இல்லாத ஊரும் சொல்லாத நூலும்.



6. இல்லாத ஊரும் சொல்லாத நூலும்.

அடுத்து புவியியங்கியல் புலி இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்திலிருந்து செய்திகளைத் தந்து குமரிக் கண்டக் கோட்பாட்டைக் கண்டதுண்டமாக வெட்டி வீசும் அழகைக் காண்போமா?

கி.மு.483இல் விசயன் நாடுகடத்தப்பட்டானாம், சிங்கள பிக்குகள் கி.மு.3ஆம் நூற்றாண்டு தொடங்கி வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்தார்களாம். “வங்கம், மகதம், பாண்டிய நாடு, சோழ நாடு, இலங்கைத் தீவு பற்றியும் சிங்களவர் இவற்றுக்குக் கடற்பயணம் செய்தது குறித்தும் விளக்கமாகக் கூறும் அத்தியாயத்தில் தெற்கில் இருந்ததாகக் கூறப்படும் பெரும் நிலப்பரப்பு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது”, என்கிறார் புவியியங்கியல் புலி(பக்32). புத்த மதத்தைப பரப்ப கசுமீரம், காந்தாரம், வனவாசா, இமாலயம், வங்கம், மைசூர் ஆகிய பகுதிகளுக்கு புத்த தேரர்கள் விடுக்கப்பட்டு ஏறக்குறைய 3,68,000 பேரை மதமாற்றினார்களாம். “ எந்த மாதத்தில் எந்த நாட்டுக்கு தேரர்கள் புத்த சமயத்தைப் பரப்பச் சென்றனர் என விளக்கமாகக் கூறும் இந்த அத்தியாயத்தில் குமரிக்கண்டம் எனக் கூறப்படும் நிலப்பரப்புக்கு யாரும் சென்றதற்கான குறிப்புகள் ஏதுமில்லை என்பதே நாம் இங்கு கவனிக்க வேண்டியது” என்று தீர்த்தறுத்துக் கூறுகிறார் நம் புவியியங்கியல் புலி    (பக்33). “விசயன் குடியேறிய அத் தருணத்தில் இலங்கை தீவாகப் பரிணமித்திருந்தது” என்றுதான் புவியியங்கியல் வல்லுநர் தொடங்குகிறார்(பக்.32) என்பதையும் அவரது நாணயத்துக்குச் சான்றாக இங்கு குறிப்பிட வேண்டும்.

அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
            வடிவே லெறிந்த வான்பகை பொறாது
            பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
            குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
            வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு 
            தென்றிசை யாண்ட தென்னவன் வாழி                                 - சிலம்பு

            மலி திரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
            மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்     
            புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
            வலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்                   - முல்லைக் கலி
என்ற இரு வேறு நூல்கள் தரும் செய்திகளும் கால வரிசையில் ஒன்றுக்குப் பின் நிகழ்ந்த இரு வேறு நிகழ்வுகள் என்று மேலே பக். 15இல் குறிப்பிட்டுள்ளோம். முதலதில் இறுதி அரசன் வேறு, இரண்டாம் கழகத்தை நிறுவிய அரசன் வேறு, இரண்டாவதில் முன்னிருந்த அரசனாகிய முடத்திருமாறனே அடுத்த கழகத்தையும் நிறுவுகிறான். இத்துடன் குமரிக் கண்டம் என்ற நிலப்பகுதி முற்றிலும் முழுகியதுமன்றி இன்றைய தமிழகத்துடன் குமரிக்கண்டத்துக்கு இருந்த உறவான இலங்கை நிலப்பகுதியும் தனியாகிவிட்டது. இது இன்றைக்கு ஏறக்குறைய 3700 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. கி.மு.123ஆன் ஆண்டில் கலிங்கக் காரவேலன் வெட்டிய கல்வெட்டின்படி அதற்கு முன் 1300 ஆண்டுகள் வந்தேறி மூவேந்தர்களுக்கும் மூலக்குடிகளான குறுநில மன்னர்களுக்கும் இருந்த உடன்படிக்கையைத் தான் உடைத்ததாகக் கூறியுள்ளதையும் கணக்கிட்டுப் பார்த்தால், கி.பி. 250 அளவில் களப்பிரர்கள் படையெடுப்பு வரை தொடர்ந்த மூன்றாம் கழகக் காலம் 250 + 123 + 1300 = 1673 ஆண்டுகள் ஆகின்றன. தெற்கிலிருந்து கரையேறி மூலக்குடிகளோடு மோதல் போக்கைக் கையாண்டு வடக்கிலிருந்து வந்திருக்கத்தக்க படையெடுப்புகளை எதிர்கொள்ள இந்த உடன்படிக்கையை இறுதி செய்ய ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆக, மூன்றாம் கழகத்துக்கு உரையாசிரியர்கள் சொல்லும் 1850 ஆண்டு காலநீட்சி கற்பனை இல்லை என்பது உறுதியாகிறது. இவ்வாறு ஒரு புறம் விசயன் வரும்போது இலங்கைத் தீவு உருவாகிவிட்டதென்று செயகரனே கூறுவதோடும், காரவேலன் கல்வெட்டு கூறும் செய்தியுடன் ஒப்பிடும் போதும் குமரிக் கண்டத்துக்கு மதம் பரப்பச் சென்றதாகச் சொல்லாதது குமரிக் கண்டம் எப்போதும் இருந்ததில்லை என்பதற்குச் சான்றாகும் என்று நம் புவியியங்கியல் புலி எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை சிந்தனைத் திறனை அழிக்கும் இன்றைய “புறவயக் கேள்விமுறை”க் கல்வியில் கற்ற நேற்றைய – இன்றைய தலைமுறையினருக்கு இந்த முரண்பாடுகளைக் கண்டுபிடிக்கும் திறன் இருக்காது என்ற நம்பிக்கையில்  இதைச் செய்தாரா, அல்லது அவராலேயே இந்த முரண்பாட்டைக் காண முடியவில்லையா தெரியவில்லை.
                                                                       

0 மறுமொழிகள்: