ஆங்காங்கே கொள்ளிடத்தை நோக்கித் திருப்பிவிடப்பட்டதால் காவிரி ஓர் முறைப்படுத்தப்பட்ட நீர் ஓழுங்கல் (Regulated Water course) ஆகிவிட்டது போலும். ஆனால் அது எப்போதுமே அப்படியிருக்கவில்லை.

            காவிரி என்ற பெயர் எந்தக் கட்டத்தில் அதற்கு வந்ததென்று தெரியவில்லை. கா + விரி = காவிரி. காவிரி, காவேரி என்ற இரு பெயர்களையும் இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார், இயல் மொழியில் காவிரி என்றும் இசைமொழியில் காவேரி என்று இசைக்காகவும் கூறுகிறார். காடெல்லாம் விரிந்து சம வெளியில் ஓடியதால் அதற்கு இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.

            கங்கை என்ற சொல் கங்கு என்ற சொல்லிருந்து வந்தது. அச் சொல்லுக்கு எல்லை, கருந்தினை, கரை, கவர் (கவர் = இரண்டாகப் பிரிகை), கவரேன்னேவல், மரக்கப்பு, வாழை, கழுகு, தீப்பற்றிய துரும்பு, தீப்பொறி, பக்கம், பருந்து, பனை மட்டையின் கவை, வரம்பருகு, வரையறை என்ற பொருட்களைத் தமிழ்மொழி அகராதி தருகிறது. இங்கு நாம் பேசிக்கோண்டிமருப்பது ஓரு நீரேட்டத்தைப் பற்றியாகையால் கரை, வரம்பு (வரம்பு = அணை, எல்லை, ஓழுங்கு, வழி, வரையறை (வரையறை = அளவு, எல்லை, தீர்க்கம்) போன்ற சொற்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நீரொட்டமோ ஓரு பேராறு. எனவே கரை (அருகு, எல்லை, கரையென்னேவல், கானல், முடிவு வார்த்தை) என்ற சொல்லை, அதன் பொருள்களில் அருகு, எல்லை என்பவற்றுக்காக எடுத்துக் கொண்டோம்[1]. அவ்வாறு கரைக்குள் அடங்கி நடக்கும் கங்கைக்கு மாறாகக் கரைக்கடங்காமல் காடெல்லாம் விரிந்து பரந்து பாய்ந்ததால் அது அப் பெயர் பெற்றுள்ளது.

            1961 ஆம் ஆண்டு சூலையில் குடகில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தஞ்சை மாவட்டத்தை அலைக்கழித்த போது நான் கல்லணையில் இருந்தேன். அணைக்கு மேற்கிலிருக்கும் கோயிலடி[2] என்ற இடத்தில் ஏற்பட்ட உடைப்பாலும் கல்லணை வழியாகக் காவிரியிலிருந்தும் தலையணை வழியாகவும் கொள்ளிடத்தில் பாய்ந்த நீரால் ஏறக்குறைய 3½கி.மீ. அகலத்துக்குக் கடல்போல் வெள்ளம் பாய்ந்து சென்றது. அந்த நீரோட்டத்தின் முழு அகலத்துக்கும் நெற்றுத் தேங்காய்கள் மிதந்து சென்றன. கரையோரமாகச் சென்ற தேங்காய்களை மட்டும் அணையோரத்திலிருந்த ஓருவர் வேல்கம்பு கொண்டு குத்தி பல மாட்டுவண்டிகள் பாரம் எடுத்தார். காவிரி இரு மருங்கும் விரிந்தோடி தென்னந்தோப்புகளில் குவித்து வைத்திருந்த தேங்காய்களை அள்ளி வந்ததே இதற்குக் காரணம்.

            இப்போதைய காவிரிப் படிகை(டெல்டா) பருத்திக் கரிசல் மண் போன்ற களிமண்ணைக் கொண்டுள்ளது. பல நூறு அடிகள் ஆழத்துக்கு இங்கு பாறைகள் இல்லை. இது பல கோடி ஆண்டுகளுக்கு முன் அப்போதைய கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருந்திருக்கிறது. நாம் நினைப்பதை விடப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காவிரி இங்கு திருப்பப்படும் முன்பே பவானி, அமராவதி போன்ற ஆறுகள் சுமந்து வந்த வண்டலும் கடல் மட்டம் உயர உயர நிலமட்டம் தாழத் தாழ அங்கு நிரம்பி வந்துள்ளது. வெள்ளம் அடித்து வந்த மரங்களும் அங்கே வளர்ந்த மரங்களும் அந்த வண்டலினுள் முழ்கியுள்ளன. அவற்றின் படிவுகளிலிருந்துதான் இன்று எடுக்கப்படும் கன்னெய்யமும் எரிவளியும் உருவாகியிருக்கின்றன. இந்த நிலப்பரப்பைப் பற்றிய புவியியங்கியல் உண்மைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. நம் ஆட்சியாளர்கள் வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

            1971 முதல் 1976 வரை தென்காசி வட்டத்திலுள்ள கருப்பா(நதி)ற்று அணையில் நான் பணியாற்றினேன். அங்கே மண் அணையின் கசிவை மட்டுப்படுத்துவதற்காக, இயற்கையான மண்ணைத் தோண்டி களிப்புள்ள வேறு மண்ணை நிரப்புவதற்கான வெட்டுப் பள்ளம் (cut - off trench) தோண்டும் பொறுப்பில் நான் இருந்தேன், ஒரு சூழலில் நான் படிக்கத் தொடங்கிய புவியியங்கியல் நூல்களிலிருந்து அழுத்தம், வேதியல் வினைப்பாடு முதலியவற்றால் நிலக்கரி கல்லாகவும் கல் நிலக்கரியாகவும் மாறும் என்று அறிந்திருந்தேன். அப்பொது அங்கு ஓரிடத்தில் உடைத்தெடுத்த கல்லில் ஒரு பகுதி நிலக்கரி போன்று கறுப்பாகவும் இன்னொரு பகுதி வெண்மையான பளிங்கு போன்ற சுண்ணாம்புக் கல்லாகவும் இருக்கக் கண்டேன். இது பற்றி கல்கத்தாவிலிருந்த புவியியங்கியல் தலைமை ஆய்வகத்துக்கு ஓரு மடல் எழுதி இந்தக் களத்தை ஆய்வு செய்ய வேண்டினேன். மறுமொழி வந்தது. எப்படி? சென்னையிலுள்ள கினை அலுவலகத்துக்கு எழுது என்று. அவர்களல்லவா எழுதிவிட்டு எனக்கு படி விடுத்திருக்க வேண்டும்? விடுக்க மாட்டார்கள், ஏனென்றால் நம் நாட்டில் கல்வி நிலையங்களுக்குப் போவோருக்கு நம் ஆன்மிகர்களுக்கு வீடுபேறு எப்படியோ அப்படி ஓரே இலக்கு ஓர் அரசுப் பணி(அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியப் பணியையும் பல்கலைக் கழக நல்கைக் குழு விகிதத்தில் சம்பளம் கிடைக்கும் விரிவுரையாளர் பணியையும் சேர்த்துக் கொள்க) கிடைத்துவிட்டால் போதும். சம்பளம், படி, நல்லூதியம், ஓய்வூதியம் அனைத்தும் அவர்கள் செய்த தவப்பயன், இனிமேல் அதற்கென்று எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி ஏதாவது செய்ய வேண்டுமென்றால் தனியாகக் கவனிக்க வேண்டும். அல்லது தில்லியிலோ மாநிலத் தலைநகரிலோ உள்ள ஆட்சியாளர்கள், பல்கலைக் கழகங்களின் ஆட்சியாளர்கள் வெளியார் யாரிடமாவது பெற்ற பணத்துக்காகச் செய்யச் சொல்ல வேண்டும்.

சம்பளம், படி மற்றும் பயன்களைப் பெறுவதற்கு பொதுமைப் புரட்சியை நடத்துவதற்கென்று பாட்டாளிகளையும் இந்தக் கோமான்களையும் அணி திரட்ட வடிவமைத்துக் கொடுத்திருக்கும் சங்கங்களை அமைத்து அதன் மூலம் ஆட்சியாளருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்வர்.காணிக்கைப் பெட்டியிலும் அர்ச்சனைத் தட்டிலும் போட்ட பணத்துக்கு ஆண்டவன் அருளுகிறானா என்பதைச் செத்த பிறகுதான் அறிய முடியும். ஆனால் இந்த மண்ணுலக தெய்வங்களோ கை மேல் பலன் தரும்.

            நான் கூறிய அணைக் களத்தில் அந்தப் பள்ளம் தோண்டியதில் பல அரும்பொருட்களும் அரிய புவியியங்கியல் உண்மைகளும் வெளிப்பட்டன. ஏறக்குறைய 20 அடி ஆழத்தில் ஒரு பெரும் மரத்தின் அடிப் பகுதி வேர்ப் பகுதிகளுடன் காணப்பட்டது. அதைப் பாதுகாப்பாக மண்வாரி(Scraper)யில் ஏற்றி அணைக் கள அலுவலகத்தின் முன் கொண்டு வைத்ததுடன் அது பற்றிச் செயற்பொறியாளரிடமும் தெரிவித்திருந்தேன். ஒரு நாள் அவர் கூறினார், யாரோ அந்த அடிமரத் துண்டை வெட்டி விறகுக்காகக் கொண்டு போய்விட்டனர் என்று.

            அந்த மரத்து மூடு கிடைத்த இடத்தின் அண்மையில் 10-15 அடி விட்டமுள்ள பெரும் பாறைகளும் அவற்றுக்கு அடியில் ஆள் நுழைந்து செல்லும் அளவு இடைவெளிகளுமான படிவுகளைக் கண்டேன். புவியியங்கியலில் பேய்மழைப் படிவுகள் (Torrential Sills) எனப்படுபவை இவை.

            பாலைவனத்தின் இயல்பு பல ஆண்டுகளுக்கு மழையே இருக்காது. திடீரென்று ஒரு நாள் வானமே பொத்துக்கொண்டு கொட்டும். பெரும்பெரும் பாறைகள், மரங்கள், விலங்குகள் அனைத்துமே மலைகளிலிருந்து ஒரு சேர அடித்துவரப்பட்டு கீழே கொட்டப்படும். இயல்பான மழைப் பகுதிகளில் நீரோட்டங்களினால் உண்டாகும் படிவுகள் கனத்தவையும் பெரியவையுமான பொருட்கள் அடியிலும் அவற்றைவிட சிறியவை மேலேயுள்ள அடுக்குகளிலுமாகப் படிமுறையாகப் படிந்திருக்கும். பேய்மழைப் படிவுகளில் இது போன்ற படிமுறையின்றி பெரிதும் சிறிதுமானவை அள்ளிக் கொட்டினாற் போல் இருக்கும்.

            இன்னும் Loess formations எனப்படும் புழுதிப் படிவுகளும் நீரோட்டப் பரப்பின் விலாப்பகுதி (கரை) என்று கருதத்தக்க இடத்தில் இருந்தது. இது பேய்க் காற்று வீசும் போது அடித்து வரப்படும் பெரும் பரல்கள் விழுந்த பின் காற்று விரைவு குறைந்து தூசு நிலையிலுள்ள புழுதி படிந்து காலபோக்கில் இறுகிப் போவது. இது போன்ற படிவுப் பகுதிகளில் சீனத்தில் குடைந்து வீடுகளை அமைத்து வாழ்வதாக  புவியியங்கியல் நூல்கள் கூறுகின்றன. மண்வெட்டி, கடப்பாரை அகியவற்றுக்கு இந்த மண் விட்டுக் கொடுக்காது. நனைந்த பரப்பில் கால் வைத்தால் சறுக்கும். குழிபோட்டு வேட்டு வைத்தால் மேலே வைத்தூற்றி(புனல்) போன்று அரை அடி விட்டத்துக்கு ஒரு  சிறு பகுதி பெயர்ந்து வரும். உடைந்துவரும் மண்ணில் பசையே இருக்காது. இறுதியில் கடப்பாரையை வைத்து நீரை ஊற்றி அடித்து 5 அடி ஆழமுள்ள பல குழிகளை அடுத்தடுத்துப் போட்டு அவற்றில் வெடிமெழுகை(Gelatine குச்சியை)ப் போட்டு மின் வெடிப்பானால் ஓரே நேரத்தில் வெடிக்க வைத்தால் அந்தப் பகுதி முழுவதும் உலையும். அவ்வாறு குழியைத் தோண்டினோம். அதன் அடியில் பீங்கான் கல் எனப்படும் Quartz வந்தது. இதை நொறுங்கிய நிலையில்தான் வெட்டியெடுக்க முடிந்தது. நீரூற்றையும் இப் பாறை தடை செய்யவில்லை.

            இது போன்ற அணைக் களங்களில் ஒரு புவியியங்கியலாளர் இருந்தால் அவர் சம்பளம் போன்ற உடனிகழ் செலவுகள் தவிர வேறு செலவுகள் இன்றி அந்தந்த வட்டாரத்தின் புவியியங்கியல் புலனங்களை எளிதாக அறிந்துகொள்ளலாம். புவியியங்கியல் துறை என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களில் இருந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் நாளை எண்ணி சம்பளம் வாங்கி உடலிலும் உள்ளத்திலும் கொழுப்பேறி, ஏதாவது வேலை செய்ய வேண்டுமென்று நேர்ந்தால் எந்த அச்சமும் தயக்கமுமின்றி, ஊழல் வரவும் கைக்கூலியும் கிடைக்காதென்றால் அவற்றைக் கழித்துக்கட்டிவிட்டு குடும்பம், மக்கள், வளமனை, ஊர்தி என்று கொழுத்து அவர்களிடத்தில் மனச்சான்று என்று ஏதாவது இருந்து அது ஒரு நாள் விழித்துக்கொண்டு இந்தத் தீங்கெல்லாம் பிள்ளைகளைப் பாதிக்குமோ நமக்குக் கொடு நரகுதான் கிடைக்குமோ என்று அஞ்சி நடுங்கி மனவளக் கலை, தியானம் அது இது என்று தொழில் நடத்தும் புவியில் இயங்கும் தெய்வங்களின் பின்னால் ஓடி புண்ணியத்துக்கு அச்சாரம் போடும் அரசு அலுவலர் - ஆசிரியர் கூட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, தாங்கள் பாடநூல்களில் படித்து தேர்வில் கக்கி அப்புறம் மறந்துபோன வெவ்வேறு வகை மண் அடுக்குகள், கல் வகைகள், புவியியங்கியல் நிகழ்முறைகள் ஆகியவற்றை கண்ணால் பார்த்து அறிவைப் பெறும் வாய்ப்பு இப்போதாவது கிடைக்கும்.

            இது போன்ற புவியியங்கியல் புலனங்கள் மட்டுமல்ல, தொல்பொருட் புலனங்களுக்கும் நிறைய வாய்ப்புகள் இருந்தன. மண் அணை அமைப்பதற்கு மண்ணைத் தோண்டிய இடத்தில் முதுமக்கள் தாழிகள் எனப்படும் கூனைகள், எலும்புகள், பிற பொருட்களுடன் கிடைத்திருக்கின்றன. மண்ணால் செய்த உடுக்கின் உடைந்த பகுதி எனக்குக் கிடைத்தது. அங்கு பொறுப்பில் இருந்த பொறியாளர் அந்தக் கூனைகளையும் எலும்புகளையும் நொறுக்கி மண்வாரிகளில் ஏற்றி அணையில் கொட்டி உருளிகள் கொண்டு இறுக்கிய பின்னர்தான் இந்தச் செய்திகள் எனக்குத் தெரியவந்தன. முன்பே தெரிந்திருந்தாலும் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்று என் பட்டறிவிலிருந்து தெரியவந்தது. வெட்டுப் பள்ளத்திலிருந்து எடுத்த கல் துண்டுகளையும் உடைந்த மண் உடுக்கையையும் நெடுநாள் என்னோடு னவத்திருந்தேன். சராசரியாக ஆறு மாதத்துக்கு ஒரு முறை இடமாற்றம் பெற்றுக் கொண்டிருந்த என்னிடமிருந்து அவை எப்படியோ தவறிவிட்டன.

            பாளையங்கோட்டையில் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்துக்கு எதிரில் அலுவலகம் வைத்திருந்தார் தொல்பொருள் ஆய்வுத்துறை உதவி இயக்குயர் திரு. செந்தில் செல்வக்குமரன். நெல்லை - நாகர்கோயில் சாலையில் போக்குவரத்துக் கழகங்கள் நடத்தும் பல்தொழில்நுட்பப் பயிலகத்துக்கு(பாலிட்டெக்னிக்)த் தெற்கில் மேற்கு நோக்கிச் செல்லும் மண்பாதையில் சிறிது தொலைவில் ஒரு மனைப் பிரிவுப் பணிக்குச் சென்ற போது ஓரிடத்தில் கன்னங்கரேல் என்று ஓரு மரத்தின் அடித்தண்டு கல்லாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். மனைப்பிரிவுக் களத்தில் நடுவில் துளையுள்ள முக்கால் அடிச் சதுர அளவில் பாதி உடைந்த நிலையில் ஒரு கல் துண்டும் கிடைத்தது. அதை எடுத்துச் சென்று அவரிடம் காட்டி அவரை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். உடைந்த கல் துண்டைக் கண்டெடுத்த இடத்திலும் சுற்றிலும் ஒரு நுண்கற் காலக் குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன என்று நுண்கற் கருவிகள் என்று சிலவற்றைத் திரட்டினார். நான் காட்டிய கல் என்னவென்று அவரால் இனம் காண முடியவில்லை. கற்படிவமடைந்த மரம் தன் துறையைச் சேர்ந்ததல்ல என்று கூறிவிட்டர். தான் கண்டவற்றைத் தாளிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்தார். அதில் என் பெயரை தாளிகையினர் விட்டுவிட்டதாகக் கூறினார். அவரை நம்பலாம். தாளிகைச் செய்தி ஆசிரியர்களுக்கும் எத்தனையோ நெருக்கடிகள்.

            நம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன எல்லா வகைத் தடயங்களும் சான்றுகளும். ஆனால் ஒருங்கினைப்புதான் இல்லை. என்ன, ஒருங்கிணைப்பு இல்லையா? இருக்கிறது இருக்கிறது, நம் ஆட்சியாளர்கள், நம் நன்மைக்காக, நம் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நேரடியான ஒருங்கிணைப்புதான் இல்லை என்றேன். அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள், ஒன்றிய நாடுகளவை(ஒ.நா.) மூலமும் உலக வங்கி தொடங்கி அனைத்து வளர்ச்சி வங்கிகளுக்கும் உதவி(எயிட்சு என்று படிக்க) வழங்கும் அனைத்து நாடுகளுக்கும் நம் ஆட்சியாளர்களுக்கும் தேவையான புலனங்களைத் திரட்டவும் பிற ஆயத்த ப்பணிகள், பணி முடிப்புகள்(தடயம் அழிப்புகளையும் சேர்த்து) என அனைத்தையும் நேரடியாகவும் நம் ஆட்சியாளர்கள் மூலமும் நிறைவேற்றுவதற்குரிய சீரிய ஒருங்கிணைப்பு சிறப்பாகவே செயற்படுகிறது. காந்தி மகாத்மா தன் இன்னுயிர் கொடுத்து நிலைநிறுத்திய, ஆசிய சோதி நேரு பெருமான், ரோராசாவின் ராசா செயற்படுத்திக் காட்டிய, அன்னை இந்திராவும் மகான் வாசுபேயியும் மன்மோகனும் அவ் வழி நடக்க அறிவியல் மாமேதை, தெற்கே தோன்றிய அறிவியல் விடியல் அப்துல் கலாம் கனவு காண பகுத்தறிவு குட்டிப் பகலவன் கலைஞர் கருணாநிதி விரைந்து செயலாக்க, இந்த ஒருங்கிணைப்பு நன்றாகவே நடந்தது, நன்றாகவே நடக்கிறது, நன்றாகவே நடக்கும். நமக்குத்தான் தெரியவில்லை. அத்தகைய ஒரு ஒருங்கிணைப்பின் வெளிப்பாடுதான் காலச் சுவடு - சு.கி. செயகரனின் கூட்டணியின் இந்த ஆக்கம்.

            காவிரி ஆற்றுப் பரப்பு மட்டுமல்ல பாலாறு கழியும் மரக்காணம் வட்டாரத்தில் கூட 700 அடிவரை பாறை எதுவும் தென்படவில்லை என்பது 1967 வாக்கில் அங்கு துளையிட்டுப் பார்த்த நிலநீர் ஆய்வாளர்கள் கூற்று. குமரி மாவட்டம் அகத்தீசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள மலையில்லாப் பகுதிகளில் சராசரியாக 150 அடிவரை கருங்கற்பாறை இல்லை என்பது உள்ளிட்ட இச் செய்திகள் இப் பகுதி கடலுக்குள் தாழ்ந்துள்ளது அல்லது கடல் மட்டம் உயர்ந்துள்ளது அல்லது இரண்டுமே நடந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
           
காவிரி கடலினுள் புகும் இடத்துக்கு புகார்த் துறை என்று வழங்கியது என்று முனைவர் கண்மணி கூறியதை அப்படியே விழுங்கிவிட்டு அதை அப்படியே நம் மீது வாந்தி எடுக்கிறார் திருவாளர் சு.கி.செயகரன். குமரிக் கண்டம் என்ற சொல் எந்தப் பழைய இலக்கியத்தில் பதிவாகியுள்ளது என்று துருவித் துருவி கேட்கும் அந்தப் பெரும் ஆய்வாளர், புகார்த் துறை என்ற சொல் எந்த இலக்கியத்திலாவது பதிவாகியுள்ளதா என்பதையும் தேடிக் கண்டுபிடித்திருந்தால் அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இல்லாத ஒரு சொல்லை வைத்துக்கொண்டு குமரியம் பெருந்துறை என்ற சொல்லுக்கு முனைவர் கண்மணி கூறியுள்ள விளக்கத்தைப் பற்றிக்கொண்டு செல்கிறார் அவர்.

இனி, அடியார்க்குநல்லார் அதனை ஆற்றுத் துறை என்று கூறியதைப் பற்றிப் பிடித்துக் கொண்டதுடன், மயிலை சீனி வெங்கடசாமி, குமரியாறு, கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கடல்கொண்டுவிட்டதாகக் கூறுவதையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார். முனைவர் அவர்கள் முதலில் குமரித் துறை என்பது பஃறுளியாற்றின் சங்கமத் துறை என்று கூறியிருக்க அதை அப்படியே விட்டுவிட்டு, அப்படியே கா.அப்பாத்துரையாரின் கூற்றுக்குத் தாவி குமரித் துறை என்பது குமரியாறு கடலில் மூழ்கியதால் குமரிக் கடற்கரைக்கு வழங்கிய பெயர் என்று கூறியதைப் பிடித்துக்கொள்கிறார். இறுதியில் வித்துவான் செ.சதாசிவம் அவர்களின்  சேரநாடும் செந்தமிழும் நூலைப் பிடித்துக் கொண்டு பழையாறுதான் பஃறுளியாறு என்று முடித்து, கடல்மட்டம் தாழ்ந்திருந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கரையில் மேலும் 25-30 கி.மீட்டர் வரை ஓடிக் கடலில் கலந்திருக்கலாம்(?!), ஏனெனில் அன்றைய கடற்கரை, இன்றைய குமரியிலிருந்து 25-30 கி.மீ. தெற்காகத் தள்ளியிருந்தது. (இங்கு மட்டும் லாம் போட்டு தள்ளியிருக்கலாம் என்று கூறியிருக்கலாமே, புவியியங்கியல் புலியே!) பின்னர் கடல் மட்டம் உயர ஆற்றின் இப் பகுதி கடலில் போயிருக்கலாம் இப் பகுதியில் ஆழ்கடலாய்வு மேற்கொண்டால் இதுபற்றி மேலும் அறியலாம்.

இதுதான் புவியியங்கியல் புலி சு.கி.செயகரனின் ஆய்வுப் பெருமை. இரப்பாளியின் கக்கல் (பிச்சக்காரன் வாந்தி) என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? அதற்கு ஓர் இரப்பாளியின் பின்னால் சென்று அவன் கக்கும் நேரத்துக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. திருவாளர் சு.கி.செயகரனின் நூலைப் படித்தால் அடிக்கடி, அடிக்கு அடி அந்தக் கக்கலைக் காணலாம். இரப்பாளியின் கக்கலைப் பற்றிய உங்கள் அறிவு தழைத்தோங்கும்.

            இதற்கிடையில் துறை என்ற சொல்லைப் பற்றிய ஆய்வு வேறு. திரு.கு.பகவதி என்பவரின் இலக்கியத்தில் ஊர்ப் பெயர்கள் என்ற நூலையும் ஒரு கடி கடித்திருக்கிறார். மேற்கூறியவற்றிலிருந்து துறை என்பது பொதுவாக ஆற்றின் கரையிலமைந்த பகுதியையே குறிக்கும் என்பது தெளிவு என்று நமக்குத் தெளிவையும் ஊற்றித் தருகிறார். இந்தத் தெளிவு குடித்ததனால்தான் அவருக்குக் கக்கலே வந்தது போலும். ஐயா, புவியியங்கியல் புலியே குமரி மாவட்டத்தில் புத்தன்துறை(புதியதுறை) கேசவன் புத்தன்துறை, இரயுமன்துறை என்று மீன் பிடிப்பதற்காகக் கட்டுமரம் புறப்படும் இடங்களுக்குப் பெயர் இருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே குமரிக் கடலில் துறை இருந்திருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இதில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். பக்தி இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் ஆகியவை குறிப்பிடும் ஊர்ப் பெயர்களை ஆராய்ந்த கு.பகவதி (இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் பக்.41,108) தொகுப்பில் உள்ள துறை எனக் குறிக்கப்படும் இடங்கள் சில வருமாறு: என்று குறிப்பிட்டு ஆறுகளின் கரைகளில் அமைந்து, துறை என்ற முன், பின் ஒட்டுகளைக் கொண்ட சில(வலியுறுத்தம் எமது) ஊர்களின் பெயர்களைக் காட்டுகிறார். அப்படி இருந்தவற்றில் கடற்கரையில் அமைந்த துறை என்னும் அடைமொழியுடைய ஊர்ப் பெயர்களும் இருந்திருக்கும். அவற்றை அவர் மறைத்திருக்கிறார் என்பது உறுதி. புவியியங்கியல் புலியின் நேர்மையை நாம் போகப் போகப் காணலாம்.

            திருவாளர் சு.கி. செயகரன் மேற்கொண்டுள்ள நூல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுந்தவை. அடியார்க்குநல்லார், குமரியம் பெருந்துறை  அயிரைமாந்தி என்ற புறநானூற்று வரியை மனதில் கொண்டு உரை எழுதியதால், சிலப்பதிகாரத்தில் வரும் குமரியம் பெருந்துறைக்கும் ஆற்றுத்துறை என்று பொருள்கொண்டுள்ளார்.  அயிரை என்பது நன்னீர் மீன் என்பதை நாம் முன்பு சுட்டிக்காட்டியுள்ளோம். மயிலை சீனி வெங்கடசாமி எந்த நூலில் குமரியாறு கி.பி. முதல் நூற்றாண்டில் கடலால் கொள்ளப்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறுவதாகக் கூறியுள்ளார் என்பதைத் திருவாளர் சு.கி.செயகரன் குறிப்பிடவில்லை. அப்படித்தான் அவர் கூறியிருக்கட்டுமே அதன் சரி தவறுகளைப் புட்டுப் புட்டு வைக்க வேண்டியதுதானே புவியியங்கியல் புலியின் பணியாக இருந்திருக்க வேண்டும்! இப் பகுதியில் கடலாய்வு மேற்கொண்டால் இது பற்றி மேலும் அறியலாம் என்று சொல்ல இவர் எதற்கு? ஆனால் சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்தி கூறியதாகக் கூறிய நிகழ்ச்சிகளில் அப்போதைய பாண்டியனின் முன்னோர்கள் காலங்களில் நிகழ்ந்தவையும் அடங்கும் என்பது தமிழ் இலக்கியங்களில் தடம்பிடிக்கத்தக்க மரபு. இந்த அடிப்படையில் மயிலை சீனி வெங்கடசாமியாரின் அணுகல் இல்லையானால் அதைப் புறக்கணிக்க வேண்டியது ஒரு நேர்மையான ஆய்வாளரின் பணி. இவரிடம் இந்த மரபு பற்றிய அறிவும் கிடையாது என்பது உறுதியாகத் தெரிகிறது. அடுத்து இவர் பல்கலைக் கழக ஆய்வேடுகளில் போன்று ஏதோவோர் ஆசிரியரின் ஏதோவோர் கூற்றை எடுத்துச்  சான்றாகச் சொல்லிவிட்டால் அவர் சொல்லும் கூற்றுகள் எல்லாம் பல்கலைக் கழகங்களில் போல் மக்கள் மன்றத்திலும் அரங்கேறும் என்று கற்பனை செய்துகொண்டார் போலும். பல்கலைக் கழகங்களால் கருத்துச் சிதைக்கப்படாத இன்னும் சிலர் தமிழக மக்களில் எஞ்சியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியிருக்காது.

            அடுத்து வித்துவான் செ.சதாசிவம் அவர்களது நூல் இன்றைய குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற போராட்டம் கருக்கொண்ட காலத்தில் வரலாற்றாய்வாளருமான கவிமணி தேசிகவினாயகரின் வழிகாட்டலில் எழுந்த ஒன்று. அப் போராட்டத்தைக் கைக்கொண்ட திருவிதாங்கூர் தமிழ்நாடு பேரவை(காங்கிரசு)க் கட்சியின் வேண்டுகைப்படி அமைந்த பகுதி பண்டை நாள் முதல் தமிழகப் பகுதிதான், கடல்கொண்ட தமிழகத்தின் எஞ்சிய பகுதிதான் என்பதை நிலைநாட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்டது. இருந்தாலும் அவரது அணுகல்கள் திருவாளர் சு.கி.செயகரனுடையதைப் போல் நேர்மைக்குப் புறம்பான கற்பனைகளைக் கொண்டதல்ல. பழையாற்றுக்கும் பறளியாறு என்ற இன்னோர் ஆற்றுக்கும் உள்ள உறவைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்த ஒரு கல்வெட்டால் இந்தக் குழப்பம் நேர்ந்துள்ளது. இது குறித்து திரு. ம.எட்வின் பிரகாசு எழுதியுள்ள கோட்டாறு பஃறுளியாறான கதை  என்ற கட்டுரையை(புதிய பார்வை)ப் பார்க்க.edwinsir.biogspot.com வலைப் பக்கத்திலும் பார்க்கலாம்.

            ஊர்ப் பெயர்கள் ஆய்வு பற்றிய அண்ணனின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளின் அலசலை முடிக்கும் முன் இது பற்றிய ஒரு முகாமையான செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் மிகப் பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வழங்கப்படுகின்றன. சில பெயர்கள் ஒரே வகையான காரணத்தால் அமைந்தவை. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு புதூர், மணலூர் மண(ல்) விளை என்ற பெயர்களையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சிந்தாமணி என்ற பொருள்ள ஊர்கள் பல இடங்களில் உள்ளன. அவை பெரும்பாலும் ஒரு பேரூரின் விளிம்பில் அமைந்திருப்பதையும் காணலாம். தாமிரபரணி ஆறு கூட குமரி மாவட்டத்திலும் ஒன்று உள்ளது. நெல்லை மாவட்டத்து ஆற்றின் இன்னொரு பெயரான தண்பொருனை என்பது சேரனின் வஞ்சி நகரத்தில் ஓடிய ஆற்றின் பெயராகவும் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒற்றுமைகள் பெரும்பாலும் இடப்பெயர்ச்சிகளின் அடையாளங்களாகும். ஓர் ஊரிலிருந்து குடிபெயர்ந்து இன்னோர் இடத்தில் அமரும் மக்கள்  தாங்கள் புதிதாகக் குடியமர்ந்த இடத்துக்குத் தங்கள் பழம்பதியின் பெயரைச் சூட்டலாம். எடுத்துக்காட்டாக சூரங்குடி, இராசக்க(ள்)மங்கலம். அடுத்து அரசியல் பெயர்கள், காந்திநகர், நேருநகர், அண்ணாநகர், கருணாநிதி நகர், ம.கோ.இரா. நகர் என்பவை போன்று மீனாட்சிபுரம், தளவாய்புரம் என்று எண்ணற்றவை. சாதி அடிப்படையில் அமைந்தவை கக்கன் நகர், காமராசகர் நகர், தமிழீனத் தலைவர் புண்ணியத்தில் செயில்சிங் நகர்(விசுவகர்மர்கள்), வ.உ.சி. நகர் போன்றவை. ஆக இதனையும் கணக்கிலெடுத்தால் பறளியாறு, தாமிரபரணி என்பவை கடல்கொண்ட மண்ணில் ஓடிய ஆறுகளின் நினைவாக அங்கிருந்து பெயர்ந்துவந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் வைத்த பெயர்களாகவும் இருக்கலாம் என்பது நேர்மையுடன் சிந்தனைத் திறனும் உள்ளவர்க்கு விளங்கும்.

            காவிரியின் கழிமுகத்தைப் பொறுத்தவரை அதைத் துறை என்று சிலப்பதிகாரம் குறிப்பிடவில்லை. வளந்தலை மயங்கிய துளங்குல இருக்கை, (கடலாடுகாதை வரி 154) அதாவது கப்பல்கள் அசைந்தாடிக் கொண்டிருக்கும் துறைமுகங்களில் சோலை சூழ்ந்த இடங்களில் என்றுதான் குறிப்பிடுகிறது. துறைமுகம் என்பது கடற்கரையாயினும் ஆற்றங்கரையாயினும் கப்பல் வந்து நிற்கும் இடம். துறை என்பது அதையும் குறிக்கலாம், மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக கடலிலும் ஆற்றிலும் இறங்கும் இடங்களையும் குறிக்கலாம். ஆற்றில் குளிப்பதற்கான இடங்களையும் காட்டில் விலங்குகள் நீரருந்த வழக்கமாக இறங்கும் இடத்தைக் கூடக் குறிக்கும்.

            கடலில் துறைமுகங்கள் அமைந்த ஊர்களுக்குப் பின்னொட்டாக வரும் பெருவழக்கிலுள்ள சொல் பட்டினமாகும். குமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம், கடியப்பட்டனம் தொடங்கி கிழக்குக் கடற்கரையில் காயல்பட்டினம், அதிராம்பட்டினம், நாகப்பட்டினம் என்று எத்தனையோ பட்டினங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் காவிரிப்பூம்பட்டினம், காவிரி புகும் பட்டினம். கடலோ, ஆறோ இல்லாத இடங்களில் கூட பட்டினம் என்ற ஒட்டோடு ஊர்ப்பெயர்கள் இருக்கலாம். அவை மக்களின் இடப்பெயர்ச்சியால் அப் பெயர் பெற்றவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். முனைவர் கண்மணி கூறியுள்ளது போல் புகார்த்துறை என்ற பெயரில் ஊர் எதுவும் யாம் அறிந்து இல்லை.

            கன்னியாகுமரி என்று இன்று நாம் அறியும் ஊருக்கு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கன்னிமாகுமரி என்ற பெயர் இருந்துள்ளதை அங்கு செயல்பட்ட ஒரு சத்திரத்தின் கணக்கு ஏடுகளின் குறிப்பிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் ஆபிரகாம் லிங்கன் என்னும் கார்மெல் பள்ளியின் ஆசிரியர். அது மட்டுமல்ல, வித்துவான் செ.சதாசிவம் அவர்களின் சேரநாடும் செந்தமிழும் நூலில் தரப்பட்டுள்ள ஒரு மலையாளக் கல்வெட்டுச் செய்தியிலும் கன்னிமாகுமரி என்றே கூறப்பட்டுள்ளது. இது குமரி அம்மனைக் குறிக்கும் சொல்லாகும். கன்னியாகிய பெரிய அல்லது பெருமை மிக்க குமரி என்பது அதன் பொருள், உச்சிமாகாளி என்பது போல். உச்சி, மா ஆகியவை பெருமையைக் குறிக்க அடுக்கிவந்த சொற்கள். ஆக, குமரி அம்மனின் பெயரில்தான் அந்த இடத்துக்குப் பெயர் வழங்கி வந்துள்ளது தெளிவு. அப்படி இருக்க குமரி ஆற்றையும் குமரிக் கோட்டையும் குறிப்பதாகக் குமரித்துறை என்ற சொல்லைக் காட்ட முயன்றுள்ள சு.கி.செயகரனின் முயற்சி வேடிக்கையாக இருக்கிறது. இந்தக் கோயில் பற்றிய குறிப்புகள் கிறித்துவ ஊழியின் தொடக் கால யவன ஆசிரியர்களின் குறிப்புகளிலேயே காணப்படுகின்றன. குமரித்துறை என்பது குமரியம்மன் கோயில் அமைந்துள்ள கடல் பகுதியில்  நீராடு துறையில் குளித்து அம்மனை வழிபடுவதாகும். அங்கிருக்கும் பாறைகளால் அங்கு துறைமுகம் அமைக்க முடியாது என்று ஏற்கனவே சொன்னோம். ஆக தான் மேற்கொண்ட தலைப்பாகிய குமரிநில நீட்சி  என்பதற்கேற்ப தரவுகளை வளைத்து நெளித்துக் காட்டி அவரை அமர்த்தியவர்களின் மனங்களைக் குளிரச் செய்ய முனைந்துள்ளார் திருவாளர் செயகரன் என்பது தெளிவாக விளங்குகிறது. அதுமட்டுமல்ல, குமரியம் பெருந்துறை கொள்கையில் படிந்து என்பதில் கொள்கை என்பது தென்புலத்தார் கடன் தீர்க்கும் சடங்கு என்றும் அது சார்ந்த நோக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். இராமேசுவரத்துக்கு வட இந்தியாவிலிருந்து வருவோரும் அங்கு தென்புலத்தார் கடன் ஆற்றவே கடலாடுகின்றனர். அந்த அடிப்படையில் குமரி ஆறு, குமரி மலை ஆகியவை அடங்கிய குமரிக் கண்டத்தில் கடற்கோளால் அழிந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நினைவாக நிற்கும் அம் மண்ணின் தெய்வம்தான் கன்னிமாகுமரியிலுள்ள குமரியம்மன். அதனால்தான் அந்தக் கடல் பகுதியைத் தொடியோள் பெளவம் என்கிறார் இளங்கோவடிகள். தொடியோள் என்பது பெண்ணையும் பெளவம் என்பது ஆழ்கடலையும் குறிக்கிறது. இதுவும் அவர் குறிப்பிடும் குமரியம் பெருந்துறை ஓர் கடல்துறை என்பதற்கு ஐயத்திற்கு இடமில்லாச் சான்றாகும். கடற்கோளுக்கு முன்னிருந்த குமரியாற்றையும் கடற்கோளுக்குப் பின்னிருந்த முனையில் குமரியம்மன் பெயரிலமைந்த ஊர்ப்பெயரையும் குழப்பி உரையாசிரியர்கள், குறிப்பாக வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரை விளக்கம் கொண்டது[3] திருவாளர் சு.கி.செ.யின் திருப்பு, வளைப்புகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. குமரி ஆறும் மலையும் வேறு குமரிமுனை வேறு.                   
       
          உன் நண்பர்களைக் காட்டு; நீ யார் என்று சொல்கிறேன் என்று ஒரு ஆங்கிலச் சொலவடை உண்டு. அதற்கேற்பத் தனக்கேற்ற அறிவுக் கழுந்துகளைத்தான் திருவாளர் செயகரன் தேர்ந்தெடுத்துள்ளார். முனைவர் கண்மணி என்பவர் குமரிக்கோடு என்பதைக் குமரியாற்றின் கரை என்று பொருள்கொண்டிருப்பது மேலே நாம் காட்டியுள்ள அவரது மேற்கோளிலிருந்து தெரிகிறது. கோடு என்ற சொல்லுக்கு கரை என்றொரு பொருளிருக்கிறது என்பதற்காக இப்படியா? பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு என்று இளங்கோவடிகள் தெளிவாகக் கூறியிருந்த பின்னுமா? உங்கள் மழுமண்டைத்தனத்துக்கு அல்லது கயவாளித்தனத்துக்கு எல்லையேயில்லையா? கோட்சுட்டப்பட்ட நூல் ஓர் ஆய்வேடாக இருந்தால் அதை ஏற்றுக்கொண்ட பல்கலைக் கழகம், வழிகாட்டியவர், மதிப்பிட்டவர்கள், நேர்கண்டவர்கள் அனைவரையும்தான் கேட்கிறேன்.

            திருவாளர் செயகரனுக்கு ஒருவகையில் தமிழன்பர்கள் நன்றி சொல்லியாக வேண்டும், இது போன்ற ஆய்வுச் சாய்கடையினுள் மூழ்கி அகற்ற வேண்டிய குப்பைகளையும் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியே விடப்படும் இது போன்ற நச்சு மாசுகளையும் தேடியெடுத்து நம் பார்வைக்கு வைத்துள்ளாரே அதற்காக.
                                                       
            கழக இலக்கியங்களில் கடற்கோள்கள் பற்றிய விரிவான செய்திகள் இல்லாமல் போனதற்கு அவற்றைத் தொகுத்தோரின் வந்தேறி அரசியல் நிலைப்பாடு ஒரு காரணமானால் இன்னொரு முகாமையான அரசியல் பின்னணியும் உண்டு. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மிகவும் கலவரமான ஒரு அரசியல் - குமுகியல் சூழலை நம் கண் முன் கொண்டு வருகின்றன. மதுரையில் அரசியும் அரசனும் சாகின்றனர்; தலைநகரம் பற்றி எரிகிறது. அதற்கு ஒரு வாணிகர் குலப்பெண் காரணமாகிறாள். அவளுக்குச் சாந்திசெய்யவென்று பொற்கொல்லர் ஆயிரவரைக் களவேள்வி செய்து பட்டத்து இளவரசன் அரியணையேறுகிறான். பூம்புகாரில் பட்டத்து இளவரசன் கமுக்கமாகக் கொல்லப்படுகிறான். அதற்கு வாணிகன் மகளான மணிமேகலையோடு தொடர்பு உள்ளது. அரசனின் இன்னொரு மகனான நாகநாட்டுப் பீலிவளையின் மகன் வாணிகக் கப்பலில் அழைத்து வரும் போது காணாமல் போகிறான். கணிகையான மாதவி குலமகள் போல் ஒரே ஆடவனுடன் வாழ விரும்புகிறாள்; அவள் மகள் துறவு மேற்கொள்வதுடன் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியும் செய்கிறாள். புத்த சமயம் சார்ந்த இலங்கையை ஒட்டிய இரத்தினபுரி என்று அடையாளம் காணப்பட்ட மணிபல்லவத்துக்குச் சென்று திரும்புகிறாள். அன்று இலங்கையை ஆண்ட கயவாகு பன்னீராயிரம் சிங்கள வீரர்களைத் தன் தந்தையின் காலத்தில் கரிகாலன் சிறைப் பிடித்து வந்ததற்குத் தான் பூம்புகாரை அழித்துப் பழிதீர்த்துக் கொண்டதைப் பதிந்து வைத்துள்ளான்[4]. இது மணிமேகலையின் நடவடிக்கைகளைப் பயன்படுத்தித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். மணிபல்லவத்திலிருந்து பெற்ற அமுதசுரபி என்பது கயவாகு அளித்த உணவுப் பொருளாக இருக்க வேண்டும்[5]. இந்திரவிழா எடுக்காததால் கடல் கொதித்து பூம்புகாரை அழித்தது என்பது கடல்வழி வந்த கயவாகுவின் செயலை கடல் மீது ஏற்றிக் கூறிதாக இருக்க வேண்டும் அல்லது அதற்குச் சற்று முன்னோ பின்னோ கடற்கோள்(ஓங்கலை) நிகழ்ந்திருக்கவும் கூடும். இது பற்றிய திட்டவட்டமான முடிவைத் திரு.சு.கி.செயகரன் போலின்றி, தன் துறை பற்றிய தெளிவும் நேர்மையான அணுகலும் கொண்ட ஒரு புவி இயங்கியலாளரால் கூற முடியும்.

            இந்தப் பின்னணியில்தான் வாணிகர்கள், குறிப்பாகக் கடல் வாணிகர்கள் கைகளில் செல்வம் திரள்வது அரசனும் அவனோடு சேர்ந்த ஒட்டுண்ணிகளும் செலுத்தும் ஆதிக்கத்துக்கு அறைகூவலை உருவாக்கும் என்ற அரசியல் பாடம் ஆட்சியாளர்களுக்கு உறைத்தது. அரசர்களுக்கு இணையாக அல்லது மேலாகக் கூட வாணிகர்கள் உயர்ந்துவிட்டனர். அரைசு விழை திருவின் என்றும் அரசகுமரரும் பரதகுமரரும் என்று இவ் விரு சாரரையும் ஒப்பவைத்தும் இளங்கோவடிகள் கூறுவது காண்க. அது மட்டுமல்ல அரச கணிகைக்கு நாளொன்றுக்குக் கொடுக்க வேண்டிய 1008 கழஞ்சு பொன்னைக் கொடுக்க இயலாமல் அவளை ஒரு வாணிகன் பெறும் நிலை உருவாகியிருந்தது.
           
அது போல்தான் பொற்கொல்லரும். நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர அரசனுக்கு நெருக்கமான பொற்கொல்லன் வீதியில் செல்வதை மதுரையில் காட்டுகிறார் அடிகள்.
அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
                        கடிவரையில புறத் தென்மனார் புலவர் என்ற தொல்காப்பிய வரிகள் கூறுவது போல் அகத்திணை ஒழுக்கத்துக்குத் தகுதியற்றவராக(ஒழுக்கங் குன்றியவராக)ப் பார்க்கப்பட்ட பொற்கொல்லர் தம் குமுக இழிநிலையை ஒழிப்பதற்காகப் போராடியதன் எதிர்வினையாகத்தான் ஆயிரம் பொற்கொல்லர் படுகொலையையும் காண வேண்டும்.

            மக்களின் கைகளில் செல்வம் திரளுவதை பொதுவாக எந்த அரசும் விரும்புவதில்லை. ஆனால் பதியப்பட்டுள்ள வரலாற்றில் ஒரு விதிவிலக்காக ஐரோப்பாவில் சிலுவைப் போர்கள், இங்கிலாந்து மன்னன் என்ரி போப்பை எதிர்த்து சமயத்தை உடைத்து வெளியேறியது, மார்ட்டின் லூதர் தூண்டிய கிறித்துவத் தேசியம், அறிவியல் சிந்தனைகளுக்கு எதிராக வாட்டிக்கன் கட்டவிழ்த்து விட்ட வன்முறை, ஐரோப்பியக் குறுநில மன்னர்களின் இடைவிடாத சண்டைகள், முகம்மதியர் துருக்கியைக் கைப்பற்றியது, அதன் மூலம் ஐரோப்பிய வாணிகம் அராபியர் கையில் சிக்கியது, ஐரோப்பாவினுள் கிறித்துவக் கோட்பாடுகளைப் புறந்தள்ளி முகம்மதியக் கோட்பாடுகள் செல்வாக்குச் செலுத்தியதால் ஏற்பட்ட குழப்பமும் கொந்தளிப்பும், தங்களுக்கு இன்றியமையாத பண்டங்களை அராபியரின் இடையீடின்றி கீழைநாடுகளிலிருந்து கொண்டுவர வேண்டிய உடனடித் தேவை, அதனால் புதிய கடற்பாதை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம், அதற்காக அறிவியலாளரின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி, அமெரிக்காவையும் கீழைநாடுகளுக்குச் செல்வதற்கான கடல்வழிப் பாதையையும் முறையே பெயினும் போர்ச்சுக்கல்லும் கண்டுபிடித்து அங்கிருந்தெல்லாம் செல்வத்தைத் தம் நாடுகளுக்கு அள்ளி வந்ததைப் பார்த்துப் பிற ஐரோப்பிய நாடுகளும் களத்தில் இறங்கியது, மன்னன் என்ரி கலைத்த மடாலயங்களின் சொத்துகளைப் பெற்றவர்களின் வழியாகத் திரண்ட மூலதனம் ஆகியவற்றால் வலிமை பெற்ற ஐரோப்பிய வாணிக வகுப்பு பிரிட்டனிலும் பிரான்சிலும் அரசர்களின் தலைகளைக் கொய்து அவர்களின் அதிகாரத்தைப் பறித்து அறிவியல், தொழில்நுட்பம், தொழில்வளர்ச்சி என்று ஒரு புறத்தில் முதலாளியத்தையும் மக்களாட்சி என்று தொடங்கி பல்வேறு மனித உரிமைக் கோட்பாடுகளையும் உலகுக்குத் தந்துள்ளது.

            ஆனால் தமிழ்நாட்டில் கழகக் காலத்தின் இறுதியில் வளர்ச்சி பெற்றிருந்த வாணிக வகுப்புக்குத் தனக்குரிய ஒரு தலைமையை உருவாக்க இயலவில்லை,(இன்றும்தான்). மக்களுக்கிருந்த மனக்குறைகளை, மனக்குமுறல்களைக் கருப்பொருளாக்கி ஆட்சியாளர்களுக்கெதிராகப் போராட அவர்களால் இயலவில்லை. ஒரு புறம் இலங்கைக் கயவாகுவின் படைக்கலமாக நுழைந்த புத்தத்தைச் சாத்தனார் போன்ற அறிவாளிகள் பற்றிக் கொண்டு தொங்க, நாட்டின் நிலைமையறிந்த இளங்கோ அரசுரிமைப் போட்டிக்காக அண்ணனை எதிர்த்தவன் என்ற பழி வரும் என்று அஞ்சியோ என்னவோ துறவை மேற்கொண்டுவிட்டார். சமணத்தின் மூலமாக கலிங்கர் போன்ற அயலவர்களின் ஒற்றர்கள் மலைக் குகைகளில் இருந்துகொண்டு மக்களைத் தம் பக்கம் திரட்டுவதைத் தடுக்க இவர் போன்றோர் எதுவுமே செய்யவில்லை. நம் நாட்டு அறிவாளிகளின் இந்தப் பேடிமை  தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது.

            திராவிட இயக்கத்தின் இரண்டகத்தால் கைவிடப்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழகத் தேசியத்துக்குப் புறம்பாக இந்திய அளவில் புத்தத்தைத் தழுவ அவர்களின் சில தலைவர்கள் வழிகாட்டுவது அதன் மூலம் இன்று பொருளியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் சப்பான், சீனம் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தோதான மனநிலையை உருவாக்கவும் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிங்களப் புத்தர்களுக்கு எதிராக இங்கு உருவாக வேண்டிய மனநிலையை மழுங்கடிக்கவும் பயன்படும் என்பதை உணராத அல்லது உணர்ந்தும் சொந்த ஆதாயங்களுக்காக தங்களை நம்பிய மக்களை விலைக்கு விற்கும் செயலாகும்.[6]

            அதுபோலவே மார்க்சியம் என்ற ஒப்பற்ற கோட்பாட்டை வல்லரசுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு திரித்து ஏழைநாடுகளின் பொருளியல் வளர்ச்சியை முடமாக்கி வல்லரசுகளுக்கு என்றும் மீளா அடிமைகளாக்கி உலகமே கண்டு நடுங்கும் ஓர் அசுரனாக அமெரிக்கா வளர்ந்ததற்கு எதிர்ப்போ போட்டியோ உருவாகிவிடாமல் அரணிட்டுக் காத்தவர்கள் ஏழை நாடுகளிலுள்ள மார்க்சியர்கள்.

            வெளியிலிருந்த எந்த ஒரு சமயமோ கோட்பாடோ ஒரு நாட்டினுள் நுழையும் போது எங்கிருந்து அது வருகிறதோ அந் நாட்டின் வலிமை, அந் நாட்டில் அதற்குள்ள செல்வாக்கு, தன்னாட்டின் நிலை, அதனைப் பரப்ப வருகிறவர் யார், பரப்பலுக்காக உதவுவோர் யார், அவர்களுடைய நோக்கத்தில் அரசியல் உண்டா, அந்த அரசியலால் நம் நாட்டின் ஒட்டுமொத்த நலன்கள் பாதிக்கப்படுமா, நம் நாட்டின் எந்தச் சிக்கலைக் கையிலெடுத்துக்கொண்டு அது நுழைகிறது, அச் சிக்கலை அச் சமயம் அல்லது கோட்பாட்டின் துணையின்றி நம்மாலேயே தீர்த்துக் கொள்ள முடியாதா என்பவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அப் புதியதின் நுழைவைக் கையாளத்தக்க வழிமுறைகளை மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டியது அந் நாட்டு அறிவோர் மற்றும் ஆட்சியாளர் கடன். தன் நாட்டின் எந்த ஒரு சிக்கல் அயலிலிருந்து சமயம் அல்லது கோட்பாட்டின் நுழைவைத் தேவையாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்து அதனை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டியதும் இவ் விருசாரரின் கடமை. இவ் விரு சாரரும் இக் கடமையில் தவறியே வந்துள்ளனர் என்பதற்கு நம் நாட்டினுள் நுழைந்து மக்களை எண்ணற்ற குழுக்களாகச் சிதைத்து வைத்திருக்கும் அயல் மதங்களும் பாட்டாளியமாகத் திரிக்கப்பட்ட மார்க்சியமும் பொருளியல் கோட்பாடுகளும் அனைத்து நாட்டு அமைப்புகள் மூலமாக நுழையும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் சான்றுகளாக நின்று நம்மை அச்சுறுத்துகின்றன.

            நம் அறிவாளிகளின் இந்தத் தவற்றினால் அன்று தமிழகத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய குமுகியல் - பொருளியல் புரட்சி கைநழுவிப் போனதுடன் அன்றிலிருந்து நம் நாடு அயலவரின் பொருளியல் சுரண்டலுக்கு ஆளாகியது மட்டுமின்றி உள்நாட்டுப் பொருளியல் விசைகளின் அழிவுக்கும் காரணமானது. குதிரை கீழே தள்ளியதுமன்றி குழியும் தோண்டியது போல் தங்களது தவறுகளின் தீய விளைவுகளால் வாழ்விழந்து நின்ற வாணிகர்களையும் தொழில்வல்லோரையும் ஒடுக்கும் பணியில் இறங்கினர் அன்றைய ஆட்சியாளர்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் வாணிகர்களை, குறிப்பாகக் கடல் வாணிகர்களைப் பற்றிய குறிப்புகளைக் கழகத் தொகுப்புகளில் மறைத்தது. கழக இலக்கியத் தொகுப்பில் பிரிவு பற்றிக் கூறும் அகத்துறைப் பாடல்களில் கடல் வழிப் பிரிவு பற்றி ஒரேயொரு பாடல்தான் உள்ளதாக வ.சுப. மாணிக்கனார் தனது தமிழர் காதல் நூலில் குறிப்பிட்டுள்ளார். பண்டைத் தமிழர்களின் கடலாட்சி பற்றிய ஏதோ ஒன்றிரண்டு செய்திகளைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்தாம் தருகின்றன. இந்தியாவெங்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடல் மேல் செல்லும் மேற்சாதியினரைச் சாதி நீக்கம் செய்யும் வழக்கம் இருந்தது என்பதற்கு இராசாராம் மோகன்ராய் வரலாறே சான்று. மோகன்தாசு கரம்சந்து காந்தியும் கணிதமேதை இராமனுசமும் அத் தடையை மீறிச் சென்றவர்கள். அதுவும் வெள்ளையரின் ஆதிக்கத்தினால்தான் இயன்றது. நாம் என்றுமே மாற்றங்களை நாமாக மேற்கொள்வதில்லை. யாராவது வல்லந்தமாகத் திணித்தால் கேள்வியின்றி ஏற்றுக்கொள்கிற மழுங்கட்டைகள், சொரணையற்ற கூட்டம்; கொஞ்சம் பணம் கிடைத்தால் யார் எவர் என்று பார்க்காமல் என்ன செய்கிறோம் என்று பாராமல், அதனால் யாருக்கு என்ன கேடு வந்தாலும் தயக்கமின்றிக் களத்திலிறங்கி அடிமை செய்யப் புறப்பட்டுவிடும் அறிவுசீவிகளால் வழிகாட்டப்படுபவர்கள்.
         
            அன்று தொட்டு இந்தியா முழுவதும் கடல்தொழில் செய்வோர் ஒடுக்கப்பட்டனர்; கடற்கரை புறக்கனிக்கப்பட்டது; அது மாறி மாறி வெளி விசைகளின் ஆளுகையில் இருந்தது. இன்றும் அந் நிலை தொடர்கிறது. ஓங்கலை தாக்கிய கையோடு கடலின் அடித்தளத்திலிருந்து கரைக்கு அடித்துவரப்பட்ட சேற்றில் என்னென்ன தனிமங்கள் வந்திருக்கின்றன என்ற ஆய்வைப் பன்னாட்டு நிறுவனங்கள் கமுக்கமாக முடித்துக் கொண்டன என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழ இன்னொரு புறம் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு எதிராக மீன்பிடித் தொழிலாளர்களை தொழிற்சங்கமாக அணிசேர்க்கும் பணியை இங்கு இயங்கும் அமெரிக்கா சார்பான கூட்டமைப்பு சிறப்பாகச் செய்து முடித்துவிட்டது. ஆக இன்று இந்தியாவிலுள்ள முறை சார்ந்த அல்லது முறைசாராத தொழிலாளர்கள் அனைவரும் அமெரிக்கா, உருசியா அல்லது சீனம் சார்புடையவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். நாம் என்று நம் நாட்டு மக்களின் சிக்கல்களுக்கு நாமே தீர்வு காணவேண்டும் என்பதை உணரப்போகிறோமோ தெரியவில்லை.

            இது போன்ற ர் அரசியல் பின்னணியில் தொகுக்கப்பட்ட கழக இலக்கியங்களில்  கடல் சார்ந்த, கடற்கோள் குறித்த, குமரிக் கண்டம் பற்றிய செய்திகள் அல்லது குமரிக் கண்டம் என்ற பெயரைத் தேடுவது தவறு என்பதை உணர வேண்டும்.  



அடுத்து புவியியங்கியல் புலி பஃறுளியாற்றை ஒரு பிடி பிடித்து ஒரு கடி கடித்துள்ளார். குமரி மாவட்டத்தாருக்கு ஓர் ஆவல், குமரிக் கண்டத்தை குமரி மாவட்டத்துள் அடக்கிவிட வேண்டுமென்று. இது, இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கோடாகிய திருவிதாங்கூர் சமத்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் அப்பகுதியும் வேறு சில பகுதிகளும் “தாய்”(மாற்றாந்தாய் என்று படிக்க)த் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்ற தவிப்பு இருந்த காலத்தின் தொடர் விளைவாகும். ஆனால் அப்போதும் கூட இந்த நிலப்பரப்புக்கு ஒரு மாவட்டப் பெயர் வைப்பது பற்றி அப் போராளிகளில் எவரும் எண்ணவில்லை, மத்திய வாலிபர் சங்கம், நாஞ்சில் தமிழர் பேரவை, அகில திருவிதாங்கூர் தமிழர் பேராயம் திருவிதாங்கூர் தமிழ்நாடு பேராயம் என்ற பெயர்களைத்தான் ஒன்றன் பின் ஒன்றாக வைத்தனர். தி.க., தி.மு.க.வினர்தாம் அந்த வட்டாரக் கிளைக்கு நாஞ்சில் என்ற அடைமொழியை வழங்கினர். 1956 அக்டோபர் 31ஆம் நாள் இரவு வரை புதிய மாவட்டத்தின் பெயர் நாஞ்சில் மாவட்டம் என்று இருக்குமென்றே பலர் எதிர்பார்த்தனர். அடுத்த நாள் விடிந்த பின்தான் குமரி மாவட்டம் என்ற பெயரை முதன்முதலாக அறிந்தார்கள்.

            குமரி அம்மன் கோயிலைக் கூட அன்றைய குமரி மாவட்ட மக்கள் அவ்வளவாக நாடுவதில்லை. மேற்கிலிருந்து மலையாளிகள்தாம், குறிப்பாக வெள்ளுவா(பௌர்ணமி) அன்று மொய்ப்பார்கள். அதனால்தான் அந்தப் பெயர் மக்கள் கவனத்துக்கு வரவில்லை. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவராகிய காமராசர்தான் அப்பெயரை முன்வைத்ததாகக் கூறினர். இப்போது குமரி மாவட்டம் என்ற பெயர் நிலைத்ததும் ஆய்வாளர் அனைவரும் குமரி மாவட்டத்தினுள் குமரிக் கண்டத்தைக் கண்டுகொண்டனர். குமரியின் தமிழ் மரபுகள் என்று ஒரு நூலை புலவர் வே.செல்லம் அவர்களும் பண்டிதர் எசு.பத்மநாபன் அவர்கள் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதிவிட்டனர். ஆனால் இதற்காக அவர்களை ஒரேயடியாகக் குற்றம் சொல்ல முடியாது. கோட்டாறு என்று பழைய பெயர் கொண்ட பழையாற்றை பறளியாறு என்று குறிப்பிடும் ஒரு கல்வெட்டை வித்துவான் செ. சதாசிவம் பிள்ளை சேரநாடும் செந்தமிழும் என்ற தன் நூலில் சுட்டுகிறார். பெருஞ்சாணி அணையைத் தன் குறுக்கே கொண்டுள்ள பறளியாற்றிலிருந்து பாண்டியன் அணை எனும் ஓர் அணைக்கட்டின் மேலிருந்து தோண்டப்பட்ட வாய்க்கால் வழியாக கோட்டாற்றுக்கு நீர் வருவதை வைத்து அந்த வாய்க்காலைப் பறளியாறு என்றும் அதன் கோட்டாறு அதன் தொடர்ச்சி என்றும் தவறாக எண்ணி இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதைக் கள ஆய்வு மூலம் கண்டறிந்த நண்பர் ம.எட்வின் பிரகாசு அவர்கள் எழுதிய கோட்டாறு பஃறுளியாறான கதை என்ற கட்டுரை புதிய பார்வை இதழில் வெளிவந்துள்ளது. அதை பின்னிணைப்பு - 2 ஆகச் சேர்த்திருக்கிறோம். பறளியாறு என்ற பெயரில் சேலம் மாவட்டத்திலும் கேரளத்திலும் ஆறுகள் இருப்பதால் இவை அனைத்தும் கடல்கொண்ட நிலத்திலிருந்து கரையேறி பல்வேறிடங்களுக்குப் பெயர்ந்த மக்கள்  தாங்கள் புதிதாகக் குடியேறிய இடங்களில் ஓடிய ஆறுகளுக்கு முழுகிய தங்கள் நிலத்தில் ஓடிய ஆறுகளின் பெயர்களைச் சூட்டியதான ஒரு நிகழ்வேயன்றி வேறில்லை.

            ஆக புவியியங்கியல் புலி அடுத்தவர் எழுதிய நூல்களிலிருந்து கருத்துகளைப் பெயர்த்துத் தொகுத்துத் தந்திருக்கிறாரே ஒழிய புவியியங்கியல் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்து ஒரு சொல் கூட பக்கம் 31 வரை கூறவில்லை, “இப்பகுதியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொண்டால் இதுபற்றி மேலும் அறியலாம்” என்று கூறியிருப்பதைத் தவிர. இதைச் சொல்ல இவர் வேண்டுமா என்ன?


[1] திருவாளர்கள் சு.கி. செயகரன் ′′முனைவர் ′′ கண்மணி போன்றோரை வழிகாட்டிகளாகக் கொள்ளாமல் ஓரு சொல்லுக்கு அது கையாளப்பட்டிருக்கும் இடத்துக்கேற்ப அதற்கு அகராதியில் தரப்பட்டுள்ள பல பொருள்களில் பொருத்தமானதை எப்படி முடிவு செய்வது என்பதற்காக இவ்வளவு விரிவாகத் தந்துள்ளோம்.
[2] கோவிலடியில் 1924 ஆம் ஆண்டு வெள்ளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோருக்குக் கூலி வழங்கத்தான் உடனடியாக ஓர் உரூபாய்த் தாள்களை இந்திய அரசே அச்சிட்டு வழங்கியதாம். இந்தத் தாள்பணம் தவிர வேறெந்த நாணயத்தையும் இந்திய அரசு வெளியிடவில்லை. இந்திய ஏம(ரிசர்வு) வங்கிதான் அப் பணியைச் செய்யும். 1924 உடைப்புக்குப் பின்னர் இது போன்ற வெள்ளங்களைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளைக் கூறப் பணிக்கப்பட்ட சி.பி. இராமசாமி ஐயரின் கருத்தின்படிதான் மேட்டூர் அணையும் கல்லணைக் கால்வாயும் அமைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
[3] திரு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரை: அடைக்கலக் காதை, பொழிப்புரை: குமரியம் பெருந்துறை கொள்கையில் படிந்து குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி, விளக்கவுரை: குமரி யாறு, கடலுமாம்; தொடியோள் பௌவம் என்றாராதலின்(சிலம். க - 1), பார்க்க, சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும், திருநெல்வேலித் தென்னிந்திய நூற்பதிப்புக் கழக வெளியீடு எண் 1805,பக். 353 54.
[4] பார்க்க TAMILS EIGHTEEN HUNDRED YEARS AGO, V.Kanakasabhai,  கனகசபை,வி., திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 1966, பக். 8 - 9
[5] இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு, அதுவும் சோழநாட்டுக்கு உணவா என்று மலைப்போர் ஈழத்துணவும் காழகத்தாக்கமும் என்ற பட்டினப்பாலை வரியை நினைவு கூர்க.
[6] இத்  “தலைவர்”கள் பின்னர் இம் முடிவை மாற்றிக்கொண்டனர்.

தமிழால் வாழ்வோர்.


4.தமிழால் வாழ்வோர்.

            நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வாளர்களின் பின்னணியையும் நாம் நோக்க வேண்டும். படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறனாய்வுக்கு உட்படுத்துவது சரியான ஆய்வு நெறியல்ல என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால் ஆய்வாளர் என்ற வகையிலும் துறை குறித்த அவரது பணி மற்றும் பாணி என்ற வகையிலும் ஒருவரது இயல்புகளை எடை போடுவதில் தவறில்லை என்று நான்  கருதுகிறேன்.

            க.ப.அறவாணன், நான் முன்பு குறிப்பிட்டது போல, தமிழில் பட்டங்கள் பெற்று அவற்றுக்கு வேலைவாய்ப்புகள் இன்மையால் மதிப்பில்லாத ஒரு சூழலில் பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தில் இணைந்திருந்தவர். பின்னர் ம.கோ.இராமச்சந்திரன் ஏற்படுத்தித் தந்த வாய்ப்பில் கல்லூரியில் விரிவுரையாளராகி துணைவியாருடன் ஆப்பிரிக்காவிலுள்ள செனகலுக்குச் சென்று பணியாற்றிவிட்டுத் திரும்பியவர். அந்த நேரத்தில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழர்களின் பிறந்தகம் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு பேசவந்தவர் செனகலில் தான் பணியாற்றியதைப் பற்றியும் அங்குள்ள மக்களுக்கும் தமிழர்களுக்கும் சில பழக்க வழக்கங்களில் உள்ள சில ஒற்றுமைகளை(இருவரும் சமையலில் புளியைச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் அவற்றில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது) சொல்லிவிட்டு  தான் எடுத்துக்கொண்ட பொருள் பற்றி எதுவுமே பேசாது உரையை முடித்துக்  கொண்டார். ஆனால் கையில் ஒரு குறிப்புச் சீட்டுக் கற்றையை வைத்துக்கொண்டு மேலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துச் சொருகியவாறே பேசிய ஒயில் இருக்குறதே அதை விளக்குவதற்கு எனக்குத் திறன் போதாது. இவரைப் போல் ஒயில் காட்டிய ஒரு பாடகியின் நிகழ்ச்சியை எடுத்துரைத்த பெர்னாட்சா போன்றவர்களால்தான் முடியும்.   
                                                                     
            அதன் பின் ஒரு முறை மதுரை இறையியல் கல்லூரியில் கி.பி. 8 - ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ள சொல்வழக்குகள் தொல்காப்பியத்தில் இருப்பதால் தொல்காப்பியம் அதற்குப் பின்னர்தான் தோன்றியிருக்க வேண்டும் என்ற அறிமுகக் குறிப்போடு ஒரு கருத்தரங்கு நடத்தினர். அதில் பெரீய்ய்ய்ய்ய்ய தமிழ் அறிஞர்களெல்லாம் கலந்துகொண்டனர். இந்தக் குறிப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை; ஏனென்றால் அங்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் மார்க்சியர்கள். அவர்கள் பங்குகொண்ட ஓர் அரங்கில் தொல்காப்பியம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியது என்று முடிவு செய்தால் அவர்களுக்குப் பெருமைதானே!

            ஆனால் க.ப.அறவாணன் இதையெல்லாம் தாண்டியவர். அம்மணர்கள்(மார்வாரிகள் என்று படிக்க) வந்த பின்தான் தமிழர்கள் நாகரிகமே கற்றனர் என்று எல்லார் மண்டையிலும் ஆணியடித்துவிட்டுத்தான் ஓய்வதாக முடிவெடுத்தவர். இது நமக்கு அப்போதெல்லாம் தெரியாது. தமிழ்ச் சமூக வரலாறு குறித்த அவரது ′படைப்பு′ வெளிவந்த பிற்பாடுதானே தெரியும்.

            இவரது தடத்திலேயே நடைபொடும் இன்னொரு ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன்(இருவரில் எவர் முதலில் ′நடையை′த் தொடங்கினார் என்பது தெரியவில்லை). அவரும் தொல்காப்பியம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தோன்றியிருக்கக் கூடும் என்று கருதுகிறார்; ஏனென்றால் அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட எட்டாம் நூற்றாண்டு வரையுள்ள கல்வெட்டுகளில் ஒற்றெழுத்துகளில் புள்ளி இல்லையாம்.

            இவர் போன்றோரின் ′ஆய்வுநெறி′யை ஒரு கற்பனை எடுத்துக்காட்டு மூலமாக பாவலர் விசுவதிலகம் ஒரு முறை விளக்கினார். ஒரு தவளையின் நானகு கால்களையும் துண்டித்துவிட்டு அதனைத் துள்ளச் சொன்னார்களாம். அது துள்ளவில்லையாம். ஆய்வு முடிவு தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் அதற்குக் காது கேட்காது!

            ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த, தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய இந்த ஆய்வு நூலுக்கு எட்டிய திசைகளிருந்தெல்லாம் பாராட்டு மழை. ஆனானப்பட்ட தென்மொழியில் கூட ஒரு பாராட்டுக் கட்டுரை. பண்டைத் தமிழகத்தில் ஆண் - பெண் வேறுபாடின்றி எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற ஐராவதத்தின் ′சான்றிதழி′ல் அனைவரும் குளிர்ந்துபோனார்கள். கடைசியில் மூட்டையுள்ளிருந்த பூனையை அவிழ்த்து வெளியேவிட்டவர் அசோகமித்திரன், தினமணி கட்டுரையொன்றில். தொல்காப்பியம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதை நிறுவ மகாதேவன் மேற்கொண்டுள்ள ′அறிவியல் அணுகலு′க்காக அவரை மிகவும் பாராட்டியிருந்தார் அவர்.

            திரு.ஐராவதம் அவர்களுக்கும் அசோகமித்திரன் அவர்களுக்கும் ′அறிவியல் அணுகல்′ என்ற பெயருடன் எதையாவது யாராவது கூறிவிட்டாலே திகைத்துத் தடுமாறிப் போகும் ′தமிழறிஞர்களு′க்கும் சிலருக்காவது தெரிந்திருக்கத் தக்க ஓர் உண்மையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆவணப் பதிவுக்காக கையால் ஆவணம் எழுதும் பழைய தலைமுறை ஆவண எழுத்தர்கள் இன்று வரை புள்ளியின்றித்தான் எழுதுகிறார்கள். ஐராவதத்தின் ′அறிவியல் அணுகலி′ன் படி தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் இனிமேல்தான் எழுத வேண்டும்.

            நம்மிடையில் அணுக் கோட்பாடு இருந்தும் தமிழ் மருத்துவர்கள் இன்னும் ஐம்பூதக் கோட்பாட்டையே கட்டியழுகிறார்கள்; நாட்காட்டியில் ஆண்டு - மாதம் - நாள் முறையை ஐந்திறங்களின் (பஞ்சாங்கங்களின்)  மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தும் வெள்ளையர் வந்து அதைத் திணிக்கும் வரை நாம் மாதம் வளர்பிறை தேய்பிறை - பக்கம்(திதி) - நாள்மீன்(நட்சத்திரம்) என்று மட்டும்தானே நாள் குறித்துக் கொண்டிருந்தோம்; அதுதான் இதிலும் நடந்திருக்கிறது. தொல்காப்பியர் எதை வேண்டுமானாலும் எழுதி வைத்துவிட்டுப் போகலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த ஏதோவொரு அதிகார அமைப்பின் நெருக்குதல் தேவைப்படுகிறது.

            பெரியார் எழுத்துமுறையை எடுத்துக் கொள்வோமே, ம.கோ.இராமச்சந்திரனின் ஆணையின்றி அது நடைமுறைக்கு வந்திருக்குமா? ′பகுத்தறிவுப் பகலவனி′டம் பாடம் கேட்ட தமிழ் ஈனத் தலைவர் அந்தப் பகலவன் வகுத்த எழுத்துமுறை நடைமுறைக்கு வருவதில் செய்த தடங்கல்கள் எளிதில் மறக்கத்தக்கனவா?

            . பெரியார் மீதோ தமிழ் மீதோ ஏற்பட்ட மாறாத பற்றினால் ம.கோ.இரா. அந்த எழுத்துமுறையைப் புகுத்தவில்லை. தனக்கு அன்று ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் உத்தியே அந் நடவடிக்கை.

            புத்தர் தொடங்கி அண்ணாத்துரை வரை அவர்களின் பின்னர்களின் அரசியலுக்குத் தேவைப்படவில்லை என்றால் அவர்களின் பெயர்கள் அப் பின்னர்களாலேயே இருட்டடிக்கபட்டிருக்கும்.
           
1956ஆம் ஆண்டு மாத்திரி அளவுமுறை(Metric System) ஒரு சட்டத்தின் துணையோடு இந்தியாவில் புகுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள், அதாவது 51 ஆண்டுகள் ஆன பின்னும் இன்றும் தமிழக அரசும் அரசுசார் நிறுவனங்களும் வெளியிடும் ஆவணங்களிலும் ஆணைகளிலும் கூட அடியிலான அளவுகள் குறிக்கப்படுவதைக் காணலாம். 1956ஆம் ஆண்டுச் சட்டத்தில் மாத்திரி முறை தவிர பிற அளவுகளைப் பயன்படுத்துவது குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

            மேற்கூறிய இறையியல் கல்லூரி அரங்கில் மேற்கொண்ட  கலந்துரையில் க.ப.அறவாணனோ பிற ′அறிஞர்களோ′ பெரும் ஆர்வம் காட்டவில்லை. நான்தான் அந்த இடத்துக்கே பொருத்தமற்றவனாக அவர்கள் முன்வைத்திருந்த குறிப்பை எதிர்த்து வாதாடினேன்.

            மதுரை இறையியல் கல்லூரியில் தியாபிலசு அப்பாவு என்னும் மதகுரு(பாதிரி) அப்போது வெளிவந்திருந்த பதினாறு வயதினிலே என்ற திரைப்படத்தில் ஒரு கதைமாந்தனின் பெயராகப் பரவலாக அறியப்பட்ட பறட்டை என்ற பெயருடன் தான் ஒரு பொதுமைக் கொள்கையாளர் போன்று காட்டிக்கொண்டு ஏசுநாதரும் ஒரு பொதுமைக் கோட்பாட்டாளர்தான் என மதப் பரப்பலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் பொறுப்பில்தான் இந்த நிகழ்ச்சி நடந்தது.

            என்னுடைய கணிப்பின்படி வழக்கமாக நடைபெறுவது போல் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பணம் கொடுத்த நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சியை நடத்தி கலந்துகொண்ட ′அறிஞர்கள்′ ′எய்திய′ முடிவைப் பதிவு செய்வது அவரது நோக்கமாக இருக்க வேண்டும்.

            இவ்வாறு பணம் தருபவர்கள் விரும்புவது போல் கருத்துரையாற்றி, அங்கு கிடைக்கும் பணத்தைப் பெறுவதற்கு செலவுச் சீட்டில் ஒட்டிக் கையெழுத்திடுவதற்கென்றே பையில் வருவாய் வில்லைகளை(Revenue Stamps)ச் சுமந்து திரியும் ஒரு பெரும் அறிஞர் திருக்கூட்டம் தமிழ்நாட்டில் இருப்பதை அப்போது புரிந்துகொண்டேன்.

            இங்கு க.ப.அறவாணனைப் பொறுத்தவரை சிறப்புச் செய்தி என்னவென்றால் அந்த அரங்கத்தில் பிறர் எல்லோரையும் விட மிகப் பழகியவராக நடந்துகொண்டதுடன் தனக்குத் தொடர்வண்டியில் முதல் வகுப்பில் அன்றே செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டதில் அவரிடம் வெளிப்பட்ட பெரும் அதிகார மிடுக்குதான். அப்போது அவர் துணைவேந்தராகவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

            பாவாணரின் பின்னர்களில் பலர் பதவி கிடைத்ததும் தமக்கும் பாவாணருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் க.ப.அறவாணனின் அணுகல் தனித்தன்மையானது. ஒரே நேரத்தில் பாவாணர் நேயர்கள், ஆட்சியாளரகள், புரவலர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினர்க்கும் மகிழ்வூட்டி ஆதாயமும் பெயரும் புகழும் சேர்க்கும் கலையில் அவர்  வித்தகர்.

            அவரும் துணைவேந்தர் பதவிக்கு ஆசைப்பட்டது இயல்பே. எனவே நாம் தொடக்கத்தில் கூறியது போல் சில விலைகளைக் கொடுப்பது இயல்புதான். இந்தப் பின்னணியில் அவருடைய ஒர் ஆக்கம் சு.சி.செயகரனுக்குப் பயன்பட்டதில் வியப்பில்லை.

            உரையாசிரியர்கள் குறிப்பிடும் 700 காவதம் என்ற தொலைவை 7000 மைல்கள் என்றும் 770 கி.‌மீ. என்றும் சிலரது நூல்களைச் சான்று காட்டிக் கூ‌றுகிறார் செயகரன். திட்டவட்டமான தொலைவு அவருக்குத் தெரியவில்லை. அபிதான சிந்தாமணியில் கணிதவகை என்ற சொல்லின் கீழ் பூப்பிரமாணம் என்ற தலைப்பில் உள்ளதை இங்கு தருகிறோம்.

            சாண் 2 கொண்டது                -               1முழம் (1½அடி.)
            முழம் 12 கொண்டது         -     1 சிறுகோல் (18அடி.)
            சிறுகோல் 4 கொண்டது    -     1 கோல் (72அடி.)
            கோல் 55 கொண்டது             -               1 கூப்பிடு (3960அடி.)
            கூப்பிடு 4 கொண்டது      -     1 காதம் (15840 அ.)
                                                        =              15840/5280 = (ஒரு மைல்) = 3 மைல்கள்
            அபிதானசிந்தாமணியில் ஒரு கூப்பிடு என்பது 56 கோல் கொண்டது என்றுள்ளது. நிட்டலளவையில் நமது மரபுமுறையில்  11 அடிகள் ஒர் அடிப்படை அலகு என்பதால் அதனை 55 என்று நான் கொண்டுள்ளேன்.

            இந்தக் கணிப்பைத் தொடர்ந்து செல்வோம்.

            ஒலியின் விரைவு நொடிக்கு அதாவது செகண்டுக்கு 1100 அடிகள். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் (மினிட்டுகள்) எனவே ஒலி ஒரு நாழிகையில் செல்லும் தொலைவு 1100X24X60=1584000 அடிகள்=300 மைல்கள். இப்படிப் பார்த்தால், ஒரு காதம் என்பது ஒலி ஒரு நாழிகையில் செல்லும் தொலைவில் நூற்றில் ஒரு பாகம் என்பது தெளிவாகிறது. கூப்பிடு தெலைவு, காதம் (காதுகாதம்) போன்ற சொற்கள் இத் தொலைவுகள் ஒலியுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகின்றன. சென்ற தலைமுறை மக்கள் அண்மையைக் குறிப்பிட கூப்பிடு தூரம் என்ற ‌சொற்றொடரைப் பயன்படுத்தினர். இவை தவிர குமரி மாவட்டத்தில் நாழிகை தூரம் என்ற ஒரு சொல்லையும் கையாண்டனர்.

            காதம் என்ற இந்த அளவு நம் முன்னோர்களின் அறிவியல் அணுகல் மற்றும் வளர்ச்சி பற்றிய சிறப்பு மிக்க ஓர் தடயமாகும்.[1]

            ஒரு காதம் என்பது 10 மைல் என்றொரு கருத்து உள்ளது. அதை வைத்துக் கொண்டு, 700 காவதம் என்பது 700X10X1.6=11200கி‌.மீ. என்று திரு. செயகரன் கூறுகிறார். ஆனால் நாம் மேலே தந்துள்ள கணக்குப்படி அது 700X3X1.61= 3381 கி.மீ. தான். இந்தத் தொலைவு குமரி முனைக்கும்  (புவித்) தென் முனைக்கும் இடையிலுள்ள தொலைவாக அவ‌ர் குறிப்பிட‌டுள்ள  8500 கி‌.மீ.யில் பாதி கூட இல்லை. எனவே உரையாசிரியர்கள் விளக்கத்தில் ‌மிகை என்ற பேச்சுக்கே இடமில்லை. அக்கக் கோடுகளுக்கிடையிலுள்ள தொலைவு ஏறக்குறைய 110.5 கி.மீ. வீதம் குமரி முனையிலிருந்து (தோராயமாக அக்கம் 8° 4′)  3381/110.5  =30° 35′ 50.
           
            குமரிமுனைக்குத் தெற்கே 8° 4′ + 23° 27′=31° 31′ இல் சுறவ(மகர)க்கோடு இருக்கிறது.                                          

            எனவே உரையாசிரியர் குறிப்பிடும் முழுகிய நிலப்பரப்பு ஏறக்குறைய சுறவக் கோடு வரை இருந்துள்ளது. இங்கே பகுத்தறிவுக்கோ, புவியியங்கியல், புவியியல் ஆகிய எவற்றுக்குமோ பொருந்தாத எதுவுமே இல்லை.
           
            தமிழ்விடு தூது பற்றிக் குறிப்பிட்டு, குமரிக் கண்டம் என்ற பெயர் நூலிலோ, அங்குப் புலவர் எழுதிய உரையிலோ இடம்பெறவில்லை என்கிறார் திருவானர் சு.கி.செயகரன். ஆக இங்கும் பெயர் பற்றி நம் இந்த அதிகாரத் தொடக்கத்தில் எழுப்பிய அதே கேள்விதான்.

            செங்கோன் தரைச் செலவு நூலைப் போலி நூல் என்று மறுப்பதற்கு, விசயவேலவன் என்பவர், அந் நூல் எழுதப்பட்டதாகக் கூறும் தாப்புப் புலிப்பா என்ற பாவகை கழகத் தொகுப்பில் இல்லை என்கிறாராம். அதைத் தூக்கி நம் முன் வீசுகிறார் திருவானர் சு.கி.செயகரன். கழக இலக்கியத்தில் மிகுதியான பாக்களும் ஆசிரியப் பாக்களே. செய்திகளைத் தடங்கலின்றி, பெரும் யாப்புக் கட்டுப்பாடுகள் இன்றி பாடத்தக்கது ஆசிரியப்பா‌‌வே. இன்று புதுப்பாப் புனைவைத் தொடங்கி வைத்தவர் பாரதி என்றும் அதனை வளர்த்தவர்கள் இன்னின்னாரென்றும் ஆரவாரிக்கின்றனர் சி‌லர்.  கழக இலக்கியத் தொகுப்பிலுள்ள பாக்களில், வெண்பா போன்ற இலக்கணக் கட்டுகளுள்ள பாக்கள் எடுத்துக்காட்டுக்கென்று சொல்லும் அளவினவே. இன்றைய புதுப்பாவுக்கு முன்னோடியான ஆசிரியப்பாவிலேயே ஏறக்குறைய அனைத்துக் கழகப் பாடல்களும் அமைந்துள்ளன. இருண்ட இடைக் காலத்தின் இறுதியில் சிற்றரசர்கள், பாளையக்காரர்களின் காலடியில் கிடந்த வயிறு காய்ந்த புலவர்களின் இயலாமைகளால் மங்கிக் கிடந்த அந்தப் பாவகையை இனங்கண்டு புதுப்பாவென்று பாரதி முன்வைத்தார். அவ்வளவுதான்.

            தொகுப்புகளாகிய சங்க இலக்கியங்களே பழந்தமிழ் இலக்கியங்களின் எல்லை என்று நம் பொதுமைத் தோழர்கள் கூறலாம். ஆனால் பகுத்தறிவும் நடுநிலை நோக்கும் அற்ற, புலனறிந்ததை முழுமையாகப் பகுத்தாய வேண்டும் என்றும் கருதாத அந்த முற்போக்கர்களின் வழியில் செங்கோன் தரைச் செலவு நூல் போலி என்று ஒதுக்கிவிடுவதற்கில்லை. அத்துடன் வையாபுரியார் இந் நூலை எதிர்த்துள்ளனர் என்று திருவானர் சு.கி. செயகரன் தரும் செய்தியே அந்த நூலை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக நாம் கொள்ளலாம்.

            நேர்மையான, விழிப்புணர்வும் செயலூக்கமும் உள்ள ஆய்வாளர்களின் செயல் எப்படி  இருந்திருக்கும்? இப்படி ஒரு பாவகை இருந்ததாக‌க் கருதி அதிலுள்ள பாடல்களில் சிலவற்றை ஒருவர் தான் கண்டெடுத்ததாகப் பதிப்பித்துள்ளதை வைத்து முன்னாளில் இவ்வாறு ஒரு பாவகை இருந்தது என்பதையும் அதன் இலக்கணம் யாதென்பதையும் ஆய்ந்து வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

            இந்த நூல் வெளிவந்த பிறகு வாழ்ந்துள்ளனரே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்ல, பழமும் தின்று கொட்டையும் போட்ட அறிஞர்கள், இவர்களில் ஒருவர் கூட  இத்திசையில் செயற்படாமல் இருந்திருக்கிறார்களே என்பது நம் வருத்தம்.

            வையாபுரியாரைப் பற்றிய  நம் திறங்கூறல் எம் கருத்துகளோடு உடன்பாடு கொண்டவர்களைக் கூட சிறிது நெளிய வைத்திருக்கும். அதனால் சில சூழ்‌நிலைகளை வெளியிடுவது இன்றியமையாதது என்று கருதுகிறோம். கீழ்ச்சாதியினரின் மொழியான தமிழை உயர்த்திப் பி‌டிப்பவர்களுக்கு எதிராக மேலடுக்கிலிருந்த பார்ப்பனர்களின் தாய்மொழி என்று நம்பப்பட்ட சமற்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பதில் மகிழ்ச்சியடைவோரில் தலைமை இடம் பிடிக்கத் தக்க அவர் நுண்ணறிவும் விரிந்த படிப்பும் உள்ளவர். நேர்மைதான் அவரிடம் இல்லை. ஒரு கை நிறைய மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு, இதில் இத்தனை மண் பரல்கள் உள்ளன, வேண்டுமானால் நீ எண்ணிப் பார்த்துக் கொள் என்ற வகையில் அவரது அணுகல் இரு‌ந்தது. இந்தச் சொல் இந்த நூற்றாண்டில்தான் வழக்கு‌க்கு வந்தது என்று ஒங்கி ஓர் அடி அடித்து விடுவார். இந்த அடாவடித்தன‌‌த்தைதான் நம் பொதுமைக் தோழர்களும் பிறரும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முறை என்று உச்சியில் வைத்துக் கூத்தாடுவர்.

            ஆனால் சூழ்நிலை அத்தகையதாகவே உள்ளது. தமிழ்ப் புலவர்கள், பண்டிதர்கள் பேராசிரியர்கள் என்போர் இந்த நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதவாறு கண்கொத்திப் பாம்பு போல் கருத்தாகக் கண்காணித்து வருகிறார்கள். அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர் என்ற தொல்காப்பிய வரிகளுக்கு ′அடிமையர்க்கும் கைவினையாளருக்கும்  ஐந்திணை ஒழுக்கம் பொருந்தாது, அதாவது அவர்கள் ஒழுக்கம் குன்றிவர்கள்′ என்ற விளக்கத்துடன் நான் எழுதி தினமணி இதழில் வந்த என் மடலைப் படித்துவிட்டு, பேரா. வளனரசு அவர்கள் சாலையில் செல்லும் போது மறித்து, இந்தப் பொருள்கூறலை நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள் என்று சிறிது ஆத்திரத்துடன் கேட்டார். இதற்கு யாரிடம் கேட்க வேண்டும்? அதுதான் நூற்பாவே இருக்கிறதே என்றேன். உங்களுடன் பிறகு பேசுகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார். ஆக முன்பு கூறப்பட்டவற்றுக்கு மாறாகப் பொருள் கொள்வது இவர்கள் பார்வையில் பெருங்குற்றம்.

            ஒரு மொழிக்கு அகராதி உருவாக்க வேண்டுமாயின் அம்‌ மொழியிலுள்ள அனைத்து வகை எழுத்தாக்கங்கள், கல் வெட்டுகள், ஓலைச் சுவடிகள், நாட்டார் வழக்காறுகள், மக்களின் அன்றாடச் சொல் வழக்குகள் என்று எத்தனையோ வேண்டும். இவை அனைத்தையும் திரட்டி சொல்லடைவு, பொருளடைவு என்று அடைவு செய்ய வேண்டும். இந்தப் பணியின் அடிப்படையில் அகராதி மட்டுமல்ல, கணினி வழியான மொழியியல் பணிகளையும் மேற்கொள்ள முடியும். இது ஒரு பெரும் பணி. ஆட்சியாளர்கள் உரிய பணம் ஒதுக்கினால் பல பத்தாண்டுகள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் ஆக்கப் பணி. ஆனால் இதைச் செய்ய அரசும் ஆயத்தமாயில்லை, தமிழால் பிழைப்போருக்கும் தோன்றவில்லை. இந்த இரண்டு வகைப்பாட்டிலும் சேராத ஒருவரின் செயற்பாட்டை அரசுப் பொறியும் தமிழ்ப் பேராசிரியர்களும் எவ்வாறு முடக்கி‌னார்கள், அழித் தொழித்தார்கள் என்பதைப் பார்ப்போம்.

            நெல்லையைச் சேர்ந்த இ.மு.சுப்பிரமணிய(பிள்ளை)ர் என்பவர் 1934 இல் மாநில தமிழச் சங்கம் என்றொரு அமைப்பை உருவாக்கினார். அவர் ஒரு தமிழ் மருத்துவரும் கணியருமாவார். திருக்கணித ஐந்திரம்(பங்சாங்கம்) ஒன்றைத் தூய தமிழில் ‌பதிப்பித்தும் வந்தார்.

            அவ்வப்போதைய ஆட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அரசிடமிருந்து பொருளுதவி பெற்று மொழி மாநாடுகள் நடத்தி, ஆட்சிச் சொல் அகராதி போன்றவற்றை வெளியிட்டார். 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறி‌ஞர்களைப் பற்றி, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் என்ற தலைப்பில் 20 மடலங்கள் எழுதத் திட்டமிட்டு 10 மடலங்கள் வெளி‌யிட்டிருந்தார். இந் நிலையில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. அக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு இச் சங்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவா எழு‌ந்தது. எனவே இ.மு.சு.அவர்கள் மீது சங்கத்தின் அரசுசார் தலைவரான மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் முறையீடு செய்தனர். உசாவலில் எதுவும் நகரவில்லை. பின்னர் இவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அந்த மூத்த தமிழறிஞரை அடித்து ‌உதைத்து அவர் திரட்டி வைத்திருந்த நூல்கள், எழுதி வைத்திருந்த படைப்புகள், கணியம், மருத்துவம் சார்ந்த அவரது சொந்த நூல்கள், சங்க விழாக்களுக்கு வரும் விருந்தினருக்குச் சமைக்கவும் அவர்கள் குளிக்க வெந்நீர் வைக்கவும் பயன்படுத்தவுமான பாத்திரம் பண்டங்கள், நாற்காலி, மேசை முதலியவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். நூல்களை, பாளையங்கோட்டைப் பேருந்து நிலையத்திலிருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான 1ஆம் எண் கடையில் கொட்டிவைத்தனர். பாத்திரங்கள், பண்டங்கள், தளவாட‌ங்களைக் புதிய செயலாளரான தூ.அய்யாசாமி தன் வீட்டில் வைத்துக் கொண்டார்.

            இதில் நேரடியான அரசியல் செல்வாக்கைச் செலுத்தியவர்களில் தி.மு.க. பெருந்தலைகளான அறிவுடை நம்பி, இரத்தினவேல் பாண்டியன், முன்னாள் சட்டமன்றத் தலைவரான செல்லப்பாண்டியன்  ஆகியோர் முதன்மையானவர்கள். துணைநின்றோர் அல்லது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர்கள் போராசிரியர்கள் ப.வளனரசு, தே. லூர்து, பாண்டியன் தனசிங், இன்னாசி, புலவர் ஆபிரகாம் அருளப்பர், தமிழிலும் சிவனிய மெய்யியலிலும் வல்லுநரான சி.சு.மணி போன்றோர். இவர்களின் செயலில் அரசியல் கட்சி கழப்புண்ர்ச்சியுடன் சாதியுணர்வுகளும் கலந்திருந்தன.

            இந்த நிகழ்ச்சியால் மனமுடைந்து போன இ.மு.சு. அவர்கள் விரைவில் மறைந்து போனார். ‌தமிழையும் தமிழ் சார்ந்த அனைத்தையும் பழிப்பவரும் வெறுப்பவருமான புதிய செயலாளராகிய வழக்கறிஞர் தூ.அய்யாசாமி, சங்கத்தின் தமிழ்ப் பணி எதிலும் ஈடுபடாமல் இ.மு.சு. விட்டுப் போயிருந்த பணத்தை வங்கியில் போட்டு வட்டி சேர்த்து, தான் ஊழல் செய்யாமல் பணத்தைப் பெருக்கியிருப்பதாகப் பெருமையடித்துக்கொண்டிருந்தார்.

            வழக்கறிஞரான இ.மு.சு.வின் மகன், தன் தந்தையின் பொறுப்பிருந்த சங்கத்தைக் பறித்துக்கொண்டவர்கள் எந்தப் பணியும் செய்யாமல் அதனை முடக்கி வைத்திருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி ஓர் அறிவிக்கையை விடுத்தார். இதை எதிர்கொள்வதற்காக அரக்கப் பரக்க சில தமிழ்ப் பேராசிரியரின் துணையுடன் நற்றிணை, குறுந்தொகை போன்ற ஓரிரு நூற்களின் சாரத்தை 20 அல்லது 30 பக்கங்களில் எழுதி ‌வெளியிட்டனர். திருவாசகம் மூலமும் உரையும் என்றொரு நூலையும் வெளியிட்டனர். அடுத்த கட்ட நூல் வெளியீட்டுக்காகத் திட்டமிட்ட போது புலவர் ஆறுமுகம் என்பவர் உரையுடன் விவேக சிந்தாமணியையும் பேரா. தே.லூர்து அவர்களின் பரிந்துரையின் மேல் எனது படைப்பான தமிழகச் சமூக வரலாறு - வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற நூலையும் பேரா.வே.மாணிக்கம் அவர்களின் கட்டபொம்மன் கதைப்பாடல் என்ற நூலையும் வெளியிட்டனர்.

            இந்‌தக் காலகட்டத்தில் சங்கத்தின் மேற்கூறிய வரலாற்றை அறிந்த நான் செயலாளரின் இசைவுடன் போர.வே.மாணிக்கம் அவர்களுடன் இணைந்து பாளையங்கோட்டை பேருந்து நிலைய நகராட்சிக் கடை எண் 1இல் கிடந்த சங்கத்துக்குச் சொந்தமான நூல்களை, அவற்றின் இருப்புப் பதிவேட்டுடன் ஒப்பிட்டு என்னென்ன நூல்கள் காணாமல் போயுள்ளன என்று கண‌‌க்கெடுத்தோம், ஏனென்றால் இ.மு.சு. அவர்களின் மருத்துவம், கணியம் தொடர்பான நூல்களையும் சங்கத்துக்குச் சொந்தமான நூல்கள் பலவ‌ற்றையும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திப் பறித்தவர்களில் சிலர் தங்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்று செயலாளர் கூறியிருந்தார்.

            அவ்வாறு சரிபார்க்கும் போதுதான் இ.மு.சு. ஆற்ற எண்ணி நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்த பணிகளின் அருமை தெரிந்தது. அதாவது கழக இலக்கியம் ஒவ்வொன்றுக்கும் மூலம், உரை ஆகியவற்‌றுடன் சொல்லடைவு, பொருளடைவுகளைப் பெரும் பதிவேடுகளில் எழுதி வைத்திருந்தார். இந்தப் பணிக்காகத் தன் உறவிலிருந்து ஓர் இளைஞனை அமர்த்தி‌யிருந்ததைத்தான் நேர்மையின் காவலர்கள் ஊழல் என்று சுட்டிக்காட்டி அவரைப் பலிவாங்கியுள்ளனர்.

            அவருடைய மகன் அறிவிக்கை விடுத்ததும் சடபுடவென்று கற்றறிந்த பேராசிரியர்களைக் கொண்டு  மேலே கூறியவாறு சில கழக நூல்களை 20, 30 பக்கங்களுக்குள் சுண்டக் காய்ச்சி  வழங்கிவிட்டனர். சமய நூலாகிய திருவாசகத்தை மூலம், உரையுடன் வெளியிட்டவர்கள் அவர் தன் அறிவியல் அணுகலில் கடும் உழை‌ப்பில் உருவாக்கிய சொல்லடைவு, பொருளடைவுகளைத் தூக்கிப் போட்டுவிட்டுச் சக்கையை மட்டும் அச்சிட்டனர்.

            சொல்லடைவு என்பது ஒரு சொல் ஒரு நூலில் எந்தெநத இடத்தில் எல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை அகரவரிசையில் வடிப்பது. பொருளடைவு என்றால் ஒரு சொல்லுக்கு அதற்குரிய பல்வேறு பொருள்களில் அகர வரிசையில் ஒவ்வொரு பொருளிலும் எந்தெந்த இடங்களில் கையாளப்பட்டுள்ளது  என்று காட்டுவது. இது அகராதி தொகுப்பதற்கு மட்டுமல்ல, கணினியில் மொழி பெயர்ப்பு உட்படப் பல நோக்கங்களுக்கும் பயன்படுவது. இலக்கணம் வகுப்பாருக்கும் இந்த அடைவுகள் இன்றியமையாதவை. தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களில் எண்ணற்ற சொற்கள் அலசப்பட்டு அவற்றின் உறுப்புகளின் இயல்புகள் கூறப்பட்டுள்ளமைக்கு இந்த அடைவுகளே அடிப்படைக் கருப்பொருட்களாம். தமிழைச் பிழைப்பாகக் கொண்ட பேராசிரியர்களுக்கு அவ்வாறு கொள்ளாத இ.மு.சு.வின் பணியின் அடிப்படை விளங்காமல் போனதில் வியப்பில்லை.

            சங்கத்தின் நூற்பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்த சில நாட்களில் பி.ஆர்.சுப்பிரமணியன் என்னும் தமி‌‌ழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் பல்கலைக் கழக தமிழ் அகராதித் துறையில் பணியாற்றுவதாகக் கூறினார். அவரிடம் இ.மு.சு.வின் அடைவுகள் பற்றி நானும் பேரா. மாணிக்கமும் எடுத்துக் கூறினோம். அது அவரது பணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விளக்கினோம். தான் திருவனந்தபுரம் போய்க் கொண்டிருப்பதாகவும் பல்கலைக் கழகத்துக்குச் சென்ற பின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச் சென்றவருக்கு நினைவூட்டலும் எழுதினேன். அவரிடமிருந்து எந்த ‌வினையும் இல்லை.

            பல்கலைக் கழகங்கள் அங்குள்ள பேராசிரியர் வட்டத்துக்கு வெளியே எவருடைய பணிகளையும் ஏற்பதில்லை. கு.வெங்கடாசலம் என்ற பணி நிறைவுற்ற நடுவனரசு நில அளவைத் துறைக் கள அலுவலர், தான் அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலுள்ள எடை, ‌நீளம் போன்ற மரபு அளவைகள் தமிழ்நாட்டு முந்திரி வாய்ப்பாட்டுக்கு இணையாக இருப்பதைக் கண்டு, சிந்து சமவெளி எடைகள், அளவுகளை ஆய்ந்து அவற்றிலுள்ள விகிதங்களும் அவ்வாறே இருக்கக் கண்டு தமிழ் நாட்டில் நிலவும்  மரபுத் தொழில்நுட்பங்களிலும் கையாளப்படும் அளவைகள், குறீயீடுகளைக் களத்தில் ஆய்ந்து அதனடிப்படையில் தமிழ் நூலாகிய கணக்கதிகாரத்தில் ஓர் ஆய்வு செய்வதற்கு உதவி வேண்டி அப்போதைய த‌மிழ்ப் பல்கலைகத் கழகத் துணைவேந்தர் திரு.வ.அய்.சுப்பிரமணியத்தை அணுகியுள்ளார். அவரோ எம் பேராசிரியர்களே அப் பணியைச் செய்வர் என்று நறுக்காக மறுமொழி கூறி அவரை விரட்டிவிட்டார்.

            பல்கலைக் கழகங்க‌ளைப் பொறுத்தவரை, அவர்களின் சம்பளப்பட்டியலிலுள்ள பேராசிரியர்கள் தவிர பிறரெவரின் ஆங்கங்களுக்கும் ஊக்கம் தருவதில்லை. சம்பளப்பட்டியலுள் வருவோரின் ஆக்கங்கள் கூட ஆட்சியாளர்களின் கருத்து வரையறைக்குள் வந்தால்தான் ஏற்பர். இந்த கட்டுப்பாடு, ஏற்கனவே ஆட்சியாளரின் கருத்தோட்டங்களுக்கு இசையத் தம்மைத் தகவமைத்துக் கொண்ட பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் ஆக்கங்கள்தாம் பல்கலைக் கழகத்தின் பணத்திலிருந்து வெளிவரும் என்ற தன்னுணர்வின்றியே செயற்படுகிறது.

            மேலே குறிப்பிடப்பட்ட திரு.கு.வெங்கடாசலம் அவர்கள், பின்னர் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவி‌யுடன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்புப் நிறுவனம் என்ற பெயரில் செயற்பட்ட திட்டத்தில் பணியாற்றினார். இவ்வாறு நம் நாட்டின் ஆட்சியமைப்பு நம்மவரின் அனைத்து வளங்களும் அயலவர்க்கு மட்டும் பயன்படுமாறு ‌மடை திருப்பி விடுவதாக உள்ளது.

            இது போன்ற ஓர் ஆய்வு வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு வையாபுரியாரின் அறிவியல் சார்ந்த ஆய்வு அரங்கேறியது. பார்ப்பனர் - சிவனிய வெள்ளாளர் போட்டி உச்சியிலிருந்த சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவனிய வெள்ளாளர் தூக்கிப்பிடித்த தமிழ்ப் பண்பாட்டின் முன்மை, முதன்மை பற்றிய கருத்தோட்டங்களை முறியடிப்பதற்கு அவர்களிடையிலிருந்து கிடைத்த இந்த ஆயுதத்‌தைப் பார்ப்பனர்களும் அவர்களது சார்பாக வாதாடிய பொதுமையினரும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

            அது போலத்தான் புதுமைப்பித்தனும். அவரது தந்தை வே. சொக்கலிங்கம் பிள்ளை, குமரிக் கண்டத்தில் முருகனுக்கும் அசுரனுக்கும் நடைபெற்ற போரில் தோற்ற அசுரர்கள் தெற்காசியக் கடற்கரை வழியாக ஐரோப்பாவினுள் நுழைய, கடற்கோள்களின் போது அதே திசையில் சென்ற முருகன் வழி வந்தவர்கள் அவர்களுடன் மோதிக்கொண்டு அரசுகளை அமைத்தார்கள் என்று ஐரோப்பிய மக்களின் பழமரபு, நாட்டார் வழக்காறு, பெருவியப்புச் செய்திகள்(legends) ஆகியவற்றை ஆய்ந்து The Eruopean Races and  Peoples என்றொரு நூலை எழுதி அதன் முதன் மடலத்தை 1934 இல் வேல்சு இளவரசர் இந்தியா வந்த போது வெளியிட்டார். இரண்டாம் மடலத்தின் கையெழுத்துப் படியையும் அதை அச்சிடுவதற்கான பணத்தையும் தங்கள் கல்லூரி ஆள்வினையாளர்களிடம் ஒப்படைத்துச் சென்றதாக முன்னாள் நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி முதல்வர் ம. இராமசாமி அவர்கள், அவர்கள் துணை முதல்வராக இருந்த போது கூறி முதல் மடலத்தை எனக்குப் படிக்கத் தந்தார். இரண்டாம் மடலத்தின் கையெழுத்துப் படியும் இந்த ஆய்வுக்காக அவர் பயன்படுத்திய நூல்களும் அக் கல்லூரியின் நூலகத்தில் பாதுகாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

            மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகிய தன் துயர நிலையைக் கண்டுகொள்ளாமலிருந்த தந்தை மீது புதுமைப்பித்தன் ஆத்திரம் கொண்டதும் அவரது ஆய்வுகளைப் பழித்ததும் இயல்பே. அந்த வகையில் அவர் கூறிய தமிழ்ப் புலவர்களுக்கு உலகின் முதல் குரங்கே தமிழ்க் குரங்குதான் என்ற கூற்றைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு பார்ப்பனர்கள் புதுமைப்பித்தனைக் தாங்கிப் பிடித்தனர். அதனாலேயே பொதுமைக் கட்சியினரும் தாங்கினர்.

            புதுமைப்பித்தன் தன் சாதி ஏழைகள் மீது தன் சாதி மேட்டுக்குடியினரே நிகழ்த்தும் சுரண்டலைக் கடுமையாகச் சாடியும் நம் ச‌மயங்கள், தொன்மங்கள் ஆகியவற்றைக் கடிந்து பகடி செய்தும் எழுதிய உண்மையான ஒரு முற்போக்கர் ஆவார். ஆனால் நம் பொதுமையர் அவரைப் போற்றுவது அவரது முற்போக்கு கருத்துகளுக்காக அல்ல. தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு மீது அவர் கூறிய ஓர் எதிர்மறைக் கூற்றுக்காகத்தான். உண்மையான பொதுமைக் கோட்பாட்டினரை அவர்க‌ள் போற்றுவதில்லை.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற உயர்தரமுள்ள பாவலரை, ‌திரை நடிகர் ம.கோ.இரா.வின் தேர்வு இல்லையாயின் உலகு அறிந்திருக்காது. அ‌ங்கும் இ‌ங்கும் ஊசலாடிய பாரதியாரை உச்சி மேல் வைத்துப் போற்றும் நம் பொதுமைக் கட்சியினர் பொதுமைத் கருத்துகளைத் தன் பாடல்களில் அழுத்தமாகப் பதிந்த பாவலர் கலியாணசுந்தரத்தை காலங்கடந்துதான் ஒப்புக்குப் பாராட்டினர்.

            ஆனால் சிவனிய வெள்ளாளர் தந்தைக்கும் பார்ப்பனத் தாய்க்கும் பிறந்த செயகாந்தன், இது போன்ற சாதி ம‌றுப்புத் திருமணத்தில் பிறக்கும் பிள்ளைகளின் பொது இயல்பான, பெற்றோர் இருவரில் மேல் சாதியினரோடு தன்னை இணைத்துக்கொண்டு அவர்களின் நலன் மீது அளவு மீறிய முனைப்புக் காட்டினார்‌. பார்ப்பனத் தெருவின் நடுவில் நின்றுகொண்டு இரு பக்கமும் உள்ள வீடுகள் எதையும் நோக்காமல் தெருவை நேராக நோக்கி நின்று கையில் கலத்துடன் வேதங்களைக் கூறிச் செல்ல இரு பக்கத்து வீடுகளிலிரு‌ந்தும் மக்கள் போடும் அரிசி போன்ற பொருட்களைக் கொண்டு ‌உயிர் வளர்க்கும் ஒர் உஞ்சவிருத்திப் பார்ப்பனரின் முதிய மனைவி, கணவனின் காலத்துக்குப் பின் உதவட்டுமே என்று பரிசுச் சீட்டு வாங்கியதற்காக கணவன் இறந்த பின்னரும் தான் உயிர் வாழ வேண்டுமென்று நினைத்துப் பதிவிரதா தர்மத்தைச் சீர்குலைத்துப் பார்ப்பனப் பண்பா‌ட்டுக்கே இழுக்கு தேடித் தந்துவிட்டாள் என்று சிறுகதை எழுதிய செயகாந்தனைத் தலை மேல் வைத்துக் கூத்தாடுவது அவரது முற்போக்கு சிந்தனைக்காக‌வா அல்லது பார்ப்பனிய மனப்போக்குக்காகவா?

            பகுத்தறிவாளர்களும் வெள்ளிக் கிழமை என்ற தலைப்பில் முரசொலியில் எழுதிய தொடர்கதையில் வெள்ளிக் கிழமை செல்லும் நோக்கம் ஈடேறாது என்ற தாயின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டுப் பெண்பார்க்கச் சென்ற இளைஞனும் நண்பனும் சென்றவிடத்து நிகழ்ச்சிகளால் பா‌ர்க்க வந்த பெண்ணும் நண்பன் கண்டு காதலித்த பெண்ணும் மாண்டுபோக நண்பர்கள் துயரைச் சுமந்து திரும்பியதாகத் தாயின் மூட நம்பிக்கைக்கு உயிர் கொடுத்த கருணாநிதியைப் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரிலிருந்து தெ‌றிந்த குட்டிப் பகலவன் என்று இன்னும் கொட்டி முழக்குவது போன்றதுதான் பொதுமைக் கட்சியினரின் கொள்கைப் போக்கு.
           
            இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் க.ப.அறவாணன், செயகாந்தன் போன்றோர் கருணாநிதி வழங்கும் விருதுகளைப் பெற முடிவதன் மறையத்தைப் புரிந்துகொள்ள முடியும்.


[1] இயற்கை அல்லது இறைவன் ஒலிவடிவானவன் என்பது தமிழர்களின் அடிப்படை நீட்டலளவு ஒலியுடன் தொடர்புடையது என்ற உண்மையிலிருந்து உருவான ஒரு சமயத் திரிபுக் கருத்தோ?